Saturday, April 3, 2010

முத்துவிழாக் கண்ட கூட்டுறவுக் காவலர் டான்சிறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையர்

டான்சிறி அவர்கள் முத்துவிழாவின் நிறைவுவிழா பிப்ரவரி 29ஆம் நாள் காலை 9-30 மணியளவில் சென்னை சாசுத்திரி நகரில் உள்ள திருமணமண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மலேசியத் தமிழர்களின் ஒப்பற்ற தமிழர், ம.இ.க.வின் தேசியத் தலைவர் டத்தோசிறி ச.சாமிவேலு அவர்கள் வருகை தந்திருந்தது முத்துவிழாவிற்கு மகுடம் வைத்தாற்போல் இருந்தது.டத்தின்சிறீ இந்திராணி அம்மையார் அவர்களும் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர்

மலேசியத் திருநாட்டிலிருந்து கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டத்தோ சகாதேவன்,கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி என்றும் டான்சிறியின் துணையாக விளங்கும் நாடகக்கலைஞர் பதி.கூட்டுறவு இதழில் தமிழகத்திலிருந்து செல்லும் பெருமக்களைப் பற்றி எழுதும் மாணிக்கம் மற்றும் பெருமக்கள் பலர் இணையராக வந்து டான்சிறியின் முத்துவிழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
.
டான்சிறியின் மேல் பேரன்பு கொண்ட அருமைத் தந்தையார் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற உலகஅமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் யானும் நிறைவுவிழாவிற்குச் சென்றிருந்தோம் அருளாளர் இராம வீரப்பனார்,முன்னாள் நகரத்தந்தை சா.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எசு.இளங்கோவன் மலர்மாமணி இளஞ்செழியன், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், கவிஞர் யுவராச அமிழ்தன், எழுத்தாளர் இறையெழிலன்,சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் மற்றும் தமிழகத்தின் புகழ்வாய்ந்த பெருமக்களெல்லாம் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

தந்தையார் அவர்கள் எழுதிய வாழ்த்துப்பா டான்சிறியின் கொடையுள்ளத்தையும், தொண்டுணர்வையும் பறைசாற்றுவதாக இருந்தது. அந்த வாழ்த்துப்பாவை யான் மேடையில் பாடினேன்.வந்திருந்த அனைவருக்கும் அச்சான படிகளையும் வழங்கி மகிழ்ந்தோம்.

மலேசியத் திருநாட்டின் மாசிலா மாணிக்கம் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்சீறி சோமசுந்தரம் புவான்சிறி உலகநாயகி இணையரின் முத்துவிழா சென்னையில் அவரது இல்லத்திலும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.28-2-20010 ஆம் நாள் காலை யானும் துணைவியார் பரிமளாவும் முத்துவிழா நிகழ்வில் பங்கேற்கும் பேறு[பெற்றோம்.

டான்சிறியின் இல்லறக் கொடையான மக்களும் மருமக்களும் வழியினரும் சுற்றத்தாரும் சூழ்ந்து நிகழ்வை மகிழ்வாகக் கொண்டாடினர்

டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மலேசியத் தமிழர்களின் வாழ்வைச் செழிப்புறச் செய்த பெருமகன். தோட்டப்புறத் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர்.உலகத் தமிழர்கள் வியக்கும் வண்ணம் கோலாலம்பூர் நகரில் 26 மாடி கட்டிடத்தை கட்டி விசுமான் துன் சம்பந்தன் என தமிழில் பொறித்து தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவர்.மலேசியா முழுமையும் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கி தொழிலாளர்களின் வாழ்வு மலரச்செய்த மனிதநேயமாமணி. ஆண்டுதோறும் இலக்கியப் போட்டிகள் நடத்தி கவிதை கட்டுரை அனைத்துத் துறைப் பெருமக்களுக்கும் பரிசுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் பெருமகன். கூட்டுறவு இதழை நடத்தி எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் கேஆர்எசு பதில்களில் மக்களை தெளிவுபடுத்தும் இதழாளர்.

என்றும் இளமைத்துடிப்போடு பணியாற்றும் டான்சிறிக்கு 80 அகவை என்பது வியப்பிற்குரிய ஒன்றுதான் ஆனால் புவான்சிறி உலகநாயகி பக்கத்தில் அமர்ந்து அன்புசெலுத்தும் பாங்ககைக் கண்டபோது இளமையின் உண்மை புரிந்தது..உறவினர் பெருமக்களெல்லாம் டான்சிறியின் முத்துவிழாக் கோலத்தை சூழ்ந்திருந்து மிகச் சிறப்பாக நடத்தினர். டான்சிறி பிறந்த ஊர் தமிழகத்தின் திருக்கோட்டியூர்.திருகோட்டியூரில் தொடங்கி மலேசியத் திருநாட்டின் மாண்புரு மன்னராக விளங்கும் மாமணி டான்சிறி சோமசுந்தரம்.

ஆன்மீக முறைப்படி புனித நீரைக் கொண்டு முத்துவிழா இணையர்கள் மேல் ஊற்றி நீராட்டினர்.வந்திருந்த பெருமக்கள் அனைவரும் முத்துவிழாப் பெருமக்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.யானும் என்னுடைய துணைவியார் பரிமளாவும் முத்துவிழா இணையருக்கு பொன்னாடை போர்த்தி வணங்கி வாழ்த்துப் பெற்றோம். வந்திருந்த பெருமக்களோடு உணவருந்தி மகிழ்ந்தார் டான்சிறி.

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் உலகத் தமிழ் மாநாட்டை பாங்காக்கில் நடத்தினோம்.அதுபோது மாநாடு நடத்த பொறுப்பேற்றவர் பின்வாங்கினார் தந்தையார் அவர்கள் பல்வேறு சுமைகளை தன் தோள்மேல் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.சென்னையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களை யான் பாங்காக் அழைத்துச் சென்று மாநாட்டில் பங்குபெறச் செய்தேன்.மாநாட்டை வெற்றியுடன் நடத்த யானும் தந்தையும் இன்னலுற்றபோது டான்சிறி சோமசுந்தரம் அவர்கள் மாநாட்டில் பங்கேற்று இரண்டாம் நாள் உணவுச் செலவை தாமே ஏற்று மாநாடு வெற்றிபெற வழிவகுத்தவர். அப்போது அவரிடம் தொகை இல்லை இருப்பினும் தன் கடன் அட்டையைக் கொடுத்து அதில் அவர் செலுத்திய பாங்கை எண்ணும்போது டான்சிறி அவர்களின் பேருள்ளத்தை உணரமுடியும்.

உலகப் பொதுமறை மாநாடு மலேசியா கோலாலம்பூர் நகரில் டாக்டர் தமிழ்மணி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.அம் மாநாட்டின் இந்தியச் செயலாளராகப் யான் தொண்டாற்றினேன். தமிழகத்திலிருந்து 160 பேராளர்கள் பங்கேற்றனர். அதுபோது கோலாலம்பூர் நகரின் முதன்மைச்சாலையில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் தோட்டப்புற மாளிகையின் முன் ஐயன் திருவள்ளுவர் சிலையை டத்தோசிறி அவர்களும் டான்சிறி அவர்களும் நிறுவிய பாங்கு தமிழ் கூறு நல்லுலகம் எண்ணி எண்ணி மகிழத் தக்கதாகும்.

உலத்தமிழ்ப் பணபாட்டு இயக்கத்தின் 10ஆம்மாநாட்டை கோலாலம்பூரில் நடத்தினர் அதுபோதும் டான்சிறி அவர்களின் பங்களிப்பு மகத்தானது..சென்னையிலிருந்து என்னுடைய தலைமையில் பேராளர்கள் பங்கேற்றனர். தமிழர்கள்பால் டான்சிறி கொண்டுள்ள பற்றை உணரமுடிந்தது.

அண்மையில் யாங்கள் நடத்திய பன்னாட்டுத்திமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டில் அவர் தமிழகத்தில் இருந்ததால் பங்கேற்க இயாலா நிலையில் இருந்தார். இருப்பினும் தந்தையார் அவர்களும் அருளாளர் விகடர் சுப்பையா, டாடக்டர்.சி.தர்மலிங்கம் ஆகியோர் சென்றபொது மாநாட்டிற்கு உதவி புரிந்த பாங்கு போற்றத்தக்கது.

மலேசியாவில் நடைபெறும் புத்தக வெளியீட்டிற்கு டான்சீறியின் பங்களிப்பு இல்லாத நிகழ்வே இல்லை என்ற பெருமைக்குரிய எழுத்தாளர்களின் ஏந்தல் டான்சிறி சோமா.

முத்துவிழாக் கண்ட இணையர்கள் நூற்றாண்டு விழாக்கண்டு தமிழினம் தழைத்தோங்க பன்னாட்டுத் தமிழர்கள் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment