Friday, April 30, 2010

காவியச் சான்றோன் தி.க.ச புகழ் வாழ்க!

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர், தமிழ்ப்பணி

திராவிட இயக்கத் தோன்றல்
தீந்தமிழ் வளர்த்த தென்றல்
போராடும் குணமோ சொந்தம்
பொங்கிடும் அன்புச் சந்தம்
நேரான பார்வைச் சான்றோன்
நேர்நிறை காணும் மூத்தோன்
வேராகக் கழகம் காககும்
வேந்தர் அன்பழகர் வாழி!

நிமிர்ந்த நன்நடையின் ஆற்றல்
நிகரிலா அரிமா நோக்கு
பூமியின் சுழற்சி போன்றே
புவியுள தமிழர் காத்தார்
எழுந்துள அறவோர் தம்மை
ஏற்றியே போற்றும் நெஞ்சம்
தொழுதிடும் குணங்கள் கொண்ட
தொல்புகழ் அன்பழகர் முன்னே

வணங்கியே வணக்கம் சொன்னேன்!

வான்புகழ் திகச எண்ணி
வந்துள அருமைச் சாண்றோர்
சொந்தமாய் திகச போற்றும்
சார்ந்துள நடிக வேள்கள்
முந்திடும் தமிழை ஏந்தும்
முத்தமிழ் அறிஞர் மக்காள்
வந்துமே வணக்கம் சொன்னேன்
வாழிய உங்கள் கொற்றம்
.

நாடகக் கலையை நன்றாய்
நாட்டிய கொள்கைக் கோமான்
தேடரும் கலையின் வித்தாய்
தோன்றிய அறத்தின் சான்றோன்
பீடுறு அவ்வைப் பாட்டி
பெற்றிமை வாழ்க்கை காட்டி
பாடிடும் வாழ்வாய் வாழ்ந்த
பார்புகழ் திகச அன்றோ!

நாட்டையே இன்றும் ஆளும்
நாயகர் கலைஞர் எம்மான்
நாடகக் கலையில் வேந்தை
நல்தொல் காப்பியர் என்றார்!
காட்டிடும் திரையில் இன்றும்
காவியச் சான்றோன் பேரால்
கேட்டிடும் அவ்வை சண்முகி
கேண்மையின் சிறப்பு அன்றோ!

தமிழரின் ஆட்சிப் பேற்றை
தலைமையாய் முதலாய் வென்ற
எமின்இன ஏந்தல் அண்ணா
ஏற்றாமாய் மேலவை மன்றம்
நமின்அவ்வை நாடக மேதை
நாட்டமாய் கலைக்குத் தந்தார்
தமிழரின் கலைவாழ்வுச் செம்மல்
தகுதியாம் அவ்வை அன்றோ!

மலேசியா சிங்கை சென்றார்
மாசிலா கலையால் வென்றார்!
தலம்புகழ் நாடகச் செல்வர்
தக்கநல் மாட்சி அன்றோ!
உலகெலாம் விரிந்து நிற்கும்
உன்னதக் கலையின் வேந்தர்
தலமெலாம் இன்றும் பேசும்
தவநெறி அவ்வைச் சான்றோன்!

இந்திய நாட்டில் எங்கும்
இணையிலா நாடகக் காட்சி
சிந்தனைக் கலைஞர் எல்லாம்
சீர்மிகு வாழ்வைப் பெற்றார்
செந்தமிழ் மக்கள் நாவில்
செந்தேனைப் போன்றே நன்று
நம்தமிழ் காத்த மேலோன்
திகச புகழே வாழி!

பாரத நாட்டின் மேன்மைப்
பத்மசிறி பட்டம் பெற்றார்
சீர்மிகு நடிகர் காக்க
சிந்தனை இதழைக் கண்டார்!
வேரதாம் தம்மின் வாழ்க்கை
வியத்தகு நூலை யாத்தார்
வரலாறு காக்கும் வாழ்வாய்
வாழ்ந்த நம்அவ்வைச் சான்றோன்


வழிவழி மக்கள் பெற்றார்
வாஞ்சையாய் கலையும் தந்தார்
பொழிவுடன் தமிழை ஏந்தி
புகழ், கலைவாணன் சேர்ந்தே
தெளிவுடை அமெரிக்கா மண்ணில்
தேர்ந்தநல் நாடக காட்சி
களிப்புடன் தந்தை போற்றும்
கலைவழி மக்கள் வாழ்க!

