Wednesday, December 28, 2011

பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன்


டத்தோ அவர்களுக்கு இம்மாதம்(23-11-11) 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் டத்தோ வி.க.செல்லப்பன் தலைமையில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் சொற்பொழிவு


(1-11-2011 அன்று மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் உரை)
நிகழ்விற்கு தலைமைதாங்கும் மலேசியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களே இப்பகுதி கல்வி அதிகாரி சந்திரன் அவர்களே, நீண்ட கால நண்பர் ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களே நூல் அறிமுக விழாவிற்கு வருகைதந்துள்ள மலேசியத் திருநாட்டின் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களின் தீப ஒளி வாழ்த்து எனக்கும் தந்தைக்கும் அனுப்பிக் கொண்டு வருகிறார். இவ்வாண்டும் நான் சிங்கப்பூர் உலக எழுத்தாளர் மாநாட்டிற்காக பயணத்திற்காகப் புறப்படும்போது ஐயா அவர்களின் வாழ்த்து அட்டையைப் பெற்றேன். மலேசியா வந்தவுடன் ஐயா அவர்களிடம் நன்றியை தொலைபேசியில் தெருவித்தேன். அதன் பயனே இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

எப்போது மலேசியா வந்தாலும் செப்பாங்க் பகுதியில் ஒரு கலந்தரையாடல் முடித்துத்தான் செல்வேன். அதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் மின்மினி இதழ் ஆசிரியரும், மூவிகு அச்சக உரிமையாளரும், சாதனைத் தலைவர் சாமிவேலர் போன்ற எண்ணற்ற நூல்களின் ஆசிரியரும், இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை பல்லாண்டுகளாக மிகச்சிறப்பாக நடத்தியவருமான அமரர் வி.கு. சந்திரசேகர். அவர்களின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழ்ந்து பல் வகையிலும் துன்புறும் உங்கள் அனைவரின் துன்பத்திலும் பங்கேற்கிறேன்.

ஐயா டத்தோ அவர்களிடம் பேசியபோது நான் இங்கு வரும்போது ஒருகலந்துரையாடல் வைப்பதாகக் கூறி ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களிடம் தொடர்புகொள்ளப் பணித்தார். ஆசியமணி ஆறுமுகம் பேரார்வத்தோடு இந்நிகழ்வை மிகச் சிறப்பாக் ஏற்பாடு செய்துள்ளார்கள். பெருமகனாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன், எம்மோடு பல்லாண்டு தொடர்புடைய புலவர் முனியாண்டி அவர்கள் சந்திரசேகரோடு மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஐந்தாம் மாநாட்டில் பங்கேற்ற பெருமகன் இங்கு வருகை தந்துள்ளார்.

கல்வி அதிகாரி சந்திரன் அவர்கள் தமிழுணர்வுடன் ஆற்றிய உரை நெஞ்சை நெகிழவைத்தது. டத்தோ அவர்கள் குறிப்பிட்டபோது தந்தையார் அவர்களின் அயராப் பணியையும் தொய்வின்றி நடைபெறும் தமிழ்ப்பணி இதழின் சிறப்பையும் குறிப்பிட்டார்கள். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மாநாட்டு மலரை பெற்று சிறப்பித்த புரவலர் பெருமகன் டத்தோ.

பெருமக்களே யான் மலேசியா வரும்போதெல்லாம் முழுமையாக தமிழ்ப்பணி இதழ் உறுப்பினர் கூழாத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பேன். அவ்வகையில் இவ்விதழ் மலேசியாவில் மாநாடு நடத்துவற்கு பெருந்துணையாக இருந்தது.

யான் உலக நாடுகள் பலவற்றிர்க்கும் தந்தையார் அடிச்சுவட்டில் பயணித்திருக்கிறேன். உலக நாடுகள் முழுமையும் தமிழ் உறவை உருவாக்கிய பெருமை பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கு உண்டு. அம் மன்றத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறேன்.

டத்தோ அவர்களுக்கு இம்மாதம் 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

கற்றனைத்து ஊறும் நூலில் மலேசிய, சிங்கை, பர்மா, பொன்ற நாட்டிலுள்ள தமிழர்களைப் பற்றி என் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளேன். ம.இ..க. தேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் உருவாக்கியுள்ள எய்ம்சு பல்கலைக்கழகம், இராசேந்திர சோழன் வென்றா கடாரம் பகுதியைப் பற்றியும் இன்நூலில் விளக்கியுள்ளேன்.

