Saturday, March 29, 2014

திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா


(1-3-2014 அன்று சென்னையில் திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்களின் முத்துவிழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை.)

           திருக்குறள் சான்றோன் திருக்குறள் பாட்கரன் அவர்கட்கு முத்துவிழா என்பது மகிழத்தக்க வாழ்க்கையாகும். கல்லூரித்துறை இணை இயக்குநராக இருந்து பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய பெருமகன். தம் மகன் பொறிஞர் கருணாகரன் மறைவுக்குப் பின் தம் இல்லத்தையே திருக்குறள் நூலகமாக மாற்றி உலகத்திருக்குறள் தொண்டை திறம்பட ஆற்றுகிறார். இந்த நிகழ்வுக்கு நீதியரசர் அவர்கள் பங்கேற்று அவரை வாழ்த்தி வணங்கி பெருமைப் படுத்தியுள்ளார். தலைமைதாங்கும் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்க இராமலிங்கம் அவர்கள் திருக்குறள் கருத்துக்களைக் கூறி நெகிழ வைத்துள்ளார். அழைப்பிதழ் யாருக்கும் கிடைக்கா நிலையிலும் பெருமக்கள் திரளாக கூடியுள்ளீர்கள் இதுவே அவரின் திருக்குறள் தொண்டிற்குக் கிடைத்த சிறப்பாகவே கருதுகிறேன்.

         இன்று நாம் நிற்கும் இந்த அண்ணாநகரில் உள்ள கட்டிடத்தின் மதிப்பு பல கோடியைத்தாண்டும் இருப்பினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் திருக்குறளுக்காக ஒப்புவித்த பெருமகனை நெஞ்சாரப் போற்றுகிறேன்.

         துன்பம் உறவரினும் துணிவாற்றி செய்க
        இன்பம் பயக்கும் வினை (669)

என்ற குறளுக்கு சான்றாக வாழ்பவர் திருக்குறள் சான்றோன் பாட்கரன் அவர்கள்.. யான் மலேசியா சென்றிருந்த பொழுது திருக்குறள் கருணாகரன் நூலகத்தை அறிந்த அருளாளர் ஈப்போ நடராசன் அவர்கள் சென்னை வந்து தம் துணைவியரோடு இந் நூலகத்தைக் கண்டு தம்மை மனமுவந்து உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். ஐயா பாட்கரனின் பேருழைப்பு உலப் புகழ் பெற்றுவருவதை குறிப்பிடுவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன்.

இளைஞர்களை ஊக்குவிப்பதிலும் தமிழ்த்தொண்டுகளுக்கு ஊக்கமளிப்பதிலும் திருக்குறள் பாட்கரனார் முன்னணியில் உள்ளார். அருமைத் தொண்டர் பாவாணர் கோட்ட நெடுஞ்சேரலாதன் தந்தை பெரியாரைப் பற்றி ஐயா அவர்கள் உரையாற்ற முரம்புக்கு அழைத்தமையையும் அரிய பொழிவையும் போற்றி மகிழ்ந்தார். அவர் சென்னைவந்தபொழுது முரம்பு பாவாணர் கோட்டத்திற்கு பல பெருமக்களிடம் அழைத்துச் சென்று நிதிபெற்றுத் தந்தமையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

ஐயா அவர்ளிடம் யார் வந்தாலும் திறம்பட உதவுவதில் தீரர். அண்மையில் யானும் பேராசிரியர் அவர்க்ளும் ஆற்காடு திருக்குறள் மண்டல மாநாட்டில் பங்கேற்றோம். திரும்பி வரும்போது இரவு நேரமாகையால் பேருந்து கிடைக்காமல் கடினப்பட்டு வந்தோம். தம் முதிய வயதிலும் பல்வேறு இன்னல்களுக்கிடையில் சொற்பொழிவாற்றி திருக்குறள் நெறிபரப்பும் சான்றோன் பேராசிரியர் பாட்கரன் அவர்கள்.

என் இளவல் முனைவர் ஆண்டவர் அவர்கட்கு சப்பானில் பங்கேற்க ஒரு அழைப்பு வந்தது. அந்த மாநாட்டில் ஆண்டவர் பங்கேற்க உற்றுழி உதவி இளைஞர்களை ஊக்குவிக்கும் பெருமகன் பேராசிரியர் பாட்கரன்.

சிங்கையிலே திருகுறள் சான்றோன் முனைவர் இ.வி, சிங்கன் அவர்கள் அரும்பெரும் தொண்டாற்றிய பெருமகன். உலகம் முழுமையும் திருக்குறள் உரை கதை மொழிபெயர்ப்பு என சாதனை புரிந்த பெருமகன். சிங்கை செராங்குன் பகுதியில் உள்ள அவர்து நிறுவனத்திற்கு சிங்கை செல்லும்போதெல்லாம் செல்வேன். அங்கு திருக்குறள் மொழியாக்க நூல்கள் பலவற்றைக் கண்டேன். சீனத்து மொழிபெயர்ப்பை கருணாகரன் நூலகத்தைக்கூறி கேட்டிருந்தேன். ஒரு படி உள்ளதாகவும் அடுத்து தமிழகம் வரும்போது தருவதாகக் கூறினார். அதற்குள் அவர் காலமாகிவிட்டார்.

நான் தமிழாகரர் ஆறு அழகப்பனாரோடு பர்மா சென்றிருந்தபோது அவர் திருக்குறள் பர்மீய மொழிபெயர்ப்பை வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம் திரட்டி இந்நூலகத்தில் வைக்க ஒத்துழைப்பை நல்குவேன்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
        இடும்பை படாஅ தவர்    (623)

       என்ற குறளுக்கு சான்றாக இடும்பையை வென்று வாழும் பேராசரியர் பாட்கரனார் நூற்றாண்டைக் கடந்து வாழ நெஞ்சாரப் போற்றுகிறேன்.

No comments:

Post a Comment