Saturday, July 17, 2010

உயிர்த்தமிழ் முதல்வா வாழி


உயிர்த்தமிழ் முதல்வா வாழி
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

எத்திக்கும் தமிழர் கூட்டம்
ஏற்றமாய் செம்மொழி வெற்றி
தித்திக்கும் அறிஞர் ஆற்றல்
தேர்ந்திட்ட மாநாட்டு வெற்றி
பத்தியம் காப்பது போல்
பார்புகழ் தமிழர் கூட்டி
வித்தக மாநாடு கண்ட
வெற்றியின் முதல்வா வாழ்க


சாத்திரம் சடங்கை ஓட்டி
சரித்திர நம்மின் பாங்கை
சூத்திரம் காண்பது போல்
சுழழ் கண்காட்சி காட்டி
தீத்திற கவிஞர் சான்றோர்
தீந்தமிழ் முழக்கம் காண
காத்த நம்தமிழர் ஒன்றாய்
கூட்டிய மாண்பே வாழி

பழந்தமிழ் சான்றோர் போற்றி
புத்தொளிர் ஆய்வு மன்றம்
களம்பல தலத்தில் கண்ட
கவின்மிகு அறிஞர் கூட்டி
உலகலாம் போற்றும் வண்ணம்
உன்னதத் தமிழின் மாட்சி
பலமெலாம் ஒன்றாய்க் காட்டும்
பைந்தமிழ் வேந்தே வாழி

கட்சியின் வாசம் இல்லை
கவின்மிகு தமிழர் ஒன்றாய்
கூட்டிய தாயின் பாசம்
குழுமிய அரங்கில் கண்டோம்
நாட்டமாய் தமிழில் கற்றோர்
நல்கிடும் அரசின் வேலை
ஊட்டமாய் நூறு கோடி
ஊட்டிய தலைவா வாழி

“கட்டளை இடுக என்றே
கவின்மிகு அறிஞர் மக்காள்”
தட்டுக கதவை என்றே
தூய்மையர் ஏசுவைப் போல்
மொட்டது மலரும் பூவாய்
மொய்த்துள யாங்கள் எல்லாம்
உட்பூசல் கலைந்த எங்கள்
உயிர்த்தமிழ் அறிஞா வாழி

Friday, July 16, 2010

தமிழியக்கங்களின் தாக்கம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

இந்தியாவின் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27-6-2010 ஆம் நாள் நப்பூதனார் அரங்கில் வழங்கிய ஆய்வுக் கட்டுரை

முன்னுரை
தமிழ் மக்களிடம் தமிழ் மொழியின் சிறப்பையும் உணர்வையும் ஊட்டிய பங்கு திராவிட இயக்ககங்களைச் சாரும். இந்திய விடுதலைக்கு பேராயக் கட்சியின் பங்களிப்பு மகத்தானது. தமிழ் தமிழர் விடுதலைக்கு திராவிட இயக்கங்களே வித்திட்டன. திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியார். தமிழர்கள் யார் என்பதை தனக்குத்தானே உணரவைத்தவர். தமிழர் மறுமலர்ச்சிக்கு தன்மானத் தளபதிகளை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் பாசறையாக இருந்த பெருமைக்குரியவர். தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் சமுதாய இயக்கமாயிற்று.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை இந்திதிணிப்பு அறிவிப்பு மிகப்பெரும் மொழிப் புரட்சியை உருவாக்கியது. பெரியாரிடமிருந்து அவரது வழித்தோன்றல்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெருந்தலைவர்கள் தோற்றுவித்த திராவிட முன்னேற்றக்கழகம் மொழிவிடுதலை இயக்கமாக மாறி மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. தி.மு.கவின் கொடிக்கு வண்ணம் தேர்ந்தெடுத்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருப்பின் மேல் தன் விரலைக் கீறி இரத்தத்தை வைத்து இருவண்ணக்கொடியை உருவாக்கினர். புரட்சிகரமான வேகத்தோடு மொழிப்போராட்டமும் திராவிட முன்னேற்றக் கழ்கத்தினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத்,கே.ஏ.மதியழகன் பேராசிரியர் க.அன்பழகன், போன்ற தனிப்பெருந் தலைவர்கள் சொற்பெருக்காற்றி தமிழுணர்வர்வாளர்களை கிளர்ந்தெழச் செய்தனர். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்தாலும் பெயரளவிலேயெ இருந்தது

பேரறிஞர் அண்ணா தலைமையில் மும்முனைப்போராட்டம் இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்டது. தாய் மொழிக்காக தன் இன்னுயிரை தீக்குளித்துத் துறந்தனர். கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், சிவகங்கை இராசேந்திரன், பீளமேடு தண்டபாணி, சத்திய மங்கலம் முத்து, அய்யம்பாளையம் வீரப்பன், கீரனூர் முத்து, வீராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி போன்ற தமிழ்ப்போரளிகள். மொழிக்காக உயிரை ஈகம் செய்த பெருமைக்குரிய ஈகவான்கள். உலகில் தமிழினம்தான் மொழிக்காக ஈகம் செய்த இனம்.

தமிழ் நாட்டில் ஏற்படுகின்ற புரட்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர்தான் காரணம் என்று அன்றே குற்றம் சாட்டி பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்,இந்தியை எதிர்த்து 63 நாட்கள் தனிமைச் சிறையில் வாடினார். கல்லக்குடியில் தமிழுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தண்டவாளத்தில் தலையை வைத்துப் உயிரை துச்சமாக நினைத்துப் போராட்டம் நடத்தினார் முத்தமிழறிஞர் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டார். தம் வாழ்நாளை சிறையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் தியாகம் செய்த பெருமைகுரியவர்கள் தி.முகவினர்.

மொழியுணர்வால் தமிழ்கத்தின் ஆட்சிப்பொறுப்பு தி.மு.க என்ற பேரியக்கத்தின் தலைமையில் அமைந்தது.பேரறிஞர் அண்ணா முதலமைச்சரானார். தமிழை முன்னிறுத்தி ஆட்சி அமைந்ததால் அனைவர் நாவிலும் தமிழ் முழங்கின. சட்டமன்றம், மேலவை, பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நிதிநிலை அறிக்கை போன்ற சொற்களெல்லாம்
நடைமுறைக்கு வந்தன. மக்கள் மொழியும் விவாகம் திருமணமாகவும், நமசுகாரம் வணக்கமாகவும்,சமாச்சாரம் செய்தியாகவும்,நாசுட்டா சிற்றுண்டியாகவும் தமிழ்ச்சொற்கள் தமிழர்களால் நடைமுறை வழக்கில் வந்தன.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மெட்ராச் சுடேட் என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றச் சட்டத் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என்ற மாற்றத்திற்கு தன் இன்னுயிரை ஈந்த தியாகி சங்கரலிங்கனாரைக் குறிப்பிட்டார் முதல்வர். அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று மூன்றுமுறை முழங்க உறுப்பினர்கள் வாழ்க! வாழ்க! என முழங்கி தமிழ் நாட்டின் வரலாற்றுச் சிறப்பை நிலைப்படுத்தினார்.

இந்தியாவிலேயே மொழியின் பெயரால் பெயர் பெற்ற சிறப்பைப் பெற்றாலும் இது நாள்வரை தமிழிற்கு எந்த நிலையிலும் தமிழ்நாட்டில் முதன்மை கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாட்டில் தமிழுக்கு இயக்கம் வேண்டும் என்ற கொள்கையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தம் கவிதைகள் வழியும் உணர்வோடு பாடுபட்டார். புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைகள்தோறும் உணர்ச்சி பொஙகப் பாடினர். தமிழின உணர்வை மீட்டிய பெருமைக்குரியவர் பாவேந்தர்.

அறிஞர் பெருமக்கள் கா.அப்பாதுரையார்,மொழிஞாயிறு தேவனேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கனார், வேலா.அரசமாணிக்கனார், முனைவர் தமிழ்க்குடிமகன் போன்ற பெருமக்கள் தொடர்ந்து தமிழை முன்னிறுத்த அயராது பாடுபட்டனர்.
இருமொழிக் கொள்கையின் வேகம் காலப்போக்கில் தமிழுக்கு முதன்மையின்றி ஆங்கிலத்திற்கு முதன்மையாயிற்று.ஆங்கிலத்தின் ஆதிக்கம் மழலையர் பள்ளிகளில் பெருகின. தமிழே படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் பட்டதாரி ஆகலாம் என்ற அவல நிலை உருவானது.

தமிழ்நாட்டில் ஆட்சித் துறையில் அலுவல்மொழியாக தமிழ் இல்லை, கல்வித்துறையில் பயிற்றுமொழியாக இல்லை, நீதித்துறையில் வழக்காடும் ,மொழியாக இல்லை,ஆலயத்தில் வழிபாட்டு மொழியாக இல்லை.இந்நிலையைப் போக்க தமிழ்நாட்டில் உணர்ச்சிமிகு இயக்கங்கள் தோன்றின.பன்னாட்டுத் தமிழுறவுமன்றம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்,தமிழ்ச்சான்றோர் பேரவை, தமிழகத் தமிழாசிரியர் கழகம்,பாவேந்தர் இலக்கியப் பேரவை, தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம், கலைஞர் கருணாநிதி இலக்கிய வட்டம், தமிழ் வளர்ச்சிப்பேரவை, பாவேந்தர் பாசறை, பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம்,திருக்குறள் பேரவை, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் நற்பணி மன்றம். உயிர்மெய்த் தமிழ்ச்சங்கம் ,தமிழ் மீட்புப் பேரவை, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, செந்தமிழ் விரும்பிகள்மன்றம், தமிழ்த் தன்னுரிமை இயக்கம், தையற் கலைஞர் தமிழ்ப் பேரவை, இலக்கியப் பண்ணை, தமிழ்ச் சுரங்கம் போன்ற தமிழ் இயக்கங்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கைக்குப் போராட்டங்கள், உண்ணாநோன்பு, மறியல், தெருமுனை விளக்கப் பொதுக் கூட்டம் தமிழ் மேம்பாட்டு மாநாடு என தமிழ்க் களம் கண்டுள்ளன.

1993ஆம் ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் கன்னியா குமரியிலிருந்து சென்னை வரை 1330 கி.மி. 50 நாட்கள் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் நடைப்பயணமாக வந்தனர். பட்டி தொட்டியெல்லாம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என கொள்கை முழக்கமிட்டு தமிழுக்காகப் போராடினர். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அன்றைய முதல்வர் செயலலிதாவை நேரில் அறிக்கை கொடுக்கச் சென்றபோது அலுவலரே வாங்கினர்.முதல்வரை சந்திக்கக கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.

தஞ்சையில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தபோது தலைநகர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அறிஞர் பெருமக்கள் ஒன்பது தமிழ்க் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர். 1-1-1995 ஆம் நாள் பாவலரேறு பெருஞ்சித்திரனார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,புலவர் சுந்தரராசன் ,புலவர்.வேதிருவேங்கடம், புலவர் ப.சாத்தன், இரா.பத்மநாபன் போன்ற பெருமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறைப்பட்டவர்கள் பிணையில் வர மறுத்ததால் மாநாடு முடிந்த பிறகே விடுதலை ஆகினர். தமிழ்ச் சான்றோர்கள் கைதைத் தொடர்ந்து ஊர்கள்தோறும் பல மன்றங்கள் சங்கங்கள் அறிஞர்கள் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி கண்டித்தன.

25-4-1999 அன்று தமிழ்ச் சான்றோர் பேரவையோடு தமிழ் இயக்கங்கள் அடையாறு நா.அருணாச்சலத்தோடு இணைந்து மிகப் பெரிய உணர்வுப் போராட்டமான பட்டினிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு தமிழகம் முழுமையும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலோடு இருந்தனர். இறுதியாக 102 பெருமக்கள் சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தனர்.அறிஞர் தமிழண்ணல் தலைமையில்
1.ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாகவும் பாட மொழியாகவும் இருந்திட வேண்டும். 2.பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட உயர்கல்விகள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே தொடங்குதல் வேண்டும். 3. தமிழ்ப் வழிப் படித்த்வர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழ்ங்கப்படுதல் வேண்டும் என்ற கொள்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பு இருந்தனர் .
போராட்டக் குழுவின் சார்பில் பேராசிரியர் தமிழண்ணல் ,நா.அருணாச்சலம், பெ.மணியரசன்,தோழர் தியாகு உள்ளிட்டோர்அரசோடு பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
தமிழக அரசு உண்ணா நோன்பு இருந்தோரின் உணர்வுகளை மதித்து அமைச்சர் தமிழ்க்குடிமகன் வழி மறுநாள் காலை 8.30 மணிக்கு உண்ணாநோன்பை முடித்து வைத்தார். பெருங்கவிக்கோ வாமுசேதுராமன், கயல் தினகரன் போராட்டக் குழுவிற்கும் அரசுக்கும் பாலமாக இருந்து செயல்பட்டனர்.


