Sunday, October 3, 2010

காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்



காலத்தால் அழியா மாமன்னர் இராசராச சோழன்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மாமன்னர் இராச ராசன்
மதிநுட்ப தமிழர் வேந்தன்
தேமதுரத் தமிழின் மேன்மை
தேசமெலாம் வணங்கும் சோழன்
பூமணத்து நம்மின் மக்கள்
புத்தமுதக் கலையின் உச்சம்
காமணக்கும் கற்கோயில் கண்ட
காலத்தால் அழியா சோழன்

வீரத்தால் தம்மின் நாட்டை
விண்ணளவு ஏற்றி வைத்தார்
சோராத வேங்கை நாடு
சொந்தமாக கங்கை பாடி
வேராக தடிகைப் பாடி
வேந்தனது நுலம்ப பாடி
மாறாத குடமலை ஈழம்
மதிகொல்லம் கலிங்கம் கண்டான்

பெரியகோயில் லிங்கம் பாரில்
பேரெழுந்த வடிவம் என்னே
உரியநல் கோபுரத் தோற்றம்
உன்னத வானை முட்டும்
இருநூற்றுப் பத்தும் ஆறும்
இறுமாந்த எழிலைக் காட்டும்
கருங்கல்லில் அடுக்கின் ஏற்றம்
கவின் பதிமூன்று அன்றோ

ஆயிரத்து ஆண்டின் முன்னே
அகிலத்தை ஆண்ட வேந்தன்
மாயிரத்து ஐப்பசி திங்கள்
மாமண்ணில் உதித்த மன்னன்
பாயிரம் அற்றை நாளில்
பாடிய கரூர் தேவன்
மாஇனத்து வேந்தன் வாழ்வை
மாத்தமிழில் செதுக்கி உள்ளான்

தகதகக்கும் ஐம்பொன் மேனி
தவவேந்தன் இராச ராசன்
புகழ்காத்த உலகமா தேவி
புண்ணியச் சிலையின் தோற்றம்
அகமதாபாத் அருங்காட்சி மன்றம்
அடங்கியுள இணையர் தம்மை
மக்த்தான முயற்சி கண்டு
மாக்கோயில் உள்ளே காண்போம்

மெய்கீர்த்தி தம்மின் வாழ்வை
மேதினிக்கே தந்து சென்றோன்
பொய்யறியா நம்மின் மக்கள்
போற்றிடும் வரலாறு தந்தோன்
செய்வதை உணர்ந்து வெல்லும்
செயல்வல்லார் கலைஞர் வேந்தர்
மெய்வடிவாய் ஆயிரம் ஆண்டை
மேற்கொண்டார் நீடு வாழ்க

No comments:

Post a Comment