Saturday, March 29, 2014

சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு


சென்னை புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் 16-3-2014 அன்று சிலம்பு மேகலை – ஓர் ஆய்வு எனும் தலைப்பில் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)


           தமிழ்நாடு தேர்வாணையத்தில் அதிர்காரியாகப் பணியாற்றி ஒய்வுக்குப் பின் தமிழ் இலக்கியமன்றம் அமைத்து செம்மையான கூட்டங்களை நடத்தும் ஐயா மகாராசன் அவர்களே ஐயாவோடு  இணைந்து தொண்டாற்றும்  கவிஞர் அ.வே.செல்லப்பனார் அவர்களே ஆய்ந்தறிந்த சான்றோர் பெருமககள் புலவர் கோ. பார்த்தசாரதி புலவர் தட்சனாமூர்த்தி பேராசிரியர் தங்கவேல் அண்மையில் அங்கொவாட் சென்று இப்பகுதிவாழும் அருமைச் சகோதரர் இலக்குவனார் திருவள்ளூவன்  நிகழ்வுக்குட் தலைமைதாங்கும் திருவை பாபு சிறப்பாக கவிதை பாடிய கவிஞர் பெருமக்களே மதிய வெலையில் இலக்கிய உரை கேட்க அமர்ந்திருக்கும் அன்பர்களே உங்கள் அனைவருக்கும் முதற்கண்வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.மகாராசன் அவர்கள் என்னிடம்  தலைப்புக் கேட்டார் நான் உலகளாவிய தமிழர்கள் பற்றிப் பேசுகிறேன் என்றேன். அடுத்த நாள் சிலம்பு மணிமேகலை பற்றிப் பேசுங்கள் சரி என்று கூறி தங்கள் முன் உள்ளேன். நம் இலக்கியங்களை நாம் மீண்டும் மீண்டும் படிப்பதும் கேட்பதும் இன்பம்தானே.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்

       ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் தமிழகத்தில் பகுத்தறிவுக்கு வித்திட்ட காப்பியம். நிமித்தகன் தம்பிக்கே அரசாளும் தகுதி உண்டு என கூறியவுடன் தம் அண்ணன் செங்குட்டுவனுக்கே தகுதி உண்டென துறவறம் மேற்கொண்டு இன்றும் தமிழர்களை அழிக்கும் மூடப் பழக்கமாம் சோதிடத்தை அன்றே புறம் தள்ளி இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம். கண்ணகிக்கு கற்கோவில் கட்டினார் தமையன் சேரன் செங்குட்டுவன் சொற்கோயில் கட்டினார் இளவல் இளங்கோவடிகள்.

        காப்பியத்தின் மாந்தர்கள் கோவலன் கண்ணகி மாதவி என இன்றும் படிப்போர் வியக்கும் வண்ணம் தமிழர்களின் கலை ஓவியமாக மிளிர்கிறது. கற்புக்கரசி கண்ணகி, இளங்கோவடிகள் புகழ்உருவச் சிலைகள் இன்றும் அழியா ஓவியமாக சென்னைக் ப்கடற்கரையில் தமிழரின் பெருமையை பறைசாற்றுகின்றன.

         நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றது இந்நூல்.ம கலைஞர் பூம்புகார் திரைப்படம் உருவாக்கி அனைத்து மக்களிடமும் கண்ணகியின் பெருமையைக் கொண்டு சென்றார் பூம்புகார் கடற்கரையில் சிலப்பதிகாரத்தின் அழியா ஓவியமாக சிலப்பதிகார காட்சிகளை உருவாக்கியுள்ளார்.இன்றும் அழியாக் காவியம் ஓவியமாக உள்ளது.

         காலத்தால் முற்பட்டதும் மிகவும் உலக இலக்கியங்களில் உயர்தரமான இலக்கியம் சிலப்பதிகாரம். அரண்மனைக் காப்பியங்களுக்கு மாறாக துன்பம் நிறைந்த சூழலில் சிக்கித் தவிக்கும் எளிய மக்களின் காப்பியமாக மக்கள் காப்பியமாக மிளிர்கிறது சிலப்பதிகாரம்.
பண்டைய தொல்காப்பிய காலஒழுக்கமும் சங்ககால ஒழுக்கமும் நீக்கம்ற நிறைந்த காப்பியம் சிலப்பதிகாரம்..

         சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் மூவேந்தர் காப்பியமாக உருவாக்கியுள்ளார். நடுகல்காதையில்

        அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை பார்தொழு தேற்றும் பத்தினி யாதலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து, செங்கோல் வளைய உயிர் வாழாமை தென்புலம் காவல் மன்னவர்க்கு அளித்து வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும் வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை வடதிசைமன்னவர் மருங்கின்அறியக்
குடதிசை வாழும் கொற்றவர்க்கு அளித்து” (207-217)

         செங்கோல் வழுவாது ஆண்டால்தான் கற்பு சிறக்கும் என சோழன் வாயிலாகவும்,செங்கோல் வழுவினால் உயிர் வாழமாட்டார்கள் என பாண்டியன் வாயிலாகவும், வேந்தர்கள் தாம் சொன்னசூளுரையை முடித்தாலன்றி சினம் நீங்கார் என்பதை வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாள் என்பது பாடல்.

          இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் புகார் நகரில் உள்ள மருவூர்ப்பாக்கம் பகுதியைப் பற்றிப் பாடியதை நோக்குங்காள் அந்நாளைய தமிழகத்தின் சிறப்பை உணரலாம்.

“கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனார் இருக்கையும்,,
கலம்தரு திருவின்புலம்பெயர்மாக்கள் கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் கண்ணமும் தண்ணருஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வளர் திரிதரு நகரவீதியும்,
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிலும் ஆரமும் அகிலும்
மாசறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்து கடையறியா
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வளை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண வினைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும் (9-27)

         பாடலில் அழகிய யவனர் (சீனர்,அரபு நாடுகள் கிரேக்கம், எகிப்து, உரோம் முதலிய வெளிநாட்டவரை யவனர் என்றும் சோனகர் என்றும் குறிப்பிடுவர்) இருக்கைகள்,நறுமணப் பொருட்கள், பூவும் புகைகும் பொருளும் கூவி விற்கும் தெருக்கள்,பொன்னும். முத்தும்,மணியும், அலங்கார உடை வகைகள்,உண்ணும் பொருட்கள், மீன், இறைச்சி,உப்பு, வெற்றிலை என பல்வேறு பொருள்கள் விற்கும் பகுதிகள் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மருவூர்ப்பாக்கத்தில் இருககும் இடங்கள் என பாடியுள்ளார்.

     மனையறம் படுத்த காதையில் கோவலனும் கண்ணகியும் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை உச்சநிலையில் பாடியுள்ளார்.கோவலன் கண்ணகியை வாழ்த்தும் பாடலில்

”மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடப் பிறவா மணியே என்கோ அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி” (2.73-81)

         என இல்லறத்தில் கோவலன் தன் மனைவி கண்ணகியை பாடும் பாடல் இருவரின் அன்பின் பிணைப்பை இளங்கோவடிகள் நயம்படக் கூறியுள்ளார்.
கோவலனின் இசை ஆடற்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்பதை அழகொளிரப் பாடுகிறார்

கோவலன் கையாழ் நீட்ட அவனும                                                                    
காவிரியை  நோக்கினவுங் கடற்காணல் வரிப்பாணியும்
மாவிதன் மனம் மகிழ வாசித்தல் தொடங்குமன்
பாணரோடு பாணராகக் கலந்து பாடும் பண்பு  கோவல்னுடைய பரந்த உள்ளத்திற்கும் வேற்றுமை காணா கலைஉள்ளத்தையும்  தெரிவிக்கிறது.
மாதவியின் ஆடற்பண்பை மிகச்சிறப்பாகப் பாடுகிறார்.

தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழ்கும் என்றிக்
கூறிய முன்றின் ஒன்று குறை படாமல்
ஏழாண்டு இயற்றியோர் ஈராண்டில் சூழ்கழன் மன்னற்கு காட்டல் வேண்டி
 எனும் அடிகள் மாதவியின் ஆடல் பாடல் அழகு மூன்றிலும்  குறைபடாத அன்னமென் சாயல் மடந்தையை அனைவரும் அறிவர். இவ்வளவு சிறந்த மயிலின் ஆடலை காணாத காளையர் கலையுள்ளம் பெறாத ஏழையர். அரங்கேற்ற நாளில் கோவலன் காணச் சென்றதற்கு இதை விட் என்ன சிறப்பு வேண்டும்.

மாதவி எங்ஙனம் இன்பம் அளித்தால் என்பதை அடிகள் கூறுகிறார்.

இல்லார் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ்சேக்கைப் பள்ளியுட் பொலிந்து
செந்துகிர்க் கோவை வென்றேந்து அல்கூல்
அந்துகில் மேகலை அசைந்தன் வருந்த
நிலவுப் பயன்கொள்ளும் நெடு நிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதற்கு அளித்து ஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி

        முல்லையோடு மல்லிகையும் ஒழிந்த தாழிக் குவளை முதலிய பல பூவும் அவிழ்ந்த பள்ளியிடத்தே பொலிவு பெற்று அழகு ஏந்திய அல்குல் தன்னிடத்தில் துகில் செல்லப்பட்டுச் செந்துகிர்க் கோவையாகிய மேகலை அசைந்தனவாய் இரங்கா நிற்க நிலாவினது பயனைக் கொள்ளுதற்கு காரணாமாகிய உயர்ந்த நிலா முற்றத்தி கண்ணே தன் காதலனுக்கு ஒருகால் கலவியையும் மறுகால் புலவியையும் மாறி மாறி அளித்து எதிரேற்று முயங்கி அம் முயக்கத்தால் முன் குலைந்த ஒப்பனையைப் பின்னும்  வேட்கை விளைக்கும் கோலமாகத் திருத்திய மாதவி என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும்.

வேந்துறு சிறப்பின் விழுச் சீரெய்திய
மாந்தளிர்மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமை நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம் நல்லுரை நாட்டுதும்

கோவலனுக்கும் மாதவிக்கும் ஒரு பெண்குழந்தை பிறந்ததைக் கூறுகிறார்.
கோவலன் மாதவியை விட்டு பிரிந்த பின்னர் கண்ணகியை அவள் எவ்வாறு உயர்வாகக்  கருதினாள் தன் மகள் மணிமேகலையை மாபெரும்  பத்தினியின் மகள் கண்ண்கியின் மகள் என்று கூறுவதையும் கேட்கிறோம்.

     கண்ணகியுடன் இணயற்ற வாழ்க்கை வாழ்ந்த கோவலன் மாதவியிடம் சென்ற பிறகு கண்ணகியின் நிலையை அந்திமாலைச்சிற்ப்பு காதையில் வரும் பாடலில்

”அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை மூன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினல்
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச்
செங்கயல் நெடுங்கெண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல்
நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி” (47-57)

என காலில் சிலம்பு, இடையில் மேகலை, மார்பில் குங்குமம்,காதில் குழை,கண்களில் மை,நெற்றியில் பொட்டு ஏதும் இல்லாமல் சிரிக்கும் அழகை இனிக் கோவலன் அகாணமுடியாத துயர நிலையில் இருந்ததை நயமாகப் பாடியுள்ளார். கணவனைத் தேடிச்செல்லும் கண்ணகி பற்றி ஆயர் குலப் பெண் மாதிரிக்கு கவுந்திஅடிகள் சொல்வதாக வரும் பாடலில்

”கற்க்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு”

என கண்ணகி போன்ற பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில் மழை பொய்க்காது பெய்யும் ,வளம் கொழிக்கும் செங்கோலும் நீதிதவறாமல் இருக்கும் எனப் பாடியுள்ளார்.

