Monday, November 21, 2011

ஆவேசப் பேராசான் முனைவர் அருகோ


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(முனைவர் அருகோ அவர்களின் பவழவிழா மலருக்கு ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய கட்டுரை)

பவழவிழாக் காணும் நாயகர் கவிச்செம்மல் முனைவர் அரு.கோபாலன் சங்கரன்கோவிலில் தமிழ்குடியில் பிறந்து நாம்தமிழர் இயக்கத் தந்தை சி.பா. ஆதித்தனாரால் அருகோ என விளம்பப்பட்டவர். தமிழிற்காகவும் தழிழர்கட்காகவும் தம் வாழ்நாளை ஒப்படைத்த பெருமகன். எம் இளம் வயதிலிருந்தே முனைவரின் பெருமையை உணர்ந்தவன். தந்தையாரின் நாற்பது ஆண்டுகால நண்பர். அன்றைய காலங்களில் வில்லிவாக்கத்திலிருந்து மிதிவண்டியில் சுற்றி சுற்றிச் தமிழ் தமிழர் சிந்தனையைக் காத்த இன்றும் காக்கும் செயல் மறவர்.

நாம்தமிழர் இயக்கத்தின் தளபதியாக வாழ்ந்து தலைமையே கொள்கை மறந்தாலும் இன்றும் அந்தக் கொள்கையையே தம் வாழ்வுப் பணியாக உரமேற்றிகொண்டிருப்பவர்.
உலகநாடுகளைப்பற்றியும், விடுதலை பெற்ற நாடுகளைப்பற்றியும் தலைவர்கள் பற்றியும் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு உரைவீச்சாலும் எழுத்தாலும் அறிவூட்டிய பேராசான்.
அருகோவின் எழுத்து உலகம் போற்றும் எழுத்து.பல்வேறு இதழ்களை உருவாக்கிய பெருமகன். எம்தந்தையார் வெளிநாடு சென்றபோதெல்லாம் தமிழ்ப்பணிக்கும் பெருமகன் வழங்கிய பங்களிப்பை நன்றியோடு எண்ணுகிறேன். தற்போது முப்பது ஆண்டுகளாக வெளிவரும் எழுகதிர் இதழ் தமிழர்களின் கலைக்களஞ்சியம். தமிழகம் ஈழம் தமிழ்த்தேசியம், பார்ப்பன ஆதிக்கம், அயலார் ஆதிக்கம், திராவிட திசைமாற்றம், புலம்பெயர் தமிழர் என அனைத்துத் தளங்களிலும் தம் கருத்தை அஞ்சாமல் பதிவு செய்து அதற்காகப் போராடும் போராளி.

1982 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருமைத் தந்தையார், அருகோ, தணிகைக்கோ இரசீது மூவரும் அன்று ஓடிய போட்மெயில் தொடர்வண்டியில் இராமேசுவரம் சென்று ஈழத்திற்குச் சென்றனர். யான் பெருமக்களை வழியணுப்பி வைத்தேன். காந்தியத்தின் தலைவர் இராசசுந்தரமும் பெரியவர் டேவிட் அவர்களும் ஈழத்தின் முக்கு முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று மக்களைக் கண்டு தொண்டாற்றித் திரும்பினர்.இராசசுந்தரம் அவர்கள் வெளிக்கடை சிறையில் கோடூரமாக தாக்கப்பபட்டு சிங்களக் கயவர்களால் கொலைசெய்யப்பட்டார். டேவிட் அவர்கள் தமிழகத்தில் வந்து பணிகளைத் தொடர்ந்தார். தூப்பாக்கிச் சூட்டினூடே ஈழத்தை வலம் வந்த மூவரின் துணிவு அவர்களது நெஞ்சுரத்தை புலப்படுத்தும். இந்தப் பயணத்தை வழிவகுத்தவர் அருகோ.

அருமைத் தந்தையார் அவர்களின் உலகத் தொடர்பால் கிடைத்த நன்முத்து மருத்தவர் பஞ்சாட்சரம். அபெருமகன் நீயூயார்க்கில் தந்தையார் தலைமையில் நடைபெற்ற ஈழமாநட்டில் தமிழகத்தின் முன்னணித் தலைவர்களோடு அருகோவும் பங்கேற்று தொடர்ந்து நிலைகொண்டு சீரிய தொண்டாற்றி வருபவர்.

அருகோ ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்களோடும் தற்போது அவரது திருமகன் வழக்கறிஞர் சந்திரகாசன் அவர்களோடும் நீக்கமற நிறைந்து செயலாற்றுபவர். இந்த அமைப்பின் வழி புலம் பெயர்ந்து தமிழகதில் வாழும் மக்கட்கு உற்றுழி உதவி செய்யும் பெருமகன்.

அருகோ ஒரு சிறந்த மரபு வழிக் கவிஞர். எழுகதிரில் அவரது கவிதைகள் தமிழ் உணர்வை கிளர்ந்தெழச் செய்யும் வலிமையுடையவை. பாட்டுக்கொருபுலவன் பாரதியும் புரட்சிக்கவிஞர் பாவேந்தரும் தமது இரு கண்கள் என முழக்கமிடுபவர்.

பவழவிழாக் காணும் நாயகர் முனைவர் அருகோவின் சிந்தனைகளை பதிவு செயவதில் பெருமிதமடைகின்றேன்.

”ஒற்றுமையில்லையே என்ற ஒப்பாரியை யூதர்களைப் பார்த்தேனும்,சுண்டக்காய் இசுரேலைக் கண்டேனும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் கைவிட முன்வரவேண்டும்”

’திருக்குறள் தமிழில் இருப்பதால் அது தமிழ் மறையுமாகும். அம் முறையில் அதைத் தமிழ்த்தேசிய நூலாக முதலில் ஆக்கிவிட்டு அடுத்து சர்வதேசிய நூலாக ஆக்க முயற்சிப்பதே அறிவுடைமையாகும்”

”ஆங்கிலமென்ன உலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் விரும்புவோர் படிக்கட்டும் அரசு அதற்கு வழிவகை செய்து கொடுக்கட்டும் ஆனால் பயிற்றுமொழியாகத் தமிழ் நாட்டில் தமிழ்மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் மாறுபடுப்வர்கள் தமிழுக்கு நன்மை செய்வோர் ஆகமாட்டார்கள் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களே ஆவார்கள்.”

”இன்று தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமென்று சொல்லி இராணுவத்திவிட்டு அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் அன்று தமிழ் அற்ப்போராளிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்தார்களா இல்லை. ஒருதலைப்பட்சமாக காலால் போட்டு மிதித்தார்கள்.ஆகவே, தமிழீழத்தைத் தவிர அங்கு தமிழர் பிரச்சனைக்கு வேறு தீர்வே கிடையாது”

”இன்றைய தமிழகம் வடக்கு தெற்கு என்று பிரிக்கப்படுமானால் தங்களுக்கிடையிலான போட்டியில் சாதித் தமிழர்களே அதற்குத் துணைபோவார்கள். தமிழகம் ஒன்றாக இருக்கிறபோதே காட்டிக்கொடுப்புகளும், கூட்டிக் கொடுப்புகளும் தமிழின ஒற்றுமைக்கும் உரிமைக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன என்னும்போது இரண்டுபட்டால் கேட்க வேண்டியதே இல்லை.”

”இன்றைக்கு தமிழகத்தில் இல்லாத எப்பகுதியும் அயலாருடையது. அதில் உரிமை கோரத் தமிழர்க்கு ஞாயமிலலை என்று நினைப்பது ஒன்று. இரண்டு மொழிவழி மாநிலம் அமைவதற்கு முன்பிருந்த அகண்ட தமிழகம் பற்றி அறியாமலிருப்பது.”

”பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் தமிழரல்லாதார் தமிழன் தலையில் மிளகாய் அறைப்பதை எதிர்ப்பதால் பார்ப்பனர் தொடர்ந்தும் தமிழன் தலையில் மிளகாய் அறைக்க என்று ஒப்புக்கொள்வதால் நீங்கள் பொருள் கொள்வதுதான் முறையற்றது.”

எழுபத்தைந்து ஆண்டுகள் தமிழினத்திற்கு தம் அயர்விலா உழைப்பை வழங்கிய மூதிளைஞர் முனைவர் அருகோ அவர்களை அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

Saturday, November 19, 2011

அண்ணா நூற்றாண்டுக் கோயில்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

அறிவுக் களஞ்சியத் தேராம்
அண்ணா நூற்றாண்டுக் கோயில்
செறிவுத் திறனைத் தூக்கல்
செந்தமிழ் மக்களைச் சாய்த்தல்
பரிவுப் பொருளைத் தந்தே
பாதகம் விளைத்தல் நன்றா
உரிமை நூலகம் காத்தல்
உலகுள கருத்தைப் போற்றல்!

குழந்தைகள் மருத்துவம் பேணக்
குறையிலா இடத்தைத் தேர்க
கழனியை மாற்றவே சாடும்
கற்றவர் வாழும் நாட்டில்
தலமுயர் நூலகம் மாற்றல்
தமிழர்கள் புதைத்தல் அன்றோ
பலமதாம் அறிவுத் தேரை
பந்தமாய்க் காப்போம் இன்றே

கண்ணிலா மக்கள் காண
கருத்து ப்ரய்லி உண்டு
மண்ணுல நூல்கள் எல்லாம்
மகத்துவ நூலகம் உண்டு
எண்ணிலாக் கருத்தைக் காண
இணையதள வாய்ப்பு உண்டு
தன்னேரில் அரங்கம் எல்லாம்
தகுதியை அரசே மாய்த்த(லா)?

ஆசியா முதன்மைக் கண்ட
அருமை நூலகம் ஈதே
மாசிலாச் செயலச் செய்த
மாண்பமை கலைஞர் சிந்தை
தூசியைத் துடைத்தல் விட்டு
துன்பத்தைத் தருதல் நன்றோ?
காசிலா எழ்மை மக்கள்
கதறல் உம்மைச் சாய்க்கும்!

Friday, November 18, 2011

கொலைக்குக் கொலையா

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

மரணம் என்பது தீர்வா
மனங்கள் எண்ணுதல் முன்னே
சரணம் பாடும் கூட்டம்
சட்டம் போடுதல் நன்றா!
புராணம் பாடும் நாட்டில்
புண்ணியம் எனபது பொய்யா
தருணம் உயிரைக் காக்க
தக்கவர் இருந்து சாய்ப்போம்!

தண்டனை இருபத்தும் மேலே
தக்கோர் துன்பம் கண்டும்
கொண்டிடும் அவலம் சாய்க்கா
கொடுமை மரணம் ஏனோ?
எண்டிசை உள்ள நாட்டுள்
ஏற்கா மரண ஓலம்
அன்புள காந்தி மண்ணில்
அகிம்சை தவிர்த்தல் ஏனோ?

தாயின் கதறலைப் பாரீர்!
தந்தையார் பிள்ளை எங்கோ
சேயின் உறவைக் காணா
சோதனை மரணத்தின் மேலே
பாயிரம் பாடும் நாட்டில்
பண்புதான் கொலைக்குத் தூக்கா?
தாயினும் கார்த்தி கேயர்
தண்டனை நெறியைச் சொன்னார்!

இராசிவ் உன்னதத் தலைவர்
இறப்பில் துன்பியல் கண்டோம்
இறவாப் புகழைப் பெற்ற
இராசிவ் காந்தி பேரால்
துறவிக் கோலம் பூண்ட
தூய்மை அனனை சோனியா
கரையும் தமிழர் உள்ளம்
கனிந்தே தண்டனை போக்கும்!

Thursday, November 17, 2011

பரமக்குடி சோகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

சாதிப்பேயை தொடராய் நாட்டும்
சாத்தான் மாய்வது எந்நாள் ?
ஊதிஊதி மனிதம் சாய்த்து
மாண்பை வீழ்த்துதல் ஏனோ ?
நாதியற்ற தமிழன் இங்கும்
நசுக்குதல் வீழ்ச்சி அன்றோ
மாதிமிர் துப்பாக்கிச் சூடு
மமதை சாய்வது எந்நாள்?

கூடிய உணர்வின் மாட்சி
குதறித் தள்ளுதல் ஏனோ?
தேடியே துரத்தி மண்ணில்
தேகம் சாய்த்தல் நன்றோ?
நாடிடும் தலைவர் வேட்கை
நாடுள அனைவர்க்கும் ஒன்றே
சாடியே ஒருதலை வேசம்
சாமான்யரை நசுக்கும் மோசம்

கொன்றே சாய்த்த பின்பும்
குலை நடுங்காதது ஏன்/ஏன்
நன்றே பரிவுக் காசும்
நயம்பட வழங்காமை ஏன்?ஏன்?
கொன்ற உயிர்கள் காண
கொலைக்களம் சொல்லமை ஏன்?ஏன்?
மன்றம் தமிழன் ஆட்சி
மறந்த சோகம் அன்றோ!

பரமக்குடியின் தென்னகச் சோகம்
பரவாது காக்க வேண்டும்
வீறுள தமிழர் செர்ந்தே
வியத்தகு எழுச்சி வேண்டும்
சோரமாம் சாதி சாய்த்து
சமத்துவம் பேண வேண்டும்
வீரம்வீவேகம் நமக்குள் வேண்டாம்
வீணரை சாய்போம் சேர்ந்தே!

Wednesday, November 16, 2011

புலவர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல்

கவிமுரசு. வா.முசே. திருவள்ளுவர்

(சென்னையில் 13-11-11 அன்று பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூலை தலைமைதாங்கி வெளியிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூல் நூலில் அவரே குறிப்பிட்டது போல் பூங்காவில் கிடைத்த அரும் புதையல். புதையலின் அருமையை உணர்ந்த சமுக ஆர்வலர் இந் நூலைப் பதிப்ப்பித்த யாசேவா அவர்கள் பட்டை தீட்டி திரையுலக சமூகத்திற்கு வழங்கியுள்ளார். இருவரையும் திரையுலகம் நன்றியோடு பாராட்டவேண்டும். இன்று வாய்ப்புக்கிடைத்த அரைகுறைகளும், தம்மையே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பேதைகளுமே உலகில் போற்றப் படுகிறார்கள் புகழப்படுகிறார்கள். இலக்கியத்திற்காகவும் கலைக்காககாகவும் ,சமூகத்திற்காகவும் தன் வாழ்நாளையே வழங்கியவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைப்படவேண்டியது நிலையாகும். ஆனால் அப் பெருமக்கள் காற்றாய், மழையாய், ஒளியாய் எதையும் எதிர்பாரமல் தம் கடமையைச் செய்து வருகிறார்கள் அதனால்தான் நம் இனத்திற்கும் மொழிக்கும் சான்றுகள் நிலையாக இருந்துவருகிறது.

தொல்காப்பியர் காலத்தை அருட்செல்வர் மகாலிங்கம் 9000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என பதிவு செய்துள்ளார்.தமிழர்கள் வழங்கிய இலக்கியங்களே நமக்கு சான்றாக நம் இனத்தின் வரலாறாக உள்ளது. சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கு சான்றான இலக்கியம் என அனைவரும் பதிவு செய்துள்ளனர். அரங்கின் திரைச்சிலை மேலிருந்தும், இருபக்கமும் மூன்று முறைகளில் இருந்ததையும், அரங்க அமைப்பின் அளவு விபரங்களையும் இளங்கோவடிகள் யாத்துள்ளார். அறிஞர் பெருமக்கள் இந்நாள்வரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

யான் இலண்டன் மாநகர் சென்றபோது தேம்சு நதிக்கரையின் கரையோரம் என் துணைவியார் பரிமளாவோடு எழிலை வியந்தவண்ணம் நடந்தோம். அப்போது ஒரு அரங்கத்தைக் கண்டோம். சேக்சுபியர் நாடகம் நடத்தி வாழ்ந்த அரங்கம். உள்ளே சென்றோம் அங்கே மேக்பத் நாடகம் நாடகக் குழுவினர் நடத்திக் கொண்டிருந்தனர். இன்றும் நுழைவுச்சீட்டு பெற்று நாடகங்களை அனைவரும் கண்டு களிகின்றனர். ஒரு படைப்பாளன் இன்றும் அரங்கில் தாம் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வகையில் தொல்காப்பியத்தில் தோய்ந்து ஆழ்ந்து தாம் கண்டெடுத்த நன்முத்துக்களை நடிப்பியல் களஞ்சியமாக வழங்குகிறார் புலவர் செந்தமிழ்ச்செழியன் பொருளதிகராத்தில் மெய்பாட்டியலில் தொல்காப்பியர் கூறியுள்ள யாப்புகளை பகுத்து விரித்து பாமரனும் புரியும் வண்ணம் வழங்கியள்ளார் புலவர்.

”நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்:-பொருள்-மெய்-1197)

எட்டுச் சுவைகளையும் பட்டியலிட்டு பின் ஒவ்வொன்றிலும் உள்ள நான்கு பிரிவுகளையும் விரித்து 32 மெய்ப்பாடுகளையும் விரித்துரைக்கும் நயம் புலவரின் ஆழ்ந்த புலமைக்குச் சான்றாகும்.

அறுபது பக்கங்களே கொண்ட நூல் என்று எண்ண இயலா வண்ணம் தம் வாழ்நாள் பணீயாக நடிப்பியலுக்கு பிழிவாகத் தந்துள்ளார். புலவர் அவர்கள் எழுத்தாளர், கவிஞர், தமிழாசிரியர், இதழாளர், அனைத்தையும் தாண்டி நடிகராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆதலால்தான் 32 சுவைகளையும் தம் வாழ்நாளில் கண்ட அனைத்து நடிகர்களையும் சான்றாகக் காட்டி தொல்காப்பியர் காலத்திற்கும் இன்நூன்றாண்டிற்கும் பாலமாக இந்நூலைத் தந்துள்ளார்.

தொல்காப்பியத்தில் தலைவன் தலைவிக்குக் கூறிய ஒப்புமைகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சாத்திரம் சோதிடம் என்று திரியும் அறிவிழிகளுக்கு சாட்டையடியாக உள்ளது புலவரது விளக்கம்.

பிறப்பே குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பிளது வகையே. (தொல்:-பொருள்-மெய்-1219)

தொல்காப்பியர் ஒப்புமைகளை 1. நற்குடிப்பிறப்பு 2. நல்லொலுக்கம் 3. ஆளுமைத்தன்மை 4. வயதுப் பொருத்தம் 5. வடிவம் 6. காம உணர்வுப் பொருத்தம் 7. உள்ள உறுதி, 8. கொடைப் பண்பு 9. புரிந்தொழுகும் நுட்ப அறிவு 10, செல்வம் என விளக்கியுள்ள பாங்கு போற்றுதற்குரியது. தமிழர்கள் வாழ்க்கை இணை தேர்வுக்குப் பின் பற்றவேண்டிய நடைமுறைகளாகும

இல்லற வாழ்விற்கு வேண்டாத பத்தையும் தொல்காப்பியத்திலிருந்து நமக்குப் பலாச்சுளையாகத் தந்துள்ளார் புலவர்.

தொல்காப்பியத்தில் நடிப்பியல் தொல்தமிழர் சிறப்பைப் போற்றி நம்மைப் பின்பற்றச்செய்யும் நூல். இந் நூலை யாத்த புலவரையும் வெளியிட்டு அதன் புகழைப் பரப்பும் பணியைச் செய்யும் யாசேவா அவர்களையும் என் அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

புலவர் செந்தமிழ்ச்செழியன் மேலும் தொல்காப்பியரின் சிந்தனைகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டுகிறேன் அதற்கு தமிழ்லுலகம் என்றும் துணைநிற்கும். எங்களது அன்னை சேது அறக்கடளையின் விருதைப் பெற்றபெருமகன் அனைத்து விருதுகளையும் பெறுவார் என்பது திண்ணம்.

Monday, November 14, 2011

முத்தமிழறிஞர் கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா ஆய்வுரை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார்திடலில் புதுமை இலக்கியத் தென்றலின் சார்பில் நடைபெற்றவிழா வில் ஆசிரியர் வழங்கிய ஆய்வுரை)

தொல்காப்பியப் பூஙகா தமிழர்களுக்குக் கிடைத்த காலக்கனி. அந்தக் கனியை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கிய வாரது வந்த மாமணி முத்தமிழறிஞர் கலைஞரைத் தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணிப் போற்றிப் பெருமையுறும்.

தொல்காப்பியப் பூங்காவைப் பற்றித் தொடர்ந்து ஆய்வுரை வழங்கும் தஞ்சை கூத்தரசன் அவர்களின் பணி மகத்தானது. தமிழ்வள்ளல் சந்திரசேகர் கலைஞரின் பால் நீங்கா பற்றுடையவர். தொல்காப்பியப் பூங்காவின் அவரது உரைகள் என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வல்லமை உடையது. புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் நிகழ்வுகளைத் திறம்பட அயர்வின்றி நடத்திவரும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அம்மையாரை நெஞ்சாரப் தமிழ் உள்ளங்களின் சார்பில் போற்றுகிறேன்.

தொல்காப்பியப் பூங்காவில் நூறு மலர்களைப் படைத்துள்ளார் முத்தமிழறிஞர் கலைஞர். பூங்காவுள் உள்ள மலரை நுகரவும் காணவும் மகிழவும் வாழ்க்கைப் பயன்பாட்டிற்கு தந்துள்ளார் தமிழாய்ந்த தமிழ் மகன் முத்தமிழறிஞர் கலைஞர்.

எழுத்தைப் பற்றிக் தொல்காப்பியர் கருத்தைக் கூற வந்த கலைஞர் “செதுக்கிச் சிலைவடிக்க உளியும் ஓவியம் தீட்டத் தூரிகையும் போல எழுத்துத் தவையன்றோ நூல் படைக்க” (பக்:41) எனக் கூறி எழுத்துக்களின் அணிவகுப்பை அழகுபடக் கூறியுள்ளார்.

தொல்காப்பியரின் உயிர்மெய்யைக் கூறவந்த கலைஞர் என்றும் தமிழர்தம் நெஞ்சில் நிலையாக உள்ள அண்ணாவையும் தன்னையும் கூறும் பாங்கைப் பாருங்கள்.”என்னதான் இருந்தாலும் தமிழ் தந்த கொடையைப் பாருங்கள் ’அ’ வை முதல் எழுத்தாகக் கொண்ட அண்ணா நமக்குத் தலைவர்-இன்று ’க’வை முதல் எழுத்தாகக் கொண்ட கலைஞர் கருணாநிதி நமக்குத் தலைவர்”.(பக்:53)

தொல்காப்பியத்தின் மாத்திரை அளவைக் கூற வந்த கலைஞர் சாதாரணக் குடிமகனும் புரியும் வண்ணம் ஒரு நாடகமே நம் முன் நிறுத்துகிறார்.இரு பெண்கள் மாத்திரை குறித்துப் பேசுவது பொலவும் திருட வந்த திருடர்கள் ஏதோ மகப்பெறு நடக்கும்வீடு என்று எண்ணி சென்று விட்டதாகக கூறி தொலகாப்பியரின் எழுத்துக்களுக்கான மாத்திரை அளவைக் கூறுவது அருமையிலும் அருமை.

”எல்லா மொழிக்கும் உயீர் வரு வழியே
உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார்”
தொல்காப்பியநூற்பா 38.

ஆசிரியரும் மாணவியும் இலக்கியக்காதலும் ஒன்றுபடும் வண்ணம் உடம்படு மெய்யின் கருத்தையும் மனத்தையும் ஒன்ற வைக்கிறார். கலைஞரின் கவின்மிகு சொற்களைப் பாருங்கள் “எல்லாச் சொற்களிலும் உயிர் ஈற்று முன் உயிர் வரும்போது உடம்பொடு மெய் தொன்றும் என்றும், அதன் வடிவை நீக்கார் என்றும் சொல்லிவிட்டு மா+இலை=மாவிலை என்பது உடம்படு மெய்யாயிற்று என்றீர்களே. நம்மைப் பாருங்கள் அந்த உடம்படு மெய்தானே இது. உயிர் ஈற்றுமுன் உயிர் கலக்கும்போது நம் மெய் இரண்டு கலத்தல் இலக்கணப்படி ஏற்கத்தக்கதுதானே. உருபு கொளல் வரையர் என்றுதானே கற்பித்தீர்கள்” (பக்:75)

பாட்டியையும் சிறுவனையும் உரையாட வைத்து தொல்காப்பித்தின் உயிரிணை அஃறிணையை தலைமுறைகள் வழி விளக்குகிறார். “பாட்டி நீ சொல்லும் சோழன் உன் மகனாகவோ பேரனாகவோ இருந்தால் உயர்திணை அல்லது அந்தச் சோழன் பேருந்தாக இருந்தால் அஃறிணை” (பக்:88)

அரசியல் ஞானி கலைஞர் உலக அரசியலையும் நம் அரசியலையும் கூறி தொல்காப்பியத்தை விளக்குகிறார். உலகபோரில் முதன்மை நாட்டோடு பங்கேற்ற நேச நாடுகளையும் தேர்தலுக்கு முதண்மைக் கட்சிகளோடு கூட்டணி சார்பைக் கூறி அதைப் பொன்று குற்றிய லிகரம், குற்றிய லிகரம் எனக் குறிப்பிடுவது சாதரண மக்களுக்கு உலக நடப்போடு கூறுகி’றார்.

பகுத்தறிவும் கோமகன் கலைஞர் அவர்கள் பராசக்தி முதல் இன்று வரை மடாதிபதிகளின் கயமைகளைச் சாடுவதில் அவருக்கு இணை அவரே.தொல்காப்பியத்தின் வழுவமைதியைக் கூறும் வழியை நோக்குங்கள்.

”இரவுக்கிளி போய்விட்டார்களா? என்று பன்மையில் கேட்கிறீர்1 ஒரு மடாதிபதிதான் உள்ளே இருக்கிறார் மடாதிபதிகள் என்று பன்மையில் உரைக்கிறீர், உமது கூற்றுப்படி அறைக்குள்ளே எத்த்தனை மடாதிபதிகள்? எத்தனை கிளிகள்? ஒரு மடாதிபதியும் பல கிளிகளுமா? அல்லது ஒரு கிளியும் பட மடாதிபதிகளுமா?

சின்னச்சாமி குழப்பாதீர்1 நான் இலக்கணப்படி தான் கேட்டுள்ளேன் ஒருவ்னையும் ஒருத்தியையும் சுட்டிச்சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச்சொல்லும் உலக வழக்கில் உயர்த்திச் சொல்லும் சொல்லாம். இலக்கண வழக்கெல்லாம் என்று தொல்காப்பியர் பால்வழுமைதி என கூறியிருக்கிறார்”.(பக்:96)

கண்ணும் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மைக் கூறும் கடப்பாடில்வே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே (நூற்பா: 62)

இந்த சொல்லதிகார நூற்பாவிற்கு சிற்பி ஒவியரை காதலன் காதலாக்கி கலைஞர் வழங்கும் சொல்லோவியம்.” இரண்டு கண்கள் இருப்பினும் ஓவியத்தில் ஒன்றுதான் தெரிகிறது ஓவியத்தில் இரண்டு மார்பகங்கள் காணப்படவிலலை ஒன்றுதான் உள்ளது. மூங்கிலணைய உன் தோளையும் அவ்வாறே தீட்டியுள்ளாய். கண்கள், தோள்கள் மார்பகங்கள் என்றில்லாமல் கண்ணும் தோளும் மார்பகம் மட்டும் காண்கிறேன் அதாவது தொல்காப்பியர் கூற்று அப்படியே தோய்ந்திருக்கிறது இந்த ஓவியத்தில்!” (பக்:101)

எனது மகன் என்ற சொல்லுக்கு கலைஞர் தொல்காப்பிய வழி கருணையானந்த அச்சகத்தையும் எண்ணி சீர்திருத்த திருமணத்தையும் அதில் நேரம் படும் பாட்டையும் விளக்குவது அருமையில் அருமை “எனது மகன் என்று எழுதும்போது உயர்திணையுடன் ’அது’ என்ற ஆறாம் வேற்றுமை உருபுக்குப் பதிலாக நான்காம் வேற்றுமையாகிய ’கு’ உருபு வருதல் வேண்டும். இல்லையேல் எனது என்று குறித்திடும்போது தவறாகிவிடும் என்வே ’கு’ உருபை இணைத்து ’எனக்கு மகன்’ என்பதே சரியாகு.ம்.(பக்:114)

தொல்காபியத்தின் பெருந்திணையை விளக்க மடலேறுதல் கூறி அறியார்க்கும் அறிய வைக்கிறார். “கடற்கோள் எனப் குமுறிப் பொங்கும் வலிமையினால் காமந்தணித்துக் கொள்ளப் பாய்ந்திடும் செயலும் பெருந்திணை எனப்படும் “ என விளக்குகிறார்.(பக்:202)

தொல்காப்ப்பிய பொருளதிகாரம் புறத்திணையியல் நூற்பா 5க்கு நடுகல்லானவன் எனும் தலைப்பில் போர்ப்பரணியாகவே வரைந்துள்ளார். ”ஓ மகனே! நீ பொன்முடி வேண்டாமெனப் புகழ் முடி சூடிக் கொண்டாயோ! எனக் கலங்கிய காவலன் அவன் நெற்றியில் முத்தமிட்டான். வெற்றியில் மகிழ்ந்திட முடியாத வீரர் கூட்டம் போரில் விழுப்புண்பட்டோர்க்கு கல் எடுத்து நீராட்டி நினைவு நடுகல் நாட்டிடும் முறையைப் பின்பற்றி களத்தில் மாண்ட மனனர் மனையின் இளவலுக்கும் நடுகல் நாட்டி நினைவு போற்றியதில் புதுமை என்ன இருகிறது.!” (பக்: 217)

இருபொருள் ஒரு விளக்கம் தலைப்பில் விளக்கவந்த கலைஞர் சிலப்பதிகாரத்தை நினைவுறுத்தி தரும் பகுத்தறிவு விளக்கம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது

.” பார்ப்பனர் ஓதிய மந்திரமும் – கோள்
பார்த்துக் குறித்த ஓரையுமே
பாதுகாத்திடவில்லை அவர்களையென்று
பகரும் சான்று சிலப்பதிகாரம் (பக்:292)

அய்யர் விளக்கத்தி நம் அய்யர் கலைஞர் தொல்காப்பிய வழி விளக்குவது சிந்தையில் பதிய வைக்கவேண்டியது.

அய்யர் எதற்காக என்று கேட்டோருவர்
அவர்வேறுகுலம் நம்மிடையே ஏன் வரவேண்டும் என்றார்
அன்பரே அந்த அய்யரல்ல இவர் அறிக
அறநெறி வகுத்து தீநெறி விளக்கும்
தக்கவர் இவர்-தலைமைச் சிறபுடையார் இவர்
களவு ஒழுக்கம் தவறி
பொய்யும் வழுவும் தோன்றிய போது
காரணம் யாத்த அய்யர் இவர்” (பக்:305)

”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” ( பொருளியல் நூற்பா15)

கலைஞரின் விளக்கம் பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும் முற்போக்கு ஞானியாக உரைக்கிறார்.

“இந்தக் கால கட்டத்து பெண்களின்ன் நிலையோடும் அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளோடும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டத்துப் பெண்களின் நிலை ஆண்களின் நிலை ஆகியவற்றை பழம்பெரு வரலாறுகளிலோ இலக்கியங்களிலோ படித்துப் பார்த்துவிட்டு அவற்றைத் தவறாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அக்கால நிலையை அறிந்துகொள்ள துணைபுரியும் சாதனங்களாகமட்டுமே அவற்றைப் பார்க்கவேண்டும்-பய்ன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதே அறிவுடையோர் செயலாகும்.” (பக்:354)

தொல்காப்பியத்தின் பெரிமிதம் நான்கு கல்வி, தறுகண் , இசைமை, கொடை கலைஞரின் விளக்கம் தமிழர்களின் தறுகண்மையைக் கூறுவதாகும்.

முதல்நூலும் வழிநூலும் தலைப்பில் தொல்காப்பியத்தை பாணினியின் பின்னர் என் புராணாம் பாடியோர்க்கு கலைஞர் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என பனம்பாரனார் பாயிரத்தைக் கூறி பாணினிக்கு முற்பட்டவர் என்பதை நிலைநாட்டுகிறார்.

”முதல் நூல் வழி நூல் வகை பற்றி விளக்குகிற நூற்பாக்களாக இவற்றைக் கருத வேண்டுமேயல்லாமல் முதல் நூல் தொல்காப்பியர் இயற்றியதா? அல்லது இறைவன் இயற்றியதா? என்ற ஆராய்ச்சி தேவையில்லை” எனப் பகர்கிறார் கலைஞர்.

தொல்காப்பியத்தின் மரபியல் நூற்பா 95 பாடலைக் கூறி “ அறிவிற் சிறந்து விளங்குவோர் முனைந்து கண்டதே குற்றம் குறையில்லா முதல் நூலாக அமையும்”என்ற விளக்கம் நிறைவானதாகும்.

இந்நூற்றாண்டில் பெரியார் அண்ணா வழி நம் இனத்தைக் காக்கும் ஒப்பற்ற தலைவர் அவர்களின் நூலை ஆய்வு செய்வது யாம் பெற்ற பேறு. திரைப்படங்களில், அரசியலில்,ஊடகங்களில் அவரவர் போக்குக்கு எழுதி இளைஞர்களை தடம் மாற்றும் இந்தக் காலக்கட்டத்தில் தொல்காப்பியப் பூங்காவைப் படைத்து தமிழையும் தமிழரையும் நாளெலாம் பொழுதெலாம் உயர்த்தும் உன்னதத் தமிழ்மாமணியாய் வாழும் ஐயனை வணங்குவோம்.

Saturday, November 12, 2011

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் ஆய்வுரை



கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(சென்னையில் முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் ஆய்வுரை)

அறிவியக்கம் நடத்தி தமிழ் மொழிக்கு தனி அடையாளத்தை உருவாக்கி தம் வாழ்நாள் வரை கடைப்பிடித்த சாலை இளந்திரையனாரையும் சாலினி அம்மாவையும் நினைவு கூறும் வண்ணம் தமிழ் எழுதும் முறையைப் பின்பற்றி ஒருநூலையே வெளியிட்டுள்ள முத்துவிழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டனம் பழநிச்சாமியின் கொள்கை உறுதியை நெஞ்சாரப் போற்றுகிறேன்.யாங்கள் தாய்லாந்தில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாடு நடத்தியபோது கவியரங்கில் பங்கேற்று பாடிய பெருமைக்குரிய கவிஞர். பின் மலேசியா சிங்கப்பூர் சென்றுவந்த சிறப்புக்குரியவர்.கோவை என்றாலே அமரர் ஆண்மையரசு அம்மையப்பா அவர்களை மறக்க இயலாது அப்பெருமகன் மன்றத்தையும் தமிழ்ப்பணியையும் நிலைபெறச்செய்தவர்.அப் பெருமகனும் மாநாடு வந்து கலந்து கொண்டதை எண்ணிப் பெருமையுருகிறேன்.

அந்தி தீபம் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமைதாங்கும் பெருந்தலைவர் கோபாலகிருட்டிணன் அவர்களின் தகுதிவாய்ந்த தலைமையை வணங்குகிறேன்.தலைவர் கோபாலகிருட்டிணன தகுதி வாய்ந்த மாபெரும் மனித நேய மாமணி. இன்று உயர் நிலையில் உள்ள அனைத்துப் பெருமக்களையும் வளர்த்து தமிழர்களை பெருமைப்படுத்திய ஏணி.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது யானும் தந்தையரும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற இரண்டாம் மாநாடு நடை பெற்றபோது பெருமகனைக் காண அலுவலகம் சென்றோம் அன்போடு வரவேற்று உற்றுழி உதவி தமிழிற்கு தோள் கொடுத்த பெருமகன். கோயில் குளத்திற்கு அள்ளி வழங்கிய அந்த இருக்கையில் ஒரு தமிழன் அமர்ந்ததால் தமிழின் மேம்பாட்டிற்கு தமிழ் சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கியதை எளிதாக யாரும் மறக்க இயலாது. காலமான என் அருமைத் சிற்றந்தையர் இந்திய நேரடி வரித்துறையின் தலைவர் பதவி வரை உயர்வு கண்ட வா.மு.முத்துராலிங்கம் அவர்களை தலைவர் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நாசே என்றாலே தன்னம்பிக்கைதான் பிறப்பெடுக்கும். தன்கடின உழைப்பால் இன்று கடல் சார் பல்கலைக் கழகம் வரை நிறுவி இங்கு கவிஞரை பாராட்ட அமர்ந்திருக்கும் நாசே இராமச்சந்திரன அவர்களையும். வழக்கறிஞர் வீரசேகரன் அவர்களையும் விழாவை சிறப்புடன் நடத்தும் ஐயா இரவீந்திரன், மற்றும் கவிஞரின் மக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.


அந்திதீபம் கவிதைநூல் 170 தலைப்புகளில் 200 பக்கங்களில் மனிதம் மொழி வாழ்க்கை என அனைத்துத் துறையிலும் தமது முத்து விழா வரைக் கண்ட அனுபவப் பிழிவை நமக்கு வழங்கியுள்ளார் கவிஞர். ஐந்தாம் வகுப்புவரை படித்து ஆடுமாடு மேய்துக்கொண்டிருந்த தாம் ஒரு தமிழ்வழித் திருமணத்தில் பேராசிரியர் ப.சு. மணீயம் அவர்களின் சொற்பொழிவே தம்மை தமிழ் வழீஈர்த்து படித்து பட்டம் பெற்று தமிழாசிரியராகப் பணிபுரிந்து இந்த நூல்களையும் இயற்றவைத்தது என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்.

ஆங்கில மோகத்தால் தமிழ் வழிக்கல்வி அழிக்கப்படுவதைக் கவிஞர் தம்கவிதையால் வன்மையாகக் கண்டிக்கிறார்.
பிறளய்த்தால் குமரிக் கண்டம் அழிந்ததுபோல்
பிறமொழியில் பாடத்தய்ப் பயிற்றி வந்தால்
திறமான தமிழ்நாட்டில் டாடி, மம்மி
திசைமாறி அம்மப்பா மறந்து போகும் (பக்:17}

தமிழ்படித்தோர்க்கே தமிழ் நாட்டினிலே முதன்மய் நிலை வேண்டும்-ஆகவே
தமிழ்ப் பள்ளிகளின் மூடு விழாக்கள் தடுக்க என்செய்தீர் (பக்:41}

தமிழ்வழி படிக்கும் மாணவருக்கு பிச்சய்போடுதல் கேவலம் – இந்தக்
தடத்தில் வருவ்வோர் பணிமுன்னுரிமய் செய்திடல் வெற்றிஊர்வலம்
அமிழ்தென இச்சட்டம் செய்தால் அங்கே கூட்டம் கூடுமே – இதய்
அருந்தமிழ்ப் பேரவய் வலுவாய் தூண்டும் ஆட்சிக் குழுவும் நாடுமா? (பக்:42}

கடுமையாகப் பாடிய கவிஞர் தனது எணபது வயதில் கண்ட தமிழ் அழிப்பால் அதிசயம் என்ற தலைப்பில் சமூக அவலத்தை கண்டு நோகிறார்.

தமிழகம் உள்ள தமிழர் எல்லாம் தமிழய்ப் படித்தால் அதிசயம்
தமிழக கோயிலில் தயக்கம் இல்லாமல் தமிழில் அருச்சனை அதிசயம்
தமிழக வழக்கு மன்றங்களிலே தம்ழில் புழங்கல் அதிசயம் (பக்:44}

அசய்வு அனும் தலைப்பில் அண்ட இயக்கத்தையே நம் கண்முன் நிறுத்துகிறார்.

உலகம் இருப்பது அசய்வாலே – சூழும்
உயிர்கள் இருப்பதும் அசய்வாலே
இலகும் அணுக்களும் அசய்வாலே
இருக்கும் கோள்களும் அசய்வாலே
இசவாய் நாளும் அசய்ந்திடுவீர் – அதற்கு
இணிக்கும் பயிற்சிகள் துணையாகும் (பக்:60}

உடற்பயிற்சியையும் தம் கவிதையாலே தருகிறார் கவிஞர். தொந்தி எமனுக்குத் தந்தி எனச் சாடுகிறார்.

முந்தி வந்திடும் தொந்தி – எமனய்
முந்தி வரச் சிய் தந்தி – அதனால்
குந்திக் குந்தி உட்கார் – வயிற்றய்க்
குனிந்து குனிந்து எக்கு (பக்:65}

இதுபோன்று உடல் பேணும் கவிதைகளை அனுபவப் பிழிவாகத் தந்துள்ளார் கவிஞர்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

என்ற குறளின் வழி முயற்சிக்கு கவிஞரின் கவிதை உள்ளத்தைத் தொடுகிறது

முயற்சி என்ற விதய் போடு
பயிற்சி என்ற செயல் பாடு
வளர்ச்சியான பயிர் விளையும் – அது
மகிழ்ச்சி உள்ள அறுவடையே (பக்:76}

மூடப்பழக்கக்கங்களை ஆங்காக்கே சாடுகிறார் கவிஞர். நல்லநேரம் என்ற தலைப்பில்

பஞ்சாங்க படிமனமே பார்த்துச் செய்தும் – பலர்
பஞ்சாய்ப் போனவர்கள் நாட்டிலுண்டு
அஞ்சாமல் உறுதியுடன் உழய்த்தவர்கள் – இந்த
அகிலமே பாராட்டும் தங்கத் தேர்கள் (பக்:89}

கோயில்கள் கட்டி என்ன?
கும்பிடு போட்டுமென்ன
கோபத்தை ஒழிக்காவிட்டால் – கண்மணி
கொஞ்சமும் பயனில்லையே! ` (பக்:97}

சகோதர உறவைப்பாட வந்த கவிஞர் அண்ணன் தம்பி எனும் தலைப்பில் தம் குடிக்கு உணர்த்துகிறார்.

உயர்ந்தவன் நானே எல்லாம் எனக்கென
ஒருவன் மாறிச் செயல்பட்டால்
ஒற்றுமய் குலயும் வெறுப்பும் கவலய்
உள்ளே புகுந்து வாட்டிடுமே (பக்:125}

மலேசியா சிங்கப்பூர் சென்ற கவிஞர் அந்நாட்டின் எழிலை நம் கண் முன் கவிதையில் நிறுத்துகிறார்.

தெங்கெண்ணெய் கொழுப்பென்று ஒதுக்கி – அங்கே
தேர்ந்திட்டார் பனயெண்ணெய் மரங்களாய்ப் புதுக்கி
அங்குரயில் குளிர்பெட்டி ஓட்டம் – நிலயம்
அடைகின்ற பொதிலே ஊர்ப்பெயர் காட்டும். (பக்:147}

வாக்களர்களுக்கு அறிவுறுத்தும் வண்ணம் அரசியல் பகுதியில் கவிதைக் கனலை கக்குகிறார்.

பதவிக்காகக் கூட்டணி சேர்தல்
பாமரத் தனத்தி மக்கள்தாம்
உதவிடும் மதுபிரி யாணி ஒதுக்கி
யோக்கியர் தேர்வதும் எப்போது? (பக்:186}

இலவசங்கள் பெறுவதே இன்பம் என்று
ஏற்ப்து இகழ்ச்சி அவ்வய் வாக்கய்த் தின்று
கய்வசங்கள் இருப்போரும் முட்டி மோதி
கருணையின்றி மாய்கின்றார் அந்தோ சேதி (பக்:189}

முத்து விழா நாயகர் அருள்நிதி புலவர் பட்டணம் பழநிச்சாமி அவர்களின் அந்தி தீபம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீபம். சமுதாயக் கேடுகளை ஒழிக்கும் நெருப்பு. தமிழர்களின் சாதனைகளைச் செப்பும் சுடர்.தமிழ்ர்களின் வாழ்வியல் காக்கும் மங்கல விளக்கு.

அன்பினால் அடக்கத்தய்க் கற்றவன் சான்றோன்
ஆத்திரம் அலட்சியம் அற்றவன் சான்றோன்
நண்பினய்ப் பண்பினால் நட்டவன் சான்றோன்
நலந்தரு பழக்கமே பலமுடன் ஊக்குமே (பக்:94}

என்ற தம் கவிதை வாழ்வு வாழும் முத்துவிழாக் காணும் பெருமகன் நீடு வாழ்ந்து தமிழ்ச் சமுகத்துக்கு தொண்டாற்ற அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன்.

Friday, November 11, 2011

அன்னை சேது 5ஆம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்களம் அனனை சேது அறக்கட்டளையின் பொற்கிழி வழங்கு விழா


5-11-2010 அன்று காலை 10 மணிக்கு அன்னை நினைவு பொற்கிழி வழங்கு விழா மதுரையில் கல்லூரி விடுதியில் நடைபெற்றது.
சங்க கால இலக்கியங்களையும் பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் இந்தியில் மொழிபெயர்த்த பேராசிரியர் முனைவர் பி.கே பாலசுப்பிரமணியம் அவர்கட்கும், சிற்ப அம்பலம் தமிழ்க்கல்வி எனற் ஈராயிரம் பக்கங்கள் கொண்ட நூலை படைத்து, பதிப்பித்த சாதனையாளர் இறுதியில் இன்பத்தான் (சதானந்தம்)அவர்கடகும் ரூ.10,000 பொற்கிழி வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

திருக்குறள்செம்மல் மணிமொழியன் தலைமை தாங்கி அன்னை சேதுவின் திரூஉருவப் படத்தை திறந்துவைத்து இரண்டு அறிஞர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார்.

யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் இ.கி.இராமசாமி கேடயம் வழங்கினார். கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார்.மதுரை தமிழ்ச் சங்க பேராசிரியர் சின்னப்பா, முனைவர் இரா.மோகன் ஆய்வுரை வழங்கினார்.சேவைச்செம்மல் நவமணியன் அருட்தந்தை ஞான ஆனந்தராசு கவிஞர் இரவி பாராட்டுரை வழங்கினர். கவிஞர் அசோக்ராசு தொகுப்புரை வழங்கினார்.ஆவின் பொன்.மீனாட்சிசுந்தரம் நன்றி நவின்றார்

அன்னை சேதுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் அருள்மங்கலம் மிகச்சிறப்பாக 6-11-2011 அன்று காலையில் உடைகுளம் சாலையில் உள்ள அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. முதுகுளத்தூர் மாகாதேவன் அவர்களின் மகன் குமரன், கமுதி கோடையிடி குத்தாலம் அன்னையின் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். புலவர் வேணு செயராமன், கவிஞர் முனியாண்டி, , மோ.அன்பழகன், செல்லம் பூசாரி, கோடையிடி குற்றாலம், சிறுகதைஆசிரியர் உடையார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தந்தையார் பெருங்கவிக்கோ நெஞ்சுருக நிறைவுரையாற்றினார். வா.மு.சே.ஆண்டவர் அனனையின் நினைவுகளையும் சிறப்புகளையும் கூறினார். இலக்குமி மீனாட்சிசுந்தரம் சானகிசக்திவேல் குத்துவிளக்கேற்றிஅன்னையின் பக்திப் பாடல் பாடினர். கவிமுரசு வாமுசே திருவள்ளுவர்நன்றிபாராட்டினார்.

ஆண்டநாயகபுர மண் எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண். உலகத்திற்கே இரு பெருமக்களை முத்து இராமாயி மூலம் வழங்கிய மண். ஒருவர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். உலகின் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து ஒப்பற்ற தமிழ்த் தொண்டாற்றும் உலகத் தமிழ்த் தூதுவர். இன்னொருவர் இந்திய ஆட்சிப்பணியில் இந்திய மக்களுக்குப் பாடுபட்டுப் பணியாற்றி காலமான வா.மு முத்துராமலிங்கம்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

என்ற குறளிற்கேற்ப அன்னையின் நினைவையொட்டி அங்கு வாழும் மக்களோடு உணவுண்டு மகிழ்ந்தோம்.

அருமைத்தாயர் சேதுமதி அவர்கள் தந்தையாரை மணமுடித்து மருகளாகக் குடியேறிய மண் இந்தமண். இங்குள்ள நத்தம் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். நானும் இங்கு அன்னையிடம் மாணவனாக இருந்த மண் இந்தமண்ணில் தாயிடம் பயின்றவர்கள் இன்னும் நினைவோடு கூறுவது மகிழ்வாக இருக்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அனைத்திலும் வெற்றிகண்டு இராமநாதபுரத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்து சென்னைக்குச் சென்று தந்தையாரின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உயிராக இருந்தவர். ஐந்து மக்களைப் பெற்றெடுத்து ஐவரையும் “தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மண்ணுயிர்க்கெல்லாம் இனிது” என்ற குறள்வழி இந்தச் சமூகத்துக்கு வழங்கிய அன்னை சேதுமதி.

வாழ்க அன்னையின் புகழ்

வளர்க அறக்கட்டளையின் தொண்டு.