Wednesday, November 16, 2011

புலவர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல்

கவிமுரசு. வா.முசே. திருவள்ளுவர்

(சென்னையில் 13-11-11 அன்று பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூலை தலைமைதாங்கி வெளியிட்டு கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

பல்கலைத் திலகம் பேராசிரியர் செந்தமிழ்ச்செழியனின் தொல்காப்பியத்தில் நடிப்பியல் நூல் நூலில் அவரே குறிப்பிட்டது போல் பூங்காவில் கிடைத்த அரும் புதையல். புதையலின் அருமையை உணர்ந்த சமுக ஆர்வலர் இந் நூலைப் பதிப்ப்பித்த யாசேவா அவர்கள் பட்டை தீட்டி திரையுலக சமூகத்திற்கு வழங்கியுள்ளார். இருவரையும் திரையுலகம் நன்றியோடு பாராட்டவேண்டும். இன்று வாய்ப்புக்கிடைத்த அரைகுறைகளும், தம்மையே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பேதைகளுமே உலகில் போற்றப் படுகிறார்கள் புகழப்படுகிறார்கள். இலக்கியத்திற்காகவும் கலைக்காககாகவும் ,சமூகத்திற்காகவும் தன் வாழ்நாளையே வழங்கியவர்கள் புறக்கணிக்கப்படுவது வேதனைப்படவேண்டியது நிலையாகும். ஆனால் அப் பெருமக்கள் காற்றாய், மழையாய், ஒளியாய் எதையும் எதிர்பாரமல் தம் கடமையைச் செய்து வருகிறார்கள் அதனால்தான் நம் இனத்திற்கும் மொழிக்கும் சான்றுகள் நிலையாக இருந்துவருகிறது.

தொல்காப்பியர் காலத்தை அருட்செல்வர் மகாலிங்கம் 9000ம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என பதிவு செய்துள்ளார்.தமிழர்கள் வழங்கிய இலக்கியங்களே நமக்கு சான்றாக நம் இனத்தின் வரலாறாக உள்ளது. சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கு சான்றான இலக்கியம் என அனைவரும் பதிவு செய்துள்ளனர். அரங்கின் திரைச்சிலை மேலிருந்தும், இருபக்கமும் மூன்று முறைகளில் இருந்ததையும், அரங்க அமைப்பின் அளவு விபரங்களையும் இளங்கோவடிகள் யாத்துள்ளார். அறிஞர் பெருமக்கள் இந்நாள்வரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

யான் இலண்டன் மாநகர் சென்றபோது தேம்சு நதிக்கரையின் கரையோரம் என் துணைவியார் பரிமளாவோடு எழிலை வியந்தவண்ணம் நடந்தோம். அப்போது ஒரு அரங்கத்தைக் கண்டோம். சேக்சுபியர் நாடகம் நடத்தி வாழ்ந்த அரங்கம். உள்ளே சென்றோம் அங்கே மேக்பத் நாடகம் நாடகக் குழுவினர் நடத்திக் கொண்டிருந்தனர். இன்றும் நுழைவுச்சீட்டு பெற்று நாடகங்களை அனைவரும் கண்டு களிகின்றனர். ஒரு படைப்பாளன் இன்றும் அரங்கில் தாம் வாழ்ந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வகையில் தொல்காப்பியத்தில் தோய்ந்து ஆழ்ந்து தாம் கண்டெடுத்த நன்முத்துக்களை நடிப்பியல் களஞ்சியமாக வழங்குகிறார் புலவர் செந்தமிழ்ச்செழியன் பொருளதிகராத்தில் மெய்பாட்டியலில் தொல்காப்பியர் கூறியுள்ள யாப்புகளை பகுத்து விரித்து பாமரனும் புரியும் வண்ணம் வழங்கியள்ளார் புலவர்.

”நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” (தொல்:-பொருள்-மெய்-1197)

எட்டுச் சுவைகளையும் பட்டியலிட்டு பின் ஒவ்வொன்றிலும் உள்ள நான்கு பிரிவுகளையும் விரித்து 32 மெய்ப்பாடுகளையும் விரித்துரைக்கும் நயம் புலவரின் ஆழ்ந்த புலமைக்குச் சான்றாகும்.

அறுபது பக்கங்களே கொண்ட நூல் என்று எண்ண இயலா வண்ணம் தம் வாழ்நாள் பணீயாக நடிப்பியலுக்கு பிழிவாகத் தந்துள்ளார். புலவர் அவர்கள் எழுத்தாளர், கவிஞர், தமிழாசிரியர், இதழாளர், அனைத்தையும் தாண்டி நடிகராகவும் உள்ளார். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆதலால்தான் 32 சுவைகளையும் தம் வாழ்நாளில் கண்ட அனைத்து நடிகர்களையும் சான்றாகக் காட்டி தொல்காப்பியர் காலத்திற்கும் இன்நூன்றாண்டிற்கும் பாலமாக இந்நூலைத் தந்துள்ளார்.

தொல்காப்பியத்தில் தலைவன் தலைவிக்குக் கூறிய ஒப்புமைகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சாத்திரம் சோதிடம் என்று திரியும் அறிவிழிகளுக்கு சாட்டையடியாக உள்ளது புலவரது விளக்கம்.

பிறப்பே குடிமை, ஆண்மை, ஆண்டோடு
உருவு, நிறுத்த காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு, திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பிளது வகையே. (தொல்:-பொருள்-மெய்-1219)

தொல்காப்பியர் ஒப்புமைகளை 1. நற்குடிப்பிறப்பு 2. நல்லொலுக்கம் 3. ஆளுமைத்தன்மை 4. வயதுப் பொருத்தம் 5. வடிவம் 6. காம உணர்வுப் பொருத்தம் 7. உள்ள உறுதி, 8. கொடைப் பண்பு 9. புரிந்தொழுகும் நுட்ப அறிவு 10, செல்வம் என விளக்கியுள்ள பாங்கு போற்றுதற்குரியது. தமிழர்கள் வாழ்க்கை இணை தேர்வுக்குப் பின் பற்றவேண்டிய நடைமுறைகளாகும

இல்லற வாழ்விற்கு வேண்டாத பத்தையும் தொல்காப்பியத்திலிருந்து நமக்குப் பலாச்சுளையாகத் தந்துள்ளார் புலவர்.

தொல்காப்பியத்தில் நடிப்பியல் தொல்தமிழர் சிறப்பைப் போற்றி நம்மைப் பின்பற்றச்செய்யும் நூல். இந் நூலை யாத்த புலவரையும் வெளியிட்டு அதன் புகழைப் பரப்பும் பணியைச் செய்யும் யாசேவா அவர்களையும் என் அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

புலவர் செந்தமிழ்ச்செழியன் மேலும் தொல்காப்பியரின் சிந்தனைகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டுகிறேன் அதற்கு தமிழ்லுலகம் என்றும் துணைநிற்கும். எங்களது அன்னை சேது அறக்கடளையின் விருதைப் பெற்றபெருமகன் அனைத்து விருதுகளையும் பெறுவார் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment