Saturday, March 31, 2012

திருக்குறள் திருத்தொண்டர் அவையம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(11-3-2012 அனறு சென்னையில் கிராமபந்து கோட்டை சு முத்து நடத்திய திருக்குறள் திருத்தொண்டர் அவையம் நிகழ்ச்சியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பை நிறுவி திருகுறளிற்காக அயராது பாடுபடும் கிராமபந்து கோட்டை சு முத்து அவர்களின் அழைப்பை ஏற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன். வருகை தந்திருக்கும் திருக்குறள் ஏழுமலை எனது ஆசான் சேச. இராசகோபாலன் நடைப்பயண அரிமா சி.மா.துரைராசு மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தைக் தெருவித்துக் கொள்கிறேன்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (466)

என்ற வள்ளுவர் வாய்மொழியை பின் பற்றாததாலேயே திருக்குறளே பைபில் குரானைப் போன்று தமிழர்கள் மறையாக நடைமுறைபடுத்த இயலாமல் உள்ளோம்.

பெருமக்களே அதைப் போக்கவே திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பின் பெயரே மிகச் சிறந்த தொடராக உள்ளது. ஐயா கோட்டை சு முத்து மிகச் சிறந்த திருத்தொண்டர். தன் முதிர்ந்த நிலையிலும் எதையும் எதிர்பராது திருக்குறளிற்காக பாடுபடுகின்றார். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே. கிறித்தவர்கள் பங்குத்தந்தையாக உலகம் முழுமையும் உள்ளனர். மாவட்டம் வட்டம் என அனைத்துப் பகுதியிலும் முறையாக விவிலியத்தைப் பரப்புகின்றனர். அதைப் போன்று உலகம் முழுமையும் உள்ள திருக்குறள் திருத்தொண்டர்கள் ஒருங்கிணைந்து ஒரே சிந்த்னையாக திருக்குறளை பரப்பும் வழியைக் காணவேண்டும்.அதற்கு சரியான காலகட்டம் இதுவே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்ற வள்ளுவப்பெருமானின் குறளிற்கேற்ப குறளிற்கே பெருமுயறசி கொண்டு உலகம் முழுமையும் பாடுபடுகின்றனர்.

அவ்வழியில் அமெரிக்காவில் வாழும் இராம் மோகன் அவர்கள் திருக்குறள் பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மிகச்சிறந்த பதிப்பு பைபிளைப் போன்று வெளியிட்டுள்ளார். திருக்குறள் மூலம், உரை, ஆங்கில ஆக்கம், ஆங்கில் மொழியாக்கம், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் படங்கள் என உலகத் தரத்தில் வெளியிட்டுள்ளார்.. 1820 பக்கங்கள் கொண்ட தொகுப்பாகும். அப்பெருமகனும் அதற்கு துணைநின்ற அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி திருமறை மாநாட்டை நடத்தி 1200 பக்க உலகளாவிய அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரை மலரை வெளியிட்ட முனைவர் பெரு.அ. தமிழ்மணி மிகச் சிறந்த திருக்குறள் திருத்தொண்டர். நான் மாநாட்டின் செயலராகப் பணியாற்றினேன். திருவள்ளுவர் சிலையை கொடை வழங்கியவர் செவாலியர் வி.சி சந்தோசம்.தமிழகத்திலிருந்து 160 பெருமக்கள் பங்கேற்றனர். பெருமக்கள் அனைவரும் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் பத்துமலையைச் சுற்றி திருக்குறளை சலவைக் கல்லில் பதிய வைத்துள்ளனர். அந்நாட்டில் தமிழ் தமிழர் மேன்மையைப் போற்றும் டத்தொசிறி சாமி வேலு, கூட்டுறவுக்கழக டான்சிறி சோம சுந்தரம், மற்றும் அனைத்துப் பெருமக்களும் திருக்குறள் திருத் தொண்டர்களே. திருக்குறள் தொண்டர் மலேசியக் கவிஞர் செங்குட்டுவன் திருக்குறள் பாடல் திரட்டு என்ற பெரும் நூலை வெளியிட்டுள்ளார்

சுவிட்டசர்லாந்தில் பெர்ன் நகரில் வள்ளுவன் பாடசாலை என்ற அமைப்பை நிறுவி திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் முருகவேள் நந்தினி இணையர். அவருக்கு துணையாக உள்ளார் கருணாகரமூர்த்தி மற்றும் பெருமக்கள்.சுவிட்சர்லாந்தில் திருக்குறள் தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

மியான்மரில் யான் சென்றிருந்த போது தட்டோன் நகரில் மாரிமுத்து அவர்கள் முயற்சியால் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைக் கண்டேன். இப்போது அவர் காலமாகிவிட்டார். கோட்டத்தில் திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி வரவேற்றார் ஓதுவார் குருசாமி. .தட்டோனில் வள்ளுவர் கோட்டம் கட்ட முனைந்த பெருமக்கள், இன்றும் காத்து வரும் மியான்மார் தமிழர்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்றா குறள் வழி வாழ்ந்த பெருமகன் அமரர் வேலா. அரசாமாணிக்கம் குறாளயம் என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறந்த திருக்குறள் தொண்டாற்றியவர் திருக்குறள் வேலா அரசமாணிக்கம். குறளியம் என்ற இதழ் மூலமும் பல்வேறு மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி பெருந்தொண்டாறியவர். ஒரு பெரும் பொருட்செலவில் அவரோடு இணந்து தொண்டாற்றிய அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

திருகுறளிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து வாரந்தோறும் வள்ளுவர் கோட்டத்தில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி தம் இல்லத்தில் திருவள்ளுவர் திருக்கோயில் கட்டி பெருந் தொண்டாற்றும் குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் அவரோடு இணைந்து தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தமிழ் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சென்று அலகாபாத்தில் செவாலியர் வி.சி ச்ந்தோசம் அருமைத்தந்தையார் அவர்களோடு திருவள்ளுவர் சிலையை நிறுவிய பவள விழாக் காணும் தமிழாகர் ஆறு அழகப்பன் அவருக்குத் துணைநின்ற அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தம் இல்லத்தின் முன் சிலையை நிறுவி தனி ஒரு பெண்ணாக சாதனை படைக்கும் செல்லம்மாள், ஆண்டுதோரும் திருவள்ளுவராண்டை கொண்டாடும் இலலிதாசுந்தரம், மார்கழி மாதாம் திருக்குறள் வீதி உலா வரும் வரலட்சுமி போன்ற மகளிர் பெருமக்கள் அவருக்குத் துணைநிற்கும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அமிரிக்கா வாசிங்டனில் திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருந்தொண்டாற்றிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

கனடாவில் திருக்குறள் மாநாடு நடத்தி சிறப்புக் கண்ட செல்லையா வேலுபிள்ளை மற்றும் ஆதரவீந்த அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அந்தமானில் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவி அருந் தொண்டாற்றும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள். எனக்குத் திருவள்ளுவர் என்ற பெயரை வைத்து உங்கள் முன்நிற்கிறேன், தம் வாழ்நாள் திருக்குறள் நெறி வாழ்ந்து சாதனை படைத்து திருக்குறள் செம்மொழிஉரை தந்த பெருமகன் அவரைச் சார்ந்து உலகளாவிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

பெருமக்களே யான் அமெர்க்காவில் நீயூயார்க் ஃகட்சன் நதியில் சுதந்திரதேவி சிலையைக் காணும்போது என் நினைவில் வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுவிய ஐயன் திருவள்ளுவர் சிலையே. வள்ளுவர்கோட்டம் குறளோவியம் என் வள்ளுவத் தொண்டுக்கு சிகரம் கண்டபெருமகன் கலைஞர். பெங்களூரில் மூடியே வைத்திருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த சாதனைத் தலைவர்.

