Wednesday, December 28, 2011

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் நடத்தும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு



(31-10-11 அன்று மாலை 3 அளவில் மலேசியாவில் சிலாங்கூர் பத்துகுகை பகுதியில் உள்ள தமிழர் தன்மான இயக்க அலுவலகத்தில் நடந்த மாநாட்டு குழுக் கூட்டத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் வரும் சனவரி மாதம் பகுத்தறிவு மாநாடு நடத்த திட்டமிட்டு தன்மானச்செம்மல் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் பணியாற்றிவரும் தங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உலகத் தமிழ்மறை மாநாடு ஒப்பற்ற முறையில் ஐயா தமிழ்மணி அவர்கள் நடத்தி திருவள்ளுவர் பெருமானை தோட்ட மாளிகையில் நிறுவிய பெருமைக்குரியவர். தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களையும் மாநாட்டில் ஒருகுடைக்கீழ் கூட்டிய பெருமகன் தன்மானச் செம்மல். இந்திய ஏற்பாட்டுக் குழுவிற்கு யான் செயலாளராகவும், இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து தலைவராகவும் செயல்பட்டு மாநாட்டு வெற்றிக்கு பாடுபட்டோம்.

தமிழர்கள் தன்நிலை மறந்த இக் காலகட்டத்தில் தம் வாழ்நாள் காலம் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதே எம் பணி என்று தமிழ்மணி அவர்கள் பகுத்தறிவு அனல் பறக்கக் கூறினார்கள். அதற்காகவே இங்கு பகுத்தறிவு மாநாடு நடத்துகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்கானார்கள்.

தந்தைபெரியாரின் ஈகத்தை தந்தை பெரியாரின் வேகத்தை தந்தை பெரியாரின் கருத்துக்களைப் நிலைநாட்டும் அனைவரையும் அழைத்து இங்கு மாபெரும் உணர்ச்சி மாநாட்டை நடத்த உள்ளார்கள். அதற்கு என்னையும் இந்திய ஒருங்கிணைப்பாளராக பணித்துள்ளார்கள். யான் தமிழகத்தின் பெருமக்களோடு கலந்து மாநாட்டின் வெற்றிக்கு துணைநிற்பேன் என்பதை உங்களிடம் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கப்பலில் தமிழகத்திலிருந்து மாலேசியாவிற்கு வருகைதந்தபோது பினாங்கு துறைமுகத்தில் காலடி பதித்தார்கள். அவர் காலடி பதித்த பினாங்குத் தீவில் பெரியாரின் திரூஉருவச் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளீர்கள். பெரியாரின் சொற்பொழிவுகளும், பெரியாரின் பகுத்தறிவுப் பயணம் நடந்த மலேசிய மண்ணில் மாநாட்டோடு அவரது சிலையும் நிறுவப்போவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வாகும். அதற்கு துணைநிற்கும் அத்துனை பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

தந்தைபெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பயணம் நமக்கெல்லாம் அஞ்சாமையை தரும் வாழ்க்கைப் பயணமாகும். யான் பர்மா சென்றிருந்தபோது அங்கிருக்கும் பெருமக்கள் பெரியார் வருகையைப் பற்றிக் குறிப்பிட்டபோது. கோயில்களிலேயே பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார்கள் என்றுகூறினர். அவரது பேச்சுக்கு தடை விதித்தவுடன் யாரும் பெருமகனை வழிஅனுப்ப வரவில்லை. தந்தை அவர்கள் அங்கு இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சாவில் பயணித்து வானூர்திநிலையம் சென்ற அஞ்சா நெஞ்சர் என்றனர்.

யான் மலேசியா வரும்போதெல்லாம் சந்திக்கும் பெருமக்கள் ரெ.சு.முத்தையா ,மா.தனபாலன், விந்தைக்குமரன், வா.அமுதவாணன், த.சி.முருகன், பொன்.சண்முகம் மற்றும் பெருமக்கள் அனைவரையும் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாநாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் என்னுடைய கற்றனைத்து ஊறும் நூலை அறிமுகம் செய்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ் தமிழர் நலனுக்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து ஈகம் செய்யும் பெருமகன் தன்மானத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்களை அருமைத் தந்தையார் அவர்களின் சார்பாகவும்,உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2043 தைத்திங்கள் நடைபெறும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டிற்கு தமிழகப் பேராளப் பெருமக்களோடும், தலைவர்களோடும் வருவேன் என உறுதி கூறி விடைபெறுகிறேன்.

No comments:

Post a Comment