Wednesday, May 2, 2012

பேழையாம் மலைய மான்நம் பேரறம் நீடு வாழ்க!


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

நூலகம்  வாழ்வாய்க் கொண்டார்
    நுண்ணறிவு மூத்த செம்மல்
காலங்கள் கடந்து நம்மின்
    கலங்கரை விளக்கம் ஆனார்
தோழமை அவரின் மூச்சு
    தொண்டறம் வாழ்வின் அச்சு
பேழையாம் மலைய மான்நம்
    பேரறம் நீடு வாழ்க!

இணையராய்ப் பணிகள் செய்தார்
    இல்வாழ்வின் பயனைக் கண்டார்
பனைபோல தமிழர் வாழ்வில்
    பார்புகழ் ஆக்கம் தந்தார்
வினையென தமிழின் மேன்மை
    வீச்சினை இணைந்தே தந்தார்
சுனையென மலையில் தோன்றும்
    சரளா அன்னை வாழ்க!

செம்மொழி நம்மின் தாயை
    செழித்திட வைத்த செம்மல்
நம்மொழி உலகம் ஆள
    நாளெலாம் உழைக்கும் கோமான்
தம்மினம் துன்பம் காணின்
    துடித்திடும் தூய உள்ளம்
எம்மினம் உயர்ந்து வாழ
    ஏந்தலே ஓங்கி வாழ்க!

முத்துவிழாக் கண்ட நெஞ்சர்
    மூப்பீலா தமிழின் தூயோன்
காத்திடும் தமிழர் மேன்மை
    கனிந்திடும் அன்பின் ஊக்கம்
பூத்திடும் மலரைப் போன்றே
    புதுமையைத் தேற்றும் ஆசான்
பாத்திற மேன்மை கண்ட
    பண்புக்கோ ஓங்கி வாழ்க!

No comments:

Post a Comment