பெருமக்களே யான் சிந்தையில் தோன்றிய பெருமக்களையெல்லாம் கூறெனேன். தற்போது திருக்குறள் சிந்தனை உலகம் முழுமையும ஆட்கொள்வதை உணரலாம். யான் முன்னமே குறிப்பிட்டது போன்று அனைவரும் இணைந்து திருக்குறள் மாவாட்டங்களாக வட்டங்களாக பிரித்து அனைவரும் பங்குத் தந்தைகள் விவிலியத்தை பர்ப்புவதைப் போல் பரப்பவேண்டும் என்ற வேணாவாவைக் கூறி விடைபெறுகிறேன்.

Wednesday, March 28, 2012

கொடும் பாதக இலங்கை வீழ்க!

கவிமுரசு. வா.மு.சே.திருவள்ளுவர்

மனித உரிமை மன்றம்
மதிப்பாய் ஐ.நா தன்னில்
துணிந்து அமெரிக்கா நன்றாய்
தூக்கி நிறுத்தும் வாய்ப்பை
இனிது இந்தியா தம்மை
இளித்த வாயோர் நம்மோர்
பணிய இலங்கை இன்றே
பதமாய் இணைந்தே வெல்க!

போரின் நாசச் செய்கை
பொதியாய் மக்கள் கொன்றார்
வேரின் இந்தியா இங்கோ
வேதனை ஏதும் இல்லை
பாரில் நாடுகள் கூடும்
பயங்கரச் செயலை எண்ணி
பாரே கண்டனம் செய்யும்
பாதக இலங்கை வீழ்க!

படுகொலை கண்டும் பதறா
பாவியர் வாழும் மண்ணாய்
கெடுமதி நன்றே செய்த
கேடும் விதைத்த மோசம்
நடுங்கும் கொலைகள் செய்த
நாச இலங்கை நேயம்
விடுக இந்தியத் தாயே
விரைந்து கொலைக்களம் ஏற்று!

மனித நேயம் காக்க
மாண்பாய் தீர்மானம் வெல்க
துணிந்து நாடுகள் ஏற்று
திறமாய் கண்டனம் செய்க!
பிணியாம் இராச பக்சே
பிடறி தெறிக்க ஓட
கனியும் அந்த நாளை
காலம் இணைந்தே வெல்க!

சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(25-3-2012 அன்று மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வி,ல் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வி,ல் பங்கேற்பதை பெரும்பேறாகக் கருதுகிறேன். நிகழ்விற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பஞ்சாட்சரம் அவர்களே, திருக்குறள் ஓதிய மாணவி ஐசுவரியா அவர்களே திராவிடர் கழகதின் சார்பில் நூல் வழங்கிய முத்து, என்னைச் சிறப்பித்த செல்வராசு அவர்களே, நீதியரசர் அவர்கள் மூன்று செயற்செம்மல்கள் பழனி, சிம்சன் கண்ணன்,பற்றிச் சொன்னார்கள் மற்றுமொருவர் இங்கு இருக்கிறார் அவர்தான் பெரும்புலவர் புஞ்சையரசன்.
அப்பெருமகன் அருமைத் தந்தையார் தலைமையில் உண்ணாநோண்பு போராட்டம் நடந்தபொது முன்னோட்டப் பணிகளுக்கு தந்தையாயார் தில்லி சென்றார். அதுபோது அவரது மகன் தமிழாசிரியராகப் பணியாற்றும் கிருட்டிணமூர்த்தி இல்லத்திலேயே தங்க வைத்து இறுதிவரை தந்தையும் மகனும் ஆற்றிய தொண்டை எண்ணிப்பார்க்கிறேன். முதிர்ந்த நிலையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழும் பெருமகன்.

பெருமக்களே பல்லாண்டுகளாக தம் வாழ்நாள் பணியாக திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்தப் போராடி வரும் ஐவர் வழி வேம்பையனார் போன்ற காலத்திகால அறிஞர் பெருமக்களின் சிந்தனையை .கலைஞர் அரசு கொண்டுவந்தது இந்த அரசு தமிழாண்டை எடுத்தாலும் உணர்வோடு பரப்பி வரும் பெரியார் சிந்தனையாளருக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் உங்களின் கரவொலிகளுக்கிடையில் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

வருகைதந்துள்ள ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும்எனது முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

