Monday, November 21, 2011

ஆவேசப் பேராசான் முனைவர் அருகோ


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(முனைவர் அருகோ அவர்களின் பவழவிழா மலருக்கு ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய கட்டுரை)

பவழவிழாக் காணும் நாயகர் கவிச்செம்மல் முனைவர் அரு.கோபாலன் சங்கரன்கோவிலில் தமிழ்குடியில் பிறந்து நாம்தமிழர் இயக்கத் தந்தை சி.பா. ஆதித்தனாரால் அருகோ என விளம்பப்பட்டவர். தமிழிற்காகவும் தழிழர்கட்காகவும் தம் வாழ்நாளை ஒப்படைத்த பெருமகன். எம் இளம் வயதிலிருந்தே முனைவரின் பெருமையை உணர்ந்தவன். தந்தையாரின் நாற்பது ஆண்டுகால நண்பர். அன்றைய காலங்களில் வில்லிவாக்கத்திலிருந்து மிதிவண்டியில் சுற்றி சுற்றிச் தமிழ் தமிழர் சிந்தனையைக் காத்த இன்றும் காக்கும் செயல் மறவர்.

நாம்தமிழர் இயக்கத்தின் தளபதியாக வாழ்ந்து தலைமையே கொள்கை மறந்தாலும் இன்றும் அந்தக் கொள்கையையே தம் வாழ்வுப் பணியாக உரமேற்றிகொண்டிருப்பவர்.
உலகநாடுகளைப்பற்றியும், விடுதலை பெற்ற நாடுகளைப்பற்றியும் தலைவர்கள் பற்றியும் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு உரைவீச்சாலும் எழுத்தாலும் அறிவூட்டிய பேராசான்.
அருகோவின் எழுத்து உலகம் போற்றும் எழுத்து.பல்வேறு இதழ்களை உருவாக்கிய பெருமகன். எம்தந்தையார் வெளிநாடு சென்றபோதெல்லாம் தமிழ்ப்பணிக்கும் பெருமகன் வழங்கிய பங்களிப்பை நன்றியோடு எண்ணுகிறேன். தற்போது முப்பது ஆண்டுகளாக வெளிவரும் எழுகதிர் இதழ் தமிழர்களின் கலைக்களஞ்சியம். தமிழகம் ஈழம் தமிழ்த்தேசியம், பார்ப்பன ஆதிக்கம், அயலார் ஆதிக்கம், திராவிட திசைமாற்றம், புலம்பெயர் தமிழர் என அனைத்துத் தளங்களிலும் தம் கருத்தை அஞ்சாமல் பதிவு செய்து அதற்காகப் போராடும் போராளி.

1982 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருமைத் தந்தையார், அருகோ, தணிகைக்கோ இரசீது மூவரும் அன்று ஓடிய போட்மெயில் தொடர்வண்டியில் இராமேசுவரம் சென்று ஈழத்திற்குச் சென்றனர். யான் பெருமக்களை வழியணுப்பி வைத்தேன். காந்தியத்தின் தலைவர் இராசசுந்தரமும் பெரியவர் டேவிட் அவர்களும் ஈழத்தின் முக்கு முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று மக்களைக் கண்டு தொண்டாற்றித் திரும்பினர்.இராசசுந்தரம் அவர்கள் வெளிக்கடை சிறையில் கோடூரமாக தாக்கப்பபட்டு சிங்களக் கயவர்களால் கொலைசெய்யப்பட்டார். டேவிட் அவர்கள் தமிழகத்தில் வந்து பணிகளைத் தொடர்ந்தார். தூப்பாக்கிச் சூட்டினூடே ஈழத்தை வலம் வந்த மூவரின் துணிவு அவர்களது நெஞ்சுரத்தை புலப்படுத்தும். இந்தப் பயணத்தை வழிவகுத்தவர் அருகோ.

அருமைத் தந்தையார் அவர்களின் உலகத் தொடர்பால் கிடைத்த நன்முத்து மருத்தவர் பஞ்சாட்சரம். அபெருமகன் நீயூயார்க்கில் தந்தையார் தலைமையில் நடைபெற்ற ஈழமாநட்டில் தமிழகத்தின் முன்னணித் தலைவர்களோடு அருகோவும் பங்கேற்று தொடர்ந்து நிலைகொண்டு சீரிய தொண்டாற்றி வருபவர்.

அருகோ ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்களோடும் தற்போது அவரது திருமகன் வழக்கறிஞர் சந்திரகாசன் அவர்களோடும் நீக்கமற நிறைந்து செயலாற்றுபவர். இந்த அமைப்பின் வழி புலம் பெயர்ந்து தமிழகதில் வாழும் மக்கட்கு உற்றுழி உதவி செய்யும் பெருமகன்.

அருகோ ஒரு சிறந்த மரபு வழிக் கவிஞர். எழுகதிரில் அவரது கவிதைகள் தமிழ் உணர்வை கிளர்ந்தெழச் செய்யும் வலிமையுடையவை. பாட்டுக்கொருபுலவன் பாரதியும் புரட்சிக்கவிஞர் பாவேந்தரும் தமது இரு கண்கள் என முழக்கமிடுபவர்.

பவழவிழாக் காணும் நாயகர் முனைவர் அருகோவின் சிந்தனைகளை பதிவு செயவதில் பெருமிதமடைகின்றேன்.

”ஒற்றுமையில்லையே என்ற ஒப்பாரியை யூதர்களைப் பார்த்தேனும்,சுண்டக்காய் இசுரேலைக் கண்டேனும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் கைவிட முன்வரவேண்டும்”

’திருக்குறள் தமிழில் இருப்பதால் அது தமிழ் மறையுமாகும். அம் முறையில் அதைத் தமிழ்த்தேசிய நூலாக முதலில் ஆக்கிவிட்டு அடுத்து சர்வதேசிய நூலாக ஆக்க முயற்சிப்பதே அறிவுடைமையாகும்”

”ஆங்கிலமென்ன உலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் விரும்புவோர் படிக்கட்டும் அரசு அதற்கு வழிவகை செய்து கொடுக்கட்டும் ஆனால் பயிற்றுமொழியாகத் தமிழ் நாட்டில் தமிழ்மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் மாறுபடுப்வர்கள் தமிழுக்கு நன்மை செய்வோர் ஆகமாட்டார்கள் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களே ஆவார்கள்.”

”இன்று தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமென்று சொல்லி இராணுவத்திவிட்டு அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் அன்று தமிழ் அற்ப்போராளிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்தார்களா இல்லை. ஒருதலைப்பட்சமாக காலால் போட்டு மிதித்தார்கள்.ஆகவே, தமிழீழத்தைத் தவிர அங்கு தமிழர் பிரச்சனைக்கு வேறு தீர்வே கிடையாது”

”இன்றைய தமிழகம் வடக்கு தெற்கு என்று பிரிக்கப்படுமானால் தங்களுக்கிடையிலான போட்டியில் சாதித் தமிழர்களே அதற்குத் துணைபோவார்கள். தமிழகம் ஒன்றாக இருக்கிறபோதே காட்டிக்கொடுப்புகளும், கூட்டிக் கொடுப்புகளும் தமிழின ஒற்றுமைக்கும் உரிமைக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன என்னும்போது இரண்டுபட்டால் கேட்க வேண்டியதே இல்லை.”

”இன்றைக்கு தமிழகத்தில் இல்லாத எப்பகுதியும் அயலாருடையது. அதில் உரிமை கோரத் தமிழர்க்கு ஞாயமிலலை என்று நினைப்பது ஒன்று. இரண்டு மொழிவழி மாநிலம் அமைவதற்கு முன்பிருந்த அகண்ட தமிழகம் பற்றி அறியாமலிருப்பது.”

”பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் தமிழரல்லாதார் தமிழன் தலையில் மிளகாய் அறைப்பதை எதிர்ப்பதால் பார்ப்பனர் தொடர்ந்தும் தமிழன் தலையில் மிளகாய் அறைக்க என்று ஒப்புக்கொள்வதால் நீங்கள் பொருள் கொள்வதுதான் முறையற்றது.”

எழுபத்தைந்து ஆண்டுகள் தமிழினத்திற்கு தம் அயர்விலா உழைப்பை வழங்கிய மூதிளைஞர் முனைவர் அருகோ அவர்களை அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

No comments:

Post a Comment