Friday, November 2, 2012

வாழ்வாங்கு வாழும் பெருமக்கள் ஐயா நடராசனார் –சந்திரா அம்மையார் நீடு வாழ்க


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
                                                            கலைக்கூடம்

முத்துவிழாக் காணும் இணையர் நடரசன் சந்திரா அவர்களின் வாழ்க்கைச் சுவடு மலர் மெத்தைகளால் தொடங்கியவை அல்ல. கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் பயணித்து மலர் மேடைகளை தம் மக்களுக்கும் சமூகத்திற்கும் வழங்கியவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போன்று மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது இன்றும் பொறுத்தமான ஒன்று. ஈப்போ நகரில் தம் வாழ்க்கையை மைலோன் நிறுவனத்தில் தொடங்கி உண்மை உழைப்பு கண்டிப்பு எனும் கடிவாளங்கள் மூலம் தம் பயணத்தைத் தொடங்கியவர். வாழ்வின் அனைத்துப் போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்கொண்டவர். பின் இரதி டிரேடிங் எனும் நிறுவனத்தைத் தொடங்கி தமிழகக் கலைச் செல்வங்களை மலேசிய மண்ணிற்கு வழங்கிய பெருமை ஐயா நடராசனாருக்கு உண்டு இன்றும் அவரது நிறுவனத்திற்குச் சென்றால் கலைக்கூடமாகக காட்சிதரும்
.
நட்புப் பெட்டகம்


பேராசியர் பாலா ஐயா நடராசன் போன்ற பெருமக்களெல்லாம் இளமைக் காலங்களில் கலைஞர்களாக மலேசியாவில் வலம் வந்தவர்கள். அப்பெருமக்களின் நட்பு இன்றும் மலரும் செந்தாமரையாய் இருப்பதைக் காணும்போது இதுவல்லவோ நட்பு என வியக்கத் தோன்றும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே                                                                      இடுக்கண் கலைவதாம் நட்பு

என்ற வள்ளுவப் பேராசானின் குறள் வழி தன்னுடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாலா எனக் கூறும் வார்த்தைகள் என் கண்களை குளமாக்கின. நன்றி மறக்கும் இச் சமுதாயத்தில் தன் நண்பனின் பெருமையை நிலைநாட்டும் ஐயா நடராசனார் நட்புப் பெட்டகம்.

எம் அருமைத் தந்தையார் உலகம் முழுமையும் வலம் வருவதோ, யாங்கள் பன்னாட்டுத்த்; தமிழுறவு மன்ற மாநாடுகள் நடத்துவதோ, 42 ஆண்டுகளாக தமிழ்ப்பணி நடத்துவதின் சிறப்போ எங்களை விட எம் பணிகளைத் தாங்கும் உலகளாவிய பெருமக்களையே சாரும்,மலேசியாவில் ஐயா நடராசன், பேராசிரியர் பாலா, ஆசிரியமணி மாணிக்கம், டாக்டர் தருமலிங்கம். போன்ற பெருமக்கள் தமிழ்ப்பணியின் தூண்கள்.

ஆன்மீகச் செம்மல்

ஐயா நடராசனார் அவர்களின் நிறுவனத்திற்குச் சென்றால் அன்பொழுக வரவேற்று இல்லத்தார் நலன்களை வினவி அவரது பணிகளைச் செய்யும் பாங்கு இன்றுள்ள தொழிழ் முனைவோர் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. பின் ஆலயங்கள் அழைத்துச் செல்வதும் ஆலயப் பணி அனைத்திற்கும் ஆலோசனை வழங்குவதும் அவருக்கு கைவந்த கலை. மலேசியாவில் அவர் வகுத்த வழிகளையெல்லாம் இன்று தம் சொந்த ஊரான காட்டுச்சேரியில் உள்ள ஆலயத்தை புணரமைத்து குடமுழுக்கும் கண்டுள்ள  முத்துவிழா நாயகர் நடராசனார் ஒர் ஆன்மீகச் செம்மல். குடமுழுக்கு நடத்திய ஆல்யத்திற்கு நானும் பாலா அவர்களும் சென்று ஐயா அவர்களின் அரும் பணியைக் கண்டு மெய்மறந்தோம்.

அறநெறிச் செல்வர்.


ஐயா அவர்களின் துணைவியார் சந்திரா அம்மையார் அன்பின் வடிவமானவர். புன் சிரிப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவர். திருக்குறளில் பொய்யாமொழியார் கூறிய இல்வாழ்க்கைத் துணைவி இலக்கணத்திற்கு இன்றும் சான்றாக வாழ்பவர். அம்மா அவர்கள் தாம் திருமணம் நடந்த காலத்தில் ஐயாவின் சிவன்கோயில் பாழடைந்து இருப்பது ஊருக்கு நல்லதல்ல எனக் கூறியதை நினைவில் கொண்டு இன்று தம் வாழ்நாள் பணியாக முடித்துள்ள அறநெறிச் செல்வர்.


ஒப்பற்ற தந்தை


மக்களின் மேல் நீங்காத பற்றுக் கொண்டவர். ஒவ்வொருவர் வாழ்க்கையையும் மேம்படுத்திய தந்தை.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்                                            ஆற்றுவார் மேற்றே பொறை

என்ற வள்ளுவனரின் குறளுக்கு ஒப்ப குடும்பத் தலைவனாக அனைத்துத் துன்பங்களையும் தாங்கி மக்கள் செல்வங்களுக்கு நல் வழி காட்டியவர்
ஐயாவின் மக்கள் மலேசியா ரோட்டேரியன் கண்ணா.காரைக்கால் விஜிஜெகதீஸ்சந்திரன் சிங்கப்பூர் பரந்தாமன் மலேசியா மிருதங்க கலைஞர் சிவகுமரன்,   சென்னையில் இரதி இரமணி,எழுதியுள்ள செய்திகளைக் காணும்போது ஒப்பற்ற தந்தை என்பதை உணரலாம்.

முத்துவிழாக் காணும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் பெருமக்கள் ஐயா நடராசனார் –சந்திரா அம்மையார் மேலும் வைரவிழா நூற்றாண்டு விழாக் காண உலகத் தமிழர்கள் சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம்.