Wednesday, September 22, 2010

பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்


பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும்.

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருக்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர், எனப்பட்டங்கள் இருந்தும் மதுரகவி எனவே ஈழத்தில் அறிமுகமானவர்.

இவர் ஆரம்பக்கல்வியை நுணாவில் கணேசவித்தியாலயம், சாவகச்சேரி றிபேக்கல்லூரி ஆகியவற்றிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கூடவே நாடகம் கல்வி சார்ந்த டிப்புளோமா கற்கை நெறிகளையும் கற்றுத் தனதாக்கிக் கொண்டார்.

இவர் மாத்தளை புனிதத்தோமையர் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கல்லூரி இலக்கியவட்டம், மாத்தளை இலக்கியவட்டம் ஆகியவற்றில் அதிக பங்காற்றினார். புவியியல் பட்டதாரியான இவர் மேற்படி கல்லூரியில் சிறந்த ஆசிரியராக மாணவராலும், ஆசிரியராலும் போற்றப்பட்டார். மலையகம் சார்ந்த அனைத்து இலக்கிய, சமய நிகழ்வுகளில் தன்னை ஆத்மாத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் வயாவிளான் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியபின் யோகபுரம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய காலத்தில் குரும்பசிட்டி சர்மார்க்க சபை சார்ந்த இலக்கிய நண்பர்கள். குலாம் இணைந்ததால் பின்னாளில் ரசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களின் அபிமானத்திற்கு உரியவரானார். 1980ல் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக தென்னாபிரிக்கா சென்று ஆசிரியராகக் கடமை புரிந்தார். 1988 முதல் இன்றுவரை கனடாவில் வாழ்ந்து வரும் கவிஞர் அருணோதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சிமரம’ (2000) தொகுப்பில் எழுதிய கனடாவில் சைவசமயம் என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

நுணாவில் என்றதுமே என் உறவுசார்ந்து என் இலக்கிய உலகம் சார்ந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய, இலங்கை இராணுவ நகர்வின் போதும் எம்மை ஆதரித்த ஒரு கிராமமாகவும் நுணாவில் எம்முள் வாழ்கிறது.

ஈழத்துக்கவிதைக் கனிகள்(1991) என்னும் நூலில் நான் பிறந்ததும் ஏதுக்கே! எனும் கவிஞரின் கவிதையை சிலோன் விஜஜேந்திரன் சேர்த்துள்ளார்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்கிறது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் அக்கறை காட்டி வருகிறார்.

இவரின் பவளவிழா சிறப்புற காற்றுவெளி சார்பில்லும் வாழ்த்துகிறோம்.

கவி‍-முல்லை அமுதன்

Thursday, September 9, 2010

தடைகள்

சென்னை சாசுத்தா பொறியியல் கல்லூரியில் 9-9-2010அன்று கல்லூரியின் டீன் முனைவர் வைத்தியநாதன் தலைமையில் அரிமா கோசுவாமி முன்னிலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய சிறப்புரை

மனித சமுதாயத்தில் செய்தித் தொடர்புத் தடைகள் ஏராளமாக உள்ளன. தடைகளினாலேயே பல்வேறு வளர்ச்சிகள் தடைபட்டும் நிறகின்றன.மனித சமூகத்தில் வளர்ச்சிக்கான தடைகள் சாதி மதம் இனம் மொழி நாடு உலக மாந்தர்கள் ஒருகுடைக்கீழ் வாழ்வதற்கு தடையாகவே உள்ளது.

உலகின் மாந்தர்கள் வாழ்வதற்கும் மற்றவர்ளை உயர்த்தி தானும் உயரவே பிறப்பெடுக்கிறார்கள். பிறக்கும் குடி, சமூகம், நாடு போன்ற சூழல்களே அவர்களை வழிப்படுத்துகின்றது. பிறகு கல்வி கடமைளை உணர்ந்து தன் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் தொண்டு செய்கிறான்
.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது

என்ற குறள்வழி வழி வழி வரும் மனித சமுகம் தன்னுடைய அறிவால் ஆற்றலால் மனித குல வளர்ச்சிக்கு வித்தாகிறான். அந்த வித்துகள் எல்லாம் விருட்சமாகி உலகின் பல்வேறு துறைகளும் வளர்சியின் சிகரத்தை அடைந்துள்ளன.

இன்று இணைய தளமும், கைப்பேசி, தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்புகள் உலகத்தை நம் கைக்குள் கொண்டு வந்துள்ளது. உலகின் எப்பகுதியில் எது நடந்தாலும் நொடியில் அறியக் கூடியா வாய்ப்பைப் பெற்றுள்ளோம். தற்போது வாழும் தலை முறை தகவல் தொடர்பால் தலைநிமிர்ந்து நிற்கும் தலைமுறை.

சங்க கால புறநாநூற்றுப் புலவன் கனியன் பூங்குன்றனார்

”யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா”

என உலகத்து மக்களையெல்லாம் உறவினர்களாகவே கருதியுள்ளான். மனித குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும் நம் சுற்றத்தாரே. நாம் காணும் இன்பமும் துன்பமும் அவரவர் செயர்பாட்டு வினைகளே என்று ஆணித்தரமாக எழுதிச் சென்றுள்ளனர். இன்றுள்ள தகவல் தொடர்பையே நன்மைக்குப் பயன்படவேண்டியவற்றை தீய வழிகளிலும் பயன்படுத்துவதை அன்றாடச் செய்திகளில் காண்கிறோம்..

உலகின் வளர்ச்சியும் முன்னோர்களின் கருதுக்களும் கொட்டிக் கிடந்தாலும் மனிதன் பல்வேறு தடைகளுக்கு ஆளாகிறான். பரந்துபட்ட உலகில் வளர்ச்சியையும் இலட்சியத்தையும் நோக்கிச் செல்பவனுக்கு பல்வேறு தடைகள் வரும் அதைத் தகர்த்தெறிந்து செல்பவனே வெற்றியாளனாக வலம் வருவான்.

வளர்ச்சிகு முதல்தடை தன்னம்பிக்கை இன்மையே. என்னால் முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் வரவேண்டும்.அந்த நம்பிக்கையே அவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒருசெயலைச் செய்யும் நிறை குறைகளை முற்றும் அறிந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் அதன் நிறைவேற்ற செயலாக்கம் காண்பதே சிறந்த வழி என்கிறார் திருவள்ளுவர்.

மிகச்சிறந்த அறிவாளியாக இருப்பார்கள் மனித உறவில் இறுக்கமாகக் காணப்படுவார்கள். வளர்சிக்குப் இது ஒரு பெரும் தடை. சக மனிதர்களை புன்முறுவல் பூக்கக் கூட மறுப்பது பெரும்தடை. குழு உணர்வோடு செயல்பட இவர்களால் இயலாது புண்ணகை என்பது மனிதர்களால் மட்டுமே உரிய ஒன்று அது மனித உறவைப் பேணும் மந்திரம். இந்தியன் வானுர்தில் விற்பனை மேலாளரகப் பணியாற்றிய சந்திரன் என்பவர் என் கண்முன் வருகிறார் 30 ஆண்டுகளுக்கு முனபு என் தந்தை பெருங்கவிக்கோ அவர்கட்கு உலகப்பயணத்திற்கு பயணச்சீட்டு வாங்க சந்தித்தோம்.சந்திரன் முகம் சிரித்தால் மல்லிகை மலர்தோட்டம் போன்றே இருக்கும் அவர் அமரராகிவிட்டாலும் இன்றும் என் நினைவில் நிற்கிறார்.

தான் எண்ணியதைத் சொல்லத் தயங்குதல் ஒரு பெரும் தடை. நாம் கூறும் கருத்து தவறாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் சொல்வதற்கு அச்சப்படக் கூடாது. தாங்கள் எண்ணியிருக்கும் கருத்தைக் கூறாமல் இருந்தால் தவறான கருத்தே தங்களிடம் நிலைகொண்டுவிடும்.

நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பாராட்டாமல் இருப்பது ஒரு தடை. நம்மில் ஒருவர் சிறந்த செயலாக்கம் காணும் போது அவரை மனம் திறந்து பாராட்டவேண்டும். பாராட்டே அவர் மேலும் துறையில் மேம்பட மாமருந்தாக இருக்கும். துறை மேம்படும்போது வளர்ச்சியைக் காணலாம்.

நாம் செய்த செயல்களை விளக்கக் கூடிய ஆற்றலின்மை பெருந்தடையாகும். அதற்கு மொழியும் பெருந்தடையாக இருக்கும். தமிழ் மக்கள் கூடியுள்ள பகுதியில் ஆங்கிலத்தில் பேசுவதும்.ஆங்கிலத்தில் பேசவேண்டிய இடத்தில் மறுப்பதும் பெரும் தடையாகும். உலகின் தொழில் வளர்ச்சியில் தலைசிறந்து விளங்கும் சப்பான் சப்பானிய மொழியையே அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்துகின்றனர். உலகின் எம் மொழியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தலூம் அடுத்த சில மணிநேரங்களில் சப்பானிய மொழியில் அரசே சப்பானிய மொழியில் மொழிபெயர்த்து சப்பானிய மக்களுக்கு வழங்குகிறது.வளரும் நாடுகளில் மொழி ஒரு தடைக்கல்லாகும்.

நம்மைப் போன்ற நாடுகளில் ஏழ்மையும் மிகப்பெரும் தடைக்கல்லாகும். இந்தியாவில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் எல்லாம் உயர் கல்வி பயில இயாலாமல் சிதைந்து போகின்றனர். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ஏழ்மை மாணவர்கள் அறியாத காரணமும் ஒன்றாகும்.ஏழ்மை மாணவர்களுக்குள்ள உரிமைகள் தகுந்த காலத்தில் அறியாமையும் தடையே.

மிகப் பெரும் தகவல் புரட்சி வந்துள்ள காலத்தில் அதைப்பற்றி அறியா மை மிகப் பெரும் தடைக்கல்லாகும். அறியாமை என்ற பேதமை நம்மைப் பின்னோக்கித் தள்ளும்.
யாம் எந்த கருத்து குறித்து பேசுகின்றோமே அது குறித்தே பேச வேண்டும் அதைவிடுத்து தேவையற்றவற்றை பேசுவதும் ஓரு தடைக்கல்லாகும்.

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்.

என திருவள்ளுவர் பயனுடைய சொல்லைப் பேசாமை மடமை எனக் கூறியுள்ளார்.

மாணவச் செல்வங்களே தடைகளையெல்லாம் தகர்த்து நம் நாட்டின் தளபதிகளாக உயர்ந்து உங்களை பல்வேறு இன்னல்களில் பெரும் பொருட்செலவில் படிக்கவைக்கும் பெற்றோர்க்கும், நயமான கல்வி வழங்கும் கல்லூரிக்கும், நம் நாட்டுக்கும் பெருமையை நிலை நாட்டுங்கள்.

Wednesday, September 1, 2010

சென்னை அருள்மிகு ஓம்சக்தி இசக்கி அம்மன்


சென்னை அருள்மிகு ஓம்சக்தி இசக்கி அம்மன் திருவிழாவில் 23-7-210 அன்று நடைபெற்ற கவியரங்கில் கவிமுரசு வா.மு,சே,திருவள்ளுவர் வழங்கிய நிறைவுக் கவிதை

தொன்மை என்று என்றே
தொடங்க மறுத லிக்கும்
உண்மை மொழியாம் எங்கள்
உயிராம் மெய்மொழித் தாயே
தன்மையால் செம்மொழிப் பேறாய்
தமிழர் தவத்தால் தோன்றி
தோன்றிய முன்னோர் எண்ணி
தொடர்ந்தே வணங்கு கின்றேன்

