Friday, December 7, 2012

மருத்துவ மாமேதை, எளியோர் ஏந்தல் இனப் பாதுகாவலர் செ.நெ.தெய்வநாயகம்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மனிதருள் மாணிக்கமாகவும், மருத்துவ உலகில் மாமேதையாகவும் தமிழர்தம் தன்மானத்திற்குச் சான்றாகவும், விளங்கிய மருத்துவமாமணி செ.நெ. தெய்வநாயகத்தின்(70) இழப்பு தமிழர்களுக்கும், மருதுவ உலகிற்கும் பேரிழப்பாகும்.

    புகழ் வாய்ந்த தந்தை பெரியாரோடு நெறுங்கிய தொடர்புகொண்ட தமிழ்க்குடியாம் செ. நெ . நாயகம் அவர்களின் குடியில் நவம்பர் 15ஆம் நாள் தோன்றிய பெருமகன் மருத்துவ மாமணி தெய்வநாயகம் அவர்கள்.

         தம் மருத்துவப் படிப்பை சென்னை மருத்துவக் கலலூரியில் படித்தவர்.வடகு அயர்லாண்டில் உள்ள சுகாட்லாந்த்தில் 18 மாதங்கள் தம் உயர் படிப்பை முடித்தவர்.எடின்பர்க் இராயல் கல்லூரியில் ஆய்வு அறிஞராகப் பணியாற்றியவர்.

    மருத்துவம் படிப்பு முடித்த தமிழர்கள் யாரையும் தமிழர்களின் வேட்டி சட்டை அடையாளத்துடன் காண முடியாது. ஆனால் மருத்துவ மாமணி அவர்கள் தமிழர் அடையாளத்துடன் புன் சிரிபோடு காட்சி தருவார்கள். மருத்துவ மாமேதையுடன் எனது சகோதரூக்காக தனிப்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காணச் சென்றோம். அருமைப் பெருந்தகை தாம்பரம் நெஞ்சக மருத்துவமனையில் பணிபுரிந்தார்கள். எங்களை அங்கு வரப் பணித்தார்கள். யாங்கள் மருத்துவம் காணச் சென்றபோது வரிசையில் வரப்பணித்து அவர்கள் ஆற்றிய சேவையை எண்ணும்போது கண்கள் குளமாகின்றன. மருத்துவ மனையிலேயே சேர்த்து அவர் வழங்கிய சிகிச்சையை எண்ணும்போது சேவையின் உருவமாகத் திகழ்கிறார். பெரிய மருத்துவ மனைகளெல்லாம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் பெருமகன் தன் மருத்துவத் துறையில் பெற்றுள்ள பேரறிவால்  எம்மை மட்டுமல்ல ஏழை எளிய மக்களை நெஞ்சக நோயிலிருந்து காப்பாற்றிய மாவீரர் இன்று நம்மிடம் இல்லை.
      உயிர்க்கொல்லி நோய்க்கு சித்த மருத்துவம் மூலம் திர்வு கண்டவர். சித்த மருத்துவத்திலும் மிகச் சிறந்த நிபுணர்.

  என்னுடைய நண்பர்கள் பலரை பெருமகனாரிடம் அனுப்பியுள்ளேன். அனைவரும் நலம் பெற்று அவரை நெஞ்சார வாழ்த்திகின்றனர்  நோய் தீர்க்கும்  மாமேதை தெய்வநாயகனார். நேர்கொண்ட பார்வை யாருக்கும், அஞ்சா மன உறம் கொண்டவர்கள். இது அவரை அறிந்தோர் அறிவர். பணியிலிருந்து விடுபட்ட பின் தியாகராயநகர் தம் இல்லத்திலும், எழும்பூர் செஞ்சிலுவைச் சங்க மையத்திலும் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தாரகள். இறுதிக் காலத்தில் எழும்பூர் மையத்தினர் அவரை புறக்கணித்தபோது வாயிலிலேயே இருக்கையைப்போட்டு ஏழைஎளிய மக்களுக்கு மருத்துவம் செய்த மாவீரர் தெய்வநாயாகனார்.

    தம் குடும்ப அறநிலையமான தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகப் பொறுப்பேற்று ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த கல்வித் தந்தை.

    தமிழர் தமிழர் சிந்தனைகளுக்கு ஊற்றுக் கண்ணாக விளங்கியவர், ஈழத்தில் பெருங்கொடுமை நடந்தபோது கண்டனக் கூட்டங்களுக்கு தம் பள்ளியின் திடலையே வழங்கிய இனப் பாதுகாவலர்.

    மருத்துவத் துறையாக இருந்தாலும் , கல்வித்துறையாக இருந்தாலும், இனப் பாதுகாப்பாக இருந்தாலும் செ.நா. தெய்வநாயகம் தமிழர்களுக்கு முன்னோடியாக வாழ்ந்துள்ளார். அவருடைய வாழ்வு சேவை வாழ்வு.

 இந்திய அரசின் பத்மபூசன் போன்ற விருதுகளெல்லாம் எளிய மக்களுக்காக வாழ்ந்த இப் பெருமக்களுக்கு வழங்க வேண்டும் எனபது நம் வேடகை.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய                                                        மண்ணுயிர் எல்லாம் தொழும். (குறள் 268)

    என்ற வாக்கிற்கிணங்க மருத்துவ மாமணியின் பணியைத் தொழுது தமிழர்கள் அவர்தம் வாழ்வைப் பின்பற்றி வாழ்வோமாக

Thursday, December 6, 2012

பொன்மகள் மலாளா நேயம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

மார்க்கம் கடந்த தொண்டு
    மனிதக் கல்வி தன்னை
தீர்க்கமாய துணிவாய்ச் செய்த
    திண்ணிய மலாளா வாழ்க!
ஊர்க்குருவி இன்று வானில்
    உன்னதத் தொண்டால் இன்று
பார்க்குருவி பறந்து தோன்றும்
    பல்லூடக மலாளா வாழ்க!

பெண்களின் கல்வி என்றும்
    பேணிடும் குடும்ப ஏற்றம்
நன்றுள மகளிர்  கற்றால்
    நாளெலாம் பெண்மை ஓங்கும்
கன்றுபோல் சொன்ன சொல்லை
    கதறியே சுட்ட தீயோர்
நன்றான மனித நேயம்
    நாட்டிடும் நாள்தான் என்நாள்?

தொட்டனைத்து ஊறும் கல்வி
    தொல்லுயர் மாந்தர் கண்ணை
மட்டிலா மலாளா தொண்டு
    மாத்துயர் போக்கும் அன்றோ!
முட்டிடும் முரட்டு மார்க்கம்
    முதுநிலை அறிவை எண்ணி
மட்டிலா சேவைக் கன்னி
    மாசிலா மலாளா வாழ்க!

எரித்திடும் தீவிர வாதம்
    எழுப்பிய மூடச் சூட்டால்
வித்திடும் செயலை என்றும்
    முனைப்புடன் உலகே சாய்க்கும்
பொறித்திட்ட ஞானக் குஞ்சாம்
    பொன்மகள் மலாளா நேயம்
நெறிகாக்கும் மகளிர் கல்வி
    நாளாகக் கொள்வோம் நன்றே!

விடுக எம் காவிரிக் கண்ணை


கவிமுரசு வா. மு. சே. திருவள்ளுவர்


இந்தியா ஒருமித்த நாடு 
                                     
இன்பம் இணைந்தே நீதேடு
                            
  சந்ததி வழிவழி நீரை
                                          
 சதிவலை பின்னுதல் தீது 
                         
முந்தைய தமிழரின் மோசம்
                                     
 முறைதனிமை காணாத சோகம்  
                           
 நிந்திக்கும் கர்நாடக மண்ணே
                                     
  நீதியை கண்டு நீதேறு!



வெடித்திடும் நிலத்தினைப் பாரு
                                     
 வேதனை பொங்கிடும் நீரால்
                               
 துடித்திடும் அவலத்தைக் காணு
                                    
 துயரினைப் போக்கிட எண்ணு
                                 
மடிதுயில் காணாத மக்கள்
                                        
மாத்தவம் வேண்டிடும் ஆறு
                        
பொடிப்பொடி ஆக்கிடும் கண்ணீர்
                                  
போதனை கேட்டுநீ மாறு!







எரித்திடும் எரிமலை வேகம் 
                           
  எழும்பிய காவிரித் தாகம்  
                         
பறித்திடும் நீர்வளம்  தன்னை 
                                        
பொசுக்கிடும் எம்மினம் உன்னை
                              
தரித்திரம் ஒளியினால் கண்டும்
                                  
தந்திடும் மின்வளம் எண்ணு  
                               
விரித்திடும் மனநலம் எண்ணி
                                   
விடுக எம்காவிரிக் கண்ணை!


திராவிடம் கூறியே எம்மோர்
                                          
 தகைமையை கண்டு நீ வாழு
  
 உறவினைப் பெருக்கிடும் ஆற்றின்
                                  
உலகத்துப்  பொதுமையை உணரு
                              
கரவினால் கயமையைத் தேடும்
                                  
 கொலைவெறித் தாண்டவம் ஏனோ
                             
 மறத்தமிழ் மக்களின் வீரம்
                                      
 மாய்த்திடும் மம தையை என்றும்!

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(ஐந்தாவது சித்தநெறி மாநாடு சூலை 20, 21,  – 2012 மலேசிய நாட்டில் ஆகிய நாட்கள் சோகூர் மாநகரில்  நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மலேசிய அமைசர்கள் ம.இ.க. தலைவர டத்தொ பழனிவேலு, டத்தோ சுப்பிரமணியம், பங்கேற்றனர்.ம  அகத்திய ஞானபீட நிறுவனர் தலைவர் அருள்மிகு வாலைச் சித்தர் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆன்மீகத் தென்றல் மாரியப்பன் அவர்களும் மாநாட்டுக் குழுவினரும் பெரும்முயற்சி மேற்கொண்டு அரும்பாடுபட்டு மாநாட்டை சிறப்புடன் நடத்தினர்.. அதுபோது கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

    மலேசியாவில் பத்துமலையில் அருள்மிகு வாலைச் சித்தர் அவர்களின் திருமுகம் கண்டடேன். அது போது பாம்பாட்டிச்சித்தர் பற்றி கட்டுரை வழங்கும்படி பணித்தார்கள். மலேசியா இசுலாமிய நாடாக இருப்பினும் ஆலயங்கள் எங்கு நோக்கினும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும். அண்மையில் யான் தைப்பூச நிகழ்வையும் பங்குனி உத்திர நிகழ்வையும் கண்ட போது மெய்சிலிர்த்தேன். தொடர் வண்டி பேருந்து எங்கு நோக்கினும் தமிழர்கூட்டம். ஆன்மீகம் தமிழர்களை ஒருங்கிணைக்கும் அருள்நெறியாக உள்ளது. அம்மண்ணில் தமிழகம் சிங்கை உலகமெங்கும் வாழும் அருள்ளாளர்கள் கூடுவது சாலப்பொருத்தமாகும்.

    தமிழகம் சித்தர்களின் பிறப்பிடம் உலகப் பற்றுகளை வெறுத்து உன்னதமான மாந்தநேய நெறிகளை மண்ணுக்கு உணர்த்தியவர்கள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

    என்ற வள்ளுவப் பெருமானின் குறளிற்கேற்ப ஆசைகளில் விடுபடும்போது அதிலுள்ள துன்பத்திலிருந்தும் விடுபடுகிறோம்.

    கடவுள் வழிபாட்டில் பகுத்தறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் சித்தர் பெருமக்களே. சாதி சமயம் ஆண் பேண் என்ற வேறுபாட்டை தகர்த்தெறிந்தவர்கள் சித்தர் பெருமக்களே.

இதுவரை யாம் படித்துணர்ந்த  சித்த பெருமக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை கடமையாகக் கருதுகிறேன்.

1, சிவவாக்கியர் 2, அழுகிணி சித்தர் 3, கடுவெளிச்சித்தர் 4, குதம்பைச் சித்தர் 5, பத்திரகிரியார் 6, பாம்பாட்டிச்சித்தர் 7, காசுபுகண்டர் 8, சங்கிலிச் சித்தர் 9, சத்தியானாதர் என்ற ஞானச்சித்தர் 10, ஏசுநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர் 11, மச்சேந்திரநாதர் என்ற நொண்டிச் சித்தர் 12, திரிகோணச்சித்தர்    13, கடேந்திரநாதர் என்ற விளையாட்டுச் சித்தர் 14, புண்ணாக்குச் சித்தர் 15, கல்லுளிச்சித்தர் 16, கஞ்சமலைச்சித்தர் 17, வகுளிநாதர் என்ற மௌனச்சித்தர்
18, ஆதிநாதர் என்ற வேதாந்தச்சித்தர் 19, காரைச்சித்தர் 20, சதோகநாதர் என்ற யோகச்சித்தர் 21, காயக் கப்பல் 22, உரோமரிசி ஞானம் 23, தடங்கண் சித்தர் 24, பட்டிணத்துச் சித்தர் ஞானம் 25, கைலாயக் கம்பளிச் சட்டைமுனி நாயனர் 26, கொங்கெனச் சித்தர் 27, சட்டைமுனிஞானம் 28, திருவள்ளுவ ஞானம்    29, அகத்தியர் 30, திருமூல நாயனார் 31, வால்மீகி சூத்திரம்  32, இராமதேவர்   33, கருவூரார் 34, அகப்பேய்ச் சித்தர் 35, இடைக்காட்டுச் சித்தர்               36, சூரியானந்தர் சூத்திரம்.

    மேற்கூறிய சித்தர் பெருமக்களின் பாடல்கள் ஆன்மீக மருந்தாக அறிவுக்கு விருந்தாக உலகில் வலம் வருகின்றன. மாநாட்டின் தலைவர் வாலைச்சித்தர் அவர்கள் எம்மை பாம்பாட்டிச் சித்தர் பற்றி எழுதப் பணித்ததால் பாம்பாட்டிச் சித்தர் பற்றிக் காண்போம்.

    பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்தோறும் ஆடு பாம்பே, ஆடுபாம்பே என பாம்பை ஆட்டிவிப்பது போல் பாடல்கள் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இவரின் குருவின் பெயர்  சட்டைமுனிநாதர். சீர்காழியில் உள்ள சிவனின் பெயர் சட்டையப்பர் சட்டைநாதர் என்பதாம்.

    ”குண்டலினி சக்தி வளைந்து மண்டலித்து மூலதாரத்தில் கிடைக்கும் நிலையாலும் புற்றில் ஏறுவதுபோல் சுழிமுனை நாடியில் ஏறி இந்த சக்தி உச்சி வரை வருவதாலும் அக்குண்டலினி என்ற உடல் சக்தி  புறக்குண்டலினியாகிய பிரபஞ்ச சக்தியோடு பாம்பு மண்டலத்து போல் தொடர்பு கொள்வதாலும் உஃச் உஃச் என மூச்சுக்காற்றோடு தொடர்பு கொண்டதாலும் குண்டலினி சக்தியாகியா பராசக்தியின் அருளாற்றளை பாம்பு என்று சித்தர்கள் அழைப்பது மரபு “ என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இவர் பாடியா 129 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவரது பெரும்பகுதி பாடல்கள் யோகமேயாகும். இவரது சமாதி விருத்தாச்சலத்தில் உள்ளதாக பதிவு செய்துள்ளனர். விருத்தாச்சலம் ஊர் சென்னையிலிருந்து திண்டிவனம் விழுப்புரம் தாண்டி  திருச்சி செல்லும் தென் பகுதியில் உள்ளது.

    இனி பாம்பாட்டிச் சித்தரி பாடல்களைக் காண்போம்

    நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்தமென்றே
    நித்திய மென்றே பெரிய முத்தியென்றே
    பாடுபடும் போதுமஆதி பாதம் நினைந்தே
    பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே    (2)

ஆதியாகிய இறைவன் திருவடியை நினைத்தபடியே பன்முறை நினைந்து நினைந்து ஆடுவாயக பாம்பே எனக் குறிப்பிடுகிறார்.

    பொன்னிலொளி போல எங்கு பூரணமதாய்ப்
    பூவின்மணம் போலத்தங்கும் பொற்புடையதாய்
    மன்னும்பல உயிர்களில் மன்னிப் பொருந்தும்
    வள்ளலடி வணங்கிநின் றாடுபாம்பே   (3)
  
    பொன்னின் ஒளி பூரன்மாய் அதனுள் நிறைந்துள்ளது போல், மலரின் மணம் பருவம் வரும்போது வெளிப்படுவ்து போல் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ள வள்ளல் அடியை நினைந்து ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.

    அண்டபிண்டந் தந்த எங்கள் ஆதிதேவனை
    அகலம லேநினைந் தன்புடன் பணிந்து
எண்திசையும் புகழ்ந்திட எத்தி யேத்தியே
ஏகமன மாகநாடி யாடு பாம்பே    (5)

அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்த ஆதிதேவனை எண்ணி எட்டுத் திசையும் புகழுமாறு அன்புடன் வணங்கி வாழ்த்தி பாம்பே ஏக மனதுடன் ஆடுவாயாக என மொழிகிறார். சித்தர் பெருமக்கள் அண்டத்தையும் பிண்டத்தையும் பாடி அன்றே வானவியல் தத்துவத்தை கூறியுள்ள மெய்ஞானிகள்:.

அருவாயும் உருவாயும் அந்தி யாயும்
அந்தமாயும் ஒளியாயும் ஆகம மாயும்
திருவாயும் குருவாயும் சீவ னாயும்
செறிந்தவசுத் துவைப்போற்றி யாடு பாம்பே

உருவமின்மையாகவும் உருவமாகவும், தொடக்கமாகவும் முடிவாகவும், இருளாகவும் ஒளியாகவும், ஆகமமாகவும் வேதமாகவும் , குருவாகவும் சீவனாகவும்  எங்குமாய் எல்லாமாய் நிறைந்த பரம்பொருளை எண்ணி ஆடு பாம்பே என திருவாய் மல்ர்ந்தருளியிருக்கிறார்.

    எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
    இருந்து விளையாட் டெய்தியும் பின்னர்
    அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகிய நின்ற
ஆனந்த வெள்ளங்கண் டாடு பாம்பே  (9)

உயிரையும் உலகையும் படைத்து ஐந்தொழிலாகிய திருவிளையாட்டை நடத்தி பின்னர் உலகும் உயிருமாக இருந்திடும் மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டு ஆடு பாம்பே  எனப் பகர்கிறார் சித்தர் பெருமான்.

குரு வணகத்தில் பாம்பாட்டிச் சித்தர் சமூகச் சீரழிவுகளைச் சாடி புரட்சிச் சித்தராக தோன்றுகிறார்.

பொய்மதங்கள் போத்னைசெய் பொய்க்கு ருக்களைப்
புத்திசொல்லி நன்நெறியில் போக விடுக்கும்
மெய்மதந்தான் இன்னதென்றும் மேவ விளம்பும்
மெய்க்குருவின் பதம்போற்றி ஆடாய் பாம்பே    (11)

பொய்யான மதங்களை கற்பிக்கும் மத குருமார்களை மாற்றி நன்னெறிப்படுத்தும் மெய்குருவின் திருவடிகளைப் போற்றி ஆடுபாம்பே என புரட்சிகரமாகக் கூறுகிறார்.

உள்ளங்கையிற் கனிபொல உள்ள பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனம் தன்னைத்தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்துநின்றாடாய் பாம்பே    (13)

உள்ளாதை உள்ளவாறு உள்ளங்கை நெல்லிக் கனிபோல் காட்டவல்ல வல்லமையான குருவை ஏற்று மகிழ்ந்து மகிழ்ந்து ஆடாய் பாம்பே என குருவின் மேன்மையை விளக்குகிறார் சித்தர்.

கூடுவிட்டு கூடுபாயுங் கொள்கை யுடைய
குருவின் வல்லபமெவர் கூற வல்லவர்
வீடுபெறும் வகையைமென் மேலுங் காட்டும்
மெய்க்குருவைப் பணிந்து நின்றாடாய் பாம்பே     (16)

ஓர் உடல் விட்டு வேறோர் உடல் பாய்ந்து செல்லும் வல்லமைபெற்ற பேராற்றல் குருவைப் பணிந்து ஆடு பாம்பே எனப் பகர்கிறார் சித்தர்.

ஆடு பாம்பே ஆடுபாம்பே என பாடிய பாம்பாட்டிச் சித்தர் பாம்பின் சிறப்பையும் பாடியுள்ளார்.

நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதளத்தில் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்றுவிளையாடு பாம்பே     (20)

தமிழ்கத்தில் மிகப் பரவலாக பாடும் சொற்றொடர் ”நாதர் முடிமேலிருக்கும் நல்ல பாம்பே”. பர்மசிவன் முடிமீதிருக்கும் நாகப்பாம்பே.நச்சுப்பை வைத்திருக்கும் நல்ல பாம்பே புற்றைக் குடைந்து பாதளத்தில் குடியேறும் பாம்பே. நாதத்திற்கு கட்டுண்டு பாடப் பாட விளையடி மேலேறும் பாம்பே என பாம்பின் சிறப்பகக் கூறுகிறார் சித்தர்.

குற்றமற்ற சிவனுக்கு குண்டல மானாய்
கறுந்திரு மாலினுக்கு குடையு மானாய்
காற்றைக்குழல் பார்வத்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே        (22)

    சிவனுக்குக் குண்டலமாகவும் திருமாலுக்குக் குடையாகவும் பார்வதிக்கு தோள் வலையமாகவும் விளங்கும் பாம்பே எங்கும் மறையாமல் மகிழ்ந்து ஆடுக என பாம்பின் சிறப்பைக் கூறுகிறார்.
  
    மூண்டெரியும் அக்கினுக்குள் மூழ்கி வருவோம்
    முந்நீருள் இருப்பினும் மூச்சு அடக்குவோம்
    தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்
    தார்வேந்தன் முன்பு நின்றாடு பாம்பே        (30)
  
    கொளுந்துவிட்டெறியும்  செந்தீயில் மூழ்கி வெளிவருவோம். ஆழமான கடலிலும் மூச்சையடக்குவோம். சீரிவரும் கடும்புலியை அடக்குவோம். வேந்தனாகிய இறைவன் முன்பு ஆடு பாம்பே என மொழிகிறார் சித்தர்.

    சிறுபுலி யனையாளி சிங்க முதலாய்ச்
    சிற்றடிக்கு குற்றேவல் செய்யச் சொல்லுவோம்
    வீறுபெருங் கடவுளை எங்களுடனே
    விளையாடச் செய்குவோமென் றாடு பாம்பே   (34)

    புலி யானை சிங்கம் யாளி போன்றவற்றை சிறு உயிர்களுக்கு ஏவல் செய்யச் சொல்லுவோம்.  இறைவனோடு நாம் விளையாடுவோம் என்று ஆடு பாம்பே எனக் கூறுகிறார்.
  
    சித்தர் உரையாடலாக சில பாடல்கள் பாடியுள்ளார் அதில் ஒரு பாடலில்

    நடுவால ஆதிசேடம் தன்னை நட்டும்
    நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும்
    கடுவிசங் கக்கவேயக் கட்செ விகளைக்
    கையிலெடுத் தாடுங்கள் சித்த னாரே    (39)

    அட்டபந்தத்தின் நடுவே ஆதிசேடனை நாட்டி நான்கு பக்கங்களிலும் மந்தரித்த திருநீறு தூவி நஞ்சைக் கக்கும் பாம்புகளைக் கையிலெடுத்து ஆடுங்கள். எனக் கூறுகிறார் சித்தர்.
    பொருளாசை விடுமாறு நிலையாமை குறித்து பத்து பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில
  
    நாடுநகர் வீடுமாடு நற்பொறு ளெல்லாம்
    நடுவன் வரும்பொழுது நாடி வருமோ
    கூடுபோன பின்புவற்றால் கொள்பய னென்னோ
    கூத்தன் பதங் குறித்து நின் றாடாய் பாம்பே   (40)
  
    நாடு நகர் வீடு மாடு சிறந்தவை அனைத்தும் சாகும்போது நம்மோடு வருவதில்லை வாராத அவற்றை எல்லாம் எண்ணாமல் கூத்தாடும் இறைவனின் திருவடியை எண்ணி ஆடு பாம்பே எனக் கூறுகிறார் சித்தர்.

    மக்கள் பெண்டிர் சுற்றமரு மக்கள் மற்றவர்
    மாளும்போது கூட அவர் மாள்வதில்லையே
    தக்கவுல கவனைத்தையும் தந்த கர்த்தனைத்
    தாவித்தாவித் துதித்து நின்றாடாய் பாம்பே    (48)

நாம் இறக்கும்போது குழந்தைகள், மனைவி சுற்றத்தார் யாரும் கூடவே இறப்பதில்லை ஆகவே இவ்வுலகைப் படைத்த இறைவனை எண்ணி தாவித் துதித்து நின்று ஆடு பாம்பே என்று நிலையாமையைப் பற்றி விளம்புகிறார் சித்தர்.

    கானலைமான் நீரென்று கண்டு செல்லல்போல்
    காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பார்
    மேனிலைகண் டார்கள்வீணாய் வீம்பு பேசிடார்
    மெய்யன்பதம் நாடுவாரென் றாடாய் பாம்பே    (49)

மான் கானல் நீரைக் கண்டு ஏமாறுவதுபோல் வினை வசத்தால் மூடர் தகுதியற்றதைக் கண்டு மகிழ்வர் .உலக நிலை கண்டவர்கள் மெய்யான் இறைவன் திருவடிகளையே நாடுவார் என்று ஆடுபாம்பே எனக் கூறி மகிழ்கிறார் சித்தர்.

    காமவிலக்கல் எனும் தலைப்பில் 10 பாடல்கள் உள்ளன அதில் பெண்ணாசையைக் கடுமையாக சாடியுள்ளார். பாடல்களில் சில

    வெயில்கண்ட மஞ்சள்போன்ற மாத ரழகை
    விரும்பியே மேல்விழுந்து மேவு மாந்தர்
    ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
    உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே        (51)

    பெண்கள் அழகை விரும்பி மேலும் மேலும் ஆசை கொள்ளும் மாந்தர் இளவம் பஞ்சை பழமென்று காத்திருந்த கிளிபோல் உடல் தளர்ந்ததும் ஆசையை கைவிட்டு ஒடுவர் என ஆடு பாம்பே என்று பாடுகிறார் சித்தர்.

    நாறிவரும் எச்சில்தனை நல்லமு தென்றும்
    நன்னுஞ்சளி நாசிதனை நற்கு மிழென்றும்
    கூறுவார்கள் புத்தியில்லாக் கூகை மாந்தர்
    கோன் நிலையை யறியாரென் றாடாய் பாம்பே     (57)

    பெண்களின் எச்சிலை அமுதமென்றும் சளியுள்ள மூக்கை குமிழம்பூ என்றும் கூறுவார்கள் மடையர்கள். இறைமை நிலையை அடையமாட்டார்கள் என்று ஆடு பாம்பே. என பெண்ணாசையைச் சாடுகிறார் சித்தர் பெருமான்.

    உடலிழிவைப் பற்றி சித்தர் பெருமான் 10 பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் சில

ஊத்தைக் குழிதனில் மண்ணை எடுத்தே
உதிரப் புனலினிலே உண்டை சேர்ந்தே
வாய்த்தகுய வனார் பண்ணும் பாண்டம்
வறகோட்டுக்கும் ஆகாதென் றாடாய் பாம்பே.    (60)

மக்கிய மண் குழியில் மண்ணெடுத்து உதிரமாகிய நீரால் உண்டை சேர்த்து  குயவனார் பண்ணும் பாத்திரம் உடைந்த ஓட்டுக்குரிய மதிப்பைக் கூடப் பெறாத என ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

பரியாசம் போலவே கடித்த பாம்பு
பல்பேரறியவே மெத்த வீங்கிப்
பரியாரம் ஒருமாது பார்த்த போது
அரைக்காசுகு ஆகாதென் றாடாய் பாம்பே        (62)

விளையாட்டாக ஓர் ஆடவன் பெண்ணும் கூடியதால் பலரும் அறியும்படி கர்ப்பமாகி வயிறு வீங்கியது.மருத்துவச்சியின் துணையால் கர்ப்பைப்பை குழந்தை கழன்று விழுந்தது.பராசத்தியாகியா மாது இதைப் பரிகாரத்தால்  உடலாகிய பை நீங்குமாறு யோகசித்தி கூடுமென்று ஆடுபாம்பே எனக் கூறுகிறார்.

நீரிலெலும் நீர்க்குமிழி நிலைகெ டல்போல்
நில்லாதுடல் நீங்கிவிடும் நிச்சய மென்றே
பாரிற் பல உயிர்களைப் படைத்த வன்தனைப்
பற்றவேநீ பற்றித்தொடர்ந் தாடாய் பாம்பே    (64)

நீர்க்குமிழி போல் நீரோடு நீராக இந்த உடலும் நில்லாமல் நீங்கும் உலகில் உயிர்களைப் படைத்த இறைவனைப் பற்றி ஆடு பாம்பே என உடலழிவைப் பற்றி பாடுகிறார்.

    மனப் பற்று நீக்கலை பற்றி பல பாடல்கள் யாத்துள்ளார் சித்தர் அவற்றுள் சில.

மனமென்ன்னுங் குதிரையை வாகன மாக்கி
மதியென்னுங் கடிவாளம் வாயில் பூட்டிச்
சினமென்னுஞ் சீனிமேற் சீரா யேறித்
தெளிவிடஞ் சவாரிவிட் டாடாய் பாம்பே    (78)

மனமென்னும் குதிரையைப் பூட்டி புத்தியை கடிவாளமாகப் பூட்டி, சினமென்னும் குன்றில் சீராக ஏறி சாவாரி சென்றோம் என்று ஆடு பாம்பே எனப் பாடுகிறார் சித்தர்.

ஆழிபெயர்ந் தாலுமேறு அலையும்
அடியோடு பெயர்ந்தாலும் மன்றிக் கால
ஊழிபெயர்ந் தாலுமதி யுண்மைப் படிக்கே
உறுதி பெயராதுநின் றாடாய் பாம்பே      (85)

கடல் பெயர்ந்தாலும், மேறுமலையே அடியோடு பெயர்ந்தாலும் ஊழியாகிய காலம் பெயர்ந்தாலும் உண்மையான் அறிவு வழியில் நின்றாடாய் பாம்பே என பற்றற்று பகர்கிறார் சித்தர்.

விரகக் குடத்திலே பாம்ப டைப்போம்
    வேதாந்த வெளியிலே விட்டே யாட்டுவோம்
காரணங்களைப் பிடுங்கி இரை கொடுப்போம்
    காலக் கடுவெளிநின் றாட்டு விப்போம்
துரகந் தனிலேறித் தொல்லுல கெங்கும்
    சுற்றிவலம் வந்துநித்ய சூட்சமங் கண்டும்
உரையற்ற மந்திரம் சொல்லி மீட்டோம்
    ஒருநான்கும் பெற்றோமென் றாடாய் பாம்பே    (117)

    விரகம் எனும் குடத்தில் குண்டலிணியை இணைப்போம்.வேதாந்த வெளியாகிய் யோகத்தில் விடுவோம். வினைகளை இதற்கு இறையாக்குவோம். காலமெனும் சுடுவெளியில்  ஆடவைப்போம். குதிரையில் ஏறி உலகம் முழுமையும் வலம் வருவோம் சூட்சமத்தைக் கண்டு வாய்விட்டு உரைக்காத மவுன மந்திரம் கூறுவோம் இதனால் நான்காவதான வீட்டைப் பெறுவோம் என்று சித்தர் கூறி மனித சமுதாய மீட்சிக்கு வழி கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் அனைத்தும் புரட்சிப் பெட்டகங்கள். பற்றற்று வாழ நமக்குக் கிடைத்த ஞானப்பாடல்கள். முற்றும் துறந்த நிலையில் முழுமைப் பாடல்கள். ஒவ்வொன்றும் உலக ஞனத்தையும் அஞ்ஞானத்தையும் உணர்த்தும் மாமருந்துகள்..

 .


  

 

Friday, November 2, 2012

வாழ்வாங்கு வாழும் பெருமக்கள் ஐயா நடராசனார் –சந்திரா அம்மையார் நீடு வாழ்க


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்




                                                            கலைக்கூடம்

முத்துவிழாக் காணும் இணையர் நடரசன் சந்திரா அவர்களின் வாழ்க்கைச் சுவடு மலர் மெத்தைகளால் தொடங்கியவை அல்ல. கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் பயணித்து மலர் மேடைகளை தம் மக்களுக்கும் சமூகத்திற்கும் வழங்கியவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியதைப் போன்று மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது இன்றும் பொறுத்தமான ஒன்று. ஈப்போ நகரில் தம் வாழ்க்கையை மைலோன் நிறுவனத்தில் தொடங்கி உண்மை உழைப்பு கண்டிப்பு எனும் கடிவாளங்கள் மூலம் தம் பயணத்தைத் தொடங்கியவர். வாழ்வின் அனைத்துப் போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்கொண்டவர். பின் இரதி டிரேடிங் எனும் நிறுவனத்தைத் தொடங்கி தமிழகக் கலைச் செல்வங்களை மலேசிய மண்ணிற்கு வழங்கிய பெருமை ஐயா நடராசனாருக்கு உண்டு இன்றும் அவரது நிறுவனத்திற்குச் சென்றால் கலைக்கூடமாகக காட்சிதரும்
.
நட்புப் பெட்டகம்


பேராசியர் பாலா ஐயா நடராசன் போன்ற பெருமக்களெல்லாம் இளமைக் காலங்களில் கலைஞர்களாக மலேசியாவில் வலம் வந்தவர்கள். அப்பெருமக்களின் நட்பு இன்றும் மலரும் செந்தாமரையாய் இருப்பதைக் காணும்போது இதுவல்லவோ நட்பு என வியக்கத் தோன்றும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே                                                                      இடுக்கண் கலைவதாம் நட்பு

என்ற வள்ளுவப் பேராசானின் குறள் வழி தன்னுடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் பாலா எனக் கூறும் வார்த்தைகள் என் கண்களை குளமாக்கின. நன்றி மறக்கும் இச் சமுதாயத்தில் தன் நண்பனின் பெருமையை நிலைநாட்டும் ஐயா நடராசனார் நட்புப் பெட்டகம்.

எம் அருமைத் தந்தையார் உலகம் முழுமையும் வலம் வருவதோ, யாங்கள் பன்னாட்டுத்த்; தமிழுறவு மன்ற மாநாடுகள் நடத்துவதோ, 42 ஆண்டுகளாக தமிழ்ப்பணி நடத்துவதின் சிறப்போ எங்களை விட எம் பணிகளைத் தாங்கும் உலகளாவிய பெருமக்களையே சாரும்,மலேசியாவில் ஐயா நடராசன், பேராசிரியர் பாலா, ஆசிரியமணி மாணிக்கம், டாக்டர் தருமலிங்கம். போன்ற பெருமக்கள் தமிழ்ப்பணியின் தூண்கள்.

ஆன்மீகச் செம்மல்

ஐயா நடராசனார் அவர்களின் நிறுவனத்திற்குச் சென்றால் அன்பொழுக வரவேற்று இல்லத்தார் நலன்களை வினவி அவரது பணிகளைச் செய்யும் பாங்கு இன்றுள்ள தொழிழ் முனைவோர் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. பின் ஆலயங்கள் அழைத்துச் செல்வதும் ஆலயப் பணி அனைத்திற்கும் ஆலோசனை வழங்குவதும் அவருக்கு கைவந்த கலை. மலேசியாவில் அவர் வகுத்த வழிகளையெல்லாம் இன்று தம் சொந்த ஊரான காட்டுச்சேரியில் உள்ள ஆலயத்தை புணரமைத்து குடமுழுக்கும் கண்டுள்ள  முத்துவிழா நாயகர் நடராசனார் ஒர் ஆன்மீகச் செம்மல். குடமுழுக்கு நடத்திய ஆல்யத்திற்கு நானும் பாலா அவர்களும் சென்று ஐயா அவர்களின் அரும் பணியைக் கண்டு மெய்மறந்தோம்.

அறநெறிச் செல்வர்.


ஐயா அவர்களின் துணைவியார் சந்திரா அம்மையார் அன்பின் வடிவமானவர். புன் சிரிப்பைத் தவிர வேறொன்றும் அறியாதவர். திருக்குறளில் பொய்யாமொழியார் கூறிய இல்வாழ்க்கைத் துணைவி இலக்கணத்திற்கு இன்றும் சான்றாக வாழ்பவர். அம்மா அவர்கள் தாம் திருமணம் நடந்த காலத்தில் ஐயாவின் சிவன்கோயில் பாழடைந்து இருப்பது ஊருக்கு நல்லதல்ல எனக் கூறியதை நினைவில் கொண்டு இன்று தம் வாழ்நாள் பணியாக முடித்துள்ள அறநெறிச் செல்வர்.


ஒப்பற்ற தந்தை


மக்களின் மேல் நீங்காத பற்றுக் கொண்டவர். ஒவ்வொருவர் வாழ்க்கையையும் மேம்படுத்திய தந்தை.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்                                            ஆற்றுவார் மேற்றே பொறை

என்ற வள்ளுவனரின் குறளுக்கு ஒப்ப குடும்பத் தலைவனாக அனைத்துத் துன்பங்களையும் தாங்கி மக்கள் செல்வங்களுக்கு நல் வழி காட்டியவர்
ஐயாவின் மக்கள் மலேசியா ரோட்டேரியன் கண்ணா.காரைக்கால் விஜிஜெகதீஸ்சந்திரன் சிங்கப்பூர் பரந்தாமன் மலேசியா மிருதங்க கலைஞர் சிவகுமரன்,   சென்னையில் இரதி இரமணி,எழுதியுள்ள செய்திகளைக் காணும்போது ஒப்பற்ற தந்தை என்பதை உணரலாம்.

முத்துவிழாக் காணும் வையத்துள் வாழ்வாங்கு வாழும் பெருமக்கள் ஐயா நடராசனார் –சந்திரா அம்மையார் மேலும் வைரவிழா நூற்றாண்டு விழாக் காண உலகத் தமிழர்கள் சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம். 


Sunday, October 28, 2012

குறள்வழி தன்னம்பிக்கைப் பாதை


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

(மதுரையில் 21-10-12 அன்று தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெபெற்ற நிகழ்வில் தமிழ்மாமணி, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெபெறும் நிகழ்விற்கு தலைமை தாங்கும் கணிஞர், கவிஞர் இரவி மற்றும் வாசகர் வட்டத்தின் இராசராசன் அவர்களே மற்றும் பெருமக்களே வருகைதந்துள்ள பீட்டர் இணையர், தன் சிறு நீரகத்தையே சகோதரருக்கு வழங்கிய இங்கு அமர்ந்திருக்கும் சம்பத் போன்ற தன்னம்பிக்கைச் செம்மல்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். தன்னம்பிக்கை எனும் இதழை நடத்தி அந்த இதழ் வழி மக்களுக்கு தன்னம்பிக்கை எழுச்சியூட்டும் இதழையும் அதன் ஆசிரியரையும் வாசகர் வட்டம் அமைத்து நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை நட்சத்திரங்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

    இன்று தன்னம்பிக்கை பயிற்சி என்றால் ஏதோ மேல் நாட்டில் பரவலாகப் பேசப்படும் பெருமக்களே இங்கு அரைகுறி ஆங்கிலத்தில் பேசுபவர்க்கும் புரியாமல் அதைகேட்பவர்ளுக்கும் புரியாமல் ஏதோசந்திரமண்டலத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற உணர்வுகளை ஏற்படுத்திகின்றனர். நம்மவர்களும் தன்னையும் தன் மொழியையும் அறியாததால் பணத்தைச் செழுத்தி புரியாத்தனத்திலேயே உழல்கின்றனர். வாழ்வின் பெரும்பகுதி சோதிடம் வாசுத்து சகுனம் அனைத்திற்கும் செலவழித்து பின் தன்னம்பிக்கை பயிற்சி என ஆங்காங்கே அல்லலுருகின்றனர்,
    மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் இத்தகவல்களை அறிந்ததால்தான் முற்சி திருவிணையாக்கும் என்ற் தலைப்பை வழங்கியுள்ளனர். ஐயன் திருவள்ளுவரின் குறட்பாவிலிருந்து தலைப்பை வழங்கியுள்ளதிலிருந்து தன்னம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் பொய்யாமொழியார் வழங்கிய கருத்துக்களை நாம் வாழ்க்கையில் அறிந்துகொண்டாலே வாழ்வில் வெல்லலாம்.

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை                                                                    இன்மை புகுத்தி விடும்.                    (குறள்:616)
 
 உங்களுடைய அனைத்து முயற்சிகளும் மேன்மையைத் தரும். எறும்பிலிருந்து அனைத்து உயிர்களும் முயல்வதைக் காண்கிறோம்.ஆறறிவுள்ள மனிதர்கள் முயன்றால் உலகத்தையே நம் கைக்குள் கொண்டுவரலாம். முயற்சி இல்லையெனில். வறுமையும் வெறுமையும் நம்மைப் பற்றிக் கொள்ளும்.

    வள்ளுவப் பெருந்தகை எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பாருங்கள்.

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றுஅது                                                  தள்ளினும் தள்ளாமை நீத்து                (குறள்:596)

    தாங்கள் சிந்த்னை அனைத்தும் உயர்வாகவே சிந்தியுங்கள். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு சிந்தியுங்கள். அந்த சிந்தனையின் உள் உணர்வுதான் வெற்றி வெற்றி என்பதை உணருங்கள். தன்னம்பிக்கையின் நட்சத்திரமாக இக் குறளைக் கொள்ளலாம். பல துறைகளில் நட்சத்திரங்களை உருவாக்கிய குறள் இக் குறள்.
    சிந்தனைக்குப் பின் செயலிற்கு வள்ளுவர் கூறுகிறார். உள்ளுணர்வோடு கேளுங்கள்.
    எண்ணித் துணீக கருமம் துணிந்தபின்                            எண்ணுவம் என்பது இழுக்கு                (குறள்:467)
    சிந்த்தித்த சிந்தனையை செயலாக்கும் முன் பலநூறு முறை எண்ணித் தொடங்குங்கள். அதன் சிகரத்தை தொடும்வரை மாற்று சிந்தனைக்கு இடம் கொடாதீர்கள் என் ஆணித்தரமாகக் கூறுகிறார்.
    எண்ணித் தொடங்கும் செயலை சரியான காலத்தில் தொடங்குங்கள். என்பதை வள்ளுவர் பெருமான் சொல்லும் குறளைப் பாருங்கள்

    அருவினை என்ப உள்வோ கருவியின்                                                                   காலம் அறிந்து செயின்                    (குறள்:483)

    காலம் என்பதை இராகு காலம் எமகண்டம் என்று எண்ணாதீர்கள், நாம் செய்யும் செயலுக்கேற்ற காலம், விவாசாயி என்றால் உழ, விதைக்க, நாற்றுநட, அறுவடை என அனைத்திற்கும் காலம் உண்டல்லவா. தொழிலகம் எனில் பொருள்கள் தேவைக்கேற்ப உற்பத்தி எனப்தைக் கொள்ளவேண்டும். கல்வி எனில் கல்விக்கான ஆண்டு என்பதைக் கருத்தில் கொள்க. சரியான காலமும் அதற்குத் தேவையான் கருவிகளும் கொண்டு செயலைச் செய்தால்  வெற்றிச் செயலாக முடியும்.

    காலம் மட்டுமல்ல பாதுகாப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்       என பொய்யாமொழியார் பகர்கிறார்.

    ஆற்றாரும் ஆற்றி ஆடுப கடனறிந்து                                                     போற்றார்கண் போற்றிச் செயின்                 (குறள்:493)

    சிந்தனை செயல் காலம் கருவி இதனோடு பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நாம் எத் தொழில் செய்கிறோம் அதற்கு வலிமை சேர்க்கும் வண்ணம் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது பெருந்தொழில் புரிவோர் கூட வாசுத்து என்று பொருளையும் நேரத்தையும் வீணடிக்கின்றனர்.

    அனைத்தையும் கூறிய பேராசான் வள்ளுவர் நம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் நோக்குங்கள்.

    முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்                                 இன்சொல் லினேதே அறம்                    (குறள்:93)

    உவகையோடு முகமன் கூறுதலும், இனிய பார்வை நோக்கலும், மனத்தூய்மையான செயலாக்கமும், இனிய சொற்களைப் பேசும் அறங்கள் வேண்டும் எனக் கூறுகிறார். தன்னம்பிக்கைச் சின்னங்களே யாம் மேற்குறிப்பிட்ட செயலோடு இக் குறளின் குறளின் அறச் சாரங்களையும் நடைமுறைப் படுத்தினால் வெற்றி நிச்சயம் இல்லையா.

    அனைத்தையும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினாலும் யார் எவர் நம் சிநதனைக்கு ஏற்றவாறுசெல்கிறார்களா நிறுவனம் செல்கிறதா என்பதை அறிய ஒருவரை நியமிப்போம்.அவரும் சரியானவரா என அறிய வள்ளுவனார் கூறும் நெறியைக் காணுங்கள்.

    ஒற்(று)ஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்                                               ஒற்றினால் ஒற்றிக் கொளல்                     (குறள்:588)

        ஒருவர் நம் நிறுவனம் கூறித்துக் கூறினாலும் அவரும் சரியாகக் கூறுகிறாரா என ஒற்று அறிந்து உண்மைமையைத் தெளிவுற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    எச்செய்தாலும் இடர்பாடுகள் வருவது இயல்பு. அதை எப்படிக் கடக்கவேண்டும் என ஆசான் வள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள்

    மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற                                                              இடுக்கண் இடர்பாடு உடைத்து                    (குறள்:624)

    பாரத்தைச் சுமக்கும் எருது மேட்டுப் பகுதி வரும்போது தடைகளை மீறி முயன்று முயன்று இழுக்கும் அதைப்போன்று நாம் எடுக்கும் முயற்சியில் சிக்கல் வரும் அதை முயன்று முயன்று வெற்றிகொள்ளவேண்டும்.
    வாழ்வில் வெற்றி பெற்று இந்த வையமும் மகிழ்ச்சியில் திளைக்க குறளாசான் வழங்கும் வழியைப் பாருங்கள்.

    பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு                                                             அகம்நட்பு ஒரீஇ விடல்                            (குறள்:830)

    உலகில் உள்ள அனைத்து மனித குணவேறுபாடுகளையும் குறள்வழி உணர்த்திய பெருமான். நமக்கு நம் குடும்பத்திற்கும் பணிக்கும் கொள்கைகளுக்கும், நிறுவனதிற்கும் உடன்படாத மாந்தரிடத்தும் காணும் வாய்ப்பு வருமானால் முகத்தால் சிரித்து அகத்தில் தெளிவோடு இருங்கள் என உணர்த்துகிறார்.

    இத்தனையும் கூறிய அறிவாசான் வள்ளுவர் ஏற்காத பேதைகளை கண்டிக்கும் கண்டிப்பை கூர்ந்து நோக்குங்கள்

    ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்                                                                      தான்புக்கு அழுந்தும் அளறு.

    செய்யவேண்டிய கடமைகள் விடுத்து, விலக வேண்டிய கயமைகள் விடுத்து தற்பெருமைக்காக ஒருவன் ஒரு செயலைச் செய்வானானால் ஒவ்வொறு காலக் கட்டத்திலுல் சோதனைத் துன்பத்தில் மூழ்குவான் என எச்சரிக்கிறார்.
    வாழ்க்கையின் செழுமைக்குக் வழிகூரிய வள்ளுவர். வாழ்வி எல்லா நிலைகளிலும் தாங்கள் உய்ர்ந்த போது எளிய்வர்களிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என மனிதநேயக் குல விளக்கு குறளார் கருத்தி ஊன்றிக் கவனியுங்கள்.

    சாதலின் இன்னாதது இல்லை இனி(து) அஃது                                                                        ஈதல் இயையக் கடை                            (குறள்:230)

    நாம் எல்லாவகையீலும் மேம்பட்டு இருக்கும்போது உலகில் நம்மோடு வாழும் எளிவர்க்கு கொடுத்து உதவும் ஈகைக் குணம் இல்லையென்றால் சாதலே மேல் எனக் கூறுகிறார்
.
    பெருமக்களே, தன்னம்பிக்கைச் சிங்கங்களே வாழ்வில் வெற்றிபெருவது எளிது வள்ளுவர் கூறிய தடத்தில் பயணித்தால் வெற்றி நிச்சயம்,. என்னுடைய வெற்றியின் பாதை குறள்வழிப் பாதை. இபபாதைதான் தன்னம்பிக்கைப் பாதை. மாறுவோமானால் நம்முடைய தோல்விக்கு நாமே பொறுப்பாகிறோம்.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    என்ற கனியன் பூங்குன்றனார் வரியினை நினைவுறுத்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.               
     
   
 

Tuesday, October 16, 2012

இந்தியத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்த தில்லித் தமிழ்ச் சங்கம்


கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பேற்றுள்ள தலைவர் கிருட்டிண மணியும் பொதுச்செயலாளர் முகுந்தனும் பொருளாளர் அறிவழகனும் மற்றும் இராமமூர்த்தி, நாயுடு, போன்ற பெருமக்களும் நடத்திய மாநாடு மகத்தானது. இந்த மாநாட்டிற்கு அரியதொரு தொண்டாற்றிய தினமணியையும் ஆசிரியர் வைத்தியனாதனையும் தமிழுலகம் என்றும் பாராட்டும்.

முகுந்தனின் செயற்பாடு நாடறிந்த ஒன்று. தில்லியில் தமிழ் அமைப்புகளெல்லாம் இணைந்து செம்மொழிக்காக உண்ணாநோண்புப் போராட்டம் நடத்திய போது அவரது பங்களிப்பு எண்ணி எண்ணி போற்றத்தக்கதாகும்.

சென்ற ஆண்டு பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் அனைத்து மன்றங்களின் கூட்டமைப்பையும் இணைத்து தில்லியில் சந்தர் மந்தரில் ஈழத்தமிழர் வாழ்வுரி,மைக்கு அருமைத்த தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் நடத்திய உண்ணாநொண்புப் போராட்டத்திற்கு முகுந்தனின் ஈடுபாட்டை எண்ணி வியந்தேன். அப்பொது அவர் தமிழ்ச்சங்கப் பொறுப்பில் இல்லை. இருப்பினும் தோழர் கிருட்டிணமூர்த்தி ,இராமமூர்த்தியோடு இணைந்து அவர் தில்லித் தலைவர்கள் அனைவரையும் சந்தர்மந்தரில் கூட்டிய பாங்கு போற்றி மகிழத்தக்கது.

மீண்டும் செயலராகப் பொறுபேற்றவுடன் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு அனைவரையும் அழைத்துவரப் பணித்தார், யான் சுந்தரராசன் கணபதி அவர்க்ளைத் தொடர்பு கொண்டு யானும் மற்ற நண்பர்களும் ஒரே குழுவாகவே செல்லலாம் என்ற கருத்தைக் கூறி தொடர்பு கொண்ட பெருமக்கள் அனைவரையும் 13 8 2012 ஆம்நாள் தமிழ்நாடு தொடர் வண்டியில் பயணச்சீட்டு எடுக்கப் பணீத்தேன். அனைவரும் ஒரு குழுவாக தில்லி நோக்கிப் பயணீத்தோம்.

தொடர்வண்டியில் ஏறும்போதே முகுந்தன் அவர்கள் செயற்குழு உறுப்பினர் குமார் அவர்களீன் எண்ணைக் கொடுத்து தங்களை அழைத்துச் செல்ல வருவார் எனக் கூறியிருந்தார். எங்களோடு அறிஞர் பெருமக்கள் கி.த. பச்சையப்பன், புலவர் அன்புமணி, புலவர் பன்னீர்செலவம், வள்ளாலார் பாமணி குப்புசாமி, சோழன் நம்பியார், சேலம் பாலன், புலவர் பிராபாகரன்,
மாங்காட்டார், திருவள்ளூர் பச்சையப்பன், கவிஞர் வனப்பிரியன், கவிஞர் கருமலைத் தமிழாளன், செந்தமிழ்விரும்பி, திருகுறள் வேம்பையன், ஞானமன்ற பன்னீர்செல்வம். மூத்தகவிஞர் புஞ்சையரசன் உடையார்கோயில் குணா,பெரியண்ணன், இரத்தினசபாபதி, இராமசந்திரன், பழனி,கிரிசந்திரன் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்களோடு சென்றோம்.

