Wednesday, May 30, 2012

நெஞ்சையள்ளும் சித்தியவான்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.

கோலாலம்பூரிலிருந்து சித்தியவான் பகுதிக்கு ஊர்தியில் சென்றேன். அருளாளர் இரெங்கையா அவர்கள் எங்களது நீண்ட  கால நணபர். நான் எப்போது மலேசியா வந்தாலும் அவரைக் காணாமல் சென்றதில்லை. சாயிபாபா அவர்களின் பக்தர். சித்தியவான் பகுதியில் பாபா மன்றம் வைத்து சிறப்பான ஆன்மீகப் பணிநடத்தி வருபவர். யானும் அவரது துணைவியாரும் இரெங்கையா மகிழ்வுந்தில் சென்றோம். கோலாலம்பூரிலிருந்து செல்லும் பழைய பாதையில் சென்றோம். சுங்கப்பாதையிலேயே யான் பலமுறை சென்றிருக்கிறேன். பழைய சாலைக்கு சுங்கவரி கிடையாது.. சாலை மிகப் பரந்த சாலையாகவே இருந்தது. செல்லும் வழியெல்லாம் நீர் நிலைகளும், ஆறுகளும் மலைகளும் கண்ணுக்கு விருந்து வழங்கின. சாலையில் இரு புறங்களிலும் சோலையாகவே காட்சியளித்தன. வறண்ட பகுதி என் கண்களுக்குத் தெரியவேயில்லை. செம்பனைத் தோட்டங்களும், நெல் வயல்களும், வெற்றிலைக் கொடிகளும் பார்க்கும் இடமெல்லாம் இருந்தன.

இரங்கையா அவர்கள் வயல்வெளிப் பகுதியில் சாலையில் நிறுத்தினார்.அங்கு விளையும் விலைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் விவசாயிகள். மாங்காய்களும் முந்திரிபோன்ற வடிவமுள்ள பழங்களும் சோளக் கதிர்களும் வைத்திருந்தனர். சோளக் கதிரை வேகவைத்து விற்பனைக்கு வைத்திருந்தனர். சோளக் கதிரை வாங்கி எங்களுக்கு வழங்கினர் இரங்கையா. சோளக் கதிரை சுவைத்துக் கொண்டே சித்தியவான் நோக்கிப் புறப்பட்டோம்.எழுபது வயது மூதிளைஞர் இரெங்கையா. களைப்பு என்பதே அவர் முகத்தில் காணமுடியாது. புன்சிரிப்பே அவர் முகத்தின் அடையாளம். பல்வேறு செய்திகளைப் பேசியவண்ணம் சித்தியவான் வந்தடைந்தோம். சித்தியாவனில் அவரது இல்லதைத் திறந்தவுடன் ஒரு பூணை அவர் காலடியில் வந்தது. மூன்று நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் பாவம் பசியோடு இருக்கும் என உணவு கொடுத்தார் இரங்கையா. இயல்பாகவே இரங்கையா அவர்கள் ஒரு மனித் நேய மாமணீ.

இல்லத்தில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதுபோது ஒரு அரிமா சங்க அழைப்பை காண்பித்தார். சித்தியவான் அரிமா சங்கம் என்று அச்சிடப்பட்டு கூட்ட விபரம் சேவை விபரம், முந்தைய கூட்டத்தின் அறிக்கை அனைத்தையும் இணைத்திருந்தனர். அறிக்கைகளைக் கண்டவுடன் எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. இரங்கையா அவர்கட்கு நான் அரிமா இயக்கத்தில் 12 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்தது தெரியும். என்னையும் சித்தியவான் அரிமா சங்கக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

சித்தியவான் அரிமாசங்கத்தின் கூட்டம் சிறப்பாக நடந்தது. சீனத் தொழிலதிபர் தலைவராகவும் மலேசியத் தமிழர்கள் செயலராகவும் பொருளராகவும் பொறுப்பில் உள்ளனர். சங்கத்தின் ஒவ்வொறு செயல் தலைவர்களின் அறிக்கையும் மிகச் சிறப்பாக சேவைத் திட்டங்களோடு இருந்தன. இந்தியாவிலிருந்து வந்த என்னை சிறப்புரை ஆற்றக் கூறினர்.