எண்ணிய முடிக்கும் ஆற்றல்
எழில்ஆறு முகனார் வாழ்க
திண்ணிய நெஞ்சம் கொண்ட
தெளிந்தநல் முருகேசன் வாழ்க
கண்ணிய கடமை நெஞ்சர்
கவின் பஞ்சநாதம் வாழ்க
புண்ணியப் பணிக்கு வந்த
புகழ்மிகு மக்காள் வாழ்க

வான்புகழ் கலைஞர் கோமான்
வழியினில் என்றும் வாழும்
வண்டமிழ் கவிஞர் எங்கள்
வள்ளியின் மைந்தன் வாழ்க
ஊனினை மறந்து எம்கோ
உலகிடை நடந்த போதே
தோணியாய் வந்த எங்கள்
தொண்டர் கலையரசன் வாழ்க

எண்ணெயும் திரியும் போன்றே
எழில்மிகு கவிஞர் வாக்கை
நுண்ணிய மதியால் கேட்கும்
நுட்பநல் மக்காள் வாழ்க
அன்னையின் புகழைப் பாட
அறிந்துள அறிவை எல்லாம்
அன்பினால் ஒன்றாய்க் கூட்டும்
அரங்குள கவிஞர் வாழ்க

கோயிலைக் கட்டும் நம்மோர்
கருவறை வெளியில் தானே
நோயினை நீக்கிய நம்மின்
நிலைபுகழ் இசைக்கி அம்மன்
மாபுகழ் கோயில் கட்டி
மாட்சியாய் உள்ளே உள்ளான்
நாபுகழ் இசைக்கி அம்மன்
நன்நிலை அருளே போற்றி

தகுதியைக் கண்டு நாளும்
தக்கோரைத் திரட்டி நன்றாய்
மிகுதிநிலை உணர்ந்து எண்ணும்
மீட்டெழும் மக்கள் சக்தி
பகுதியென பக்கம் எல்லாம்
பக்தியெனும் பெரும் பேற்றால்
விகுதியென நற்பண்பு நாட்டி
விரிந்துஎழும் நற்றாயின் சக்தி

இல்லோர் இருப்போர் எலாம்
இன்றுலகில் இணைந்து வாழ
தொல்லைகள் மறந்து வாழ்க்கை
தடத்தினிலே காணும் சக்தி
பல்லக்குத் தூக்கும் மாந்தன்
பல்லிளித்து கீழே வீழா
தொல்லுலகம் நிமிர்ந்து வாழ
தோன்றிஎழும் உறவுச் சக்தி

நாட்டிலிளோர் ஒன்றாய்க் கூடி
நயத்தகு புகழும் வாழ்வை
போட்டியின்றி இணைந்து வாழ
பொன்னான அன்பு சக்தி
காட்டில்வாழ் மாக்கள் போன்றே
கருணையை மறந்து நம்மில்
கேட்டினை என்று,ம் நாடா
கேவலம் போக்கும் சக்தி

மீட்டெழும் நாதம் போன்றே
மிகுந்திடும் பொருளை ஈந்து
ஓட்டிடும் வறுமை நீக்கி
ஒற்றுமை நாட்டும் சக்தி
பாட்டுளநல் பொருளை எண்ணி
பண்புளநல் மாந்தர் ஆக்கும்
தோட்டமும் மலரும் பூவாய்
தோன்றிய மக்கள் சக்தி

வழிவழி நம்மின் முன்னோர்
வாஞ்சையாய் நம்மைக் கூட்ட
பழியிலா வாழ்க்கை வாழ்ந்து
பாண்மையை செப்பும் சக்தி
விழியது இமையைக் காக்கும்
விண்மீனை வானம் தாங்கும்
உளியது செதுக்கும் வாழ்க்கை
உள்ளொளி வழங்கும் சக்தி

நல்லதை நினைத்து என்றும்
நாளெலாம் உழைத்து வாழ்தல்
அல்லதை நீக்கி ஆன்றோர்
அறவழி ஆற்றும் சக்தி
முள்ளுமே மலரைக் காக்கும்
முறைவாழ்க்கை குடியைக் காக்கும்
சொல்லுமே பாவைக் காக்கும்
சொந்தமாய்க் காக்கும் சக்தி