தந்தையின் பெயரைத் தாங்கி
தனித்தமிழ் காக்கும் பிள்ளை
செந்தமிழ் இசையைப் பாரில்
செழுமையாய்ப் பாடும் பாடல்
சிந்தனைச் சங்கரதாசு மன்றம்
சீர்மிகு சான்றோன் வழியில்
செந்தமிழ்க் கலைவாணண் காக்கும்
செயலறம் வாழி! வாழி!

பத்மசிறீ தி.க.சண்முகம் 98ஆம் அகவை விழாவில் 26-04-2010 அன்று மாண்பமை பேராசிரியர்.க.அன்பழகனார் தலைமையில் சென்னை இராணி சீதை மன்றத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடிய கவிதை.

Saturday, April 24, 2010

கற்புக்கரசி கண்ணகி

கற்புக்கரசி கண்ணகி

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர் தமிழ்ப்பணி

ஐம்பெரும் காப்பிய மாநாடு மலேசிய ஈப்போ நகரில் நடைபெறுவது போற்றி மகிழத் தக்கது. ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் ஆய்வு மழை ஈப்போ நகரில் பொழிய உள்ளனர்.மாநாட்டினை நடத்தும் ஆசிரியமணி இரா.மாணிக்கம் தமிழக மலேசிய தமிழ் நெஞ்சங்களின் ஒப்புரவாளர் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன. அதிமுக ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழகமே அச் சிலையை நிறுவ போராடியது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்பமை கலைஞர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சிப் பெருமக்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.பன்னாட்டுத் தமிழுறவுமன்றத்தின் சார்பில் யானும் பங்கேற்று முழங்கினேன்
.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை பெருங்கவிக்கோ தலைமையில் கண்ணகிச் சுடரை ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் கலைஞரின் திருக்கரத்தில் வழங்கினோம். மீண்டும் அதேஇடத்தில் நிறுவினார் மாண்பமை முதல்வர் கலைஞர்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.முதல்வர் கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்
”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.

கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் காணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

Saturday, April 17, 2010

மடமையைச் சாய்த்தல் என்றோ?

பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?

இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!

பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?

நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!

பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?

Wednesday, April 7, 2010

ஒர் தமிழனின் புலம்பல்

ஒர் தமிழனின் புலம்பல்

தமிழ் ஈழ மாயையில்

சிக்கியதால்….தமிழர்;

மதியிழந்தனர்..

அறமிழந்தனர்..

கல்வியிழந்தனர்…

தனமிழந்தனர்…

தரமிழந்தனர்..மானமிழந்தனர்..

பதியிழந்தனர்..

உயிரிழந்தனர்..

பாலரையிழந்தனர்..

தாரமிழந்தனர்..

தந்தையிழந்தனர்…

தாயையிழந்தனர்..

சகோதரனையிழந்தனர்…

துணையிழந்தனர்…

சுற்றமிழந்தனர்…

சூழலிழந்தனர்…கதியிழந்தனர்…

நெறியிழந்தனர்…

நேர்மையிழந்தனர்…

கலையிழந்தனர்…

மறையிழந்தனர்…

பண்பிழந்தனர்….

தவமிழந்தனர்…

தானமிழந்தனர்..

நிலைகுலைந்தனர்…

ஆனால்……தமிழர்;

மறக்கக் கூடாத சரித்திரம் படைத்தனர்

விடுதலைக்காக

அடிமைகளாயினர்.விடிவிற்க்காக…

இருட்டில் தள்ளப்பட்டனர்…

வழி தவறினர்.பிள்ளைகள் கடத்தப்பட…

பெற்றோர் பதறினர்,

உற்றோர் வருந்தினர்;

தமிழர் தமிழனை தமிழின் பெயரால்

அழிப்பதை கண்டேங்கினர்;போர் களத்தில்,

உயிர்க்கேடயம் ஆகினர்;

வாழ்விற்கும் சாவிற்க்கும்

இடையே விழிம்பில் பரிதவித்தனர்;அழிவின் மத்தியில் ஆக்கம்

இறப்பின் மத்தியில் பிறப்பு

பாவத்தின் மத்தியில் புண்ணியம்

கோரத்தின் மத்தியில் கருணை

அகங்காரத்தின் மத்தியில் தெய்வீகம், கண்டனர்.உயிரைப் பேணாக் கேவலம்;

பொய், பிரட்டு, சூது, வாது,

கொலை, கொள்ளை,

அகங்காரத்தின் கோரத்தாண்டவம்,

கண்டனர்.மூத்தோர் இருக்க

இளையோர் மாண்டதை..

தம்முயிரைக்காக்க

காயமுற்றோரை கைவிட்டதை…

தம்முயிரின் மேலாக

மற்றயோரதை பேணியமையை

எதிரியின் கருணையை கண்டனர்.இன்று,

அகதிகளாய்..

ஊனமுற்றோராய்…

விதவைகளாய்…

நடைபிணங்களாய்…

நாதியற்றோராய்….

கையேந்தி நிற்போராய்…

கைதியாய்….

இருக்கும் தமிழருக்கு

தீர்வு என்ன?இது போதாதென்று

களம் இறங்கியுள்ளனர்

தமிழ் அரசியல் கழுகுகள்..

தேர்தல் பெயரில்

பிணந்தின்ன..கடவுளே!

போதும் நாம் பட்டபாடு..

முதலில் காப்பாற்று எம்மை

இத்தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து….கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன்.

இலங்கை தேர்தல் பற்றி சுவிசு முருகவேள்

யாழ்தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சித்தொகுதிக்கு .த.தே.கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர் திரு.சிவஞானம்.சிறிதரன் (அதிபர்.கிளி.மகாவித்தியாலயம்.)அவர்களை தெரிவு செய்வதன் மூலமே பொது எதிரியின் கைக்குள் கிளிநொச்சி பறிக்கப்படுவதை தடுக்கலாம். கிளிநொச்சித் தொகுதி மக்கள் வீட்டுச்சின்னத்திற்கும் முதல் விருப்புவாக்கை 10ஆம் இலக்கத்திற்கும் வழங்கவேண்டும். யாழ்ப்பாணத் தொகுதிகளிலும் வீட்டுச்சின்னத்திற்கும் உங்கள் தொகுதிவேட்பாளருக்கும் கொடுப்பதுடன் இன்னும் இரண்டு விருப்பு வேட்பாளருக்கு நீங்கள் வாக்களிக்கலாம் .அதில் ஒன்றை 10ஆம் இலக்கத்திற்கு இடுவதின் மூலம் கிளிநொச்சி பறிபோவதை தடுக்கலாம்.
இதை செய்யாது விடுவோமேயாயின் அங்கே சக்கரைப் பொங்கலுக்குப் பதிலாக அடுத்தபொங்கலுக்கு பால்பொங்கலே(கிரிபத்) பொங்கலாம். இது உண்மை யாழின் உணவுக்களஞ்சியமாக விளங்கிய நிலங்கள் பறிபோவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? கண்டாவளை பரந்தன் கிளிநொச்சி கரச்சி பளை பூநகரி போன்ற இடங்களில் குடியேறிய மக்கள் எல்லோருக்கும் வாக்காளர் அட்டைகள் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆகையால் மீதிவாக்குகளையும் அரசஅதிகாரிகளால் வெற்றிலைக்கு கிடைக்க ஏற்பாடாக பிரச்சாரங்கள் நிகழ்ந்துள்ளது. அமைச்சர் டக்ளசு தேவானந்தாவும் ஆனந்தசங்கரி அவர்களும் பழையசெல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகச்சொற்பமான வாக்குகளும் பிரிக்கப்படவிருப்பதை உணரவேண்டும்.

திரு .சி.சிறிதரன்அவர்களின் தெரிவு தடைப்பட்டு கிளிநொச்சியில் தாம்விரும்பியதைச் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகுவதைத் தடுக்கவேண்டும். இது அந்தமண்ணில் பிறந்ததற்காக கற்ற தற்காக தேசப்பற்றோடு நாம் செய்யவேண்டிய கடமையாகும்.மிகவும் நொந்தமக்கள் மீளவாழ முடியாத மக்களாக இருப்பதால் வெறுப்போடு எமக்கு தேர்தல் வேண்டாம் என்று இருப்பார்கள். அதிகாரத்திற்க்கு பயந்து இருப்பார்கள். இவர்களை வாக்களிக்குமாறு உற்சாகப்படுத்துவது உங்கள்
தொலைபேசிகளும் குறுந்தகவல் செய்திகளுமாகும். வட்டக்கச்சி கிளிநொச்சி பரந்தன் பளை பூநகரி கண்டாவளையைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தநாடுகளிலிருந்து செய்யக்கூடிய முதல்கட்டாய கடமையாகும். அதன்பின் அங்குள்ள மக்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். இது எமிடையே ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்தும். உங்கள் பிரதிநிதியை நீங்களே தெரிவு செய்யவேண்டும்.
எமக்கெதிரான குடியேற்றத்தை நாமே தடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் தமது உறவினர்கள் மூலம் பூநகரியில் இருக்கின்ற சில ஊர்களிலுள்ள குமுழமுனை விநாசியோடை தட்டுவங்கொட்டித் தமது உறவினர்கள் மூலம் அரசுக்குவாக்களிக்க வேண்டுமென்ற திட்டத்தை முடுக்கியுள்ளார்கள். ஆகையால் கிளிநொச்சித்தொகுதி மக்களும் யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்துத்தொகுதி மக்களும் தமது மூன்று வாக்குகளையும் பயன்படுத்தும் போது கிளிநொச்சித்தொகுதி வேட்பாளரான திரு.சி.சிறிதரனின் 10 ஆம் இலக்கத்தை கவனத்தில் கொள்ளவேண்டிய சாணக்கியம் வேண்டும்.

பொ.முருகவேள் ஆசிரியர் - பூநகரி

Saturday, April 3, 2010

முத்துவிழாக் கண்ட கூட்டுறவுக் காவலர் டான்சிறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையர்

டான்சிறி அவர்கள் முத்துவிழாவின் நிறைவுவிழா பிப்ரவரி 29ஆம் நாள் காலை 9-30 மணியளவில் சென்னை சாசுத்திரி நகரில் உள்ள திருமணமண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மலேசியத் தமிழர்களின் ஒப்பற்ற தமிழர், ம.இ.க.வின் தேசியத் தலைவர் டத்தோசிறி ச.சாமிவேலு அவர்கள் வருகை தந்திருந்தது முத்துவிழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் இருந்தது.டத்தின்சிறீ இந்திராணி அம்மையார் அவர்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்

மலேசியத் திருநாட்டிலிருந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டத்தோ சகாதேவன்,கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி என்றும் டான்சிறியின் துணையாக விளங்கும் நாடகக்கலைஞர் பதி.கூட்டுறவு இதழில் தமிழகத்திலிருந்து செல்லும் பெருமக்களைப் பற்றி எழுதும் மாணிக்கம் மற்றும் பெருமக்கள் பலர் இணையராக வந்து டான்சிறியின் முத்துவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
.
டான்சிறியின் மேல் பேரன்பு கொண்ட அருமைத் தந்தையார் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் யானும் நிறைவுவிழாவிற்குச் சென்றிருந்தோம் அருளாளர் இராம வீரப்பனார்,முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எசு.இளங்கோவன் மலர்மாமணி இளஞ்செழியன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் யுவராச அமிழ்தன், எழுத்தாளர் இறையெழிலன்,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் மற்றும் தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெருமக்களெல்லாம் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தந்தையார் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பா டான்சிறியின் கொடையுள்ளத்தையும், தொண்டுணர்வையும் பறைசாற்றுவதாக இருந்தது. அந்த வாழ்த்துப்பாவை யான் மேடையில் பாடினேன்.வந்திருந்த அனைவருக்கும் அச்சான படிகளையும் வழங்கி மகிழ்ந்தோம்.

மலேசியத் திருநாட்டின் மாசிலா மாணிக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்சீறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையரின் முத்துவிழா சென்னையில் அவரது இல்லத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.28-2-20010 ஆம் நாள் காலை யானும் துணைவியார் பரிமளாவும் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்கும் பேறு[பெற்றோம்.

டான்சிறியின் இல்லறக் கொடையான மக்களும் மருமக்களும் வழியினரும் சுற்றத்தாரும் சூழ்ந்து நிகழ்வை மகிழ்வாகக் கொண்டாடினர்

டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மலேசியத் தமிழர்களின் வாழ்வைச் செழிப்புறச் செய்த பெருமகன். தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் கோலாலம்பூர் நகரில் 26 மாடி கட்டிடத்தை கட்டி விசுமான் துன் சம்பந்தன் என தமிழில் பொறித்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.மலேசியா முழுமையும் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வு மலரச்செய்த மனிதநேயமாமணி. ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி கவிதை கட்டுரை அனைத்துத் துறைப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் பெருமகன். கூட்டுறவு இதழை நடத்தி எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் கேஆர்எசு பதில்களில் மக்களை தெளிவுபடுத்தும் இதழாளர்.

