Thursday, December 15, 2011

வாழ்க்கை வழிகாட்டி திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்
(டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி விழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்ற மகாகவியின் வாக்கிற்கிணங்க குணராசா அவர்களும் பத்மினி குணராசா அவர்களும் இணந்து நடத்தும் டிஎம்சி கலை அ/றிவியல் கல்லூரி நடத்தும் விழாவில் மாணவச் செல்வங்களே உங்களைக் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். திருமதி பத்மினிகுணராசா அவர்கள் சிலநாட்களுக்கு முன்பு மாணவர்கள் தம் வாழ்நாளில் திருக்குறளைக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண தங்களின் உரை வேண்டும் என்று கூறினார். நான் பத்மினி அவர்களின் நோக்கத்தை புரிந்து இங்கு வந்துள்ளேன். பத்மினி அவர்களின் உரையைக் கேட்டபோது நான் மகிழ்ந்தேன் கலை அறிவியல் கலூரியை நடத்தும் அவரே தன் மாணவச் செல்வங்கட்காக திருக்குறளின் அருமை பெருமைகளை அறிந்து அவற்றை தங்கட்கு வழங்கிய வருகிறார் வாழ்க குணராசா பத்மினி தொண்டு.

மாண்புமிகு நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தம் வரவேற்பரையில் திருவள்ளுவர் சிலையும் கணினியில் திருக்குறளும் இருக்கும். வருவோர் திருக்குறள் தெளிவுரை ஆங்கில மொழிபெயர்ப்பு அனைத்தையும் காணலாம். தமிழகத்தில் கடைக்கோடி இராமேசுவரத்தில் பிறந்த அவர் அனுவிஞ்ஞானியாகி குடியரசுத்தலைவர்வரை உயர்ந்து இன்றும் மாணவச் செல்வங்களுக்கு தொண்டு செய்கிறார் என்றால் அது திருக்குறளின் தாக்கம்தான்.

அன்பு இளைய சமுதாயமே கல்வி கற்கும் தங்கட்கு பொய்ய்யாமொழியார் கூறுகிறார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர். (395)

இருப்பவனிடம் இல்லாதவன் எப்படித் தன் தேவைகளைக் பெற்றுக் கொள்வானோ அதைப்போன்றே பணிந்து கனிந்து அறிவுடையவர்களிடம் தமது அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. (396)

அறிவுச் செலவங்களே கிணற்றை தோண்ட தோண்டத்தான் தண்ணீர் பெருக்கெடுக்கும். அதைப்போன்றே தாங்கள் நூல்களைப் படிக்க படிக்கத்தான் நுண்ணறிவு பெருகும். இன்று வாழும் மாணவர்களுக்கு இடியூறுகள் ஏரளாமாக உள்ளன. திரைப்படம் தொலைக்காட்சி இணையதளம், கைபேசி. இவையெல்லாம் தேவையான ஒன்றுதான் ஆனால் நமது பயண்பாடு திசைமாறிச் செல்லும்போது நமக்குத் துண்பத்தை தருகின்றது. நூல்களைப் படிப்பதை தாங்கள் அனைவரும் பயிற்சியாகக் கொள்ளவேண்டும்.தோண்டத் தோண்ட பெருகும் நீரைப் போல் படிக்க படிக்க தங்கள் அறிவும் பெருகும்.

செயலாற்றலுக்கு ஐயன் திருவள்ளுவர் கருத்துக்கள் நம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றன.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (467)

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே பன்முறை நிறைகுறைகளை ஆய்ந்து முடிவு செய்யவேண்டும். முடிவு செய்தபின் அதை வெற்றிகரமாக முடிக்கப் பாடுபடவேண்டும்.மாணவச் செல்வங்களே தாங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருகிறீர்கள் அதில் வள்ளுவர் வழி ஓர்மையாகக் கற்று வெற்றிபெற்று மேலும் மேலும் உயர்வு பெறவேண்டும்.