அண்மையில் நடந்த ஈழப் போரில் வீரத் தமிழர்கள் நயவஞ்சகத்தால் அடக்கப்பட்டார்கள். அடக்கிவிட்டதாக சிங்கள ஏகாதிபத்தியம் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல இன்று தமிழர்கள் உலகம் முழுமையும் பரவியுள்ளார்கள். தமிழரகள் உலக இனமாக வலம் வருகிறது. ஐ.நா. மன்றம் சிங்கள போர்க்கொடுமையை வண்மையாக கண்டித்துள்ளது.

யாங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அறிஞர்களைத் திரட்டி டெல்லியில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் உண்ணாவிரதம் இருந்து தலமையமைச்சர் மண்மோகன் சிங்கைச் சந்தித்து போர்க் குற்றவாளி இரசபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா வை நிர்பந்திக்க இந்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.தமிழ்ப்பணியில் வெளியான செய்தி அனைவரையும் அடைந்திருக்கிறது. டத்தோ அவர்களும் படித்ததாக கூறினார்கள்.

ஈழமக்கள் ஏற்ற துன்பங்கள் எண்ணிலாடங்காதவை. அடக்கிவிட்டதாக யாரும் எண்ணக்கூடாது உறுதியாக ஈழம் பிறக்கும். உணர்வுகள் தனலாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

தமிழ் உணர்வோடும் சிந்தனையோடும் இந்நிகழ்சியை நடத்திய அனைவருக்கும் நன்றியை கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் நடத்தும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு(31-10-11 அன்று மாலை 3 அளவில் மலேசியாவில் சிலாங்கூர் பத்துகுகை பகுதியில் உள்ள தமிழர் தன்மான இயக்க அலுவலகத்தில் நடந்த மாநாட்டு குழுக் கூட்டத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் வரும் சனவரி மாதம் பகுத்தறிவு மாநாடு நடத்த திட்டமிட்டு தன்மானச்செம்மல் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் பணியாற்றிவரும் தங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உலகத் தமிழ்மறை மாநாடு ஒப்பற்ற முறையில் ஐயா தமிழ்மணி அவர்கள் நடத்தி திருவள்ளுவர் பெருமானை தோட்ட மாளிகையில் நிறுவிய பெருமைக்குரியவர். தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களையும் மாநாட்டில் ஒருகுடைக்கீழ் கூட்டிய பெருமகன் தன்மானச் செம்மல். இந்திய ஏற்பாட்டுக் குழுவிற்கு யான் செயலாளராகவும், இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து தலைவராகவும் செயல்பட்டு மாநாட்டு வெற்றிக்கு பாடுபட்டோம்.

தமிழர்கள் தன்நிலை மறந்த இக் காலகட்டத்தில் தம் வாழ்நாள் காலம் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதே எம் பணி என்று தமிழ்மணி அவர்கள் பகுத்தறிவு அனல் பறக்கக் கூறினார்கள். அதற்காகவே இங்கு பகுத்தறிவு மாநாடு நடத்துகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்கானார்கள்.

தந்தைபெரியாரின் ஈகத்தை தந்தை பெரியாரின் வேகத்தை தந்தை பெரியாரின் கருத்துக்களைப் நிலைநாட்டும் அனைவரையும் அழைத்து இங்கு மாபெரும் உணர்ச்சி மாநாட்டை நடத்த உள்ளார்கள். அதற்கு என்னையும் இந்திய ஒருங்கிணைப்பாளராக பணித்துள்ளார்கள். யான் தமிழகத்தின் பெருமக்களோடு கலந்து மாநாட்டின் வெற்றிக்கு துணைநிற்பேன் என்பதை உங்களிடம் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கப்பலில் தமிழகத்திலிருந்து மாலேசியாவிற்கு வருகைதந்தபோது பினாங்கு துறைமுகத்தில் காலடி பதித்தார்கள். அவர் காலடி பதித்த பினாங்குத் தீவில் பெரியாரின் திரூஉருவச் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளீர்கள். பெரியாரின் சொற்பொழிவுகளும், பெரியாரின் பகுத்தறிவுப் பயணம் நடந்த மலேசிய மண்ணில் மாநாட்டோடு அவரது சிலையும் நிறுவப்போவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வாகும். அதற்கு துணைநிற்கும் அத்துனை பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

தந்தைபெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பயணம் நமக்கெல்லாம் அஞ்சாமையை தரும் வாழ்க்கைப் பயணமாகும். யான் பர்மா சென்றிருந்தபோது அங்கிருக்கும் பெருமக்கள் பெரியார் வருகையைப் பற்றிக் குறிப்பிட்டபோது. கோயில்களிலேயே பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார்கள் என்றுகூறினர். அவரது பேச்சுக்கு தடை விதித்தவுடன் யாரும் பெருமகனை வழிஅனுப்ப வரவில்லை. தந்தை அவர்கள் அங்கு இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சாவில் பயணித்து வானூர்திநிலையம் சென்ற அஞ்சா நெஞ்சர் என்றனர்.

யான் மலேசியா வரும்போதெல்லாம் சந்திக்கும் பெருமக்கள் ரெ.சு.முத்தையா ,மா.தனபாலன், விந்தைக்குமரன், வா.அமுதவாணன், த.சி.முருகன், பொன்.சண்முகம் மற்றும் பெருமக்கள் அனைவரையும் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாநாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் என்னுடைய கற்றனைத்து ஊறும் நூலை அறிமுகம் செய்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ் தமிழர் நலனுக்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து ஈகம் செய்யும் பெருமகன் தன்மானத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்களை அருமைத் தந்தையார் அவர்களின் சார்பாகவும்,உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2043 தைத்திங்கள் நடைபெறும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டிற்கு தமிழகப் பேராளப் பெருமக்களோடும், தலைவர்களோடும் வருவேன் என உறுதி கூறி விடைபெறுகிறேன்.

Tuesday, December 27, 2011

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் நண்பர்களுடன் கலந்துரையாடல்


(மலெசியாவில் கோலாலம்பூர் நகரில் 31/4 ஈப்போ சலையில் உள்ள பிரைமா அரங்கில் 31-10-2011 அன்று மாலை 6மணிக்கு நடந்த கலந்துரையாடலில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்)

மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூர் நகரில் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டை நடத்திய அண்ணன் தர்மலிங்கம் அவர்களுக்கும்,அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய இராசரட்னம் அவர்கட்கும் நன்றியை தெருவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். திருக்குறள் சான்றோன் பெருமாள் அவர்கள் வருகை தந்து சிற்ப்பித்துள்ளார்கள் அவர்கட்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, போன்ற நாளிதழ்களிலிருந்து இதழாளப் பெருமக்களெல்லாம் இங்கெ வருகை தந்து நான் எழுதிய கற்றனைத்து ஊறும் நூலைப்பற்றி வினாக்களை தொடுத்து எம் கருத்தை பதிவு செய்கிறீர்கள் தங்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்நூலில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் சிறப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். யாங்கள் நடத்திய மாநாடுகள் பற்றியும் பதிவு செய்துள்ளேன்.

நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளேன்.

மலேசிய நாட்டில் தமிழர் உயர்வுக்கு வித்திட்ட சாதனைத்தலைவர் சாமிவேலு, டான்சிறீ சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பெருமக்களின் சிறப்புக்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

நண்பர் அவர்கள் திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரது வயது 55 அவருக்கே தமிழர் வரலாறு தெரியவில்லையென்றால் .அவர்தம் வழியினர் எப்படி அறிவார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே.

தந்தைபெரியார் இல்லையென்றால் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அறிவாசான் பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழகத்தை தம் ஆளுகைக்கு கொணர்ந்த பெருமை பேரறிஞர் அண்ணாவைச்சாரும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானவுடன் பெரியாரின் சுயமையாதைத் திருமணத்தை சட்டமாக்கி சுயமரியாதைச் சுடரொளி பரவச் செய்தார். சென்னை இராச்தனி என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு பேராயக் கட்சியினரையும் அரவனைத்து தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்தார். அண்ணா தமிழ்நாடு என்று கூற அனைவரும் வாழ்க என்று கூறி தமிழ் நாட்டின் பெருமையை நிலைநாட்டினர்.

அந்தத் திராவிட இயக்கத்தின் கோட்டையாக முத்தமிழறிஞர் கலைஞரும், பேராசிரியர் க. அன்பழனார் அவர்களும் செம்மாந்து செயலாற்றுகின்றனர். திராவிட இயக்கத்தின் அரணாகவும் பகுத்தறிவுக் கொள்கையின் தூணாகவும் இந்தத் தலைமுறையை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.89 அகவை கலைஞரும் 90 அகவை பேராசிரியரும் வாழ்ந்துவரும் காலத்தில் நாம் வாழ்கிறோம் எனபதே நாம்பெற்ற பேறாகும்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் சிந்தனைகளை சிந்தாமல் சிதறாமல் இந்தத் தலைமுறைக்கு இந்தியா,ஏன் உலகம் முழுமையும் நிலைநாட்டி வருகிறார்.

மலேசிய மண்ணில் பெரியாரின் சிந்தனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அக் கருத்துகள் மேலும் மக்களின் சிந்த்னையைத் தூண்டும் வண்ணம் செயல் படுவது நம் ஒவ்வொருவரின் கடமையகும்.

Sunday, December 25, 2011

உலகத்தமிழர்களுக்கு உணர்ச்சித் தொண்டாற்றும் மகளிர்மாமணி பேராசிரியர் இந்திராணி மணியன்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

[சென்னையில் 25-12-2005 அன்று சி.ஆர்.டி உணவகத்தில் பேராசிரியர் இந்திராணி மணியன் 5 நூல்கள் வெளியீட்டு வீழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பேராசிரியர் இந்திராணி மணியன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல ஒரு இனப் பற்றாளர். தமிழர்களின் அறியாமையையும் தமிழர்களின் ஒற்றுமை இன்றி வாழ்வதையும் கண்டு உள்ளம் கொதிப்பவர். தம் உணர்வுகளை அவ்வப்போது எம் தமிழ்ப்பணியில் எழுதியுள்ளார்.

வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்து சென்னையில் உயர்கல்வி பயின்று இந்தியத் தலைநகராம் தில்லியில் 35 ஆண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரிய பெருந்தகை. தலைமைப் பண்புமிக்க சான்றோன் மணியன் அவர்களைப் கணவனாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த பெருமாட்டி. இணையர்களின் உழைப்பை தில்லித் தமிழ்ச்சங்கம் என்றும் செப்பும்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி தமிழர்களுக்கு தில்லியில் அரும்பாடுபட்ட இணயர்கள்.

1990ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டில் இணையர்கள் இருவரும் பங்கேற்று தமிழர் நலக் கருத்துக்களை வழங்கிய பெருமக்கள்.
1999ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டிற்கு இணயர் இருவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.அம்மையார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழும் தமிழரும் எனும் தலைப்பில் உலகளாவிய மொழிகளுள் தமிழுக்குரிய சிறப்பையும் தமிழர்களின் மேன்மையும் பற்றி சிறப்பாக உரையாற்றியது நெஞ்சில் நிழழாடுகிறது.

மாநாட்டில் பாவேந்தரின் சங்கே முழங்கு பாடலுக்கு மலேசியா ஆசிரியமணி மாணிக்கம் அழைத்துவந்த நாட்டிய ராணி உமாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தன்நூலிலும் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள்.

தனது பேராசிரியப் பணியை முடித்து சென்னைக்கு வந்து இணையர்கள் குடியேறிவிட்டனர். அவர்களது வருகை சென்னைக்கு ஒரு சிறப்பான வரவாகும். அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்புடைய இணையர்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் வழிகாட்டும் பண்புடைய ஈர நெஞ்சர்கள். யார் அழைத்தாலும் தமிழ் தமிழர் மேன்மைக்கு சென்று உரையாற்றி தாம் பெற்ற அறிவையும் பொருளையும் சமுதாயத்திற்கு வழங்கும் மேன்மக்கள்.

2009ஆம் ஆண்டு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டிற்கு அழைத்தபோது மணியன் அவர்கட்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பேராசிரியை மட்டு அனுப்பிவைத்தார். மலேசிய பல்கலைக்கழகத்திலும், ஈப்போ மகளிர் மாநாட்டிலும் அம்மையாரின் உரை மலேசிய தமிழ் மக்களுக்கு தமிழ் விருந்தாக இருந்தது. தம்முடைய முதுமையைப் பொருட்படுத்தாது மாநாட்டி;ல் மகிழ்ச்சியோடும் தமிழ் உணர்வோடும் பயணித்த காட்சி என் மனக்கண்முன் தோன்றுகிறது.

அவ்வாண்டே சென்னையில் பேராசிரியப் பெருமகானார் க. அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற என்னுடைய பொன் விழாவிற்கு இணையர்கள் வருகைதந்து வாழ்த்திய வாழ்த்தை பெரும் பேறாகாவே கருதுகிறேன்.

அம்மையாரின் கட்டுரைகள் பலவற்றை தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளேன். ஈழத்த் தமிழரகட்கு அம்மையார் எழுதிய உணர்ச்சிமிக்க கட்டுரைகள் காலத்தால் அழிக்கமுடியாக் காவியம். ஈழத்தமிழரகட்கு நாமெல்லாம் ஒன்று சேர்ந்துவிடுதலையை வாங்கித் தரவில்லையே என்ற ஏக்கம் இன்னும் அவருள் தனலாக உள்ளது.

தமிழகத்திற்கு வெளியே பல்லாண்டு காலம் வாழ்ந்ததால் நம்மவர்களின் தாழ்வு அம்மையாருக்கு நன்றாக அறிந்தவர்கள் அந்தத் தாழ்ச்சியைப் போக்க தமிழகத்தில் அயராமல் எழுதிக்கொண்டும், உரையாற்றியும் நூல்கள் வெளியிட்டும் தம்அயரா உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் இன்று வெளியிடப் பெறும் ஐந்து நூல்கள்.
அண்மையில் அம்மையாருக்கு உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலும் அருகோ அவர்களின் பவழ விழவிற்கு வருகை தந்தபோது உணர்ச்சி உரையாற்றினார்கள்.உரையாற்றி முடியும் தருவாயில் மயக்க நிலையடைந்து தள்ளாடினார்கள். தம் உடல் பலமற்றுப் போனாலும் உணர்ச்சி குன்றாப் பேச்சு வந்திருந்தோர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

செந்தாமரை எழிலுடைய அம்மையார் அவர்களின் உள்ளம் அந்த உள்ளத்திற்கேற்ற உயர்ந்த எண்ணமுடைய அம்மா அழகாக கொஞ்சு தமிழில் அத்தான் என்று அழைக்கும் கணவர் மணியன். தம் தாயின் நூல்கள் வெளியீட்டு விழாவை ஐந்து நட்சித்திர உணவகத்தில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வெளியிடும் மகன்- செம்மல்- அமெரிக்காவிலிருந்து வருகை தந்து அன்னையின் புகழ்பாடும் மகள் நன்மதி-. ஆகியோரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
பேராசிரியர் அவர்கள் உடல் நலத்தைப் பேணி பல்லாண்டு காலம் என்றும்போல் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்ற உலகத் தமிழர்களின் சார்பில் வணங்கி வாழ்த்திகிறேன்.

Thursday, December 15, 2011

வாழ்க்கை வழிகாட்டி திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்
(டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க குணராசா அவர்களும் பத்மினி குணராசா அவர்களும் இணந்து நடத்தும் டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி நடத்தும் விழாவில் மாணவச் செல்வங்களே உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருமதி பத்மினிகுணராசா அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு மாணவர்கள் தம் வாழ்நாளில் திருக்குறளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண தங்களின் உரை வேண்டும் என்று கூறினார். நான் பத்மினி அவர்களின் நோக்கத்தை புரிந்து இங்கு வந்துள்ளேன். பத்மினி அவர்களின் உரையைக் கேட்டபோது நான் மகிழ்ந்தேன் கலை அறிவியல் கலூரியை நடத்தும் அவரே தன் மாணவச் செல்வங்கட்காக திருக்குறளின் அருமை பெருமைகளை அறிந்து அவற்றை தங்கட்கு வழங்கிய வருகிறார் வாழ்க குணராசா பத்மினி தொண்டு.

மாண்புமிகு நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தம் வரவேற்பரையில் திருவள்ளுவர் சிலையும் கணினியில் திருக்குறளும் இருக்கும். வருவோர் திருக்குறள் தெளிவுரை ஆங்கில மொழிபெயர்ப்பு அனைத்தையும் காணலாம். தமிழகத்தில் கடைக்கோடி இராமேசுவரத்தில் பிறந்த அவர் அனுவிஞ்ஞானியாகி குடியரசுத்தலைவர்வரை உயர்ந்து இன்றும் மாணவச் செல்வங்களுக்கு தொண்டு செய்கிறார் என்றால் அது திருக்குறளின் தாக்கம்தான்.

அன்பு இளைய சமுதாயமே கல்வி கற்கும் தங்கட்கு பொய்ய்யாமொழியார் கூறுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)

இருப்பவனிடம் இல்லாதவன் எப்படித் தன் தேவைகளைக் பெற்றுக் கொள்வானோ அதைப்போன்றே பணிந்து கனிந்து அறிவுடையவர்களிடம் தமது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)

அறிவுச் செலவங்களே கிணற்றை தோண்ட தோண்டத்தான் தண்ணீர் பெருக்கெடுக்கும். அதைப்போன்றே தாங்கள் நூல்களைப் படிக்க படிக்கத்தான் நுண்ணறிவு பெருகும். இன்று வாழும் மாணவர்களுக்கு இடியூறுகள் ஏரளாமாக உள்ளன. திரைப்படம் தொலைக்காட்சி இணையதளம், கைபேசி. இவையெல்லாம் தேவையான ஒன்றுதான் ஆனால் நமது பயண்பாடு திசைமாறிச் செல்லும்போது நமக்குத் துண்பத்தை தருகின்றது. நூல்களைப் படிப்பதை தாங்கள் அனைவரும் பயிற்சியாகக் கொள்ளவேண்டும்.தோண்டத் தோண்ட பெருகும் நீரைப் போல் படிக்க படிக்க தங்கள் அறிவும் பெருகும்.

செயலாற்றலுக்கு ஐயன் திருவள்ளுவர் கருத்துக்கள் நம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றன.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே பன்முறை நிறைகுறைகளை ஆய்ந்து முடிவு செய்யவேண்டும். முடிவு செய்தபின் அதை வெற்றிகரமாக முடிக்கப் பாடுபடவேண்டும்.மாணவச் செல்வங்களே தாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருகிறீர்கள் அதில் வள்ளுவர் வழி ஓர்மையாகக் கற்று வெற்றிபெற்று மேலும் மேலும் உயர்வு பெறவேண்டும்.

அஞ்ச வேண்டியவற்றிற்கெல்லாம் அஞ்ச வேண்டும் என்பதை குறளாசான் சிறப்பாகக் கூறுகிறார்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)

வாழ்க்கை நீண்ட நெடிய பெருமையுடையது. பெருமையை நிலைநாட்ட பேராசான் கூறும் அஞ்ச வேண்டிவற்றிற்கு அஞ்ச வேண்டும். கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சிக் காலம். இன்றும் என்னுடைய கல்லூரிக்காலத்தை எண்ணினாலே மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். ஆனால் நாம் ஒழுக்கமாக் வாழ்கிறோமா முறையாக நடக்கிறோமா என்பதை எண்ணி தீயவைகள் நம்மை நாடும்போது அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சாமல் அதை தொடர்ந்தோமானால் அதைவிட துன்பம் தருவது ஏதுமில்லை.அந்த மடத்தனமான செயலைச் செய்யக்கூடாது அதற்கு அஞ்ச வேண்டும் எனக் கூறுகிறார்.

சோம்பலைப் வள்ளுவப் பேராசான் கடுமையாகக் கண்டிக்கிறார்,

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (602)

இன்று கல்வி என்பது பொருள் சார்ந்ததாக உள்ளது. அதற்கான பொருளை தங்கள் பெற்றோர்கள் ஈட்டியது சோம்பேரித்தனமற்ற உழைப்பாகும். அந்த ஈகமான பெற்றோர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் பயக்க மாண்வர்களே சோம்பேரித்தனம் என்பது கூடவேகூடாது. உங்கள் குடியை உயர்த்த சோம்பேரித்தனமற்ற முயற்சி தேவை என பேராசான் வலியுறுத்துகிறார்.

