Friday, February 4, 2011

தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ் ஆட்சிமொழி மாநாடு


(25-1-11 அன்று சென்னையில் நடந்த மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே திருவள்ளுவர் ஆற்றிய உரை)

இந்தியாவின் ஆட்சிமொழியில் தமிழ் இடம் பெறவும், திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்கவும் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் இந்த மாநாட்டைக் கூட்டியுள்ளது. பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கருத்துக்களைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களும் புலவர் சுந்தரராசன் அவர்க்ளும் இணைபிரியாத களப் போராளிகள். வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் காலையில் உரையாற்றிச் சென்றுள்ளார்கள்.

தமிழ்ச் செம்மொழிப் போராட்டத்தில் தலைநகர்த் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத்தமிழுறவு மன்றம் மற்ற அனைத்து தமிழ் அமைப்புகளும் இணந்து தலைநகர் தில்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கண்முன்னே வருகிறது. அதில் கலந்து கண்ட அறிஞர் பெருகமக்கள் பலரை இத் தலைநகர்த் தமிழ்ச் சங்கக் சொந்தக் கட்டிடத்தில் காண்பதில் பேருவகை கொள்கின்றேன். பெங்களூருவிலிருந்து வருகை தந்திருக்கும் கா. சுப்பிரமணீயம் குழுவினர், நாமக்கல்லிலிருந்து வருகை தந்திருக்கும் சுப்பண்ணன் குழுவினர்,பேராசிரியப் பெருமக்கள் இந்திராணி மணியம், சரளா இராச கோபாலன், மற்றும் அனைத்துப் பெருமக்களும் இங்கே பங்கு பெற்றிருப்பது நாம் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு என பெயர் மாற்ற தன் இன்னுயிரை ஈந்தார். பேறறிஞர் அண்ணா அவ்ர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் மாற்றி, சட்டமன்றத்தில் மும்முறை தமிழ்நாடு என அண்ணா முழங்க அனைவரும் வாழ்க என முழங்கி இன்றும் யாம் தமிழ் நாடு என மன மகிழ்வோடு வழங்கி வருவது வரலாறு.

நாமெல்லாம் கூடி செம்மொழி போராட்டக் குழு அமைத்தபோது நமக்கு களம் அமைத்து போராட்டத்திற்கு பலம் சேர்த்த பெருமகன் நம் முதல்வர்கலைஞர். அரசியலில் 40\40 என தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பால் மத்திய அரசைப் பணியவைத்து நமக்கு செம்மொழித்தகுதியை பெற்றுத் தந்துள்ளார். நன்றி மறப்பது நன்றன்று. கலைஞரை தமிழினம் காலம் காலமாகப் போற்றும்,

உலகமே வியக்கும்வண்ணம் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழின் பெருமையை உலகில் தலைநிமிரச் செய்தார்.செம்மொழி நிறுவனம் சார்பில் உலகத் தரம் வாய்ந்த விருதுகள், கருதரங்குகள், பல்வேறு விருதுகள் வழங்கி் செம்மொழித் தகுதியை வரலாறாகப் பதித்துள்ளார்.

பகச்சொல்லி கேளிர் பிரிப்பர்நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

என்ற வள்ளுவப் பெருமான் குறளுக்கொப்ப நம்மிடம் உள்ள குறைகளை கூறாமல் நன்மையைப் பேசி கூடி போராட்டத்தில் வெற்றிபெற வழிவகை காண வேண்டும்.

அறிஞர் சி,யூ.போப் மொழிபெயர்த்த திருக்குறள் உரையை படித்த இரசிய அறிஞர் டால்சுடாய் அண்ணல் காந்தியடிகளுக்கு திருக்குறளைப் பற்றி எழுதியுள்ளார். திருக்குறளைப் படித்த காந்தியடிகள் தாய் மொழியாம் தமிழில் மூலத்தை படிக்க வேண்டும் என்ற அவாவைப் பதிவு செய்துள்ளார். இந்த செய்தியே திருக்குறளை தேசிய நூலாகவும் தழிழை ஆட்சிமொழியாகவும் ஆக்க மத்தியில் ஆளும் பெருமக்களுக்கு அறிவுருத்தலாம்.

உலக மொழியாக தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களே உலகில் எல்லாப் பகுதியிலும் சிறப்பாக ஓடி வெற்றிவாகை சூடுகிறது.

ஈழப் போராட்டத்தால் தமிழர்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று எண்ணியவர்கள் மிரளும் வண்ணம் தமிழர்கள் பரந்து விரிந்து தமிழைத் தூக்கி நிறுத்துகின்றனர்.

நம்முடைய போராட்டம் வெற்றியடைய நாமெல்லாம் ஒன்றுபட்டு திருக்குறளை தேசிய இலக்கியமாக்குவோம், தமிழை ஆட்சி மொழியாக்குவோம்.

No comments:

Post a Comment