Saturday, November 19, 2011

அண்ணா நூற்றாண்டுக் கோயில்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

அறிவுக் களஞ்சியத் தேராம்
அண்ணா நூற்றாண்டுக் கோயில்
செறிவுத் திறனைத் தூக்கல்
செந்தமிழ் மக்களைச் சாய்த்தல்
பரிவுப் பொருளைத் தந்தே
பாதகம் விளைத்தல் நன்றா
உரிமை நூலகம் காத்தல்
உலகுள கருத்தைப் போற்றல்!

குழந்தைகள் மருத்துவம் பேணக்
குறையிலா இடத்தைத் தேர்க
கழனியை மாற்றவே சாடும்
கற்றவர் வாழும் நாட்டில்
தலமுயர் நூலகம் மாற்றல்
தமிழர்கள் புதைத்தல் அன்றோ
பலமதாம் அறிவுத் தேரை
பந்தமாய்க் காப்போம் இன்றே

கண்ணிலா மக்கள் காண
கருத்து ப்ரய்லி உண்டு
மண்ணுல நூல்கள் எல்லாம்
மகத்துவ நூலகம் உண்டு
எண்ணிலாக் கருத்தைக் காண
இணையதள வாய்ப்பு உண்டு
தன்னேரில் அரங்கம் எல்லாம்
தகுதியை அரசே மாய்த்த(லா)?

ஆசியா முதன்மைக் கண்ட
அருமை நூலகம் ஈதே
மாசிலாச் செயலச் செய்த
மாண்பமை கலைஞர் சிந்தை
தூசியைத் துடைத்தல் விட்டு
துன்பத்தைத் தருதல் நன்றோ?
காசிலா எழ்மை மக்கள்
கதறல் உம்மைச் சாய்க்கும்!

No comments:

Post a Comment