Saturday, January 5, 2013

உலகத் தமிழர்களுக்கு 2044 திருவள்ளுவராண்டு நல் வாழ்த்துக்கள்


தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், ஆசிரியர், தமிழ்ப்பணி

    ஈழத் தமிழர்கள் உணர்ச்சிக்கு வித்தானவரகள். ஈழத்தில் நடந்த அவலத்தால் புலம் பெயர்ந்த மக்கள் தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் உலக நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள். உலகெங்கும் பயணித்துள்ள நான் உணர்வுப்பூர்வமாக  உணர்ந்துள்ளேன்.

    சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் பேர்ன் வள்ளுவன் பாடசாலையின் முதல்வர் பொ.முருகவேள் – நந்தினியின் தொண்டை உளம் நெகிழ நேரில் கண்டு மகிழ்ந்தவன். ஆண்டுதோரும் திருவள்ளுவர் ஆண்டைமிகச் சிறப்பாக தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள் திருவள்ளுவர் உலக மாந்தருக்கு வழங்கிய அறநூல் திருக்குறள். திருக்குறள் மனித இனத்திற்கு வழிகாட்டும் பெட்டகம். உலகப் பொதுமறை என்பதற்கு ஒப்ப இன்று சுவிற்சர்லாந்திலும் ஏன் உலகெங்கும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப் படுகிறது. மலேசியா சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, மியான்மர், இந்தியா போன்ற நாடுகளில் திருவள்ளுவர் தினம் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

    தமிழ் உணர்வின் தணலாக வாழும் முருகவேள் அவர்களும் தமிழ் உணர்வாளர்களும் ஒன்று கூடி  திருவள்ளுவர் ஆண்டு 2044 சிறப்பான முறையில் திட்டமிட்டுக் கொண்டாடுகின்றனர். யான் உலகெங்கும் உரையாற்றும் சொற்பொழிவுகளெல்லாம் சுவிற்சார்லாந்தில் கொண்டாடும் விழாவைக் கூறுவது வழக்கம்.. குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் தம்பிராசா பேட்டியின்போது வள்ளுவன் பாடசாலையின் பெருந்தொண்டைப் பதிவு செய்துள்ளேன்.

    2044 திருவள்ளுவர் ஆண்டின் சிறப்புமலருக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வாழ்த்து உள்ளது அறிந்து மகிழ்கிறேன். சுவிற்சற்லாந்து தமிழ் மக்கள் பெற்ற பெரும் பேறு. திருவள்ளுவர் ஆண்டை உலகுக்கு உணர்த்தி, திருவள்ளுவர் ஆண்டை ஆட்சி அதிகாரங்களில் நடைமுறைப்படுத்தி, சென்னையில் வள்ளுவர் கோட்டமும் குமரியில் 133 அதிகாரத்தின் அடையாளமாக சிலையையும் நிறுவிய பெருமைக்குரிய தலைவர் கலைஞர்.
    இன்றோ தமிழகத்தில் ஆட்சியாளர்கள் தமிழாண்டை புறக்கணிப்பதும்,
உலகமே வியந்து நோக்கும் திருவள்ளுவர் சிலையை பராமரிக்காமல் சிதைப்பதும் வேதனைக்குரிய ஒன்று.

    இந்தச் சூழ்நிலையில் உலகத்தமிழர்கள் திருவளுவர் ஆண்டைக் கொண்டாடுவது போற்றி மகிழத் தக்கதாகும். உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் திருவள்ளுவர் ஆண்டைக் கொண்டாடுவோம். திருக்குறள் நெறியைப் பரப்புவோம்.

சுவிற்சர்லாந்து தலைநகரான பேர்ண்மாநிலத்தில்  பேர்ண் வள்ளுவன் பாடசாலையின் சார்பில்   2044 ஆம்   திருவள்ளுவராண்டை     சுவிற்சர்லாந்தின் தலைநகரில் கொண்டாடுவதும், தமிழப்புத்தாண்டுவிழா மலர் வெளியிடுவதும் இராவணன் அரங்கென்று பெயரிட்டுள்ளதும் தமிழனை அடையளப்படுத்தும் நிகழ்வாக உள்ளது.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுது தான்முந் துறும்

   என்ற பொய்யாமொழியாரின் வாய்மொழிக்கேற்ப சுவிட்சர்லாந்திலும் வெற்றிபெறுவதைக் கண்டு பேருவகை கொள்கின்றோம்.

          26.01.2013   தமிழாண்டு 2044  காரிக்கிழமை (சனி)  அன்றுநடை பெறவுள்ள தமிழ்ப் புத்தாண்டு விழவிற்கு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ சார்பாகவும் தமிழகத் தமிழ் நெஞசங்களின் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெருவித்து மகிழ்கிறேன்.