Wednesday, May 30, 2012

நெஞ்சையள்ளும் சித்தியவான்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்.

கோலாலம்பூரிலிருந்து சித்தியவான் பகுதிக்கு ஊர்தியில் சென்றேன். அருளாளர் இரெங்கையா அவர்கள் எங்களது நீண்ட  கால நணபர். நான் எப்போது மலேசியா வந்தாலும் அவரைக் காணாமல் சென்றதில்லை. சாயிபாபா அவர்களின் பக்தர். சித்தியவான் பகுதியில் பாபா மன்றம் வைத்து சிறப்பான ஆன்மீகப் பணிநடத்தி வருபவர். யானும் அவரது துணைவியாரும் இரெங்கையா மகிழ்வுந்தில் சென்றோம். கோலாலம்பூரிலிருந்து செல்லும் பழைய பாதையில் சென்றோம். சுங்கப்பாதையிலேயே யான் பலமுறை சென்றிருக்கிறேன். பழைய சாலைக்கு சுங்கவரி கிடையாது.. சாலை மிகப் பரந்த சாலையாகவே இருந்தது. செல்லும் வழியெல்லாம் நீர் நிலைகளும், ஆறுகளும் மலைகளும் கண்ணுக்கு விருந்து வழங்கின. சாலையில் இரு புறங்களிலும் சோலையாகவே காட்சியளித்தன. வறண்ட பகுதி என் கண்களுக்குத் தெரியவேயில்லை. செம்பனைத் தோட்டங்களும், நெல் வயல்களும், வெற்றிலைக் கொடிகளும் பார்க்கும் இடமெல்லாம் இருந்தன.

இரங்கையா அவர்கள் வயல்வெளிப் பகுதியில் சாலையில் நிறுத்தினார்.அங்கு விளையும் விலைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் விவசாயிகள். மாங்காய்களும் முந்திரிபோன்ற வடிவமுள்ள பழங்களும் சோளக் கதிர்களும் வைத்திருந்தனர். சோளக் கதிரை வேகவைத்து விற்பனைக்கு வைத்திருந்தனர். சோளக் கதிரை வாங்கி எங்களுக்கு வழங்கினர் இரங்கையா. சோளக் கதிரை சுவைத்துக் கொண்டே சித்தியவான் நோக்கிப் புறப்பட்டோம்.எழுபது வயது மூதிளைஞர் இரெங்கையா. களைப்பு என்பதே அவர் முகத்தில் காணமுடியாது. புன்சிரிப்பே அவர் முகத்தின் அடையாளம். பல்வேறு செய்திகளைப் பேசியவண்ணம் சித்தியவான் வந்தடைந்தோம். சித்தியாவனில் அவரது இல்லதைத் திறந்தவுடன் ஒரு பூணை அவர் காலடியில் வந்தது. மூன்று நாட்கள் வெளியூர் சென்றிருந்ததால் பாவம் பசியோடு இருக்கும் என உணவு கொடுத்தார் இரங்கையா. இயல்பாகவே இரங்கையா அவர்கள் ஒரு மனித் நேய மாமணீ.

இல்லத்தில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அதுபோது ஒரு அரிமா சங்க அழைப்பை காண்பித்தார். சித்தியவான் அரிமா சங்கம் என்று அச்சிடப்பட்டு கூட்ட விபரம் சேவை விபரம், முந்தைய கூட்டத்தின் அறிக்கை அனைத்தையும் இணைத்திருந்தனர். அறிக்கைகளைக் கண்டவுடன் எனக்கு மிகவும் ஈர்ப்பாக இருந்தது. இரங்கையா அவர்கட்கு நான் அரிமா இயக்கத்தில் 12 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்தது தெரியும். என்னையும் சித்தியவான் அரிமா சங்கக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

சித்தியவான் அரிமாசங்கத்தின் கூட்டம் சிறப்பாக நடந்தது. சீனத் தொழிலதிபர் தலைவராகவும் மலேசியத் தமிழர்கள் செயலராகவும் பொருளராகவும் பொறுப்பில் உள்ளனர். சங்கத்தின் ஒவ்வொறு செயல் தலைவர்களின் அறிக்கையும் மிகச் சிறப்பாக சேவைத் திட்டங்களோடு இருந்தன. இந்தியாவிலிருந்து வந்த என்னை சிறப்புரை ஆற்றக் கூறினர்.

யான் ஆங்கிலத்தில் உரையாற்றினேன். சென்னையில் எங்களுடைய சங்கத்தின் சிறப்புகளையும் நாங்கள் செய்யும் செயல் திட்டங்களையும் அங்கு கூறினேன். சென்னை மாநாகர் மத்திய அரிமா சங்க அறக்கட்டளை ஒன்று நிறுவி பொது மருத்துவம் கண்மருத்துவம், பல் மருத்துவம் என தினமும் ஏழை எளியவர்களுக்கு ஆற்றும் தொண்டுகளை கூறினேன். கண் புறை சிகிச்சை மாநகராட்சி அரசு பள்ளிகளில் நீர் சுத்திகரிக்கும் திட்டங்களை முறைபடுத்தியுள்ளதைக் கூறினேன். அங்கு வருகை தந்திருந்து இந்திய மலாய், சீன அரிமாக்களிடையே உரையாற்றியது பெருமையாக இருந்தது.இவ் வாய்ப்பை உருவாக்கிய அரிமா இரெங்கையா அவர்கட்கு நன்றி கூறினேன்
].
காந்தியடிகள் உர்வமும் இந்திய மூவண்ணக் கொடி பொறித்த எங்களது மாவட்ட அரிமாச் சின்னத்தை சித்தியாவன் அரிமாசங்கத் தலைவருக்கு அணிவித்தேன். அவர் சித்தியவான் அரிமா சங்க சின்னதை எனக்கு அணிவித்தார். அனைத்துப் பெருமக்களும் கரவொலி எழுப்பி ஆரவாரமாக மகிழ்சிப்பெருக்கை காட்டினர்.

பன்னாட்டு உணவு வகையோடு விருந்து பரிமாறி மகிழ்ந்தனர். 

No comments:

Post a Comment