Wednesday, December 29, 2010

பொன்மன நல்லி வாழ்க


பொன்மன நல்லி வாழ்க

பத்மசிறீ நல்லி குப்புசாமிசெட்டியார் அவர்களின் 70ஆம்
அகவையை முன்னிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பாடியது

பட்டுவை நெய்து நம்மின்
பெருமையை நிலைக்கச் செய்தோன்
மட்டிலா நல்லி மேன்மை
மண்புகழ் பரவச் செய்தார்
எட்டிடும் சிகரம் நோக்கி
ஏறுபோல் உயர்ந்து வென்றார்
பட்டென உடலின் பொட்டாய்
பொன்மன நல்லி வாழ்க!

புன்னகை மன்னன் பாரில்
புன்னகை பூக்கச் செய்வோன்
கண்ணென தொழிலைப் போற்றி
கண்டிட்டார் வணிக ஏற்றம்
தன்னரும் வாழ்வின் மேன்மை
தகுதியாய் நூலாய்த் தந்தோன்
புண்ணியப் பணிகள் ஆற்றும்
புண்ணிய நல்லி வாழ்க!

உலகெலாம் பறந்து நம்மின்
உயர்தொழில் உயர்த்தும் நல்லி
பலமெலாம் பகிர்ந்து நல்கும்
பண்புள நெஞ்சர் நல்லி
நிலமெலாம் கருணை ஊற்றை
நிகழ்த்திடும் தூயோன் நல்லி
நலமெலாம் இணைந்தே பாரில்
நனிபுகழ் நல்லி வாழ்க!

எழுபதைக் கண்டார் நம்மின்
எழுச்சியாய் வாழ்வில் நின்றார்
தொழுதிடும் சேவை வாழ்வில்
தொண்டராய் என்றும் உள்ளார்
பழுதிலா நல்லி மேன்மை
பார்புகழ் மென்மேல் ஏற்று
விழுதுபோல் அறங்கள் தாங்கும்
வியத்தகு நல்லி வாழ்க!

அமெரிக்க மருத்துவமாமணி பத்மினி பஞ்சாட்சரம் படத்திறப்பு



அமெரிக்க மருத்துவமாமணி பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்தவர் பத்மினி படத்திறப்பு

அமிரிக்கா நியூயார்க்கில் தமிழுக்கும் தமிழ் ஈழத்திற்கும் அருந்தொண்டாற்றி வரும் மருத்துவமாமணி தமிழ்மாமணி வின்செண்ட் பஞ்சாட்சரம் அவர்களின் துணைவியார் மருத்துவர் பத்மினி இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெருவிக்கிறோம்.. தமிழுக்காகவே அமெரிக்கா வாழும் குடும்பங்களில் வின்சண்ட் பஞ்சாட்சரம் குடும்பம் தலைமையான குடியாகும்.

மருத்துவர் பத்மினி அவர்கட்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் சார்பாக வீரவணக்கம் 5-11-2010 ஆம் நாள் வடபழனி அறிஞர் அண்ணா நூலகத்தில் நடத்தப்பட்டது. மாட்சிமிகு கு.க.செல்வம், செ.கண்ணப்பன் முன்னிலையில் சென்னை முன்னாள் மாநகரத்தந்தை சா.கணேசன் தலைமை தாங்கினார். மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அறிமுகவுரையாற்றினார். பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அம்மையார் படத்தை திறந்துவைத்து அவரது சிறப்புகளை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மறவன்புலவு சச்சிதானந்தம், மணீமேகலை கண்ணன், கண்மதியன், இரங்கலுரை நிகழ்த்தினர்.கழகப் புர்டோத்தமன் நன்றி நவின்றார்