Tuesday, April 26, 2022

 வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில் தமிழ் உணர்வு

தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

பாரதி பாவேந்தர் வழி நமக்குக் கிடைத்த பெருங்கவிஞர் வீறு கவியரசர் முடியரசனார்.. வீறுகவியரசரின் நூற்றாண்டு மிகச் சிறப்பாக உலகெங்கும் கொண்டாடப் பட்டுவருகிறது. அவ்வேளையில் வீறுவகவியசரின் கவிதை குறித்த தொடர்நிகழ்வுகள் அறிஞர்களைக் கொண்டு நட்த்தப் பெறுவது சாலச் சிறந்தது. அதற்குத் துணைநிற்கும்வீறு கவியரசர் அவைக்களப் பெருமக்கள்  அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.குறிப்பாக அண்ணன் பாரிமுடியரசன் அவர்கள் தந்தையின் கவிதைகளை முழுமையாகத் தொகுத்து தமிழ்க்குடிக்கு தந்துள்ளார். பெருமகனாரை நெஞ்சாரப் போற்றுகிறேன். இன்று வீறுகவியரசரின் பாக்களில் தமிழ் உணர்வு எனும் தலைப்பில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்

.ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால்

 அன்னை மொழி பேசுதற்கு நாணு கின்ற 

தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் 

தென்படுமோ மொழியுணர்ச்சி ஆட்சி மன்றில்  

பாங்குடன் வீற்றிருக்குமொழி தமிழே என்று  

பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும் 

ஈங்கதற்கா என்செய்யப் போகின்றீர் நீர் 

இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும் (மு.க.ப.2) 


அன்று பாடிய பாடல் இன்றும் தமிழர்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. வீறுகவியரச்ரின் பாடலகளை பட்டி தொட்டியெல்லாம் கொண்டுசெல்வோமானால் இளைஞர்கள் மொழியுணர்ச்சி பெறுவர். தமிழ் உணர்ச்சி பெற வேண்டுமானால் தமிழை பயிற்றுமொழியாகப் படிக்கவேண்டும் என்ற கருத்தை தம் உணர்ச்சிப் பாவால் உணர்த்தியுள்ளார் வீறு கவியரசர்.அதற்கான விடையும் அவரே தருகிறார். 

தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும் 

தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் 

தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம் 

தமிழ்காக்கப் போர்செய்ய சிங்கம் வேண்டும்

 தாளமிடும் ஓலமிடும் நரிகள் வேண்டாம் 

தமிழ் காக்கப் போர்செய்ய மானம் வேண்டும் 

தாளமுத்து நடராசன் துணிவு வேண்டும் (மு.க.ப.5)

 தமிழ் மொழி காக்க யார் யார் வேண்டும் யார் யார் வேண்டாம் என்று பட்டிய்லிடுகிறார். இறுதியில் தம் இன்னுயிறை தமிழுக்காக நீத்த ஈகவான் தாள்முத்து நடராசன் போன்ற துணிவாளர்கள் வேண்டும் வேண்டும் என முழக்கமிடுகிறார் வீறுகவியரசர். 

அரசியல் மன்றம் ஏற 

ஆண்டவன் திருமுன் நிற்க 

உரிமையோ சற்று மில்லேன் 

உணர்வொரு சிறிது மின்றி  

வருபவன் தனக்கே வாழ்வு 

வழங்கினர் என்றன் மக்கள் 

எரிஎனக் குமுற நெஞ்சம்  

ஏங்கினேன் என்றாள் அன்னை (மு.க.ப.12)

 தமிழ் அன்னையின் வடிவில் அன்னையின் ஏக்கத்தைப் பாடியுள்ளார். வந்தாரை வாழவைக்கும் தமிழர் தம் மொழியை எல்லா நிலைகளிலும் முன்னிறுத்த அவர் ஏக்கம் இக் கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.

 தமிழை அரியணை ஏற்ற தி.மு.க அரசைப் பாராட்டி தமிழில் கலைச்சொற்களை உருவாக்கவேண்டும் துறைதுறைதோறும் துறைதோறும் தமிழ் செழிக்க தம் வாழ்நாளை ஒப்படைத்துள்ளார் வீறுகவியரசர். அரியணை ஏற்றி வைத்த

  அரசுக்கு நன்றி சொல்லித்

 திருமண நிகழ்ச்சி யாவும்

  தெளிதமிழ் கேட்கச் செய்வீர் 

இறைமுனும் தமிழே கேட்க 

இணைந்துநீர் தொண்டு செய்வீர்

 துறைதோறும் தமிழே காணின் 

தூய்தமிழ் ஆட்சி என்போம் (மு.க.ப.14)


 துறைதொறும் துறைதொறும் வளர்வழி சொன்னால் 

துடிக்கிறீர் கண்ணீர் வடிக்கிறீர் மேலும் 

மறைவாக சூழ்சிகள் செய்கிறீர் இந்நாள் 

மாதமிழுக் காக்கங்கள் தேடுவதும் எந்நாள் (மு.க.ப.19) 


வீறுகவியரசரின உடல் பொருள் ஆவி அனைத்தும் தமிழ் தமிழ் என்றே உள்ளதை கவிஞரின் கவிதையை படிப்போர் உணரலாம். நீ பாடுதெல்லாம் தமிழே பாடு எக் கூறுவது நம் உள்ளத்தை உருக வைக்கிறது.  

பாடுவ தென்றால் தமிழினில் பாடு 

பாவையே உளமகிழ் வோடு

வாடிடும் எம்மன வேதனை தீர்ந்திட 

வாழ்வு மலர்ந்திட அன்பு நிறைந்திடப்  (மு.க.ப.20) 

கவிஞரின் இசைச் பாடல் தம் உணர்வை தமிழின் அழகை வேட்கையை உணர்த்துகிறது.


  வானொலியில்  இசையர்ங்கில் தமிழ்தான் உண்டா 

  வளங்கொழிக்கு நிழற்பட்ட்தின் பேச்சில் பாட்டில் 

தேனமிழத்த் தமிழுண்டா பழிக்க்க் கண்டோம்

  தெளிவின்றி ஒன்றிரண்டு தம்ழைச் சொல்லும் 

ஏனென்று கேட்பதற்குத் தமிழர் உண்டா 

எடுத்துரைப்பார்க்கு அத்துறையில் இடமே இல்லை 

கானின்ற அத்திப்பூ பூத்தாற் போலக் 

காண்கின்றோம் ஒன்றிரண்டு தமிழ்ப் படங்கள்  (மு.க.ப.48)


  அன்றே தமிழ் நாட்டின் அவலத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளார் வீறு கவியரசர்.. ஈழத்தில் தமிழர்க்கு நடந்த கொடுமை கவிஞரின் மனதை கொதித்தெழச் செய்ததை  வீறுகவியரசரின் பாடல்களில் காணலாம். விடுதலைப் புலிகளை உச்சி மோந்து பாராட்டுகிறார். காக்க தமக்கு ஒரு படை இல்லையே என கொதித்தெழுகிறார். 


விடுதலைப் புலிக ளாகி 

வெந்துயர் குரிய ராகிக் 

கெடுதலை எதிர்த்து நின்றீர்

 கிளெர்ந்தெழும் நும்மைக் காக்க 

உடலினால் உதவி செய்ய 

ஒருபடை எமக்க்கிங் கில்லை 

தொடுமன வுணர்ச்சி யொன்றால் 

துணைவர் களாகி நிற்போம்  (மு.க.ப.77)


தென்னாட்டுக் கலைகள் எனௌம் கவியில் நம் கலை வண்ணங்களை கவிஓவியமாக்கியிருகிறார். சிற்பக்கலை, கட்டிடக் கலை, இசைக்கலை, நடனக்கலை, ஓவியக்கலை, நெய்தற்கலை, இலக்கியக்கலை, என தமிழர்தம் அனைத்துக் கலைகளையும் பட்டியலிடுகிறார். 

ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் 

தோயும்படி வாழ்வை துய்ந்திருந்தான் அவ்வாழ்வு

 மீண்டும் தழைக்க வியனுலகம்  பாராட்ட 

வேண்டுமீ தென்றன் விழைவு  (மு.க.ப.83) 

 தந்தை பெரியாரின் கண்ணயராப் பணியை தம் கவியால் போற்றிப் புகழ்கிறார். 

பெரியாரை நினையாத தமிழன் இல்லை 

பேசாத புகழாத நாவும் இல்லை 

மரியாதை தமிழனுக்கு வாய்த்த தென்றால்

 மாமேதை பெரியாரின் தொண்டே  யன்றோ 

சரியதா அப்பெரியார் வாழ்நாள் எல்லாம் 

சலியாது தளராது முயலா விட்டால்

நரியாரின் சூழ்ச்சிக்குள் தமிழினத்தார்

 நசுக்குண்டு விழிபிதுங்கி அழிந்து தீர்வர்  (மு.க.ப.125) பேரறிஞர் அண்ணாபற்றி சென்னையி ல் பாடிய கவிதைகள் அண்ணா நம் கண்முன் நிற்பதுபோல் உணர்சிக் கவிதைகள்


 பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் 

பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன் என்றே 

அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான்  

அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் 

சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை 

தாய்மொழிக்குக் காவலந்தான் ஐயம் இல்லை 

விரிவான் உலகெங்கும் தமிழ் மணக்க

 விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான்  (மு.க.ப.133) இன்றும் மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் புகுத்துவற்கு வெளிப்படையாகவே மத்திய அமைச்சர்கள் பேசி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் அப்போதே கவிஞர் பெருமகன் எழுதிய பாடல்கள் பதிலாக அமைகின்றன

 

இந்திமொழி பொதுமொழியா தகுதி என்ன 

இருக்கின்ற தம்மொழிக்கு குயில்கள் கூவும்

கொந்தவிழும் மல்ர்ச்சோலை தமிழர் நாடு  

 கோட்டானுக் கங்கென்ன வேலை என்று

 செந்தமிழும் பிறமொழியும் நன்கு கற்றோர் 

சீர்தூக்கி ந்ன்குண்ர்ந்து மறுத்து ரைத்தார் 

எந்தவழி இந்திமொழி வந்த போதும் 

ஏற்பதில்லை என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்(மு.க.ப.163)

வீறு கவியரசரி பாக்கள் தமிழர் உணர்வுகளை தட்டி எழுப்பி தமிழுணர்வு பெறவைத்த பாக்கள். இன்றைய தலைமுறைக்கும் தேவைப்படுவதை உணராலாம். வாழ்க முடியரசனார் கவிதைகள் ஓங்குக அவர்தம் புகழ்.

(25-4-2022 அன்று வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் நடத்திய  காணொளி விழாவில் வீறுகவியரசர் முடியரசனார் பாக்களில்

 தமிழ் உணர்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

No comments:

Post a Comment