Tuesday, January 18, 2011

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

(கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர், ஆசிரியர்,தமிழ்ப்பணி

(15-1-1911 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த திருவள்ளுவர் மைய 5ஆம் மாநாட்டில் கவிமுரசு திருவள்ளுவர் வழங்கிய ஆய்வுக் கட்டுரை)

முன்னுரை

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் தமிழ்ப்பணியை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவுறுகிறது. தமிழ்ப்பணியில் எழுதாத எழுத்தாளர்கள் இல்லை என்ற பெருமகிழ்ச்சி எனக்கு உண்டு. அரிய சான்றோர்களை தந்தையார் அவர்கள் அட்டையில் வெளியிட்டு வாழ்த்துப்பா பாடியும் பதிவு செய்வார்கள். அந்தப்பதிவுகளெல்லாம் வரலாற்றுச் சுவடுகள்தானே..

திருக்குறளுக்காக தன் வாழ்நாளையே ஒப்படைத்த அருள்மாமுனிவர் கு. மோகன்ராசு அவர்கள் திருக்குறள் தூதர்கள் மூலம் திருக்குறளுக்கு தொண்டாற்றிய 133 பெருமக்களை தேர்ந்தெடுத்ததே பெரும் பணியாகும். அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளையும் தொண்டுகளையும் வராலாற்று ஆவணமாக்குவது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வரிசையில் ஐயன் பெருமாள் கோனார் அவர்களின் வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்துவது எமக்கும் பெரும் பேறாகும். இந்தப் பதிவுக்கு துணை நின்ற மதுரை தொழிலதிபர் சடகோபன் திருச்சி பேராசிரியர் அரங்கநாதன் ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

தோற்றம்

தமிழகத்தில் தமிழ் என்ற பாடம் வரும்போது கோனார் தமிழ் உரை புகழ் பெற்ற உரை நூலாகும். இந்த உரை நூலின் வாயிலாகவே கோனார் என்றால் தமிழ் என்ற அளவிற்கு புகழ் பெற்ற சொல்லாகும். இப்பெருமைக்குரிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் திருவள்ளுவர் ஆண்டு1936 ஆவணித் திங்கள் 26ஆம் நாள் (5-1-1905) பிறந்தார். பெருமகனாரின் பெற்றோர் திருவேங்கடக் கோனார் அகிலாண்டத்தம்மையார். சங்கத்தமிழ் வளர்த்த மதுரையம்பதியில் பிறந்த பெருமைக்குரியவர்.

இளமைப்பருவம்

பெருமகனார் இளமையில் தம் அன்னையை இழந்தார். திருச்சியில் தம் பெரிய அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார். அம்மையாரின் ஊக்கமே படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. தொடக்கக் கல்வியை ஆரியன் உயர் ஆரம்பப் பள்ளியில் படித்தார். படிக்கும் காலத்திலேயே திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் மடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அடிகளார் அவர்கள் கந்தர் கலிவெண்பா நூலை பெருமகனாருக்கு வழங்கினார். இந்த நூலை மனனம் செய்து மகிழ்ந்த வண்ணம் தமிழ் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். தேசிய உயர்நிலைப்பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். அங்கு ஆசிரியப் பெருமக்கள் தி..பொ.பழனியப்பன், சீத்தராமன் தமிழாசிரியர்களாக இருந்தனர் ஆசிரியர்கள் தனிப்பற்று ஏற்படும் வகையில் பெருமகனார் தமிழில் சிறந்து விளங்கினார்.பள்ளி இறுதித் தேர்வில் உயர்ந்த மதிபெண்கள் பெற்றார். அன்றியும் மதுரைத் தமிழ்ச்ச்ங்கம் நடத்தி வரும் தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.

தோற்றம்

பெருமகனார் பணிவுடைமையும் இன்சொல்லையும் அணியாகக் கொண்டவர். பக்தியும் அருட்பண்பு மிகுந்த பார்வையும் செம்மாந்த மிடுக்குமுடையவர். அகன்ற நெற்றியும் அதனை அலங்கரிக்கும் எழில்மிகு திருமண்ணும் அணியப் பெற்றவர். வைணவத் தோற்றப் பொழிவினர். தூய வெள்ளாடை அணிந்து வெள்ளுடைப் பெரும் பேராசிரியராகப் உலகை வலம் வந்தவர்.