தமிழக அரசின் அறிக்கையில் “ஒன்று முதல் ஐந்துவகுப்புகளுக்குரிய தொடக்கப் பள்ளிகள் நாடு முழுவதும் பரவியுள்ள மழலையர் பள்ளிகள் தொடங்கி தமிழ் மொழிப்பாடமாகவும் பயிற்றுமொழியாகவும் இருத்தல் வேண்டும் என்ற கொள்கையில்தமிழ் அறிஞர்களுக்கும் தமிழக அரசுக்கும் எந்த ஒரு வேறுபாடும் கிடையாது. இக் கொள்கையினை நிறைவேற்றும் வகையில் ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த ஏப்ரல் 30க்குள் ஒரு குழு அமைக்கப்படும் மே 31க்குள் அக் குழுவிடம் பரிந்துரை பெற்று வரும் கல்வி ஆண்டிலேயே அதனை நடைமுறைப்படுதுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் செய்யும்.” என பண்பாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டார்.

அரசின் உறுதிமொழிப்படி தமிழ் வழிக் கல்விக்கான வழிவகைகளைக் கண்டறிய நீதிஅரசர் மோகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவில் முனைவர் வா.செகுழந்தைசாமி, முனைவர் ச,முத்துக்குமரன் புலவர் இரா.இளங்குமரன், முனைவர் தமிழண்ணல் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

மோகன்குழு அறிக்கையின்படி தமிழக அரசு தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது. ஆங்கிலக் கல்வி வழங்கும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் நீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்றனர். பணத்தை ஆங்கிலக் கல்வியைக் காட்டி திரட்டி மக்கள் அறியாமையை பயன்படுத்தி தமிழ்வழிக் கல்விக்கு பெரும் தடையாக உள்ளனர்.
மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதன் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றபோதே தமிழ் வழியாகக் கல்வியைக் கொணர்ந்தார்.அப்போதே தமிழ்ப் பகைவர்கள் ஆங்கிலத்திற்க்கு வக்காளத்து வாங்கினர்.தமிழ் ஒழிக ,ஆங்கிலம் வாழ்க என்ற உச்சநிலையில் எதிர்த்தனர். சிலம்புச்செல்வர் ம.பொ.சி, முத்தமிழ்க்காவலர் கீ.ஆ.பெ.வி., தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் வேண்டுகோளிற்கிணங்க தளர்த்தினார் கலைஞர்.


தற்போது ஐந்தாம் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் மாண்புமிகு கலைஞர். இன்னும் தமிழ் நாட்டில் தமிழே பயிலாமல் பட்டம் பெறலாம் என்ற இழி நிலையைக் கண்ட கலைஞர் முதல் வகுப்பிலிருந்து தமிழ் கட்டாயம் என சட்டம் கொணர்ந்து நடை முறைப்படுத்தியுள்ளார்.

தமிழால் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்த அ.இ.அ.தி.முக. தமிழ் வழிக் கல்விக்கும் தமிழ் உயர்வுக்கும் செய்தது என்ன. கால்கள் கொப்பளிக்க எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கொள்கைக்கு கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பெருங்கவிக்கோ தலைமையில் நடந்து வந்த நடைப்பயணக் குழுவினரை முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு முதல்வர் செயலலிதாவைக் கோட்டைக்குச் காணச் சென்றபோது நேரில் கூட அறிக்கையைப் பெறவில்லை.தமிழ் இயக்கவாதிகளின் உணர்வை உணராத அரசாக இருந்தது.

தஞ்சையில் நடந்த 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் உண்ணாநோன்பு இருக்கச் சென்றபோது அடித்து இழுத்து சிறையில் தள்ளினர். தமிழ் உணர்வை தமிழ் மாநாட்டிலேயெ நிலைகுலையச்செய்த அரசு அ.தி.மு.க அரசுதமிழைச் செம்மொழி ஆக்குவதற்கு மாண்புமிகு முதல்வர் கலைஞரின் சிந்தனையும் செயலும் முன்னோடியானது.தமிழ் அறிஞர்களின் கருத்துக்களை தமிழக அரசின் வாயிலாக மைசூர் செம்மொழிவாரியத்திற்கு பரிந்துரைத்து செயல்வடிவமாக்கினார்.

தமிழைச் செம்மொழியாக அறிவிப்பதற்கு தமிழ் இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளன.பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், தலைநகர் தமிழ்ச் சங்கம்,பெங்களூர் தமிழ்ச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து தமிழ் செவ்விவியல் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உண்ணாநோன்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு 135 தமிழ்ப் பெருமக்கள் தில்லியில் 18-8-2003 அன்று
உண்ணாநோன்பு போராட்ட்டத்தில் பங்கேற்றனர். மாண்பமை அர்சியல் பெருமக்கள் மத்திய அமைச்சர்கள் போராட்டக் களத்தில் வாழ்த்துரைத்தனர். உண்ணா நோன்பு முடித்து அன்றைய பாரதப் பிரதமர் வாச்பாய் அவர்களை போராட்டக் குழுவினர் சந்தித்து அறிக்கை வழங்கினர்.குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்தனர். இப் போராட்டத்தில் தம் சொந்த செலவிலேயே தமிழகத்திலிருந்து தில்லிக்கு வருகை தந்து போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் இயக்கவாதிகளின் உணர்வு மகத்தானது. தமிழை எல்லா நிலைகளிலும் உயர்த்த தமிழ் இயக்கங்களின் ஈகத்தை இப் போராட்டங்கள் மூலம் உணரலாம். மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் இந்த உண்ணாநோன்பு குறித்து முரசொலியில் கடிதம் எழுதி உணர்வுக்குத் தலைமைதாங்கினார்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு முதல்வர் கலைஞரின் அயரா முயற்சியால் 40/40 வெற்றிபெற்று ஆட்சி அமைத்தனர். அன்னை சோனியா தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் தமிழ்ச் செம்மொழி என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. மைசூரிலிருந்த செம்மொழி வாரியத்தை சென்னைக்கு மாற்றி கட்டிடமே எழுப்பி திறப்பவிழாக் கண்டார் நம் மாண்புமிகு முதல்வர் கலைஞர். தம்முடைய சொந்தத் தொகையில் ரூபாய் ஒரு கோடி வழங்கினார். ஆண்டு தோறும் ரூபாய் பத்து இலட்சம் கலைஞர் செம்மொழி விருதாக செம்மொழி மேம்பாட்டு வாரியம் வழங்குகிறது.தமிழ் மேம்பாட்டு வாரியத்தில் ஆய்ந்தறிந்த தமிழ் அறிஞர் பெருமக்களை ஐம்பெருங்குழு எண்பேராய உறுப்பினர்களாக நியமித்து தமிழிற்கு மிகச் சிறந்த தொண்டாற்றி வருகின்றனர்.

தமிழியக்கங்களின் உணர்வுக்கு இது நாள் வரை கலைஞர் அரசுதான் செவிசாய்த்து தமிழ் உணர்வை மேலோங்கச் செய்துள்ளது.மேலும் தமிழ் இயக்கங்களின் பணிகள் தொடரவேண்டும்.தனித்தனி தீவுகளாக இருக்கும் தமிழ் இயக்கங்கள் ஒன்றுபட்டு மக்களிடம் தமிழ் உணர்வை மீக்கெழச் செய்யவேண்டும். ஓன்றுபட்டுப் போராட வேண்டும்.

முடிவுரை
தமிழ் நாட்டில் தமிழிற்கு ஓரளவு முன்னேற்றம் – மாற்றம் உருவானது தமிழியக்கங்களின் தாக்கங்களினால்தான். நாம் தாய்மொழியாம் தமிழ் நாட்டில் அனைத்துத் துறையிலும் முதன்மை பெற, இந்திய ஆட்சிமொழியாக தமிழ் அரியனை ஏற தமிழ் இய1க்கங்களின் பொறுப்பில்தான் உள்ளது. தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக வாழும் கலைஞர் காலத்திலேயே நடைபெறும் என்பது திண்ணம்.