Thursday, November 14, 2013

காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக


கவிமுரசு வா,மு.சே.திருவள்ளுவர்
பூத்திடும் மழலையர் ப\ள்ளிகள் எல்லாம்
புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம்
புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில்
புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை
நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர்
நயத்தகு மேடையில் நர்த்தன ஆட்டம்
தீத்திறம் இல்லா நம்மோர் செயலால்
திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள்
தலைமை தலைமை என்றே நம்மோர்
தலைவர் என்றே அனைவரும் உள்ளார்
தலைமை காக்கும் தலைமை இல்லை
தவநெறி போற்றும் தொ\ண்டர் இல்லை
அவனிவன் எனறே குறையாய் மொழிவான்
அவனியே போற்றும் நிறையை எள்ளுவான்
தவநிறை நம்மின் தடத்தை மறக்க
தடையாய் கல்வி முறையாய்க் கொ\ண்டான்
ஆசையாய் பெற்ற அருந்தமிழ்ச் சேயை
ஆங்கில வழியே அறியச் செய்வான்
மாசிலாக் குறளைக் கற்பது எப்படி
நாநிலம் போற்றும் இலக்கியம் துறந்து
காசினைப் போற்றும் கல்வியாய் உள்ளது
நயத்தகு கல்விக் கூடம் தன்னில்
நாசச் செயலாய் கொலையும் செய்தான்
அன்பாய் வளர்த்த பெற்றோர் தாமும்
அறநெறி காணாக் கல்வி நெறியால்
நேயம் மறந்து கொலைவெறி கொண்ட
நெடிய துன்பம் ஏனோ? எனோ?
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா
தந்த கொள்கை எங்கே? எங்கே?
விந்தை பாவேந்தன் சிந்தை பாரதி
விரிந்த எண்ணம் எங்கே? எங்கே?
சொந்தம் மறுத்து சுடரொளி கண்ட
சமத்துவ வள்ளலார் பாதை எங்கே?
நொந்தே பெற்ற விடுதலை வேள்வி
நோயாய் வந்தது ஏனோ? ஏனொ?
பந்தம் போற்றி வாழ்ந்த நம்மோர்
பாசம் மறந்து வாழ்வது ஏன்?ஏன்?
சந்தைப் பொருளாய் கல்விச் சாலை
சந்ததி  மாய்க்கும் ஈனம் அன்றோ?
தொந்தி குளிர  உணவு வேண்டா
மந்தை காட்டும் நீரும் வேண்டா
சிந்தை சாய்க்கும் மதுவும் வேண்டா
முந்து கல்வி அனைத்தும் தமிழில்
முழுதாய் ஏற்கும் முறைமை கொள்வோம்
எந்தை காத்த அரசுக் கல்வி
சிராய்த் தமிழகம் முழுமை தருக
காத்த எம்மோர் வழிவழி  மொழியே
காக்கும் காக்கும் ஆள்வோர் அறிக

No comments:

Post a Comment