Sunday, April 1, 2012

அவலம் அன்றோ

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் ஆசிரியை கண்டித்ததற்காக மாணவன் கொலை செய்த கொடுமை கண்டு எழுதியது)

கல்வியை வணிகம் ஆக்கி
கருத்துமே கனியா வண்ணம்
நல்வழிப் படுத்த எண்ணா
நாட்டினர் இழிவுச் சிந்தை
பல்லூடகம் மோசம் காட்டி
பாதகம் கண்ட மோசம்
வெல்கதிர் மாணவன் இங்கே
வெட்டிய ஆசிரியை அந்தோ!

மழலையர் வளர்ப்பில் நம்மோர்
மாசிலா அன்பைத் தேரார்
உரம்தரும் தமிழக மண்ணில்
உலகினர் காணும் வேசம்
பலம்தரும் என்றே எண்ணி
பாசத்தை மறந்த போக்கால்
நலம்நிறை ஆசிரியை இங்கே
நசுங்கிடும் அவலம் அன்றோ!

கண்டிப்பு என்னும் வேலி
கருணையே துளியும் இன்றி
கொண்டிடும் வேக வீச்சால்
கொலைக்களம் சென்ற நாசம்
தண்டிக்கும் முறையை இன்றும்,
தலைமுறை ஏற்கா மாற்றம்
விண்டிடும் மாணவர் தம்மில்
விதைத்துள மோசம் தானே!

நல்லுள பெற்றோர் பெற்றார்
நாடுள சுற்றம் சூழ்ந்தார்
பள்ளியின் மேன்மை கண்டே
பாங்குடன் சேர்ந்தும் வென்றார்
உள்ளத்தால் சமூக மேன்மை
உன்னதம் மறந்த தன்மை
கள்ளமில் பிஞ்சு இன்றோ
கயமையர் சிறையில் அன்றோ