யான் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். சென்னையில் எங்களுடைய சங்கத்தின் சிறப்புகளையும் நாங்கள் செய்யும் செயல் திட்டங்களையும் அங்கு கூறினேன். சென்னை மாநாகர் மத்திய அரிமா சங்க அறக்கட்டளை ஒன்று நிறுவி பொது மருத்துவம் கண்மருத்துவம், பல் மருத்துவம் என தினமும் ஏழை எளியவர்களுக்கு ஆற்றும் தொண்டுகளை கூறினேன். கண் புறை சிகிச்சை மாநகராட்சி அரசு பள்ளிகளில் நீர் சுத்திகரிக்கும் திட்டங்களை முறைபடுத்தியுள்ளதைக் கூறினேன். அங்கு வருகை தந்திருந்து இந்திய மலாய், சீன அரிமாக்களிடையே உரையாற்றியது பெருமையாக இருந்தது.இவ் வாய்ப்பை உருவாக்கிய அரிமா இரெங்கையா அவர்கட்கு நன்றி கூறினேன்
].
காந்தியடிகள் உர்வமும் இந்திய மூவண்ணக் கொடி பொறித்த எங்களது மாவட்ட அரிமாச் சின்னத்தை சித்தியாவன் அரிமாசங்கத் தலைவருக்கு அணிவித்தேன். அவர் சித்தியவான் அரிமா சங்க சின்னதை எனக்கு அணிவித்தார். அனைத்துப் பெருமக்களும் கரவொலி எழுப்பி ஆரவாரமாக மகிழ்சிப்பெருக்கை காட்டினர்.

பன்னாட்டு உணவு வகையோடு விருந்து பரிமாறி மகிழ்ந்தனர். 

ஆறு. அழகப்பனார் எனும் ஆல விருட்சம்

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(26-5-2012 அன்று மதுரையில் தமிழ்மாமணி திருக்குறட்செம்மல் தலைமையில் நடைபெற்ற ஆறு அழகப்பனார் பவள விழாவி கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்  ஆற்றிய உரை)

ஆறு அழகப்பனார் தமிழ் காக்கும் தமிழாகரர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழ் தமிழர் சிந்தனைக்கு தன்னை ஒப்படைத்த தமிழ்ப்போராளி. பேராசிரியப் பெருந்தகை எங்களது குடும்ப நண்பர். ஐயா அவர்களின் பொன்விழாமலரை தமிழ்ப்பணி வெளியிட்டது இன்றும் பசுமையாக உள்ளது. வேட்டி சிப்பா துண்டு என் பாரம்பரிய தோற்றத்திலும், வெள்ளை கால் உடை அரைக்கை சட்டை தரித்த பல்கலைக்கழக உடையில் உலா வரும் மாமனிதர். மனிதம் போற்றும் மாண்பாளர்.

ஆறு அழகப்பனார் எங்கள் பகுதியில் குடிபெயரும்போது ஒரு இல்லத்தை தேர்ந்தெடுத்தபோது என்னைக் கருத்துக் கேட்டார். அவசியம் வாங்குங்கள் எனக் கூறினேன். அந்த இல்லத்தில் குடியேறிய பேராசியப் பெருந்தகை தன்னுடைய இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின்போது என்னைத் தலைமை தாங்க வைத்த பெருமனத்தர். இப்போது தமிழ்ச்சுரங்கம் இல்லத்தைக் கடக்கும்போது மக்கள் அனைவரும் திருவள்ளுவரை வணங்கிச் செல்கின்றனர். ரிசிகேசில் திருவள்ளுவர் சிலையை நிறுவி சாதனை படைத்த மாவீரர் நம் ஆறு அழகப்பனார். திருவள்ளுவர் நாடகத்தைத் தாயாரித்து உலகெங்கும் நடத்தி வரும் நாடகக் காவலர். தமிழக அரசின் திருவள்ளுவர் விருதைப் பெற்ற பெருமைக்குரிய  சாதனையாளர் முனைவர் பெருமகன்

செம்மொழிப் போராட்டத்தின்போது அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் மற்றும் பெருமக்களோடு உண்ணாநோண்பில்; பங்கேற்று அன்றைய பாரதப் பிரதமர் வாச்பாய்  குடியரசுத் தலைவர் அப்துக் கலாம் ஆகியோரைச் சந்தித்து செம்மொழிக் கொள்கையை உரம் பெறவைத்தவர்.

அறநெறிக்கழகத்தின் சார்பில் பேராசிரியரும் யானும் பர்மா சென்றிருந்தோம். பத்து நாட்கள் பேராசிரியரும் யானும் மியான்ம்ரின் பல பகுதிகளுக்குச் சென்றோம். பேராசிரியரின் தந்தையார் பர்மாவில் வாழ்ந்தவர். பர்மாவில் வாழ்ந்து அவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் கணக்கிலடங்கா. அந்தப் பொருள்களையெல்லாம் மீட்டெடுக்க அவர் அங்கு ஆற்றிய திரட்டிய கோப்புகள் செயற்பாடுகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. யங்கூன்  தண்டபாணி முருகன் கோயிலில் கரூவூலப் பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக கோபுரம் போல் குவியலாக குவிந்திருந்தது. நம் செட்டிநாட்டுப் பெரும்க்களின் வணிகம் எப்படித் தழைத்திருந்திருக்கும் என்பது இப் பெட்டிகளைக் கண்டாலே புலப்படும். அப் பெருமக்களின் சொத்துக்களை மீட்டெடுக்க இன்றும் அவர் ஆற்றிவரும் பங்கு மகத்தானதும் ஐயா அவர்கட்கு அரசும் நாமும் ஒத்துழைத்தோமானல் மீட்டுவிடுவார் என்பது திண்ணம்.

இன்று பர்மாவில் தமிழ்ப் பத்திரிக்கைகளோ வெளியீடுகளோ ஏதும் இல்லை. நம் தொலைக்காட்சிகள்தான் அவர்கள் பேசும் நல்ல தமிழையும் கெடுத்து தமிங்கிலத்தைப் பரப்புகின்றனர். மூவ விற்குப் பிறகு எந்த இலக்கியமும் அம் மக்களுக்குப் புலப்படவில்லை. அங்கு நம்பேராசிரியர் அவர்கள் தமிழ் பயில குறுவட்டுகளையும், மங்கையர்களுக்கு கோலங்களையும் வழங்கிய சான்றோன்.

பேராசிரியரின் வாழ்நாள் சாதனை தமிழ்த்தாய் ஓவியம். பெருமைமிகு ஈழத்து ஓவியர் அமரர் பெனடிக்ட் அவர்களைக் கொண்டு  வரைந்து உலகுக்கு அர்ப்பணித்த பெருமைக்குரிய கலை வல்லுனர். இன்று அந்த ஒவியம் உல்கமெங்கும் பரவி தமிழ்த் தாயின் வடிவம் தமிழனை தலைநிமிரச் செய்கிறது. யாங்கள் பர்மா சென்றிருந்தபோது தட்டோன் பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்திவரும் சேகர் என்பவர் தம் பள்ளியில் ஐயா அவர்களின் தமிழ்த் தாய் ஒவியத்தை பெரிய அளவில் வரைந்து ஐயா அவர்களை கொண்டே திறக்கவைத்தார். யான் திருவள்ளுவர் படத்தைத் திறந்தேன். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தமிழ்ச்சுரங்கம் நாட்காட்டியில் தமிழ்த்தயின் படத்தை வெளியிட்டு அனைவருக்கும் வழங்கிவரும் கொடை நெஞ்சர் நம் அழகப்பனார்.

பேராசிரியர் அண்ணம்லைப் பல்கலைக் கழக்த்தில் உணர்வுமிக்க மாணவர்களை உருவாக்கிய பெரும் பேராசான். அவரைத் தொடர்ந்து அவர்வழியிக் தொண்டாற்ற தள்பதிகளை உருவாக்கியுள்ளார்.

நம் சமூகத்தை எண்ணிக் கவலைகொண்ட பேராசிரியர் தமிழ் இனத்தைச் சூழ்ந்துள்ள கவலைகள் 64 பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள கவலைகளைத் தீர்த்தோமானல் நம் இனம் மீட்சியுறும் எழுச்சியுறும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய இளைஞர்களிம்  தமிழை எவ்வாறு கொண்டு செல்வது என்பது நம் தமிழகத்தின் தலைப்பாக உள்ளது வெதனைக்குரிய ஒன்று, நம் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற தென் ஆப்ரிக்கா பொறுப்பாளர் மிக்கி செட்டி அவர்கள் அண்மையில் சென்னை வருகை தந்திருந்தார், தமிழில் பேச முடியவில்லையே என வேத்னையுடன் அவர் கூறியது நெஞ்சை வறுத்தியது. நம் தமிழர்கள் தமிழகத்தில் தமிழ் ஆரவமின்றி உள்ளனரே எனபது  நெஞ்சில் குத்தும் வேலாக உள்ளது.

1.    தமிழகத்தில் வாழ்வோர் அனைவரும் தொடக்கப் பள்ளி முதல் தமிழ் வழியே பயில வேண்டும்.
2.    தமிழ்வழி பயின்றோருக்கேதொழிற்கல்வி வேலைவாய்ப்பு  அனைத்துத் துறையிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
3.    சமுகமாற்றம் கண்டுள்ள நாம் பள்ளிக் கூடங்களில் ஒரே வழியான கல்வி முறையைப் பின் பற்ற வேண்டும்.
4.    தமிழில் தலைப்பில்லாத பத்திரிக்கைளை புறக்கணிக்க வேண்டும்.
5.    தமிழில் மொழிக் கலப்பு செய்வோரை தண்டிக்க வேண்டும்
6.    தலைப்பெழுத்தை கண்டிப்பாக் தமிழில் அரசு சார்ந்த பிறப்புச் இறப்புச் சான்றிதழ்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
7.    தமிழ் இனம் உலக இனம் இங்கு நடைபெறும் ஒவ்வொன்றும் உலகெங்கும் பரவுகிறது. உணர்வாளர்கள் ஒன்றுகூடி தமிழகப் போக்கை மாற்றவேண்டும். இல்லையெனில் தமிழ்கமே மோரிசு, தென் ஆப்ரிக்கா நிலையை அடைந்துவிடும்.
8.    தமிழன் தமிழகத்தை ஆள்வதற்குரிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் அமைப்புகள் ஏற்படுத்தவேண்டும்
9.    வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மனப்போக்கை நாம் கண்டு வெற்றிக் கொடி நாட்டவேண்டும்.
10.    செம்மொழி வாய்புப் பெற்றுள்ள நாம் ஆண்டுதோறும் உலகம் முழுமையும் அதை முறையாக பயன்படுத்த திட்டமிடல் வேண்டும்.

இளைஞர்கள் நம்மொழி இனம் காக்க இத்தகு செயல்களை நடைமுறைப் படுத்த பேராசிரியர் பவள விழாவில் சூளுரை ஏற்போம்

Wednesday, May 2, 2012

மலேசியமண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதியில் திருக்குறள் வகுப்பு


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(அறநெறிக் கழகத்தின் சார்பில் 11- 4- 2012 அன்று மலேசிய மண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் நடத்திய திருக்குறள் வகுப்பு)

மலேசிய மண்ணில் சிம்பாங்க் அம்பாட் பகுதி திருக்குறள் மனம் பரப்பும் மாசிலாப் பகுதியாக உள்ளது. யான் மலேசியா வந்தவுடன் விசயன் அவர்களையும் இலக்குமணன் அவர்களையும் தொடர்பு கொண்டு என் வருகையைத் தெருவித்தேன். பின் கோலாலம்பூர், சித்தியவான் ஈப்போ , சிங்கை, சோகூர் பகுதிகளில் நிகழ்வுகள் முடித்து இன்று தங்கள் நிகழ்ச்சியில் உள்ளேன். என்னை இலக்குமணன் அவர்கள் தெலுக்கின்சன் பகுதிக்கு பேருந்தில் வரப் பணித்தார்கள் பின் அங்கிருந்து இங்கு அழைத்து வந்தார்கள் பெருமகனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி. வழியில் அவர்து தொழிற்சாலைக்குச் சென்றிருந்தேன் பேருழைப்பு நல்கும்  தமிழ்ப் பெருமக்களைக் கண்டு மகிழ்ந்தேன். செம்பனையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அடுத்த தொழில் மனையில் செம்பனைக் காய்கள் குவியலாக இருப்பதைக் காண்பித்தார். வியப்பாக இருந்தது. ஒவ்வொரு பழங்களும் 5 கிலோவிலிருந்து 30 கிலோவரை இருந்தது. மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்கு வகிப்பது செம்பனைகள்.

    இங்குவருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். விசயனும் தாமைரையும் இலக்குமணனும் இணைந்து நடத்தும் திருக்குறள் வகுப்பிற்கு வருகை தந்துள்ள  மாணவச் செல்வங்களே உங்கள் அனைவருக்கும் வாழ்துக்களைத் தெருவித்துக் கொள்கிறேன்.

    மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழை மலேசியத் தமிழர்கள் ஆர்வத்தோடு பயில்வதை கண்டு மகிழ்கிறேன். இங்குள்ள பாரதி தமிழ்ப் பள்ளிக்கும் தோட்டப்புற தமிழ்ப் பள்ளிக்கும் விசயன் அவர்கள் அழைத்துச் சென்றார்கள். ஆசிரியர்களும் மாணவர்களிடமும் உள்ள பேரார்வத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
    உங்களது ஆசிரியர்கள் ஊட்டிய தமிழ் உணர்வைப் போற்றுகிறேன். தமிழ் இனத்தின் மேலும் தமிழின் மேலும் உள்ள பற்றால் அறநெறிக்கழகம் மூலம் திருக்குறள் வகுப்பு நடத்துகின்றனர். இன்று தங்களுக்கு என்னை திருக்குறள் உரையாற்றப் பணித்துள்ளனர். மலேசிய மண்ணில் திருக்குறள் செல்வங்களுடன் பங்கேற்பது மகிழ்வான நிகழ்ச்சியாகும்.

    சகோதரி தாமரை அவர்கள் தமிழ்ப்பெயர் இல்லாத ஒவ்வொருவரையும் தூய தமிழ்ப்பெயர்வைத்து அழைக்கிறார்கள். செல்வங்களே அந்த தூய தமிழ்ப் பெயரையே நடைமுறை வாழ்கையில் கொள்ளுங்கள்.

    திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி. திருக்குறள் தமிழர்களின் மறைநூல். திருக்குறளைப் பின்பற்றியவர்கள் மிகப் பெரும் தலைவர்களாக அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக உலகை வலம் வருகின்றனர். வருகை தந்துள்ள செல்வங்களே நீங்கள் நாளைய உலகை ஆளும் தலைவர்களாக சான்றோர்களாக வருவீர்கள் என்பது திண்ணம்,

    மனத்துக்கண் எனத் தொடங்கும் தொடங்கும் திருக்குறளை யாராவது சொல்ல இயலுமா, தெரிந்தவர்கள் கையை உயர்த்துங்கள்.

    மனத்த்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீற பிற.

     மகிழ்ச்சி உரையை யாராவது
    மனத்தில் தூய்மையாக இருப்பதே அறங்களிலெல்லாம் உயர்ந்த அறமாகும். சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். மந்த்தி போறாமை, சூது, வஞ்சகம், காழ்ப்பு ஏதும் இன்றி தூய்மையாக இருத்தல். அனைவரும் இணைந்து திருக்குறளைப் பாடுங்கள். மகிழ்ச்சி.

    அடுத்து எண்ணீத் எனத் தொடங்கும் திருக்குறளை யாரவது

    எண்ணித் துணீக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு

    பொருள் யாராவது சொல்லுங்க அம்மா.
    ஒருசெயலைச் செய்யும் முன் அனைத்தையும் ஆராய்ந்து தொடங்க வேண்டும். தொடங்கியபின் எண்ணுவது துன்பத்தைத் தரும். மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். எந்தச் செயலைச் செய்ய எண்ணிணாலும் நிரை குறைகளை எண்ணித் தீர்வுகாணவேண்டும். திர்வுக்குப் பின் செயலில் இறங்க வேண்டும். செயல் தொடங்கியபின் மாறுபட்டு எண்ணினால் தீமையைத் தரும்.

    முயற்சி எனத் தொடங்கும் பாடலை யாரவது தம்பி நீங்க

    முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்.

    பொருள் யாராவது கூறுங்க முயற்சி உடையவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள். முயற்சியில்லாதவர்கள் வாழ்வில் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.. மிகச் சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    பள்ளியில் படிக்கும் தங்களையே சான்றாகக் கூறுகிறேன். பள்ளிக்குச் செல்லும் தாங்கல் முயன்று ஊன்றிப்படிக்கவேண்டும். பின்தான் தேர்வில் வெற்றிபெற்று நல்ல துறையைத் தேர்ந்தேடுத்து வாழ்வில் உயர்ந்த் நிலையை அடைய முடியும். முயற்சியே இன்றி இருந்தால் தேர்வில் தோல்வியுற்று வாழ்வில் வெற்றிபெறமுடியாது. ஆகவே முயற்சி முதன்மையானது.

    உள்ளுவது எனத் தொடங்கும் குறளை யாரவது. பாப்பா நீங்க சொல்லுங்க

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
    தள்ளினும் தள்ளாமை நீத்து

    யாராவது பொருளைக் கூறுங்கள். நீங்களே சொல்கிறீர்களா சொல்லுங்கள்.
    எண்ணுவது அனைத்தும் உயர்வாகவே எண்ணவேண்டும் தாழ்வான எண்ணங்களுக்கு இடமே இல்லை. எண்ணங்களே நம்மை மென்மாலும் உயர்த்தும்.
    சிறப்பகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் உயர்ந்த சிந்தனைகளை மேற்கொண்டு முயன்று வாழ்வில் மேம்பட வேண்டும்.

    எண்ணிய எனத் தொடங்கும் பாடலை யாராவது. அநத் மூலையில் குறிப்பு  எழுதிக் கொண்டிருக்கும் தம்பி, தெரியலையா வேறு யாராவது

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணியர் ஆகப் பெரின்

    சரியாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள். தம்பி இந்தக் குறளை அப்படியே தங்கள் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளுங்கள். எழுதிய குறளைப் படியுங்கள்.
மகிழ்ச்சி சிறப்பாகச் சொன்னீரகள். யாரவது பொருள் கூறமுடியுமா

    சொல்லுங்க அம்மா நாம் எண்ணிய அனைத்தையும் அடைய முடியும் அதற்குத் தகுதியான் தன்மையோடு நாம் இருந்தால். மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

அன்புச்செல்வங்களே தற்போது நாம் உரையாடிய அனைத்துக்குறளையும் எழுந்து நின்று அனைவரும் பாடுங்கள். ஒலி  போதாது சப்தமாகப் பாடுங்கள்.
மிகச் சிறப்பாகப் பாடினீர்கள்.வாழ்த்துக்கள்.
 பாடியதோடும் படித்ததோடு மட்டும் நில்லாமல் திருக்குறளை தங்களது வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். நீங்கள் உலகை ஆள்விர்கள். தங்களுக்கு உரையாற்ற வாய்ப்பளித்த விசயன், தாமரை, இலக்குமணன் ஆகியோர்க்கும் தங்களது பெற்றோர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.

பேழையாம் மலைய மான்நம் பேரறம் நீடு வாழ்க!


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

நூலகம்  வாழ்வாய்க் கொண்டார்
    நுண்ணறிவு மூத்த செம்மல்
காலங்கள் கடந்து நம்மின்
    கலங்கரை விளக்கம் ஆனார்
தோழமை அவரின் மூச்சு
    தொண்டறம் வாழ்வின் அச்சு
பேழையாம் மலைய மான்நம்
    பேரறம் நீடு வாழ்க!

இணையராய்ப் பணிகள் செய்தார்
    இல்வாழ்வின் பயனைக் கண்டார்
பனைபோல தமிழர் வாழ்வில்
    பார்புகழ் ஆக்கம் தந்தார்
வினையென தமிழின் மேன்மை
    வீச்சினை இணைந்தே தந்தார்
சுனையென மலையில் தோன்றும்
    சரளா அன்னை வாழ்க!

செம்மொழி நம்மின் தாயை
    செழித்திட வைத்த செம்மல்
நம்மொழி உலகம் ஆள
    நாளெலாம் உழைக்கும் கோமான்
தம்மினம் துன்பம் காணின்
    துடித்திடும் தூய உள்ளம்
எம்மினம் உயர்ந்து வாழ
    ஏந்தலே ஓங்கி வாழ்க!

முத்துவிழாக் கண்ட நெஞ்சர்
    மூப்பீலா தமிழின் தூயோன்
காத்திடும் தமிழர் மேன்மை
    கனிந்திடும் அன்பின் ஊக்கம்
பூத்திடும் மலரைப் போன்றே
    புதுமையைத் தேற்றும் ஆசான்
பாத்திற மேன்மை கண்ட
    பண்புக்கோ ஓங்கி வாழ்க!