குன்றக் குறவையில் வேங்கை மரத்தின் நின்று வானுலகம் சென்ற கண்ணகியைப் பாடுவதாக பாடும் பாடும் பாடலில்

”சிறுகுடி யீரே சிறுகுடி யீரே தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே நிறங்கினர் அருவிப் பறம்பின் தழ்வரை நறுஞ்சினை வேங்கை நன்னிழழ் கீழ்ஓர் தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின் கோடுவாய் வைம்மின் கொடுமணி இயங்குமின் குறிஞ்சிப் பாடுமின் நறும்புகை எடுமின் பூப்பலி செய்மின் காப்புக்கடி நிறுமின் பரவலும் பரவுமின் விரைவுமலர் தூவுமின் ஒருமுலை இழந்த நங்கைக்கு[ப் பெருமழை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”

என கற்புக்கரசி கண்ணகியை தெய்வமாகவே குன்றவர் மொழியாக இளங்கோவடிகள் பாடிச் சிறப்பிக்கிறார்.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண்மாகச்
சிலப்திகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்
என்று இளங்கோவடிகள் கூற சாத்தனார்

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய
அடிகள் நீரே அருளுக

என ஊக்கமளிக்க காப்பியம் ஒப்பற்ற காப்பியமாக சிலப்பதிகாரம்  வாழ்கிறது.

சாத்தனாரின் மணிமேகலை

ஐம்பெரும்காப்பியங்களில் சிலப்பதிகாரம் சிந்தாமணி வளையாபதி இம்மூன்றும் சமணக் கொள்கையை வலியுறுத்தும் காப்பியங்கள். மணிமேகலை குண்டலகேசி புத்த சமய்அக் கொள்கைகளை வலியுறுத்தும் காப்பியங்களாகும். இன்று நமக்குக் கிடைத்திருப்பவை சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலையாகும். சிலப்பதிகாரம் பிறசமய வெறுப்பின்றி சமண சமய கொள்கையைக் கூறுகின்றது. மணிமேகலை பிறசமயங்களைச் சாடி புத்த சமயமே உயர்ந்ததெனக் கூறுகிறது.

மணிமேகலையில் உ:ள்ள கருத்துக்கள் கொள்கைகள் புத்தசமய தத்துவங்கள் தமிழ்கத்தின் நிலை தமிழரின் வாழ்க்கைமுறைகள் அரசியல் போன்றவற்றை காப்பியம் படிப்போர் உணரலாம்.

மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் அன்றே சாதிவேற்றுமையைக் கண்டிக்கிறார். அக்காலத்திலிருந்த வருண பேதத்தையும் காலக் கண்ணாடியாக காட்டுகிறார்.  மணிமேலையை 30 காதைகளாகத் தந்துள்ளார் சாத்தனார்.

அங்கைப் பாத்திறம் ஆபுத்திரன் பாற்
சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்
மற்றப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக் க்வ்வூர்ப்  பெருந்தொரு அடைந்த்தும்
பிச்சையேற்ற பெய்வளை கடிஞையிற்
பத்தினிப் பெண்டிற் பார்த்துனர் ஈத்த்ததும்
காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
கொங்கலர் நறுந்தார்க் கோமகள் சென்றதும்

அகங்கையிலிருந்து பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரன் கலைமகள் அளித்தவாறும் மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தை கையிலேந்தி பிச்சையேற்றர்க்கு அந்நகரின் பெருந்தெருவினை அடைந்ததும் பிச்சையேற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாள் பலருக்கும் பகுத்துண்ணும் உணவை இட்டதும் அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சைமகளின் வயிற்றிலுள்ள அனைத்தீ என்னும் தீராப் பசியை அழித்து உலகவறவி எனெனும் ஊரம் பலத்தையடைந்ததும் தேன் பொறுந்திய நறிய மலர் மாலையுடைய அரச குமரன் மணிமேகலை உஅல்கவறவியை அடைந்தாள் என்று அங்கு சென்ற்தும் கூறுகிறார்.

சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றியதும், அந்நாளைய தனிதனி சுடுகாட்டு சாமாதிகள் பற்றியும் காலக் கண்ணாடியாக விளக்குகிறார்.. காப்பியத்தில் அக்கால சுடுகாட்டை விளக்கும் சில வரிகள்

சுடுவோர் இடுவோர் தொடு-குழிப்படுவோர்
தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கழிப்போர்
இரவும் பகலும் இழிவுடன் தரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சுமையும்
எஞியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி
நெஞ்சு நருக் குறூஉம் நெய்தல் ஓசையும்

பிணங்களைச் சுடுவோரும் வாளையிடுப் போவோரும் தோண்டப்பட்ட குழியில் இடுவோரும் தாழ்ந்த இடங்களி அடைத்து வைப்போரும் என  சக்கரவாட்டக் கோட்டத்தைப்பற்றிப் பாடுகிறார் .
முற்பிறப்பு நம்பிக்கை இருந்ததையும் மணிமேகலை படிப்போர் உணரலாம் சில வரிகள்

இன்னும் கேளாய் இலக்குமி  நீ நிம்
தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்கநாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டணன்

என மணி மேகலா தெய்வம் தோன்றி இரகுலனே உதய குமாரனென்றும் தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியும் என்று கூறி  மூன்று மந்திரங்களை கூறி மற்ந்தனள்.

அமுத சுரபி வரும் நாள் நட்சத்திர நம்பிக்கையும் அந்நாளில் உள்ளது அறியலாம்.

ஈங்கு இப்பெரும் பெயர்ப்பீடைகை முன்னது
மாலருக் குவளையும் நெய்த்லு மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி
இருதுஇள வேனிலில் எரிகதி இடபத்து
ஒருபதி மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போத்தித்த்லை வனோடு பொருந்தித் தோன்றும்
ஆபுத்திரன் கை அமுத சுரபி எனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்

இருபத்தி மீன்களுள் கார்த்திகை முத்லாகாக் தொடங்கும் பதின்மூன்றும் கழிந்தபின் பதிநான்காவது இருபத்தேழு நடுமீனுமாகிய விசாகையன்று அமுதசுரபி வெளிவரும் எனக் கூறுகிறார்

பொய்யாமொழியார் வள்ளுவர் குறளை சாத்தனார் தம் காப்பியத்தில் கையாளுகிறார். மருதி என்ற பெண்ணின் குரலாக வரும் வரிகள்

மாபெரும் பூதம்  தோன்றி மடக்கொடி
நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்
தெய்வம் தொழா அவள் கொழுநன் தொழுஎழுவாள்
பெய்யெனப் பெய்யும்  பெருமழை என்ற அப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்

மணிமேகலை அட்சயபாத்திரம் மூலம்உணவு வழங்குவதையே மையமாக வைத்து வைத்து உன்னதக் காப்பியம். ஆபுத்திரன் பிறப்பும் வறுமையும் வறுமையிலும் தாம் பெற்ற உணவை எழைஎளியோருக்கு வழங்கிய தன்மையும் பின் அட்சய பாதிரம் பெற்று பசித்தோர்க்கு  உணவு வழங்கி பின் மணிமேகலா தெய்வம் க்கூற்றுப்படி அட்சயபாத்திரம் மணிமேகலை பெற்று உலகப் பசியை நீக்கிய ஒப்பற்ற காப்பியம். சிறைக் கோட்டத்தையும் அறக்கோட்டமாக ஆக்கிய மாண்பை மணிமேகலையின் மாண்பை செப்புகிறது மணீமேகலை காப்பியம்.

அருமைப் பெருமக்களே காப்பியம் முழுமையும் உரை நிகழ்த்துவோர் முன்னிலையில் யான் கற்றவற்றை தங்கட்கு கூறியுள்ளேன் தமிழ் இலக்கியங்களைப் பயிலுங்கள் நம் தலைமுறை செழித்து வாழும் என்று கூறி விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment