Thursday, December 6, 2012

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(ஐந்தாவது சித்தநெறி மாநாடு சூலை 20, 21,  – 2012 மலேசிய நாட்டில் ஆகிய நாட்கள் சோகூர் மாநகரில்  நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மலேசிய அமைசர்கள் ம.இ.க. தலைவர டத்தொ பழனிவேலு, டத்தோ சுப்பிரமணியம், பங்கேற்றனர்.ம  அகத்திய ஞானபீட நிறுவனர் தலைவர் அருள்மிகு வாலைச் சித்தர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆன்மீகத் தென்றல் மாரியப்பன் அவர்களும் மாநாட்டுக் குழுவினரும் பெரும்முயற்சி மேற்கொண்டு அரும்பாடுபட்டு மாநாட்டை சிறப்புடன் நடத்தினர்.. அதுபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

    மலேசியாவில் பத்துமலையில் அருள்மிகு வாலைச் சித்தர் அவர்களின் திருமுகம் கண்டடேன். அது போது பாம்பாட்டிச்சித்தர் பற்றி கட்டுரை வழங்கும்படி பணித்தார்கள். மலேசியா இசுலாமிய நாடாக இருப்பினும் ஆலயங்கள் எங்கு நோக்கினும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். அண்மையில் யான் தைப்பூச நிகழ்வையும் பங்குனி உத்திர நிகழ்வையும் கண்ட போது மெய்சிலிர்த்தேன். தொடர் வண்டி பேருந்து எங்கு நோக்கினும் தமிழர்கூட்டம். ஆன்மீகம் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அருள்நெறியாக உள்ளது. அம்மண்ணில் தமிழகம் சிங்கை உலகமெங்கும் வாழும் அருள்ளாளர்கள் கூடுவது சாலப்பொருத்தமாகும்.

    தமிழகம் சித்தர்களின் பிறப்பிடம் உலகப் பற்றுகளை வெறுத்து உன்னதமான மாந்தநேய நெறிகளை மண்ணுக்கு உணர்த்தியவர்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

    என்ற வள்ளுவப் பெருமானின் குறளிற்கேற்ப ஆசைகளில் விடுபடும்போது அதிலுள்ள துன்பத்திலிருந்தும் விடுபடுகிறோம்.

    கடவுள் வழிபாட்டில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் சித்தர் பெருமக்களே. சாதி சமயம் ஆண் பேண் என்ற வேறுபாட்டை தகர்த்தெறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே.

இதுவரை யாம் படித்துணர்ந்த  சித்த பெருமக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை கடமையாகக் கருதுகிறேன்.

1, சிவவாக்கியர் 2, அழுகிணி சித்தர் 3, கடுவெளிச்சித்தர் 4, குதம்பைச் சித்தர் 5, பத்திரகிரியார் 6, பாம்பாட்டிச்சித்தர் 7, காசுபுகண்டர் 8, சங்கிலிச் சித்தர் 9, சத்தியானாதர் என்ற ஞானச்சித்தர் 10, ஏசுநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் 11, மச்சேந்திரநாதர் என்ற நொண்டிச் சித்தர் 12, திரிகோணச்சித்தர்    13, கடேந்திரநாதர் என்ற விளையாட்டுச் சித்தர் 14, புண்ணாக்குச் சித்தர் 15, கல்லுளிச்சித்தர் 16, கஞ்சமலைச்சித்தர் 17, வகுளிநாதர் என்ற மௌனச்சித்தர்
18, ஆதிநாதர் என்ற வேதாந்தச்சித்தர் 19, காரைச்சித்தர் 20, சதோகநாதர் என்ற யோகச்சித்தர் 21, காயக் கப்பல் 22, உரோமரிசி ஞானம் 23, தடங்கண் சித்தர் 24, பட்டிணத்துச் சித்தர் ஞானம் 25, கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனர் 26, கொங்கெனச் சித்தர் 27, சட்டைமுனிஞானம் 28, திருவள்ளுவ ஞானம்    29, அகத்தியர் 30, திருமூல நாயனார் 31, வால்மீகி சூத்திரம்  32, இராமதேவர்   33, கருவூரார் 34, அகப்பேய்ச் சித்தர் 35, இடைக்காட்டுச் சித்தர்               36, சூரியானந்தர் சூத்திரம்.

    மேற்கூறிய சித்தர் பெருமக்களின் பாடல்கள் ஆன்மீக மருந்தாக அறிவுக்கு விருந்தாக உலகில் வலம் வருகின்றன. மாநாட்டின் தலைவர் வாலைச்சித்தர் அவர்கள் எம்மை பாம்பாட்டிச் சித்தர் பற்றி எழுதப் பணித்ததால் பாம்பாட்டிச் சித்தர் பற்றிக் காண்போம்.

    பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்தோறும் ஆடு பாம்பே, ஆடுபாம்பே என பாம்பை ஆட்டிவிப்பது போல் பாடல்கள் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவரின் குருவின் பெயர்  சட்டைமுனிநாதர். சீர்காழியில் உள்ள சிவனின் பெயர் சட்டையப்பர் சட்டைநாதர் என்பதாம்.

    ”குண்டலினி சக்தி வளைந்து மண்டலித்து மூலதாரத்தில் கிடைக்கும் நிலையாலும் புற்றில் ஏறுவதுபோல் சுழிமுனை நாடியில் ஏறி இந்த சக்தி உச்சி வரை வருவதாலும் அக்குண்டலினி என்ற உடல் சக்தி  புறக்குண்டலினியாகிய பிரபஞ்ச சக்தியோடு பாம்பு மண்டலத்து போல் தொடர்பு கொள்வதாலும் உஃச் உஃச் என மூச்சுக்காற்றோடு தொடர்பு கொண்டதாலும் குண்டலினி சக்தியாகியா பராசக்தியின் அருளாற்றளை பாம்பு என்று சித்தர்கள் அழைப்பது மரபு “ என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இவர் பாடியா 129 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவரது பெரும்பகுதி பாடல்கள் யோகமேயாகும். இவரது சமாதி விருத்தாச்சலத்தில் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். விருத்தாச்சலம் ஊர் சென்னையிலிருந்து திண்டிவனம் விழுப்புரம் தாண்டி  திருச்சி செல்லும் தென் பகுதியில் உள்ளது.

    இனி பாம்பாட்டிச் சித்தரி பாடல்களைக் காண்போம்

    நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்தமென்றே
    நித்திய மென்றே பெரிய முத்தியென்றே
    பாடுபடும் போதுமஆதி பாதம் நினைந்தே
    பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே    (2)

ஆதியாகிய இறைவன் திருவடியை நினைத்தபடியே பன்முறை நினைந்து நினைந்து ஆடுவாயக பாம்பே எனக் குறிப்பிடுகிறார்.

    பொன்னிலொளி போல எங்கு பூரணமதாய்ப்
    பூவின்மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
    மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
    வள்ளலடி வணங்கிநின் றாடுபாம்பே   (3)
  
    பொன்னின் ஒளி பூரன்மாய் அதனுள் நிறைந்துள்ளது போல், மலரின் மணம் பருவம் வரும்போது வெளிப்படுவ்து போல் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ள வள்ளல் அடியை நினைந்து ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.

    அண்டபிண்டந் தந்த எங்கள் ஆதிதேவனை
    அகலம லேநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட எத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே    (5)

அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்த ஆதிதேவனை எண்ணி எட்டுத் திசையும் புகழுமாறு அன்புடன் வணங்கி வாழ்த்தி பாம்பே ஏக மனதுடன் ஆடுவாயாக என மொழிகிறார். சித்தர் பெருமக்கள் அண்டத்தையும் பிண்டத்தையும் பாடி அன்றே வானவியல் தத்துவத்தை கூறியுள்ள மெய்ஞானிகள்:.

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவ னாயும்
செறிந்தவசுத் துவைப்போற்றி யாடு பாம்பே

உருவமின்மையாகவும் உருவமாகவும், தொடக்கமாகவும் முடிவாகவும், இருளாகவும் ஒளியாகவும், ஆகமமாகவும் வேதமாகவும் , குருவாகவும் சீவனாகவும்  எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பரம்பொருளை எண்ணி ஆடு பாம்பே என திருவாய் மல்ர்ந்தருளியிருக்கிறார்.

    எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
    இருந்து விளையாட் டெய்தியும் பின்னர்
    அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகிய நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே  (9)

உயிரையும் உலகையும் படைத்து ஐந்தொழிலாகிய திருவிளையாட்டை நடத்தி பின்னர் உலகும் உயிருமாக இருந்திடும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டு ஆடு பாம்பே  எனப் பகர்கிறார் சித்தர் பெருமான்.

குரு வணகத்தில் பாம்பாட்டிச் சித்தர் சமூகச் சீரழிவுகளைச் சாடி புரட்சிச் சித்தராக தோன்றுகிறார்.

பொய்மதங்கள் போத்னைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்நெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே    (11)

பொய்யான மதங்களை கற்பிக்கும் மத குருமார்களை மாற்றி நன்னெறிப்படுத்தும் மெய்குருவின் திருவடிகளைப் போற்றி ஆடுபாம்பே என புரட்சிகரமாகக் கூறுகிறார்.

உள்ளங்கையிற் கனிபொல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனம் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்துநின்றாடாய் பாம்பே    (13)

உள்ளாதை உள்ளவாறு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டவல்ல வல்லமையான குருவை ஏற்று மகிழ்ந்து மகிழ்ந்து ஆடாய் பாம்பே என குருவின் மேன்மையை விளக்குகிறார் சித்தர்.

கூடுவிட்டு கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்து நின்றாடாய் பாம்பே     (16)

ஓர் உடல் விட்டு வேறோர் உடல் பாய்ந்து செல்லும் வல்லமைபெற்ற பேராற்றல் குருவைப் பணிந்து ஆடு பாம்பே எனப் பகர்கிறார் சித்தர்.

ஆடு பாம்பே ஆடுபாம்பே என பாடிய பாம்பாட்டிச் சித்தர் பாம்பின் சிறப்பையும் பாடியுள்ளார்.

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளையாடு பாம்பே     (20)

தமிழ்கத்தில் மிகப் பரவலாக பாடும் சொற்றொடர் ”நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே”. பர்மசிவன் முடிமீதிருக்கும் நாகப்பாம்பே.நச்சுப்பை வைத்திருக்கும் நல்ல பாம்பே புற்றைக் குடைந்து பாதளத்தில் குடியேறும் பாம்பே. நாதத்திற்கு கட்டுண்டு பாடப் பாட விளையடி மேலேறும் பாம்பே என பாம்பின் சிறப்பகக் கூறுகிறார் சித்தர்.

குற்றமற்ற சிவனுக்கு குண்டல மானாய்
கறுந்திரு மாலினுக்கு குடையு மானாய்
காற்றைக்குழல் பார்வத்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே        (22)

    சிவனுக்குக் குண்டலமாகவும் திருமாலுக்குக் குடையாகவும் பார்வதிக்கு தோள் வலையமாகவும் விளங்கும் பாம்பே எங்கும் மறையாமல் மகிழ்ந்து ஆடுக என பாம்பின் சிறப்பைக் கூறுகிறார்.
  
    மூண்டெரியும் அக்கினுக்குள் மூழ்கி வருவோம்
    முந்நீருள் இருப்பினும் மூச்சு அடக்குவோம்
    தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
    தார்வேந்தன் முன்பு நின்றாடு பாம்பே        (30)
  
    கொளுந்துவிட்டெறியும்  செந்தீயில் மூழ்கி வெளிவருவோம். ஆழமான கடலிலும் மூச்சையடக்குவோம். சீரிவரும் கடும்புலியை அடக்குவோம். வேந்தனாகிய இறைவன் முன்பு ஆடு பாம்பே என மொழிகிறார் சித்தர்.

    சிறுபுலி யனையாளி சிங்க முதலாய்ச்
    சிற்றடிக்கு குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
    வீறுபெருங் கடவுளை எங்களுடனே
    விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே   (34)

    புலி யானை சிங்கம் யாளி போன்றவற்றை சிறு உயிர்களுக்கு ஏவல் செய்யச் சொல்லுவோம்.  இறைவனோடு நாம் விளையாடுவோம் என்று ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.
  
    சித்தர் உரையாடலாக சில பாடல்கள் பாடியுள்ளார் அதில் ஒரு பாடலில்

    நடுவால ஆதிசேடம் தன்னை நட்டும்
    நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
    கடுவிசங் கக்கவேயக் கட்செ விகளைக்
    கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே    (39)

    அட்டபந்தத்தின் நடுவே ஆதிசேடனை நாட்டி நான்கு பக்கங்களிலும் மந்தரித்த திருநீறு தூவி நஞ்சைக் கக்கும் பாம்புகளைக் கையிலெடுத்து ஆடுங்கள். எனக் கூறுகிறார் சித்தர்.
    பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில
  
    நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்
    நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
    கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ
    கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே   (40)
  
    நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அவற்றை எல்லாம் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர்.

    மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
    மாளும்போது கூட அவர் மாள்வதில்லையே
    தக்கவுல கவனைத்தையும் தந்த கர்த்தனைத்
    தாவித்தாவித் துதித்து நின்றாடாய் பாம்பே    (48)

நாம் இறக்கும்போது குழந்தைகள், மனைவி சுற்றத்தார் யாரும் கூடவே இறப்பதில்லை ஆகவே இவ்வுலகைப் படைத்த இறைவனை எண்ணி தாவித் துதித்து நின்று ஆடு பாம்பே என்று நிலையாமையைப் பற்றி விளம்புகிறார் சித்தர்.

    கானலைமான் நீரென்று கண்டு செல்லல்போல்
    காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
    மேனிலைகண் டார்கள்வீணாய் வீம்பு பேசிடார்
    மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே    (49)

மான் கானல் நீரைக் கண்டு ஏமாறுவதுபோல் வினை வசத்தால் மூடர் தகுதியற்றதைக் கண்டு மகிழ்வர் .உலக நிலை கண்டவர்கள் மெய்யான் இறைவன் திருவடிகளையே நாடுவார் என்று ஆடுபாம்பே எனக் கூறி மகிழ்கிறார் சித்தர்.

    காமவிலக்கல் எனும் தலைப்பில் 10 பாடல்கள் உள்ளன அதில் பெண்ணாசையைக் கடுமையாக சாடியுள்ளார். பாடல்களில் சில

    வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
    விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
    ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
    உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே        (51)

    பெண்கள் அழகை விரும்பி மேலும் மேலும் ஆசை கொள்ளும் மாந்தர் இளவம் பஞ்சை பழமென்று காத்திருந்த கிளிபோல் உடல் தளர்ந்ததும் ஆசையை கைவிட்டு ஒடுவர் என ஆடு பாம்பே என்று பாடுகிறார் சித்தர்.

    நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
    நன்னுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
    கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
    கோன் நிலையை யறியாரென் றாடாய் பாம்பே     (57)

    பெண்களின் எச்சிலை அமுதமென்றும் சளியுள்ள மூக்கை குமிழம்பூ என்றும் கூறுவார்கள் மடையர்கள். இறைமை நிலையை அடையமாட்டார்கள் என்று ஆடு பாம்பே. என பெண்ணாசையைச் சாடுகிறார் சித்தர் பெருமான்.

    உடலிழிவைப் பற்றி சித்தர் பெருமான் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில

ஊத்தைக் குழிதனில் மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்ந்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாதென் றாடாய் பாம்பே.    (60)

மக்கிய மண் குழியில் மண்ணெடுத்து உதிரமாகிய நீரால் உண்டை சேர்த்து  குயவனார் பண்ணும் பாத்திரம் உடைந்த ஓட்டுக்குரிய மதிப்பைக் கூடப் பெறாத என ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பல்பேரறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
அரைக்காசுகு ஆகாதென் றாடாய் பாம்பே        (62)

விளையாட்டாக ஓர் ஆடவன் பெண்ணும் கூடியதால் பலரும் அறியும்படி கர்ப்பமாகி வயிறு வீங்கியது.மருத்துவச்சியின் துணையால் கர்ப்பைப்பை குழந்தை கழன்று விழுந்தது.பராசத்தியாகியா மாது இதைப் பரிகாரத்தால்  உடலாகிய பை நீங்குமாறு யோகசித்தி கூடுமென்று ஆடுபாம்பே எனக் கூறுகிறார்.

நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல்
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே    (64)

நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நில்லாமல் நீங்கும் உலகில் உயிர்களைப் படைத்த இறைவனைப் பற்றி ஆடு பாம்பே என உடலழிவைப் பற்றி பாடுகிறார்.

    மனப் பற்று நீக்கலை பற்றி பல பாடல்கள் யாத்துள்ளார் சித்தர் அவற்றுள் சில.

மனமென்ன்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென்னுங் கடிவாளம் வாயில் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே    (78)

மனமென்னும் குதிரையைப் பூட்டி புத்தியை கடிவாளமாகப் பூட்டி, சினமென்னும் குன்றில் சீராக ஏறி சாவாரி சென்றோம் என்று ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

ஆழிபெயர்ந் தாலுமேறு அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் மன்றிக் கால
ஊழிபெயர்ந் தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே      (85)

கடல் பெயர்ந்தாலும், மேறுமலையே அடியோடு பெயர்ந்தாலும் ஊழியாகிய காலம் பெயர்ந்தாலும் உண்மையான் அறிவு வழியில் நின்றாடாய் பாம்பே என பற்றற்று பகர்கிறார் சித்தர்.

விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
    வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்
    காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
    சுற்றிவலம் வந்துநித்ய சூட்சமங் கண்டும்
உரையற்ற மந்திரம் சொல்லி மீட்டோம்
    ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே    (117)

    விரகம் எனும் குடத்தில் குண்டலிணியை இணைப்போம்.வேதாந்த வெளியாகிய் யோகத்தில் விடுவோம். வினைகளை இதற்கு இறையாக்குவோம். காலமெனும் சுடுவெளியில்  ஆடவைப்போம். குதிரையில் ஏறி உலகம் முழுமையும் வலம் வருவோம் சூட்சமத்தைக் கண்டு வாய்விட்டு உரைக்காத மவுன மந்திரம் கூறுவோம் இதனால் நான்காவதான வீட்டைப் பெறுவோம் என்று சித்தர் கூறி மனித சமுதாய மீட்சிக்கு வழி கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள். பற்றற்று வாழ நமக்குக் கிடைத்த ஞானப்பாடல்கள். முற்றும் துறந்த நிலையில் முழுமைப் பாடல்கள். ஒவ்வொன்றும் உலக ஞனத்தையும் அஞ்ஞானத்தையும் உணர்த்தும் மாமருந்துகள்..

 .


  

 

No comments:

Post a Comment