Saturday, October 31, 2009

நோபல் தமிழன் இராமகிருட்டிணன்


நோபல் தமிழன் இராமகிருட்டிணன்



புத்தொளி புகுந்து நம்மின்

புதுமைகள் கண்டு மாட்சி

வித்தக விருதாம் நோபல்

வியத்தகு தமிழன் பெற்றான்

எத்திக்கும் புகழைப் பாய்ச்சும்

ஏற்றமாய் நம்மின் மைந்தன்

புத்தியின் திறத்தால் பாரில்

புகழேணி கண்டான் வாழி !


தில்லையில் பிறந்த செல்வன்

திருமிகு நாட்டின் பற்றால்

எல்லையில் ஆவல் பொங்க

ஏங்கிய வீட்டைக் கண்டான்

பல்புகழ் வளர்ச்சி எல்லாம்

பல்கிடும் வாழ்வில் கண்டும்

தொல்புகழ் தாயின் மண்ணை

தொழுதிடும் மைந்தன் வாழி!


இயற்பியல் தேர்ந்த நல்லோன்

இன்றைய உயர்வைக் கண்டோன்

முயற்சியில் அமெரிக்க மண்ணில்

முழுமையாய் உழைத்தே வென்றான்

அயர்விலா ஆற்றல் பேற்றால்

அகிலத்து விருதாம் நோபல்

உயர்வுடன் இணைந்து பெற்றான்

உன்னத பேற்றைத் தந்தான்!


வெங்கட் ராமன் பெற்ற

வெல்புகழ் இராம கிருட்டிணன்

தங்கத்தின் திறத்தைப் போன்றே

தலத்திலே புகழைப் பெற்றான்

சஙகங்கள் கூடிக் கூடி

சாதனைத் தமிழன் போற்ற

பொங்கிடும் அன்பால் நம்மின்

வாழ்துக்கள் சொல்வோம் நன்றே!

Friday, October 30, 2009

சென்னையில் உத்தமம் 2009 மாநாடு - கருத்துரை

எட்டாவது தமிழ் இணைய மாநாடு- சென்னையில் கருத்துரை.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், சென்னையில் உத்தமம் துணைத் தலைவர் வெங்கடரங்கன், மற்றும் கவிஅரசன் அவர்களுடன் 29- 10 2009 அன்று ஓர் சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தது. கொலோன், செர்மனியில் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த உத்தம உறுப்பினர்கள் கருத்துரை வழங்கினர். மாநாடு குறித்த சிறப்புச் செய்திகளை சென்னை வாழ் தமிழறிஞர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் இரு பெருமக்களும் கொலோன் மாநாடு குறித்து விளக்கினர். கொலோன் மாநாடு உத்தம உறுப்பினர்களின் ஒட்டுமொத்த
முயற்சி எனக் குறிப்பிட்டனர்.

தமிழக அரசின் உலகச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து 9 ஆம் தமிழ் இணைய மாநாட்டை கோவையில் நடத்த முத்தமிழறிஞர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதை உத்தமத்தின் ஆலோசகர் முனைவர் அனந்தகிருட்டிணன் அறிவித்ததை வெங்கடரங்கனும் கவியரசனும் கூறினர்.

மன்றத்தின் உலக அமைப்பாளரும் நிறுவனத் தலைவருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாம்பலம் சந்திரசேகர் பெருமக்களுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தும் அமைப்பிற்கும் வாழ்த்துரைத்தனர்.


முனைவர் மறைமலை, முனைவர் ஆண்டவர்,இலக்குவனார் திருவள்ளுவன்,
வாழ்த்துரைத்தனர். மன்ற இயக்குனர் வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரை ஆற்றினார். செயலர் கண்மதியன் நன்றி நவின்றார்.