Wednesday, December 12, 2012

தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ கச் காசிம் மண்டபத்தில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை


(31-7-2012 அன்று தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய  உரை)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே எந்தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
    வீரரின் வீரமும் வெற்றியும் நீயே
முந்தைய நாளினில் அறிவும் இலாது
    மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாம ரைக்காடு பூத்தது போல
    செழித்த எம்தமிழே ஒளியே வாழி!

    என்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்  பாடலைக் கூறித் தொடங்குகின்றேன்.

தமிழர் முன்னேற்றக் கழகத்தின்  சார்பில் நடைபெறும் நிகழ்வுக்குத் தலைமை தாங்கும் மன்றத்தின் தலைவர் சுப்பையா  அவர்களே. ஆலோசகர் தண்ணீர்மலை பொருளாலர் முனுசாமி அவர்களே. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் பெரியவர் காப்பளர் ஐயா முத்துசாமி அவர்களே  நிகழ்ச்சியை அரும் பாடுபட்டு நடத்தி வரும் எழுத்தாளர் திருஞானசம்பந்தம் இராணி அவர்களே, கடவுள் வாழ்த்துப் பாடிய கனகரத்தினம் அவர்களே திரளாகப் பங்கேற்றிருக்கும் தைப்பீங் நகரத்துப் பெருமக்ககளே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் நன்றியை உரித்தாக்குகிறேன்

    யான் மலேசியா புறப்பட்டு வரும்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் திரு திருஞானசம்பந்தம் அவர்களைத் தொடர்பு கொள்ளூம்படி கூறினார். கோலாலம்பூர் வந்தவுடன் நண்பரிடம் தொடர்புகொண்டேன். நான் கேஎல் சென்றல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருக்கிறேன் சந்தியுங்கள் இங்கு வந்து விடுங்கள் என்றேன். யான் தொடர்வண்டி நிலையத்தின் பேரழகை எப்போது சென்றாலும் காண்பேன். நாளுக்கு  நாள் அதனுடைய அழகை வசதிகளை அரசாங்கம் உயர்த்திக் கொண்டே இருக்கும். நம் ஊரில் தில்லியாக இருந்தாலும் சென்னையாக இருந்தாலும் தொடர்வண்டி நிலையம் வளர்ச்சி என்பதே இல்லாமல் பராமரிப்புக்கூட பொறுப்புணர்வோடு செய்யாமல் இருக்கும் நிலையை எண்ணி வருந்துவேன். நண்பர் எனக்குத் தொடர்பு கொண்டார் நான் வாயிலில் இருக்கிறேன் என்றேன். சந்தித்து பெருமகிழ்ச்சியடைந்தோம்.

எனக்கு நீங்கள் சென்னையில் பாராட்டு விழார நடத்தினீர்கள். சென்னையில் நான் மனைவியோடு வந்தபோது தங்களிடம் தொடர்பு கொண்டேன் அப்போது தந்தையார் ஊரில் இல்லை. தாங்கள் உணவகத்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எழுத்தாளர்கள் நண்பர்களை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினீர்கள் என்றார். உண்மையிலெயே எனக்கு பெருமகிழ்சிச்யாக இருந்தது. தந்தையார் 1977 ஆம் ஆண்டு  வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை வெளிநாட்டுப் பெருமக்களும் வரவேற்பு அளிப்பது என்பது பன்னாடுத்தமிழுறவு மன்றக் குறிக்கோள்களில் ஒன்று. எனக்கே நினைவில் இல்லை நினைவோடு திருஞாசம்பந்தம் கூறியது மன நிறைவைத் தந்தது. திருஞானசம்பந்தம் நிகழ்வையெல்லாம் யான் தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளதையும் கூறினேன்.

    அப்பொது நான் உங்களுக்கு மலேசியாவில் வரவேற்பு வழங்க வேண்டும் எனக் கூறினார் அதனையுடைய முயற்சிதான் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று தைப்பிங் நகரில் சலான் சிம்பாங்க் பகுதியில் டத்தோ  கச் காசிம் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,.

    நான் தைப்பிங் நகருக்கு சனவரி மாதம் பேச வந்திருந்தபோது அருமைப் பெரியார் முத்துசாமி ஒரு மலரை வழங்கினார்கள். அந்த மலரில் தோட்டப்புறப் பள்ளிகளுக்கு அவர் வழங்கிய அர்பணிப்பான சேவைகளைக் கூறியுள்ளார்கள். இந்தக் கட்டுரை முழுமையையும் தமிழ்ப்பணி மூன்று இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டுள்ளேன். இவரைப் போன்ற பெருமக்களால்தான் மலேசியாவில் தமிழ் வாழ்கிறது. இவர்ளுடைய ஈகமான பணிகள்தான் இன்றும் மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் செழித்து ஒங்குகின. ஆனால் தற்போது தமிழ்ப்பள்ளிகள் குறைந்து வருகின்றன.