உயர்வைத் தவிர மற்றவற்றை நம் மனம் எண்ணக்கூடாது என் கட்டளையிடுகிறார் வள்ளுவப்பேராசான்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596)

நமது எண்ணங்கள் உயர்ந்த சிந்தனைகளாக இருக்கவேண்டும். நாம் எதை சிந்திக்கிறோமோ அனைத்தும் மேலானவற்றையே சிந்திக்க வேண்டும். இன்று கல்வி பயிலும் நீங்கள்ஒருதலைவராக வரலாம், ஒரு ஆட்சியராக வரலாம், அதிகாரியாக வரலாம், தொழில் அதிபராக வரலாம், தங்கள் கல்லுரித் தாளாளர் குணராசா போன்று கல்வியாளராக வரலாம், அனைத்திற்கும் தாங்கள் உயர்ந்த இலட்சியங்ளைக் கொள்ள வேண்டும். இலட்சியத்தில் தோல்வியே ஏற்பட்டாலும் மீண்டும் அதில் உயர்வாகவே சிந்தித்து வெற்றிகாண வேண்டும் எனப் பேராசான் வழிகாட்டுகிறார்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் (623)

துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையை நாம் பெறவேண்டும் எனப் வள்ளுவப் பேராசான் ஊக்கமளிக்கிறார். நான் தற்பொது பேசிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டது. அனைவரும் கண்டீர்கள் அது ஒரு தடையல்ல அதையும் மீறித் தங்களிடம் பேசிக் கொண்டிருகிறேன். பேசுவது நான் கேட்பதுநீங்கள் எந்தத் தடை வந்தாலும் யான் பேசுவதையோ நீங்கள் கேட்பதையோ தடை செய்யமுடியாது. நமது தளராத ஊக்க்கம்தான் எந்தத் தடையையும் நீங்கச் செய்யும். இதோ மின்சாரம் வந்துவிட்டது துன்பமும் அப்படித்தான் துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையைப் பெறவேண்டும் என்று பேராசான் தெளியவைக்கிறார்.

மாணவச் செல்வங்களே திருக்குறள் வாழ்க்கையின் வழிகாட்டி. திருக்குறள் மானிட சமுதாயத்திற்கு தழிழர்கள் வழங்கிய மறை. திருக்குறள் சாதி மதம் இனம் அனைத்தையும் கடந்த மறைநூல். தினமும் குறளைப் படித்து அதன்படி வாழ்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

Friday, December 2, 2011

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ்

கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார் திடலில் 28-11-11 அன்று புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய தொடக்க உரை)

தந்தை பெரியார் நடமாடி மறைந்து நிலையாக அவரது சிந்தனைகள் நிலையாக உள்ள இம் மண்ணில் பேசுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியார் கருத்தான பெண்விடுதலைக்கு வீரமர்த்தினி அம்மையார் அவர்கள் பெருஞ்சான்றாக உள்ளார்கள். கூட்டம் அதிகம் இல்லையெ என்ற கவலை தேவையில்லை. தந்தை பெரியார் கூறியது போன்று யார் தம் இதழை யார் வாங்குகிறார்களோ இல்லையோ நானே எழுதி அச்சடித்து இதழில் படிப்பேன் என்ற என்ற நெஞ்சுரம் வேண்டும்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்ற இன்றைய தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்துள்ள கவிஞானி கலைமாமணி மறைமலையான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவோடு தொண்டாற்றிய பெருமகன். அவரது பேச்சை கேட்க வராதவர்களே வருந்த வேண்டும் கூட்டம் நடத்துபவர்கள் அல்ல. பேரறிஞரின் பெருவாழ்வு என்ற அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழகத்திற்கு வழ்ங்கிய பெருமைக்குரியவர். தம் வாழ்நாளையே திராவிட இயக்கக் கொள்கைக்காக ஈகம் செய்யும் திராவிடத் திருமகன். ஆங்கிலத்திலும் தமிழிலும் மரபு வழிப் பாடல் இயற்றும் திறம் பெற்ற கவிஞானி. கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணாவிருது கலைமாமணி விருதுகளைப் பெற்ற விருதாளர். என்னுடைய கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டிற்கு ஐயாவை அழைத்திருந்தேன். முன்தினம் மெய்ப்பு படிவத்தினைக் ஐயா பேசுவதற்காக கொடுத்துவிட்டு வந்தேன். இரவு படித்து மறுநாள் ஒரு அணிந்துரையே வழங்கி் வாழ்த்திய பண்பாளர் . இவ் விழாவில் தொடக்கவுரையாற்றுவது மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்பது அருமையான தலைப்பாகும். தந்தை பெரியார் இல்லையேல் தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டிருக்காது. தமிழர்கள் உணர்ச்சியற்று இருந்திருந்தால் தமிழின் தனித்துவம் மேலும் அழிக்கப்பட்டிருக்கும். தலைவர் அண்ணா உருவாக்கிய தளபதிதான் அண்ணா. அண்ணா உருவாக்கிய தளபதிகள்தான் கலைஞர்,நாவலர்,பேராசிரியர்,அரங்கண்ணல், மதியழகன், போன்ற திராவிடத் தலைவர்கள். அவவழியில்தான் இன்று திராவிட இயக்கத்திற்கு பெருந்தூணாக இருந்து அவர்கள் கண்ட கனவையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிலைக்கச் செய்துள்ளார். இன்றும் போராடி வருகிறார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தந்தை வழியே தம்வழி என்று எப் பதவியும் விரும்பாமல் உலகம் எங்கும் பெரியார் சிந்தனையைப் பர்ப்பிவருகிறார்.

நமசுக்காரம் வணக்கமாகவும், சேமம் நலமாகவும், நாசுட்டா சிற்றுண்டியாகவும், சுபம்கூர்த்தம் திருமணமாகவும், இப்படி வழங்கிவந்த சமற்கிருத சொற்களையெல்லாம் தமிழில் வழக்கில் கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும். குறிப்பாக தந்தை பெரியாரையும் தளபதி அண்ணாவுமே தளகர்த்தர்கள். பட்டி தொட்டிகளிளெல்லாம் செந்தமிழ் உரைகளை நிகழ்த்தி ஆட்சியையே பிடித்த இயக்ககம் திராவிட இயக்கம்.

பெரியார் அவர்களின் இதழ்கள் அனைத்தும் தமிழ் தமிழர்தம் உயர்விற்காகவே நடத்தப்பட்டவை. அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுக்கெல்லாம் பயிற்சிப்பட்டறையாக இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் சமற்கிருதத்திற்குப் பதிலாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பேச்சிலும் எழுத்திலும் வலியுறுதியவர். அவர்வழி அண்ணா அவர்களின் தமிழ்நடை தமிழ் நாட்டையே தம் கைக்குள் கொணர்ந்த செந்தமிழ்ப் பேச்சாளர் இதழாளர்..

அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானி என்று இருந்த பெயரை தமிழ் நாடு என எதிர்க்கட்சிகளையும் இணைத்து பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு என மூன்றுமுறை முழங்க வாழ்க என என அனைவரும் சட்டமன்றத்தில் வாழ்த்தியது வரலாறு.
பேரறிஞர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அசெம்லியை சட்டமன்றம், சபாநாயகரை பேரவைத் தலைவர் என்றும் அவைமுன்னவர், சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற சொற்களும்,அனைவரையும் தமிழிலேயே உறுதிமொழி எடுக்கவைத்த பெருமையும் தளபதி அண்ணாவையே சாரும்
.
மூத்த முதல் மொழியான தமிழை நிலைநிறுத்திய பெருமை காலகாலம் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களையும் அறிஞர்களையும் வேந்தர்களையும் சாரும். கல்வெட்டுகள் வழியும் ஓலைச்சுவடிகள், நூல்கள் வழி நமக்கு சான்றாக உள்ளன. இடையிலே வந்த ஆரியர்கள் நம் மொழிமீது சமற்கிருதத்தை தினித்தும், மூடபழக்கங்களைத் தினித்தும் நம்மை அடிமையாக்கினர்.

கிறித்துவத்தைப் பரப்ப வந்த ரேனியசு, கிரால், சி.யு.போப், பெசுக்கி, ஆர்டன் போன்ற பெருமக்கள் தமிழின் பெருமையை உணர்ந்து உலகிற்கு உணரவைத்தனர். உச்சமாக பெசுக்கி பெருமகன் தம் பெயரை வீரமாமுனிவர் என தனித்மிழிலேயே மாற்றிக்கொண்டார்.

பின் தலைவர் பெரியார்வழியும் தளபதி அண்ணா வழியும் தூய தமிழ் திராவிட இயக்கத்தலைவர்களால் நிலைநாட்டப்பட்டது. இந்த அரிய விழாவில் தொடக்க உரையாற்ற வாய்ப்பளித்த வழக்கறிஞர் வீரமர்த்தினிக்கும், கவிஞானி மறைமலையானுக்கும் மீண்டும் நன்றியைக் கூறி மகிழ்கிறேன். வாழ்க தந்தை பெரியாரின் தூய தமிழ் வளர்க தளபதி அண்ணாவின் தூய தமிழ் என்று கூறி அமைகிறேன். நன்றி. வணக்கம்.