Saturday, April 17, 2010

மடமையைச் சாய்த்தல் என்றோ?

பக்தியாம் போலி வேடம்
படித்தவன் போற்றும் ஈனம்
சக்தியாய் தனனைக் காட்டி
சாய்த்திடும் மனித நேயம்
வக்கிர நெறியில் வாழ்ந்தே
வனிதையர் கற்பை சாய்த்தே
முக்தியை காணும் மோக
மடமையைச் சாய்த்தல் என்றோ?

இயல்பினால் வாழ்க்கை வாழ
இயலாத மடமைச் சாமி
புயலென காமம் தேக்கி
புரிந்திடும் அவலம் ஏனோ?
செயல்நெறி உணரா மக்கள்
செறிந்துள அறிவை மாய்த்து
முயற்சியின் அருமை தன்னை
முயலாது செல்தல் தானே!

பெரியார் தோன்றிய மண்ணில்
பேதமை தொடரும் மோசம்
அறியாமை வீழ்த்திய அண்ணா
அகவழி வெல்தல் என்றோ?
நெறியிலா பக்திச் சாயம்
நிலையான உருவாய்ச் சேர்க்க
புரியாத மக்கள் தம்மை
புதைகுழி தள்ளல் நன்றோ?

நித்தியா நந்தன் லீலை
நீசத்தை நாளும் காட்டி
எத்திசை மக்கள் எல்லாம்
ஏசியே முகம் சுழிக்க
பத்தியம் குடும்பம் காக்கும்
பாவையர் கொதித்தல் வீணோ?
சத்தியம் வாழ்க்கை என்றே
சாக்கடைக் குளியல் அன்றோ!

பக்தியை விற்கும் வேடம்
பரத்தையர் சேர்க்கும் ஓலம்
சக்தியே தானே என்றே
சந்ததி அழிக்கும் மோசம்
புத்தியைக் கூர்மை ஆக்கி
புவியினில் மடமை சாய்த்தே
நத்திடும் இயல்பின் வாழ்க்கை
நாடிடும் நாள்தான் என்றோ?

No comments:

Post a Comment