Tuesday, February 22, 2011

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டு விழா



சென்னையில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் 76ஆம் அகவையில் 9-2-2011 அன்று சேதுகாப்பியம் 2 நிலை உயர் காண்டம் வெளியீட்டுவிழா சந்திரசேகர் திருமணமண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

மன்ற இயக்குநர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். பத்மசிறீ ஒளவை நடராசன் வெளியிட காவியக்கவிஞர் வாலி பெற்றுக்கொண்டார். இருவரும் பெருங்கவிக்கோவின் காவியச் சிறப்பைக் கூறி வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் சிலம்பொலி செல்லப்பனார், முன்னாள் மேயர் சா.கணேசன் கவிவேந்தர் மேத்தா, பேராயக் கட்சியின் தலைவர் இதயதுல்லா, பேராசிரியர் ச.முத்துக்குமரன், முனைவர் அ.இராமசாமி, மாம்பலம்.ஆ.சந்திரசேகர், புலவர் செந்தமிழ்ச்செழியன், முனைவர் வா.மு.சே.ஆண்டவர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முனைவர் மறைமலை, தலைமையில் சேதுகாப்பியம் ஆய்வரங்கம் நடைபெற்றது. முனைவர் இராசகோபாலன், முனைவர் பேராசிரியர் குமாரவேலு, உலகநாயகி பழநி, கவிஞர்.நவநித கிருட்டிணன் ஆய்வுரை வழங்கினர்.

கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் தொகுப்புரை வழங்கினார்.மன்றச் செயலர் கவிச்சிங்கம் கண்மதியன் நன்றியுரை வழங்கினார்

Saturday, February 19, 2011

சென்னையில் அறிஞர் இலக்குவனார் நூற்றாண்டு விழா தமிழர்தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கினர்



தமிழ்ப்போராளி அறிஞர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவை அண்ணாநகர் தமிழ்ச்சங்கமும் இலக்கிய்வ வீதி அமைப்பும் சென்னையில் வள்ளியம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது.

இலக்கியவீதி இன்யவன் அனைவரையும் வரவேற்று உரயாற்றினார்.அண்ணாநகர் தமிழ்ச்சங்க புலவர் இராமலிங்கம் முன்னுரை வழங்கினார்.பேராசிரியர் க.திருமாறன் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி திருக்கரத்தால் நூறு தமிழ் அறிஞர்கட்கு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன்,தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி,முன்னாள் ஆட்சியர் இலட்சுமிகாந்தன் பாரதி, சிலம்பொலி செல்லப்பனார்,பெருங்கவிக்கோ.வா.மு.சேதுராமன், கவிமுரசு வா.சே.திருவள்ளுவர் உள்ளிட்ட பெருமக்கட்கு வழங்கப்பட்டது.

இலக்குவனாரின் திருமக்கள் பொறிஞர் திருவேலன்,முனைவர் மறைமலை,தமிழ்க்காப்பு திருவள்ளுவன் உள்ளிட்ட பெருமக்கள் தமிழ் அறிஞர்களை வரவேற்று விருது வழங்கி், விருந்து படைத்து மகிழ்ந்தனர்.

Friday, February 18, 2011

திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவருக்கு தமிழ்ப்பணிச்செல்வர் விருது


திருச்சியில் தமிழ்த்தாய் அறக்கட்டளை, எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்கள்,உலகத்தமிழ்க் கவிஞர் பேரவை இணைந்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு 22,23,-1-11 ஆகிய இருநாட்களில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்சியில் அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்கப் பட்டது. அதுபோது கவிமுரசுவா.மு.சே.திருவள்ளுவருக்கு மாணபமை மத்திய நிதி இணையமைச்சர் திருக்கரத்தால் தமிழ்ப்பணிச் செல்வர் எனும் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மாநாட்டிற்கு செம்மொழி நிறுவன பொறுப்பு அலுவலர் க.இராமசாமி,பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், மாண்பமை வணிகவரித்துறை அமைச்ச சி.நா.மி.உபயதுல்லா,கடவூர் மணீமாறன் பனப்பாக்கம் சீத்தா, தாளாளர் யூனுசு, மற்றும் எழுத்தாளர் பெருமக்களும் கவிஞர் பெருமக்களும் ஆய்வாளர்களும் பெருமளவில் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.

இரண்டு நாள் மாநாட்டையும் உடையார்கோயில் குணா, முனைவர் மன்சூர் மிகச்சிறப்பாக நடத்தினர்.

Friday, February 4, 2011

தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ் ஆட்சிமொழி மாநாடு


(25-1-11 அன்று சென்னையில் நடந்த மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

இந்தியாவின் ஆட்சிமொழியில் தமிழ் இடம் பெறவும், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கருத்துக்களைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் புலவர் சுந்தரராசன் அவர்க்ளும் இணைபிரியாத களப் போராளிகள். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் காலையில் உரையாற்றிச் சென்றுள்ளார்கள்.

தமிழ்ச் செம்மொழிப் போராட்டத்தில் தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் மற்ற அனைத்து தமிழ் அமைப்புகளும் இணந்து தலைநகர் தில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கண்முன்னே வருகிறது. அதில் கலந்து கண்ட அறிஞர் பெருகமக்கள் பலரை இத் தலைநகர்த் தமிழ்ச் சங்கக் சொந்தக் கட்டிடத்தில் காண்பதில் பேருவகை கொள்கின்றேன். பெங்களூருவிலிருந்து வருகை தந்திருக்கும் கா. சுப்பிரமணீயம் குழுவினர், நாமக்கல்லிலிருந்து வருகை தந்திருக்கும் சுப்பண்ணன் குழுவினர்,பேராசிரியப் பெருமக்கள் இந்திராணி மணியம், சரளா இராச கோபாலன், மற்றும் அனைத்துப் பெருமக்களும் இங்கே பங்கு பெற்றிருப்பது நாம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்ற தன் இன்னுயிரை ஈந்தார். பேறறிஞர் அண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றி, சட்டமன்றத்தில் மும்முறை தமிழ்நாடு என அண்ணா முழங்க அனைவரும் வாழ்க என முழங்கி இன்றும் யாம் தமிழ் நாடு என மன மகிழ்வோடு வழங்கி வருவது வரலாறு.

நாமெல்லாம் கூடி செம்மொழி போராட்டக் குழு அமைத்தபோது நமக்கு களம் அமைத்து போராட்டத்திற்கு பலம் சேர்த்த பெருமகன் நம் முதல்வர்கலைஞர். அரசியலில் 40\40 என தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பால் மத்திய அரசைப் பணியவைத்து நமக்கு செம்மொழித்தகுதியை பெற்றுத் தந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று. கலைஞரை தமிழினம் காலம் காலமாகப் போற்றும்,

உலகமே வியக்கும்வண்ணம் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழின் பெருமையை உலகில் தலைநிமிரச் செய்தார்.செம்மொழி நிறுவனம் சார்பில் உலகத் தரம் வாய்ந்த விருதுகள், கருதரங்குகள், பல்வேறு விருதுகள் வழங்கி் செம்மொழித் தகுதியை வரலாறாகப் பதித்துள்ளார்.

பகச்சொல்லி கேளிர் பிரிப்பர்நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

என்ற வள்ளுவப் பெருமான் குறளுக்கொப்ப நம்மிடம் உள்ள குறைகளை கூறாமல் நன்மையைப் பேசி கூடி போராட்டத்தில் வெற்றிபெற வழிவகை காண வேண்டும்.

அறிஞர் சி,யூ.போப் மொழிபெயர்த்த திருக்குறள் உரையை படித்த இரசிய அறிஞர் டால்சுடாய் அண்ணல் காந்தியடிகளுக்கு திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளார். திருக்குறளைப் படித்த காந்தியடிகள் தாய் மொழியாம் தமிழில் மூலத்தை படிக்க வேண்டும் என்ற அவாவைப் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியே திருக்குறளை தேசிய நூலாகவும் தழிழை ஆட்சிமொழியாகவும் ஆக்க மத்தியில் ஆளும் பெருமக்களுக்கு அறிவுருத்தலாம்.

உலக மொழியாக தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களே உலகில் எல்லாப் பகுதியிலும் சிறப்பாக ஓடி வெற்றிவாகை சூடுகிறது.

ஈழப் போராட்டத்தால் தமிழர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று எண்ணியவர்கள் மிரளும் வண்ணம் தமிழர்கள் பரந்து விரிந்து தமிழைத் தூக்கி நிறுத்துகின்றனர்.

நம்முடைய போராட்டம் வெற்றியடைய நாமெல்லாம் ஒன்றுபட்டு திருக்குறளை தேசிய இலக்கியமாக்குவோம், தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.

Tuesday, February 1, 2011

சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா



சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா
{16-1-’11 அன்று சென்னை கோட்டூரில் 2042 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழாவில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் பங்கேற்று ஆற்றிய உரை}

திருவள்ளுவர் ஆண்டு 2042 ஆம் ஆண்டின் தமிழாண்டுவிழாவை இன்று நாம் நடத்தக் குழுமியுள்ளோம். யோகத் திருமகன் ஆசான ஆண்டியப்பனின் குழந்தைகள் மிகச் சிறப்பாக இசையால் பாடினர். திருகுறளின் கடவுள் வாழ்த்தைப் பாடிய மாணவிகளுக்குக்கு வாழ்த்துக்கள்.

திருக்குறள் செல்லம்மாள் அவர்களின் திருக்குறட்பணி போற்றி மகிழத்தக்கதாகும். அழைப்பிதழில் அச்சிட்டுள்ள திருக்குறள்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.

துன்பங்கள் அடுக்கடுக்காக வந்தாலும் மனம் கலங்காதவனை வந்தடைந்த துண்பமே துன்பப்படும். என்ற பொருளுக்கிணங்க யாங்கள் பன்னாடுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் செல்லம்மாள் பங்கேற்ற பெருமைக்குரியவர்.

யாங்கள் மாநாடு நடத்தியபோது அவருடைய மகளின் மகப்பேறுகாலம். யான் வேண்டாம் மகளைப் பாருங்கள் என்று கூறியபோதும் தமிழ் தமிழரின்பால் உள்ள பற்றால் திருக்குறள் கூற்றுப்படி துன்பங்களைக்கண்டு மனம் கலங்காமல் இலட்சிய நோக்கோடு மாநாட்டில் பங்கேற்று நடனமாடி உலத் தமிழர்களை மகிழ்வித்தவர். இதோ இங்கே உள்ள மழலை குறளமுதுதான் அன்று பிறந்த மழலை.

செல்லம்மாளின் மகன் கிரிதர் - யோகலட்சுமியின் செல்வன் குறளரசு அருமையாக பாட்டியைப் போன்றே திருக்குறளை ஒப்புவித்தான் செல்லம்மாள் உலகுக்கு மட்டுமில்லாமல் தன் இல்லத்திலேயும் திருக்குறளை நிலைநிறுத்துகிறார.

சென்ற ஆண்டு தன் இல்லத்தின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி எழுச்சித் தமிழர் திருமாவளவன் திருக்கரத்தால் திறந்து வைத்தார். அதுபோது யானும் பங்கேற்று உரையாற்றினேன்.

திருவள்ளுவரின் 2042 ஆம் ஆண்டு தொடக்க நாளான இன்று சிலைக்கு மாலை அணவித்து வணங்கி அறிஞர்களை அழைத்து திருவள்ளுவர் தினத்தை மிகச் சிறபாக கொண்டாடி வருகிறோம்.

திருவள்ளுவர் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாகவே கூறுகிறார். கடவுளின் பெயரால் மனிதர்களை வேதங்கள் வேறுபடுத்துகிறது. திருக்குறள் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்ற குறள் மூலம் பிறபினால் அனைவரும் ஒரே சமம் என அருதியிட்டுக் கூறியுள்ளார்.

ஆணுக்கு நிகராக ஏன் ஆண்களுக்கு மேலாக தொண்டு செய்வதில் மேலோங்கியுள்ளனர். செல்லம்மாள் அவர்களின் தொண்டும் பெண்களின் பெருமையை பரைசாற்றும் தொண்டாகும். அவருக்கு துணையாக தூணாக இருக்கும் இராசமாணிக்கம் அவர்களையும் குடும்பத்தாரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

நமது முதல்வர் கலைஞர் பெருமான் திருவள்ளுவராண்டை தமிழாண்டின் தொடக்கமாக அறிவித்து உலகம் முழுமையும் திருவள்ளுவர் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்து நகரின் தலைநகர் பெர்ன் நகரின் வள்ளுவன் பாட சாலை என்ற அமைப்பை ஈழத்து முருகவேள் – நந்தினி இணையர் நடத்தி வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் திருவள்ளுவர் ஆண்டை கொண்டாடி வருகின்றனர். யான் சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது அவர்க்ளின் தொண்டைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

இவ்வாண்டும் திருவள்ளுவர் 2042 ஆம் ஆண்டுத் திருநாளைப் பெர்ன் நகரத் தந்தையைக் கொண்டு தமிழர்கள் கூடி ஒரு பேரரங்கில் நடத்துகின்றனர். தமிழ மக்களின் சார்பாக அவர்களுக்கு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயன் திருவள்ளுவருகு குமரி முனையில் வானளாவ சிலை எழுப்பிய முதல்வர் கலைஞருக்கு தமிழாண்டாக அறிவித்து நடைமுறைப் படுத்தியமைக்காக அனைவரும் நன்றி செலுத்துவோம்.

உலகமெலாம் பர்வியுள்ள நம் இனத்தை வள்ளுவ நெறியால் வாழ்விப்போம். உலக மறையாம் திருக்குறளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்வோம் என உறுதி ஏற்போம்.

எனக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய ஆசான ஆண்டியப்பனுக்கு நெஞ்சார்ந்த நன்றி வணக்கம்.