    15-8-2012 அன்று காலை புதுதில்லி தொடர்வண்டி நிலையம் அடைந்தோம். தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் குமார், வெங்கடேசன் அன்பொழுக வரவேற்று இரு குளிர்பதன பேருந்துகளில் விக்டர் மந்திர் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். என்னை நன்பர்கள் விருந்தினர் மாளிகைக்கும் இல்லத்திற்கும் அழைத்தனர். யான் மறுத்து எம் இயக்க மக்களோடு இணைந்து படுத்து உறங்கி மாநாட்டில் பங்கேற்றதை பெரும் பேறாகக் கருதினேன். அனைவரும் முதல் நாள் தொடக்க நாள் விழாவிற்கு தமிழ் சங்கத்திற்குச் சென்று அவரவர் மன்றங்களை பதிவு செய்து அரங்கில் அமர்ந்தோம்,

    முன்னாள் குடியரசுத்த்லைவர் ஆபெசே அப்துல் கலாமின் உரை மாநாட்டிற்கு முத்தாய்ப்பாக இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்துவின்  உரை மாநாட்டிற்கு மகுடமாக இருந்த்து. மேதகு காலம் அவர்களின் செயலர் பொன்ராசு அவர்கள் சீனத்தில் திருக்குறளை மொழிபெயர்க்க பெருமகன் எடுத்த முயற்சியை பதிவு செய்தபோது அரங்கின் மகிழ்விற்கு எல்லையில்லை. கருத்தரங்கம் தில்லிவாழ் தமிழர்களும் அமுதமாக இருந்தது.
    தமிழ் இலக்கியச் சிந்தனைகள் முனைவர் தமிழண்ணல் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் பெருமக்கள் இரா.செல்வகணபதி இராம.குருநாதன், தெ.ஞானசுந்தரம், சொ.சொ.மீ.சுந்தரம், திருப்பூர் கிருட்டிணன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் செயலர் முகுந்தனும் வந்திருந்து அமைப்புகளின் பெருமக்களை கருத்துரை வழங்க அழைத்தனர். இந்தியாவின் பெரும்பாண்மையான மாநிலங்களிலிருந்து பொறுப்பாளார்கள் வருகை தந்திருந்தனர். ஒவ்வோரு மாநிலத்திலிருந்தும் வந்து கருத்துரை வழங்கிய பெருமக்களைக் கண்டபோது இந்த மாநாட்டின் வெற்றியை உணரமுடிந்தது.. யானும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாக மன்றத்தின் சாதனைகளைப் பதிவு செய்தேன்.இந்த ஒருங்கிணைப்பு காலத்தின் கட்டாயம். ஆங்காங்கே வாழும் இன்ப துன்பங்களில் பங்கேற்க இந்த ஒருங்கிணைவு மிகப் பெரும் தளமாக இருக்கும்.நித்தியசிறி மகாதேவன் இன்னிசையோடு முதல்நாள் நிகழ்வு முடிந்தது. இரவு விக்டர் மண்டபத்தில் ஒன்றாக உண்டு உறங்கினோம்.

இரண்டாம் நாள் 16-8-2012 அன்று மாநாடு தொடங்கியது. விக்டர் மந்திரிலிருந்து தமிழ் மன்றத்திற்கு வரும் வழியில் வண்டலூரிலிரிந்து வருகை தந்த பெருமாட்டியின் சங்கிலியை பறித்து ஓடிவிட்டான் ஒருவன். யான் பொறுப்பாளர்களீடம் ஒரு ஊர்தி மகளிருக்கும் மூதியோருக்கும் ஏற்பாடு செய்யக் கூறியிருந்தேன். இயலாத காரணத்தால் பறிபோனது. உலக நாடுகள் அனைத்தும் பயணித்த எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தமிழ்ச் சங்கம் அருகில் இயல்பாக நடக்கும் ஒன்று என்று கூறினர், மலேசியாவிலும் நம் மக்களைத்தான் குறிவைப்பார்கள். ஏனெனில் நம்மிடம் உள்ள பொன்னாசையே.

இரண்டாம் நாள் நிகழ்வில் வந்திருந்த அமைப்புகளின் பெருமக்கள் கருத்துரை  வழங்கினர். கருத்தரங்கில் குன்றக்குடி ஆதினத்தின் தவத்திரு பொன்ன்னம்பள அடிகளாரின் பேச்சை எம்மை  நெகிழச்செய்தது. பாராளுமன்றத்தில் மூன்று நிமிடம் வாய்ப்புப் பெற்று ஒன்றரை மணி நேரம் பேச்சை முழங்கி, உலகமே உற்று நோக்கிய  பேரறிஞர் அண்ணாவை நினைவுகூர்ந்தார். அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கிய மாநாட்டில் அண்ணாவை நினைவு கூறாமலே உள்ளனரே என்ற எம்போன்றோர்க்கு அடிகளார் உரை மன நிறைவைத் தந்தது. முன்னாள் துணைவேந்தர் உரை ஆழ்ந்த உரையாக இருந்தது. ஆசான் கோபாலயையர் போன்றோரை நினைபடுத்தின்னார்.
பேராசிரியர் அப்துல் காதரின் தலைமையில் கவியரங்கம். சிறப்பாக நடைபெற்றது. கவிஞர பெருமக்கள் இளங்கோ, ஆண்டாள் பிரியதர்சினி. முத்துக்குமார், முகில்வண்ணன், நெல்லை செயந்தா, உயிரோட்டக் கவிகளை வழங்கினர்.
மூத்த எழுத்தாளர் இராசநாராயணர் 90 ஆம் அகவைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.நாஞ்சில் நாடன், நடிகர் இராசேசு வாழ்த்துரை வழங்கினர்.

 புட்பவனம் குப்புசாமி அவர்களின் இன்னிசையோடு மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்களும் பம்பரமாய் சுழன்ற தமிழ்ச் சங்கப் பெருமக்களும், மாநாட்டிற்கு உலகப் பெருமை தேடித் தந்த தினமணியையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

மாநாட்டில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய நம் நண்பர்கள் வந்திருந்த மிகப் பெரிய அமைப்புகளைக் கூட கலக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பலர் பொங்கி எழுந்தனர். தமிழர் கூடும் மாநாட்டில் சுயநல சக்திகளின் செயற்பாட்டை கண்டித்து தமிழ் தமிழருக்காக பாடுபடும் தகுதியான் அமைப்புகளை கூட்டமைப்பில் ஒருங்கிணைத்தால் இந்தியத் தமிழர்களை ஒருகுடைகிழ் கொண்டு வரலாம்.இந்தப் பெருமை தில்லித் தமிழ்ச்ச்ங்கத்திற்கும் தினமணிக்கும் என்றென்றும் உண்டு.

சென்னையில் புறப்பட்ட நாளிலிருந்து சோழன் நம்பியார் அவர்கள் ஈழத்தமிழருக்காக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அமைப்புகள் அனைவரிடமும் பேசி சந்தர் மந்தரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உள்ளீட்ட  அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஈழத் தமிழரின் வாழ்வுரிமைக்காகவும், போர்க் குற்றவாளி இராசபக்சேவிற்கு இந்தியாவில் நுழையக் கூடாது என்றும்  சந்தர் மந்தரில் 19-9-2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி தமிழகம் திரும்பினோம்