Wednesday, April 13, 2011

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை எதிர்ப்போம்



செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை எதிர்ப்போம்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் 25-2-11 அன்று செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக்க ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை)

செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்களை நீக் ஓர் ஆர்ப்பாட்டம் தமிழ் பண்பாட்டுச் சங்கம் தமிழ் மீட்பு படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இப் போராடத்தை முன்னின்று நடத்தும் பாக்கம் தமிழனையும் அவரைச் சார்ந்த பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

இங்கு அமர்ந்திருக்கும் தமிழியக்கப் போராளி புலவர் கி.த. பச்சையப்பனார் தமிழ் காக்கும் தொண்டராகவே இன்றும் களப் பணியாற்றுகிறார். எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் 1993 ஆம் ஆண்டு உலக அமைப்பாளர் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் அறிஞர்பெருமக்கள் குமரி முதல் சென்னை வரை எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழக்கமிட்டு 1330கி.மி நடந்து வந்தோம். கட்சி மதம் சாதியை மறந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி மூத்த முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களோடு கோட்டைக்குச் சென்றபோது காணவே மறுத்தார் அன்றைய முதல்வர் செயலலிதா அம்மையார். அது போது தம்முடைய தமிழாசிரியப் பெருமக்களையெல்லாம் ஒருங்கிணைத்து நடைப்பயணம் வெற்றிபெற ஒத்துழைத்த பெருமகன் கி.த.ப.

பேரறிஞர் பாவாணர் வழி தமிழகத்தில் மிகப் பெரும் தனித்தமிழ்ப் புரட்சியே நடத்தியுள்ளனர். முறம்பில் புலவர் நெடுஞ்சேரலாதன் பாவாணர் கோட்டம் அமைத்து பாவாணர் சிந்தனைகள் குறித்த கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வழியில் அறிஞர் இறைக்குருவனாரின் தென்மொழி, கவிச்செம்மல் அருகோவின் எழுகதிர் புதுவை தெளிதமிழ் நமது தமிழ்ப்பணி மற்றும் பல இதழ்கள் தனித்தமிழ் இதழ்களாகவே வெளிவநது உலகை வலம் வருகின்றன.

நமது உணர்வுகளுக்கெல்லாம் தலைமை தாங்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழைச் செம்மொழிப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி, செம்மொழிக்கென மேம்பாட்டு வாரியம் அமைத்து கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி நமது பெருமையை உலகறியச் செய்து நிலைக்க வைத்துள்ளார். தமிழாகவே வாழும் கலைஞரின் காலத்தில் நமது கோரிக்ககைகளெல்லாம் வழி வகை காணப்படும்.

தமிழ் கல்வெட்டு ஒலைச்சுவடி அச்சு என பல் நிலையைத் தொடர்ந்து கணினியிலும் உலகளாவிய நிலையில் வலம் வருகிறது. தமிழக அரசின் ஒருங்குறி தமிழ் பதிவர்களிடையே மிகப் பெரும் புரட்சியை ஏறபடுத்தியுள்ளது. தமிழக அரசும் உத்தமம் அமைப்பும் இணைந்து இணைய மாநாட்டை உலகளாவிய அறிஞர் பெருமக்களைக் கூட்டித் கணினித் தமிழில் மிகப் பெரும் ஏற்றத்தை வழங்கியது.

ஒப்புயர்வுள்ள இக் கால கட்டத்தில்தான் ஆண்டாண்டு காலமாக நம்மையும் நம் மொழியையும் அடிமைப் படுத்திய கூட்டம் தமிழ் ஒருங்குறியில் ஏற்கெனவே உள்ள 5 எழுத்துக்களோடு மேலும் 26 கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கச் சதி செய்கின்றனர்.
பன்னெடுங்காலம் போராடி தமிழிலேயெ அனைத்தும் நடைமுறையில் உள்ள இந்த கால கட்டத்தில் கிரந்த தினிப்புக்கு முயற்சி செய்யும் நய வஞ்சகர்களை இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழுக்கென்று நம் முன்னோர் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு வகையே போதுமானது. கிரந்தத்தை திணித்து மீண்டும் மணிப்பிரவாள நடையைத் தடுக்க நம்மைப் போன்ற தமிழ் அமைப்பின் பொறுப்பாகும். தற்போது ஆங்கிலம் கலந்த தமிங்கிலத்திடமிருந்து நம்மொழியைக் காப்பதும் நமது தலையாய கடமையாகும்.

”வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமமே” என்பது தொல்காப்பியம் எந்த சொற்களையும் தமிழ் மரபுக்குத்தகுந்த வடிவமைக்கக முடியும். தமிழ் எழுத்துக்கள் சொற்களின் பொருளுக்கு தக ஒலிக்கும் ஒலிப்பான தன்மையுடையன.
செம்மொழித் தமிழில் கிரந்த எழுத்துக்கள் கூடாது கூடாது என உங்களோடு இணைந்து முழங்கி பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் எம்முடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திரளாக பங்கேற்றுள்ள அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.