என்றும் இளமைத்துடிப்போடு பணியாற்றும் டான்சிறிக்கு 80 அகவை என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான் ஆனால் புவான்சிறி உலகநாயகி பக்கத்தில் அமர்ந்து அன்புசெலுத்தும் பாங்ககைக் கண்டபோது இளமையின் உண்மை புரிந்தது..உறவினர் பெருமக்களெல்லாம் டான்சிறியின் முத்துவிழாக் கோலத்தை சூழ்ந்திருந்து மிகச் சிறப்பாக நடத்தினர். டான்சிறி பிறந்த ஊர் தமிழகத்தின் திருக்கோட்டியூர்.திருகோட்டியூரில் தொடங்கி மலேசியத் திருநாட்டின் மாண்புரு மன்னராக விளங்கும் மாமணி டான்சிறி சோமசுந்தரம்.

ஆன்மீக முறைப்படி புனித நீரைக் கொண்டு முத்துவிழா இணையர்கள் மேல் ஊற்றி நீராட்டினர்.வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முத்துவிழாப் பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.யானும் என்னுடைய துணைவியார் பரிமளாவும் முத்துவிழா இணையருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி வாழ்த்துப் பெற்றோம். வந்திருந்த பெருமக்களோடு உணவருந்தி மகிழ்ந்தார் டான்சிறி.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டை பாங்காக்கில் நடத்தினோம்.அதுபோது மாநாடு நடத்த பொறுப்பேற்றவர் பின்வாங்கினார் தந்தையார் அவர்கள் பல்வேறு சுமைகளை தன் தோள்மேல் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களை யான் பாங்காக் அழைத்துச் சென்று மாநாட்டில் பங்குபெறச் செய்தேன்.மாநாட்டை வெற்றியுடன் நடத்த யானும் தந்தையும் இன்னலுற்றபோது டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மாநாட்டில் பங்கேற்று இரண்டாம் நாள் உணவுச் செலவை தாமே ஏற்று மாநாடு வெற்றிபெற வழிவகுத்தவர். அப்போது அவரிடம் தொகை இல்லை இருப்பினும் தன் கடன் அட்டையைக் கொடுத்து அதில் அவர் செலுத்திய பாங்கை எண்ணும்போது டான்சிறி அவர்களின் பேருள்ளத்தை உணரமுடியும்.

உலகப் பொதுமறை மாநாடு மலேசியா கோலாலம்பூர் நகரில் டாக்டர் தமிழ்மணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அம் மாநாட்டின் இந்தியச் செயலாளராகப் யான் தொண்டாற்றினேன். தமிழகத்திலிருந்து 160 பேராளர்கள் பங்கேற்றனர். அதுபோது கோலாலம்பூர் நகரின் முதன்மைச்சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தோட்டப்புற மாளிகையின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை டத்தோசிறி அவர்களும் டான்சிறி அவர்களும் நிறுவிய பாங்கு தமிழ் கூறு நல்லுலகம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.

உலத்தமிழ்ப் பணபாட்டு இயக்கத்தின் 10ஆம்மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினர் அதுபோதும் டான்சிறி அவர்களின் பங்களிப்பு மகத்தானது..சென்னையிலிருந்து என்னுடைய தலைமையில் பேராளர்கள் பங்கேற்றனர். தமிழர்கள்பால் டான்சிறி கொண்டுள்ள பற்றை உணரமுடிந்தது.

அண்மையில் யாங்கள் நடத்திய பன்னாட்டுத்திமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டில் அவர் தமிழகத்தில் இருந்ததால் பங்கேற்க இயாலா நிலையில் இருந்தார். இருப்பினும் தந்தையார் அவர்களும் அருளாளர் விகடர் சுப்பையா, டாடக்டர்.சி.தர்மலிங்கம் ஆகியோர் சென்றபொது மாநாட்டிற்கு உதவி புரிந்த பாங்கு போற்றத்தக்கது.

மலேசியாவில் நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கு டான்சீறியின் பங்களிப்பு இல்லாத நிகழ்வே இல்லை என்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களின் ஏந்தல் டான்சிறி சோமா.

முத்துவிழாக் கண்ட இணையர்கள் நூற்றாண்டு விழாக்கண்டு தமிழினம் தழைத்தோங்க பன்னாட்டுத் தமிழர்கள் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.