    ஐயா முத்துசாமி அவர்கள் துன் சம்பந்தன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். துன் சம்பந்தம் என்ற மாபெரும் தலைவர் இலலையென்றால் மலேசியாவில் தமிழர்களுக்கு வாழ்க்கை இல்லை. தம் வாழ்நாளையே ஒப்படைத்து இன்று தமிழ்ச்சமுதாயத்தை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    ஐயா முத்துசாமி அவகள் துன் சம்பந்தம் அவர்களோடு இணைந்து தொண்டாற்றிய பெருமகன். அவர்கள் இங்கு வந்து என்னை வாழ்த்துவதென்பது துன் சம்பந்தம் வந்து வாழ்த்துவதாகவே கருதுகிறேன். துன் அவர்களோடு ஐயா அவர்கள்  தொண்டு வாழ்வைக் குறிப்பிட்டபோது கண்கள் கலங்கின. இன்றைக்கு வானளாவ இருக்கும் தேசிய நல கூட்டுறவு சங்கம் மலேசிய மண்ணில் விரிந்து பரந்து இருப்பதற்கு வித்திட்டவர். துன் சம்பந்தம் அவர்கள். மலேசியாவில் ஒவ்வொரு தோட்டப் புறங்களுக்கும் சென்று பங்குத் தொகையைப் பெற்று மலேசியாவில் தமிழர்களைத் தலைநிமிரச் செய்ய மிகப் பெரிய திட்டத்தை வகுத்த தீர்க்கதரிசி.

    மலேசியாவின்  தோட்டப்புறங்களிளெல்லாம் இன்று தமிழ்ப்பள்ளிகள் தளிர்த்ததினால்தான். இன்றைக்கு சம்பந்தம் இராணி போன்ற பெருமக்களெல்லாம் படித்துப் பணியில் உள்ளனர். பள்ளிகள் இல்லையென்றால் நம் மக்கள் மேல்நிலையை அடைய முடியாது.

    உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். தமிழர்கள் ஆங்காங்கே தமிழையும் தமிழரையும்  பேணிப் பாதுகாக்கின்றனர். மியான்மரில் வள்ளுவர் கோட்டம் கட்டி திருக்குறளிலேயே ஒதி திருவள்ளுவரை வணங்குகின்றனர்.

    அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்ச்சங்கங்கள் நிறுவி அனைத்துத் கூட்டுத் தமிழ்ச்ச்ங்கங்களையும் ஒன்றினைத்து ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய மாநாடு நடத்துகின்றனர்.

    ஐரோப்பிய நாடுகளில் ஈழ த்தமிழர்களின் புலம் பெயர்வால். தமிழுக்கு மாநாடுகளும் விழாக்களும் ஏராளம். யான் யாதும் ஊரே என்ற நூலில் அனைத்து நாடுகளிலுள்ள தமிழர்களைப் பற்றியும்  குறிப்பிட்டுள்ளேன்.
    கனடாவில் இது தமிழகமோ என வியக்கும் வண்ணம் தமிழ் இதழ்களும் தொலைக்காட்சிகளும், நடன அரங்கேற்றங்களும், மாநாடுகளும், தமிழ்க் கல்லூரிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    பெருமக்களே கற்றனைத்து ஊறும் என்ற நூலில் மலேசியாவின் சிறப்புகளையும் நான் கண்ட அனுபவங்களையும் பதிவுசெய்துள்ளேன். உலக நாடுகளில் கண்ட அனுபவங்களையும் தமிழ் தமிழர் சிந்தனைகளையும் எழுதியுள்ளேன்.

    தமிழினம் உலக இனம், ஆனால் அதற்கென நாடு இல்லாதது ஒரு பேரிழப்பே. ஈழம் கிடத்திருக்கும் ஆனால்  துரோகிகளின் வஞ்சகத்தல் அந்த வாய்ப்பை இழந்தொம். ஆனால் ஈழ மக்கள் பெற்றே தீருவார்கள் என்பதில் ஐயமில்லை.

    ஐயா முத்துசாமி அவர்கள் இல்லத்தில் அம்மா அவர்கள் இல்லாமை கண்டு வருந்தினேன். அம்மாவோடு  ஐயா அவர்கள் தமிழகம் வந்துள்ளார்கள், திருஞானசம்பந்தம் இராணி அவர்களும் வந்துள்ளார்கள். வருகை தந்திருக்கும் பெருமக்களே தாங்களும் தமிழகத்திற்கு வாருங்கள் வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறேன். பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் தங்களை வரவேற்க உள்ளது எனக் கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.
       
 

No comments:

Post a Comment