Tuesday, January 18, 2011

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

பெருமகனார் பற்றி பெருமக்கள்

பெருமகனாரைப்பற்றி அறிஞர் பெருமக்கள் கூறும் கருத்துக்களை காணும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

புலவர் இலால்குடி அரங்கசாமி அவர்கள் தம் பாடலில்

நின் நெடிய உருவெங்கே நெற்றிதிரு
மண்ணெங்கே நெடுஞ்சேன் கேட்கும்
நன்குரலின் ஒலியெங்கே நற்றமிழின்
சுவைகூட்டும் நாவும் எங்கே
தன்னடக்கப் பணிவெங்கே தாயொக்கும்
அன்பெங்கே எங்கே என்று
மன்னுபுகழ் ஐயாவே மனமழிந்து
யாமரற்ற எங்கே சென்றாய்

வித்வான் இராமசாமிக் கோனார் அவர்கள் தம் பாடலில்

தமிழன்னை யுளங்களிக்கத் தனித்தமிழில் `
பலநூல்கள் தந்தாய், தூய
அமிழ்தமென மாணவர்கள் அகங்குளிர `
அரியவுரை யாற்றி, நல்யாழ்
இமிழ்தல்போல் இசைமிளிர இனியதமிழ்ச்
சுவையூட்டும் இனியாய்! திருமண்
உமிழ்சுடர்போல் ஒளிவீசும் உன் முகத்தை
யார்மறப்பார் அந்தோ! அந்தோ!

புலவர் த.கி.குப்புசாமி ஆழ்வார் தம் பாடலில்

முன்னமோர் அகத்தியனே முதுபொதியில்
இருந்துதமிழ் முழங்கச் செய்தான்
இன்னமோர் அகத்தியனாய் சிராமலையில்
இருந்துதமிழ் இலங்க வாழ்ந்தாய்
பன்னருஞ்சீர் பதம்சென்று பழகுதமிழ்
வளர்த்திடவே படர்ந்தா யாயின்
இன்னுமே இவணிருந்துன் றனைநினைந்தே
இணைந்திடுவல் இயல்போ ஐயா!

மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் கருத்து

கோனார் பிறர் மனம் நோவாவாறு பக்குவமாக எதையும் சொல்லும் நாகரீகப் பண்புடையவர். பழைய மரபும் புதிய மரபும் தழுவியவர். எப்பணியிலும் இறைப்பணியும் தமிழ்ப்பணியும் மாறாதவர்.

பம்பாய் பாரதி கலாமன்ற செயாலாளர் இராமன் அவர்கள் தம் கருத்து

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மன்றத்தின் விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியதை இன்றும் பம்பாய் மக்கள் மனத்திலிருந்து மாறவில்லை.ஒரு பெரிய தமிழ் மேதையை ஒரு தமிழ்க் கடலை இழந்து விட்டோம்.

அறிஞர் கீ. இராமலிங்கனார். அவர்கள் தம் கருத்து

அவர்களது அன்பு கனிந்த மொழிகளை என் செவிகுளிர இனி எப்போது கேட்க முடியும் என்னிடத்தில் உண்மையான உழுவழன்பு கொண்டிருந்தார்களே என் உடன் பிறந்த இளவல் போல் என் நலன்களை அறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ளும் வழிவகைகளைச் சொல்வார்களே! இனி யார் எனக்கு அவர்களது நிலையிலிருந்து அன்பு செய்யக் கூடியவர்கள்.

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் கருத்து

கோனாரையா அவர்கள் பண்பால் உயர்ந்தவர் . எவர் மனமும் கோணாதவாறு நடந்து கொள்ளும் சான்றோர். எத்தனையோ பேருக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய உத்தமர். எல்லோருக்கும்உதவுகின்ற தூய மனம் படைத்த கருணைவள்ளல். துவக்க காலத்தில் எனக்குப் பாடல் எழுதப் பழகித்தந்து அன்போடு குற்றம் குறைகளைத் திருத்திய ஆசான்.


அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 10, புது பங்களாத் தெருவிலிருந்து அவர் மறைவிற்கு 1969ஆம் ஆண்டு எழுதிய மடல்,

அன்புச் சகோதரருக்கு, வணக்கம் பல. தந்தையார் காலமான செய்தி அறிந்து வருந்தினேன், சென்ற மாதம் அங்கு வந்த சமயமும் அவரைச் சந்திக்க இயலவில்லை. தமிழன்னைக்கு ஈடு செய்யமுடியாத இழப்பை எவ்வாறு ஈடு செய்ய இயலும்!

முடிவுரை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (60)

பெருகானாரின் பொன்னுரையில், இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் மனிதனேயாயினும் வானுலகில் வாழும் தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

என்ற பொருளுக்கினங்க பெருமகனார் அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்துதமிழுக்கும் தமிழருக்கும் சிறந்த தொண்டாற்றியவர். பெருமகனார் என்றும் தமிழர் நெஞங்களில் நீக்கமற நிறைந்து வாழ்ந்து வருகிறார்.

வாழ்க பெருமகனாரின் புகழ்! தொடர்க திருக்குறட் தொண்டு!

No comments:

Post a Comment