அஞ்ச வேண்டியவற்றிற்கெல்லாம் அஞ்ச வேண்டும் என்பதை குறளாசான் சிறப்பாகக் கூறுகிறார்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (428)

வாழ்க்கை நீண்ட நெடிய பெருமையுடையது. பெருமையை நிலைநாட்ட பேராசான் கூறும் அஞ்ச வேண்டிவற்றிற்கு அஞ்ச வேண்டும். கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் கிடைக்காத மகிழ்ச்சிக் காலம். இன்றும் என்னுடைய கல்லூரிக்காலத்தை எண்ணினாலே மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். ஆனால் நாம் ஒழுக்கமாக் வாழ்கிறோமா முறையாக நடக்கிறோமா என்பதை எண்ணி தீயவைகள் நம்மை நாடும்போது அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சாமல் அதை தொடர்ந்தோமானால் அதைவிட துன்பம் தருவது ஏதுமில்லை.அந்த மடத்தனமான செயலைச் செய்யக்கூடாது அதற்கு அஞ்ச வேண்டும் எனக் கூறுகிறார்.

சோம்பலைப் வள்ளுவப் பேராசான் கடுமையாகக் கண்டிக்கிறார்,

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர் (602)

இன்று கல்வி என்பது பொருள் சார்ந்ததாக உள்ளது. அதற்கான பொருளை தங்கள் பெற்றோர்கள் ஈட்டியது சோம்பேரித்தனமற்ற உழைப்பாகும். அந்த ஈகமான பெற்றோர்களின் துன்பத்தை நீக்கி இன்பம் பயக்க மாண்வர்களே சோம்பேரித்தனம் என்பது கூடவேகூடாது. உங்கள் குடியை உயர்த்த சோம்பேரித்தனமற்ற முயற்சி தேவை என பேராசான் வலியுறுத்துகிறார்.

உயர்வைத் தவிர மற்றவற்றை நம் மனம் எண்ணக்கூடாது என் கட்டளையிடுகிறார் வள்ளுவப்பேராசான்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து (596)

நமது எண்ணங்கள் உயர்ந்த சிந்தனைகளாக இருக்கவேண்டும். நாம் எதை சிந்திக்கிறோமோ அனைத்தும் மேலானவற்றையே சிந்திக்க வேண்டும். இன்று கல்வி பயிலும் நீங்கள்ஒருதலைவராக வரலாம், ஒரு ஆட்சியராக வரலாம், அதிகாரியாக வரலாம், தொழில் அதிபராக வரலாம், தங்கள் கல்லுரித் தாளாளர் குணராசா போன்று கல்வியாளராக வரலாம், அனைத்திற்கும் தாங்கள் உயர்ந்த இலட்சியங்ளைக் கொள்ள வேண்டும். இலட்சியத்தில் தோல்வியே ஏற்பட்டாலும் மீண்டும் அதில் உயர்வாகவே சிந்தித்து வெற்றிகாண வேண்டும் எனப் பேராசான் வழிகாட்டுகிறார்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர் (623)

துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையை நாம் பெறவேண்டும் எனப் வள்ளுவப் பேராசான் ஊக்கமளிக்கிறார். நான் தற்பொது பேசிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைபட்டது. அனைவரும் கண்டீர்கள் அது ஒரு தடையல்ல அதையும் மீறித் தங்களிடம் பேசிக் கொண்டிருகிறேன். பேசுவது நான் கேட்பதுநீங்கள் எந்தத் தடை வந்தாலும் யான் பேசுவதையோ நீங்கள் கேட்பதையோ தடை செய்யமுடியாது. நமது தளராத ஊக்க்கம்தான் எந்தத் தடையையும் நீங்கச் செய்யும். இதோ மின்சாரம் வந்துவிட்டது துன்பமும் அப்படித்தான் துன்பத்திற்கு துன்பம் தரக்கூடிய வல்லமையைப் பெறவேண்டும் என்று பேராசான் தெளியவைக்கிறார்.

மாணவச் செல்வங்களே திருக்குறள் வாழ்க்கையின் வழிகாட்டி. திருக்குறள் மானிட சமுதாயத்திற்கு தழிழர்கள் வழங்கிய மறை. திருக்குறள் சாதி மதம் இனம் அனைத்தையும் கடந்த மறைநூல். தினமும் குறளைப் படித்து அதன்படி வாழ்ந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment