Sunday, December 25, 2011

உலகத்தமிழர்களுக்கு உணர்ச்சித் தொண்டாற்றும் மகளிர்மாமணி பேராசிரியர் இந்திராணி மணியன்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

[சென்னையில் 25-12-2005 அன்று சி.ஆர்.டி உணவகத்தில் பேராசிரியர் இந்திராணி மணியன் 5 நூல்கள் வெளியீட்டு வீழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பேராசிரியர் இந்திராணி மணியன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல ஒரு இனப் பற்றாளர். தமிழர்களின் அறியாமையையும் தமிழர்களின் ஒற்றுமை இன்றி வாழ்வதையும் கண்டு உள்ளம் கொதிப்பவர். தம் உணர்வுகளை அவ்வப்போது எம் தமிழ்ப்பணியில் எழுதியுள்ளார்.

வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்து சென்னையில் உயர்கல்வி பயின்று இந்தியத் தலைநகராம் தில்லியில் 35 ஆண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரிய பெருந்தகை. தலைமைப் பண்புமிக்க சான்றோன் மணியன் அவர்களைப் கணவனாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த பெருமாட்டி. இணையர்களின் உழைப்பை தில்லித் தமிழ்ச்சங்கம் என்றும் செப்பும்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி தமிழர்களுக்கு தில்லியில் அரும்பாடுபட்ட இணயர்கள்.

1990ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டில் இணையர்கள் இருவரும் பங்கேற்று தமிழர் நலக் கருத்துக்களை வழங்கிய பெருமக்கள்.
1999ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டிற்கு இணயர் இருவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.அம்மையார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழும் தமிழரும் எனும் தலைப்பில் உலகளாவிய மொழிகளுள் தமிழுக்குரிய சிறப்பையும் தமிழர்களின் மேன்மையும் பற்றி சிறப்பாக உரையாற்றியது நெஞ்சில் நிழழாடுகிறது.

மாநாட்டில் பாவேந்தரின் சங்கே முழங்கு பாடலுக்கு மலேசியா ஆசிரியமணி மாணிக்கம் அழைத்துவந்த நாட்டிய ராணி உமாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தன்நூலிலும் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள்.

தனது பேராசிரியப் பணியை முடித்து சென்னைக்கு வந்து இணையர்கள் குடியேறிவிட்டனர். அவர்களது வருகை சென்னைக்கு ஒரு சிறப்பான வரவாகும். அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்புடைய இணையர்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் வழிகாட்டும் பண்புடைய ஈர நெஞ்சர்கள். யார் அழைத்தாலும் தமிழ் தமிழர் மேன்மைக்கு சென்று உரையாற்றி தாம் பெற்ற அறிவையும் பொருளையும் சமுதாயத்திற்கு வழங்கும் மேன்மக்கள்.

2009ஆம் ஆண்டு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டிற்கு அழைத்தபோது மணியன் அவர்கட்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பேராசிரியை மட்டு அனுப்பிவைத்தார். மலேசிய பல்கலைக்கழகத்திலும், ஈப்போ மகளிர் மாநாட்டிலும் அம்மையாரின் உரை மலேசிய தமிழ் மக்களுக்கு தமிழ் விருந்தாக இருந்தது. தம்முடைய முதுமையைப் பொருட்படுத்தாது மாநாட்டி;ல் மகிழ்ச்சியோடும் தமிழ் உணர்வோடும் பயணித்த காட்சி என் மனக்கண்முன் தோன்றுகிறது.

அவ்வாண்டே சென்னையில் பேராசிரியப் பெருமகானார் க. அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற என்னுடைய பொன் விழாவிற்கு இணையர்கள் வருகைதந்து வாழ்த்திய வாழ்த்தை பெரும் பேறாகாவே கருதுகிறேன்.

அம்மையாரின் கட்டுரைகள் பலவற்றை தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளேன். ஈழத்த் தமிழரகட்கு அம்மையார் எழுதிய உணர்ச்சிமிக்க கட்டுரைகள் காலத்தால் அழிக்கமுடியாக் காவியம். ஈழத்தமிழரகட்கு நாமெல்லாம் ஒன்று சேர்ந்துவிடுதலையை வாங்கித் தரவில்லையே என்ற ஏக்கம் இன்னும் அவருள் தனலாக உள்ளது.

தமிழகத்திற்கு வெளியே பல்லாண்டு காலம் வாழ்ந்ததால் நம்மவர்களின் தாழ்வு அம்மையாருக்கு நன்றாக அறிந்தவர்கள் அந்தத் தாழ்ச்சியைப் போக்க தமிழகத்தில் அயராமல் எழுதிக்கொண்டும், உரையாற்றியும் நூல்கள் வெளியிட்டும் தம்அயரா உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் இன்று வெளியிடப் பெறும் ஐந்து நூல்கள்.
அண்மையில் அம்மையாருக்கு உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலும் அருகோ அவர்களின் பவழ விழவிற்கு வருகை தந்தபோது உணர்ச்சி உரையாற்றினார்கள்.உரையாற்றி முடியும் தருவாயில் மயக்க நிலையடைந்து தள்ளாடினார்கள். தம் உடல் பலமற்றுப் போனாலும் உணர்ச்சி குன்றாப் பேச்சு வந்திருந்தோர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

செந்தாமரை எழிலுடைய அம்மையார் அவர்களின் உள்ளம் அந்த உள்ளத்திற்கேற்ற உயர்ந்த எண்ணமுடைய அம்மா அழகாக கொஞ்சு தமிழில் அத்தான் என்று அழைக்கும் கணவர் மணியன். தம் தாயின் நூல்கள் வெளியீட்டு விழாவை ஐந்து நட்சித்திர உணவகத்தில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வெளியிடும் மகன்- செம்மல்- அமெரிக்காவிலிருந்து வருகை தந்து அன்னையின் புகழ்பாடும் மகள் நன்மதி-. ஆகியோரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
பேராசிரியர் அவர்கள் உடல் நலத்தைப் பேணி பல்லாண்டு காலம் என்றும்போல் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்ற உலகத் தமிழர்களின் சார்பில் வணங்கி வாழ்த்திகிறேன்.

2 comments:

  1. வணக்கம் நான் ஆண்டியப்பனூர் நீங்க குறிப்பிட்ட இந்திராணி மணியம் என்ற பெயர் கொண்டவர்கள் யாரும் இல்லை அவர்கள் புகைபடம் இருந்தல் அனுப்பவும் balansanr@ovi.com (or) www.facebook.com/balansanr-சேர்க்கவும்

    ReplyDelete
  2. பாலன்,
    தற்செயலாக இந்தப் பதிவையும் உங்கள் கேள்வியையும் பார்க்க நேர்ந்தது. திருமதி இந்திராணி மணியன், பல ஆண்டுகளாக உங்கள் ஊருக்கு வெளியே வசித்தவர். எனவே உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவருடைய சகோதரர் - பெயர் இப்போது நினைவுக்கு வரவில்லை - கிப்ரானின் கவிதைகளை மொழிபெயர்த்தவர். திருமதி இந்திராண் மணியன், தில்லியில் கல்லூரிப் பேராசிரியை பணியில் சுமார் 40 ஆண்டுகள் கழித்து விட்டு, ஓய்வுபெற்ற பின் சென்னைக்குக் குடியேறி சுமார் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலே உள்ள படத்தில் நீதிபதி மோகனின் பக்கத்தில் உள்ளவர் திருமதி இந்திராணி, மோகனுக்கு இடதுபக்கம் உள்ளவர் திருமதி மணியன். இருவருமே எனக்கும் எங்கள் குடும்பத்துக்கும் மிக நெருக்கமான நண்பர்கள்.
    pudhiavan.blogspot.in

    ReplyDelete