உரையாசிரியர்

பெருமகனாரின் கல்வித்தகுதியை அறிந்த திருச்சி சூசையப்பர் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் தமிழாசிரியராகப் பணியமர்த்தினர். பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே 1926-இல் மதுரை தமிழ்ச் சங்க பண்டிதர் தேர்வில் வெற்றிபெற்றார். பெருமகனார் தாம் பயிலும் பாடங்களுக்கு ஏற்ற உரைக் குறிப்புகள் எழுதுவதையும் வினாவிடைகள் எழுதிப் படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.தொடர்ந்து தமிழ் நூல்களைப் படித்து சென்னைப் பல்கலைக் கழக தனித்தமிழ் வித்வான் தேர்வு எழுதி 1933இல் வெற்றிபெற்றார். பள்ளி வேலை, பல்கலைக் கழகப் படிப்பு, பொது நிகழ்வுகள் என பல்வேறு பணிகளுக்கிடையில் பள்ளியிறுதி மாணவர்களுக்குரிய தமிழ்ப்பாட நூலுக்கு வினா விடை எழுதி வெளியிடலானார். மாணவரிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் உரைநூல்களையும் வெளியிட்டார். தம் சொந்த முயற்சியிலேயே 15 ஆண்டுகள் வெளியீடு செய்தார். மாணவர்களுக்குத் தமிழைப் ஆழ்ந்து படிப்பிக்கும் தமிழாசிரியராகவும் உரை நூல்களை தாம் பிறவெளியிட்டதன் மூலமாகவும் வெளியிட்டு உரையாசிராகவும் சிறந்து விளங்கினார் பெருமகனார்.

பேராசிரியர்

1942ஆம் ஆண்டு புனித சூசையப்பர் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக பெருமகனார் பொறுப்பேற்றார். கல்லூரியில் 1966ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் திறமையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். பேராசிரியப் பணியில் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் போற்றிப் புகழ்ந்தனர். கல்லூரிப் பாடப் புத்தகங்களுக்கும் உரை எழுதி பெரும் புகழ் பெற்றார்.

கோனார் மாளிகை

பெருமகனாரின் உரையின் சிறப்பை உணர்ந்த செ.மெ.பழனியப்ப செட்டியார் உரைநூல்களை அவரது பழனியப்பா நிறுவனமே வெளிட்டது. கோனார் தமிழ் கையகராதி எனும் அகராதி நூலும், திருக்குறள் தெளிவுரை நூலும் வெளியிட்டுள்ளனர். இன்றும் பெருமகனாரின் நூல்கள் வெளிவந்து உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. பழனியப்ப செட்டியார் அவர்கள் தம்முடைய கட்டிடத்திற்கு கோனார் மாளிகை என்று பெயர் சூட்டியுள்ளார், மதுரை சீனிவாசக் கோனார் வாசன் பதிப்பகத்தின் மூலம் இளங்கலை வகுப்பு தமிழ் உரை நூலை வெளியிட்டுள்ளார்.மதுரை பல்கலைகழக தமிழ்ப்பாட நூல்களின் உரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பெருமகனார் ஆய்ந்தறிந்த தமிழ்ப் பெருமக்கள் பலரை தம்மோடு இணைத்து பெரும்பணி புரிந்துள்ளார்.

சொல்லேருழவர்

பெருமகனார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.ஆய்ந்தறிந்த புலமையை தமிழ் மக்களுக்கு வழங்கிய பேருரையாளர்.அவரது சொற்பொழிவைப் பற்றிக் குறிப்பிடும் புலவ்ர் த.கி.குப்புசாமி ஆழ்வார் ”சாந்தமல்கும் தடம் பொதியச் சைலத்திருக்கும் தமிழ்க்கோதாய் என்று இசையுடன் தொடங்கும்போதே அவையினர் தேனுண்ட வண்டென மயங்கிக் கேட்பர். ஒழுங்கு முறையுடன் உரைக்கும் திறனுடன் அழகாய் அடுக்கடுக்காய் சொற்பெருக்காற்றி தொகுப்புரை கூறி முடிக்கும் இவர் திறனை எவரும் பாராட்டுவர்.” என குறிப்பிட்டுள்ளார்.
அறிவும் திருவும் புகழும் கற்போர் நெஞ்சம் காமுறப் பயிற்றும் திறனும் கொண்டவர் பேராசிரியப் பெருமகன்.தேர்வினை குறிக்கோளாகக் கொண்டு தமிழில் தேர்ச்சி பெறப் போராடும் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடங்களை ஆர்வமுடன் கற்கும் முறையிலும் வெற்றிபெறுவதற்கேற்ற வகையிலும் உரைநூல் அளித்தமையால் தமிழ் மாணவர்களீடம் இன்றும் தனியிடம் பெற்று விளங்குகிறார். மாணவர்கள் “நான் கோனர் மாணவன்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வர்.

பாராட்டுகள்

பெருமகனாரின் தமிழ்ப் பற்றையும் தொண்டினையும் சிறப்பித்து ஆனந்தவிகடன் இதழ் ஆசிரிய இரத்தினங்கள் என்ற தலைப்பில் பாராட்டுரை வழங்கிப் படம் வெளியிட்டது. உறையூர் வாகீச பக்த சன சபையினர் மதுரை திருஞானசம்பந்த சாமிகள் மடத்தின் அருளாளரைக் கொண்டு சொற்பொழிவுத் தொண்டினை போற்றும் முறையில் பெருமகனாருக்கு “செம்பொருட்காட்சியர்” என்னும் பட்டத்தை வழங்கினர். பெருமகனாரின் சமயத் தொண்டினை பாராட்டி காஞ்சிகாமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சாமிகள் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி “திருப்பாவை ஆராய்ச்சி மணி” எனப் பட்டம் வழங்கி் சிறப்பித்தனர். மார்கழித் திங்களன்று திருச்சி வானொலி நிலையத்தில் திருப்பாவை பாடி விளக்கவுரை வழங்கியதை கேட்டு மகிழ்ந்து பாராட்டியவர் பல்லாயிரக் கணக்கினர்.

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு
என்ற குறளுக்கு ஒப்ப தான் சேர்த்த பொருளையெல்லாம் தம்மைச் சார்ந்தோர்க்கு வழங்கிய அறிஞர்களை போற்றி ஆதரித்தார். தம் தமிழ்த் தொண்டினால் மாணவர், ஆசிரியர், சமய அன்பர்கள், தமிழுலகம் பயனுறுமாறு அருளாளராகவும் ,உரையாசிரியராகவும், நூலாசிரியராகவும், சொற்பொழிவாளராகவும் தலைசிசிறந்து விளங்கினார்.

திருக்குறள் பொன்னுரை

பெருமகனார் அவர்கள் திருக்குறள்பால் நீங்காத பற்றுடையவர். திருக்குறளை வாழ்வியல் நெறிகளை மக்களின் மனத்தில் நிலைபெறச் செய்தவர். செல்லும் இடமெல்லாம் திருக்குறள் கூறி எளிய விளக்கத்தைக் கொடுத்த வல்லமை பெற்றவர். திருவள்ளுவரின் 1330 குறளுக்கும் எளிய உரையாக எழுதி பொன்னுரையாக் வெளியிட்டுள்ளார். திருக்குறள் கோனார் பொன்னுரை நூலை பனிரெண்டு மக்கள் பதிப்பாக பழனியப்பா நிறுவனம் இன்றும் வெளியிட்டு வருகிறது. . பெருமகனார் பிறந்து நூற்றைந்து ஆண்டுகளாகியும் இன்றும் அவர் புகழ் பரவும் வண்ணம் அவரது படைப்புகள் உள்ளன.

பெருமகனார் அவர்கள் அதிகாரங்களின் தலைப்புகளையே படிக்காத பாமரரும் புரியும் வண்ணம் எழுதியுள்ளார். அந்த தலைப்பின் விளக்கத்தைப் படித்தாலே உட்கரு புரியும் வண்ணம் உள்ளது. வலிஅறிதல் என்ற அதிகாரத்தை ”வினைவலி முதலியவற்றை அறிதல்” எனக் கூறுகிறார். சுற்றம் தாழல் எனும் அதிகாரத்தை ”சுற்றத்தினரைத் தழுவிக்கொள்ளுதல்: எனக் எளிமையாகக் விளக்கியுள்ளார். சான்றாண்மை எனும் அதிகாரத்த ‘பல குணங்களாலும் நிறைந்து அவற்றை ஆளும் தன்மை” என பெரும் பேராசிரியர் மக்கள் மொழியில் வழங்கியுள்ளார்.இன்பத்துப் பாலில் குறிப்பு அறிவுறுத்தல் என்ற அதிகாரத்திற்கு ”தலைவன், தலைவன், தோழி என்ற இவர்கள் குறிப்பினை ஒருவருக்கு அறிவுறுத்துதல்” என சொற்கள் அதிகமானாலும் மக்களைத் தெளிவுறுத்தம் வண்ணம் தெளிவுரை வழங்கியுள்ளார்.

பெருமகனாரின் எளிய பொன்னுரையில் சில

அறத்தாறு இதுவென வேண்டா: சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (37)

அறத்தின் பயன் இத்தன்மையுடையது என்று சொல்ல வேண்டுவதில்லை.. பல்லக்கை சுமந்து செல்பவனுக்கும் அதன்மீது ஏறிச் செல்பவனுக்கும் இடையே அதைக் காணலாம்.
உரையைப் படித்தவுடன் யாவர்க்கும் புரியும் வண்ணம் எழுதியுள்ளதை உணரலாம்.

துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (52)
ஆதரவில்லாதார்க்கும் ஏழைகளுக்கும் ஆதரவின்றி இறந்தவர்க்கும் இல்வாழ்வான் என்பவன் துணை செய்தற்கு உரியவனாவான்.

இல்வாழ்வானின் கடமைகளை பெருமகனார் யார் யார் என பட்டியலிட்டு விளககித் தானும் அவ்வாறு வாழ்ந்த பெருமைக்குரியவராகிறார். அவர் மறைந்த போது இலங்கையைச் சேர்ந்த மு.சு கார்த்திகேசு அவர்கள் குறிப்பிடுகிறார். “ என் மகன் இராசேந்திரனுக்கு அளவற்ற அன்புடன் செய்த அநேக மதிக்கமுடியாத உதவிகளை செய்துள்ளார். அன்னார் இன்றேல் எனது மகன் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது எமை தங்கள் உற்றார் உறவினர் போன்று காலத்துக்கு காலம் உபசரித்து உணவளித்துப் பாராட்டிய வள்ளல்.”அவரது மகன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவராகப் படிப்பதற்கு உதவியும் புரிந்துள்ளார் பெருமகனார்.
நாடோறும் நாடுக மன்னன்: வினை செய்வான் கோடாமை கோடாது உலகு (530)
தொழில் செய்பவன் நேர்மையினின்றும் மாறுபடாதிருப்பின் இவ்வுலகமும் மாறுபடாது: ஆதலால் அரசன் அத்தொழில் செய்வோரை நாள்தோறும் ஆராய்க.

அற்றேமென்று அல்லற் படுபவோ, பெற்றோமென்று
ஓம்புதல் தேற்றா தவர் (636)

செல்வத்தை பெற்றோம் என்று மகிழ்ந்து அதனை பாதுகாத்தலை அறியாதவர் அதை இழ்ந்துவிட்டோமே என்று வருத்தப் படமாட்டார்.

உளரெனினும் இல்லாரோடு ஒப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார் (740)
அவைக்களத்தைக் கண்டு அஞ்சி தாம் கற்றவற்றை ஏற்பச் சொல்லாமாட்டாதவர், உயிரோடு வாழ்பவர் எனினும் இறந்தவரை ஒப்பர்.

ஒவ்வொரு குறளின் தெளிவுரையை நாம் படிக்கும்போதும் பெருமகனார் நம்மை நுட்பமாகத் தெளியவைக்கிறார்.

புணர்ச்சி பழ்குதல் வேண்டாம் உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (795)
நட்பாகிய உரிமையைப் பெறுவதற்கு கூடி வாழ்வதோ பழகுவதோ தேவையில்லை ஒத்த மனவுணர்ச்சியே அந்நட்புரிமையைத் தருவதாகும்.

விழையர் விழையப் படுப, பழையர்கண் பண்பின் தலைப்பிரியா தார் (810)
பழைமையாக வரும் நண்பர்கள் குற்றம் செயினும் அவரிடத்தில் அன்பு நீங்காதவர் தம் பகைவராலும் விரும்பப் படுவர்.

நட்பிற்கு இலக்கணம் கூறிய பொய்யாமொழியாரின் சிந்தனையை செப்பமாக உரைத்துள்ளார்.
காமத்துப்பாலில் உள்ள குற்ளுக்கு பெருமகனாரின் உரை நம் மகளிரின் சிறப்பை உணர்த்துகிறது.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.. (1210)

என்னால் விரும்பப்பட்ட காதலர் என்பால் அன்பில்லாதவரேயாயினும் அவரைப்பற்றி ஒரு சொல்லைக் கேட்பினும். அஃது என் காதுக்கு இன்பம் தரும்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர் யாருள்ளி நோக்கினீர் என்று (1320)
தலைவியின் அழ்கையே நினைத்திருந்து பார்த்தாலும் என் அழகையெல்லாம் யாருடைய அழகுக்கு ஒப்பாக எண்ணிப் பார்த்தீர் என்று கூறிக் கோபிப்பாள்
.
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா (1329)

ஓளீ பொருந்திய அணிகலன்களை அணிந்த இவள் ஊடுவாளாக. அவ்வூடலை தீர்க்கும் பொருட்டு யாம் இரத்தற்காக இரவுப் பொழுது நீள்வதாக.

இவ்வாறு பெருமகனார் அவர்கள் தன் பொன்னுரையில் முற்றும் அறிந்து உணர்ந்து எழுதியும் இந்தியா முழுமையும் உரையாற்றியும் திருக்குறளுக்கு பெருந்தொண்டாற்றியுமுள்ளார்கள்.

இறப்பு
தமிழுலகமே போற்றிய ஐயன்பெருமாள் கோனார் அவர்கள் தம் இறுதி காலத்தில் திருச்செந்தூர் திருப்பாவை மாநாட்டில் பங்கேற்று திருச்சிக்குத் தொடர் வண்டியில் திரும்பும் வழியில் உடல் நலிவுற்று மதுரையில் இறங்கினார். மருத்துவ மனையில் சேர்த்தும் பலனின்றி 1-1-1969 ஆம் நாள் காலமானார்.

பெருமகனார் பற்றி பெருமக்கள்

No comments:

Post a Comment