Saturday, April 24, 2010

கற்புக்கரசி கண்ணகி

கற்புக்கரசி கண்ணகி

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர் தமிழ்ப்பணி

ஐம்பெரும் காப்பிய மாநாடு மலேசிய ஈப்போ நகரில் நடைபெறுவது போற்றி மகிழத் தக்கது. ஐம்பெரும் காப்பியங்களைப் பற்றி தமிழகத்தின் அறிஞர் பெருமக்கள் ஆய்வு மழை ஈப்போ நகரில் பொழிய உள்ளனர்.மாநாட்டினை நடத்தும் ஆசிரியமணி இரா.மாணிக்கம் தமிழக மலேசிய தமிழ் நெஞ்சங்களின் ஒப்புரவாளர் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்று.

ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன. அதிமுக ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றியபோது தமிழகமே அச் சிலையை நிறுவ போராடியது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்பமை கலைஞர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சிப் பெருமக்களும் கண்டனக் குரல் எழுப்பினர்.பன்னாட்டுத் தமிழுறவுமன்றத்தின் சார்பில் யானும் பங்கேற்று முழங்கினேன்
.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைவரை பெருங்கவிக்கோ தலைமையில் கண்ணகிச் சுடரை ஏந்தி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் கலைஞரின் திருக்கரத்தில் வழங்கினோம். மீண்டும் அதேஇடத்தில் நிறுவினார் மாண்பமை முதல்வர் கலைஞர்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.முதல்வர் கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்
”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.

கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் காணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

No comments:

Post a Comment