Wednesday, September 22, 2010

பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்


பவளவிழாக் காணும் எங்கள் பாவலன்

சாவகச்சேரி நுணாவில் மேற்கில் விநாயகர் சின்னம்மா தம்பதிகளுக்கு மகனாக 28.10.1933 ல் பிறந்த கவிஞர் கந்தவனம் அவர்கள் எனக்குத் தெரிந்தவரை கவிஞராகவே அறிமுகப்படுத்தப்பட்டவர். பாடசாலை விழாக்களில் அல்லது எமது சனசமூக நிலைய ஆண்டுவிழாக்களில் தனது பேச்சாற்றலால் கவிவல்லமையினால் சமய சொற்பொழிவுகளாலும், கவியரங்கங்க‌ளாலும் அலங்கரித்தவர். நாடகம், கவிதை இலக்கியம், சமயம் எனத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வாழ்ந்த சமூகத்தையும் வாழ்ந்திடச் செய்த ஒரு சமூக யோதி. ஆசிரியராக, அதிபராக தன்னை உயர்த்திக் கொண்டாலும் ஒரு நாடக ஆசானாக, கவிஞனாக எமக்கு அறிமுகமான அவரின் ‘பாடுமனமே’ கவிதைநூல் என்னை முழுமையாக ஆகர்சித்ததாகும்.

இவருக்கு கவிமணி, மதுரகவி, இலக்கியவித்தகர், திருவருக்கவி, சைவதுரந்தரர், சிவநெறிப்பாவலர், எனப்பட்டங்கள் இருந்தும் மதுரகவி எனவே ஈழத்தில் அறிமுகமானவர்.

இவர் ஆரம்பக்கல்வியை நுணாவில் கணேசவித்தியாலயம், சாவகச்சேரி றிபேக்கல்லூரி ஆகியவற்றிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். கூடவே நாடகம் கல்வி சார்ந்த டிப்புளோமா கற்கை நெறிகளையும் கற்றுத் தனதாக்கிக் கொண்டார்.

இவர் மாத்தளை புனிதத்தோமையர் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கல்லூரி இலக்கியவட்டம், மாத்தளை இலக்கியவட்டம் ஆகியவற்றில் அதிக பங்காற்றினார். புவியியல் பட்டதாரியான இவர் மேற்படி கல்லூரியில் சிறந்த ஆசிரியராக மாணவராலும், ஆசிரியராலும் போற்றப்பட்டார். மலையகம் சார்ந்த அனைத்து இலக்கிய, சமய நிகழ்வுகளில் தன்னை ஆத்மாத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர். பின்னர் வயாவிளான் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகக் கடமையாற்றியபின் யோகபுரம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயாக்கல்லூரி ஆகியவற்றில் கடமையாற்றிய காலத்தில் குரும்பசிட்டி சர்மார்க்க சபை சார்ந்த இலக்கிய நண்பர்கள். குலாம் இணைந்ததால் பின்னாளில் ரசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களின் அபிமானத்திற்கு உரியவரானார். 1980ல் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக தென்னாபிரிக்கா சென்று ஆசிரியராகக் கடமை புரிந்தார். 1988 முதல் இன்றுவரை கனடாவில் வாழ்ந்து வரும் கவிஞர் அருணோதாயா கல்லூரி பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட ‘பூச்சொரியும் பொன்னொச்சிமரம’ (2000) தொகுப்பில் எழுதிய கனடாவில் சைவசமயம் என்னும் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

நுணாவில் என்றதுமே என் உறவுசார்ந்து என் இலக்கிய உலகம் சார்ந்து ஒரு தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்திய, இலங்கை இராணுவ நகர்வின் போதும் எம்மை ஆதரித்த ஒரு கிராமமாகவும் நுணாவில் எம்முள் வாழ்கிறது.

ஈழத்துக்கவிதைக் கனிகள்(1991) என்னும் நூலில் நான் பிறந்ததும் ஏதுக்கே! எனும் கவிஞரின் கவிதையை சிலோன் விஜஜேந்திரன் சேர்த்துள்ளார்.

ஆசிரியரின் நூல்களாக 110 ரூபாய் (1954), இலக்கிய உலகம் (1964), ஏன் இந்தப் பெருமூச்சு (1965), கூனியின் சாதனை (1966), கீரிமலையினிலே (1969), நுணாவிலூர் (1971), நல்லூர் நாற்பது (1971), பாடுமனமே (1972), உய்யும் வழி (1972), பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (1972) கவியரங்கில் கந்தவனம் (1972), இலங்கையில் ஆசிரியத்தொழில் (1977), விநாயகப்பா (1993), ஒன்றுபட்டால் (1994), மணிக்கவிகள் (1994), இயற்கைத்தமிழ் (1995), எழுத்தாளன் (1995), முத்தான தொண்டன் (1995), புதிய சைவ விநாவிடை (1997), தங்கம்மா நான்மணி மாலை (1997). பத்துப்பாட்டு (1998). ஆறுமுகம் (1998), ) சிவபுராணத் தத்துவம் (1998), கனடாவில் சைவசமயம் (2000), அது வேறுவிதமான காதல் (2001), சிவ வழிபாடு (2001), புதிய சைவ வினாவிடை- 2 (2001), கந்தன் கதை (2002), ஓ கனடா (2002), வரிக்கவிகள் (2002), குருவழிபாடு (2002), விநாயகப் பெருமானும் அகத்தியரும் (2003), முருகப்பெருமானும் அவ்வையாரும் (2003), விநாயக வெண்பா (2004) விநாயக விருத்தம் (2004), பொங்கு தமிழ் (2005), கவிதை மரபு (2005), தென்னகத்தில் என்னகத்தார் (2007), பாவாரம் (2007) எனத் தொடர்கிறது. கூடவே பல தொகுப்பு நூல்களின் வெளியீட்டிலும் அக்கறை காட்டி வருகிறார்.

இவரின் பவளவிழா சிறப்புற காற்றுவெளி சார்பில்லும் வாழ்த்துகிறோம்.

கவி‍-முல்லை அமுதன்

No comments:

Post a Comment