அருமைப் பெரியார் வழிப் பெருந்தொண்டர் வேம்பையனார் எது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டபோது சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை எனும் தலைப்பில் பேசப் பணித்தார். சென்ற மாதம் கலைஞர் தொலைக்காட்சியில் என்னைப் பேட்டி கண்ட ஊடக அறிஞர் தம்பிராசா அவர்கள் தமிழகத்தில் நடந்து வரும் சல்லிக்கட்டு விளையாட்டின் அவசியம் குறித்து உரையாடினோம். மட்டைப்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர்களின் வழிவழி சல்லிக்கட்டுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினேன். அப்பொது சங்க இலக்கியத்தில் உள்ள காட்சிகளை விரிவாகக் கூற இயலவில்லை இருப்பினும் அவ்வாய்ப்பை வேம்பையானார் வள்ளுவர் மன்றம் வழி வழங்கியுள்ளார்.

மானிட வாழ்வு இரு கூறுகளைக்கொண்டது ஒன்று அகம் மற்றொன்று புறம்.ஒருவனும் ஒருத்தியும் கற்பு நெறியில் வாழ்ந்து துய்க்கும் அன்பு இன்ப நெறியே அகம். கல்வி கொடை வீரம் செங்கோலாட்சி அனைத்தும் புறத்தால் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் எல்லோராலும் உணரப்படுபவை புறம். இந் நெறிகளில் அமைந்தவைகளே சங்க இலக்கியங்கள்.இவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.அவை ,முதல், கரு,உரி, என்ற முப்பொருள் அமைந்த அகப்பாடல்களாகவும் கொடை அளி செங்கோல் பற்றிய புறப்பாடல்களாகவும் பாடப் பெற்றவை . பாடல்கள் எண்ணிக்கை கொண்ட வகைகளைக் கொண்டே பதிற்றுப்பத்து, ஐங்குருநூறு அகநானூறு பு(13-31) புறநானூறு(13-31) எனப் பெயர்பெற்றன.அகப்பாடல்களில் குறுந்தொகை(4-8) நற்றினை அகநானூறு எனும் அடி வரையரையால் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளன. பாவகையால் கலித்தொகை பரிபாடல் எனப் பெயர் பெற்றன.

தொகைநூல்களுள் குறுந்தொகை, நற்றினை, அகநானூறு ஐங்குறுநூறு கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன இவற்றுள் தினைவகையால் தனித்தனி புலவர்களால் பாடப்பெற்றவை ஐங்குறுநூறும் கலித்தொகையும் ஆகும்.

அகம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அகநாநூறு மட்டுமே. இவை நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகை என்றனர். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் நித்திலக் கோவை என்ற மூன்று பிரிவுகளை உடைய தனிச் சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு.

கலித்தொகையில் முல்லைக்கலியில் சோழர் நல்லுருத்திரன் பாடிய பாடல் நம் தமிழர்கள் வீரத்தை செப்பும் முலலை நில மக்களின் மணக்கோலத்தை நம்முன் நிறுத்துகிறார்.

முல்லை நிலத்து ஆயர்குடி மக்கள் தம்மகள் பருவமெய்தியவுடன் ஒரு காளையையும் வளர்ப்பது மரபாம். இளைஞர்கள் ஏறுதழுவி அடக்கி பின் மங்கையை திருமணம் செய்வர் என்பதை முல்லைக் கலியில் கவிஞர் பாடியுள்ளார், முல்லைக் கலியில் உள்ள சில பாடல்கள்

அவ்வழி. முழக்கென இடியென முன்சமத்து ஆர்ப்ப
வழக்குமாறு கொண்டு வருபுவருபு ஈண்டி
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்
துறையும் ஆல்மும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ (பாடல் 101- 10-15)

இளைஞர்கள் இடிமுமுழக்கமென ஆர்ப்பரித்து களத்தில் அடுத்து அடுத்து வந்து கூடினர் மணமும் தூசியும் சூழுமாறு பெண்கள் குழுமினர். மரபு வழி வணங்கி களத்தில் இளைஞர்கள் பாய்ந்தனர்.

மேற்பட்டு உலண்டின் திறன் ஒக்கும் புன்புருக்கண்
நோக்குஅஞ்சான் பாய்ந்த பொதுவனை சாக்குத்திக்
கொட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண் (101 – 15-17)

சாம்பல் நிறம் கொண்ட காளையின் கடும் பார்வைக்கு அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை கொம்பால் குத்திக் குலைக்கும் காட்சியைப்பார்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர்விரிந் தன்ன கரிநெற்றிக்காரி
விடரிஅம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்தி குலைப்பதன் தோற்றங்காண் (101 – 20-23)

காதுகளில் செம்புள்ளிகளையுடைய வெண்மை நிறக் காளை அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை தன் கொம்பின் முனையால் குத்தும் காட்சியைப் பார்

நாம் ஒரு ஏறுபுகதலை நம் கண்முன் காண்பது போன்ற உணர்வை சங்ககாலப் பாக்கள் உணர்த்துகின்றன.

இகுளை இஃதுஒன்று கண்டை! இஃதுஒத்தன்!
கொட்டினத்து ஆயர் மகனன்றோ? மீட்டுஓரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன் (103 – 32-35)

போரை விரும்பும் ஏற்றின் கலுத்தை கையால் ஒரு மாலையைப் போன்று தழுவிக்கொண்ட ஆய குடும்பத்தான் வலிமையைப்பார். காளை மீண்டும் வலிமைபெறாமல் அதனை இருகப் பற்றிக்கொண்ட மாவீரனைப் பார்.
கோவினத்து ஆயர் மகனன்றோ! ஓவான்
மறையேற்றின் மேலிருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான்போல் தோன்று மவன். (103 – 37-39)

மச்சத்தை உடைய ஏற்றின்மேல் ஏறி வீற்றிருக்கின்ற ஆயன் நீர்த்துறை தெப்பத்தில் அமர்ந்து அதனை செலுத்துபவன் போலத் தோன்றுகிறான். அவன் பெருவீரன் ஏற்றைவிட்டு எளிதாக இறங்க வில்லை

அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவராரா ஆயமகள் தோள்! (103 – 65-67)

காளையின் கொம்புக்கு அஞ்சும் இளைஞனை ஆயர் குலத்து மங்கை மறுமையிலும் கணவனாகக் கொள்ளமாட்டாள் என்றும் வெறுப்பாள்.

செவலைக் காளையின் திறம்:

மருப்பில் கொண்டும் மார்புறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில்இறப் புல்லியும்
தோளிடைப் புகுதந்தும் துதைந்துபா டேற்றும்
நிறைமேற் சென்றாரை நீண்மருப் புரச்சாடிக்
கொளலிடம் கொளவிடா நிறுத்தன ஏறு.
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக்
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்செகில் காணிகா!
செயிரின் குறைநாளால் பின்சென்று சாடி
உயிருண்ணும் கூற்றமும் போன்ம். (105 – 30-39)

காளையின் கொம்பைப் பிடித்தும் மார்போடு தழுவியும் தமது தோளால் கழுத்தை அகப்படுத்திப் பிடித்தும் போரிட்ட வீரர்களை ஏறுகள் முட்டி கீழே தள்ளி அடக்கவிடாமல் விலக்கின தழுவியவரையெல்லாம் குத்திக் கொன்றன அவற்றை நெருங்குவோர் இல்லை அத்தைகைய செவலைக்களை எமனை ஒக்கும்.

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
இருபெரு வேந்தரும் இகலிக்கண் ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ(105 – 47-49)

ஏறுகளும் வீரர்களும் இரு பெரிய அரசர்கள் மாறாத பகைமையோடு தம்முள் எதிர்த்துப் பொரும் போர்க்களத்தை ஒக்கும்.

இப்பேற்பட்ட பெருமையுடைய ஏறு தழுவவதால் தமிழர்களின் மறம் நம்மை மெலிர்க்க வைக்கிறது. இத்தணை சிறப்புடைய சல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்யாமல் அனைத்து உதவிகளும் செய்து முறைப்படுத்தி தமிழர்களின் வீர விளையாட்டாக உலகம் முழுமையும் காணும் தமிழர் விளையாட்டாக முறைப்படுத்தவேண்டும்.