Monday, November 23, 2009

நூல் மதிப்புரை --


நூல் மதிப்புரை
-----------------------------
நூல்: அரசியல் இமயம் அண்ணா
ஆசிரியர்: முனைவர். அ. ஆறுமுகம்
பக்கம்: டெம்மி/ 144
விலை: உரூபா. 60/=
வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், சீரகம், 4/79 நடுத்தெரு திருமழப்பாடி _ 621851, அரியலூர் மாவட்டம்.

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு மிகச் சிறப்பாக உலகெங்கும் கொண்டாடப் பட்டது. அறிஞரைப்பற்றி பல்வேறு நூல்கள் வெளியாகியுள்ளன. அனைத்தும் நம் குடி உயர்த்திய பெருமகனின் புகழைப் பரப்பும் நற்செயலாகும். அவ் வழியில் அண்ணா காலத்தில் வாழ்ந்தவர்களுள் ஒருவரான பேராசிரியர் முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின்” அரசியல் இமயம் ”அண்ணா எனும் நூல் வளரும் தலைமுறைக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்.

பேரறிஞரின் வாழ்க்கையோடு நீதிக்கட்சியின் முன்னோடிகளான வெள்ளுடைவேந்தர் தியாகராயர், டாகடர் டி.எம் நாயர், சி.நடேசனார்,பொன்ற பெருமக்களின் ஈகங்களை விளக்கியுள்ளார். நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தோற்றங்களையும், தொண்டுகளையும் உணர்வாளர்கள் சிதறமால் கொள்கை வழி மாற்றமில்லாமல் இல்லாததை பதிவு செய்துள்ளார்.

சனநாயக வழியில் தந்தை பெரியாரிடம் விடைபெற்று திராவிட முன்னேற்றக்கழகத்தை நிறுவி அண்ணன் தம்பி என்ற குடும்ப உறவோடு கழகத்தைக் கட்டிக் காத்ததைச் சான்றுகளோடு பட்டியளிட்டுள்ளார்.பேரறிஞரின் சடமன்றப் பணிகளையும், மாநிலங்களவைப் பணிகளையும் மிகச் சிறப்பாக வளரும் தலைமுறையினரக்குப் பாடமாகத் தந்துள்ளார்.

தநதை பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்து தனிக் கட்சி கண்டவுடன் பெரியார் காங்கிரசையே ஆதரித்து வந்ததையும் இறுதியில் அண்ணா இராசாசியுடன் கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடித்து பெரியாருக்கு காணிக்கையாக்கிய பாங்கைக் கூறி பேரறிஞரை கொள்கைக் கோபுரமாக உயர்த்தியுள்ளார்.

இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நிகழ்வுகளில் ஆசிரியர் பங்கேற்று அறிஞரின் கட்சிமாச்சரியம் இல்லா பணியையும் தமிழ் அறிஞர்களின் சிலைகளைத் திறந்த சிறப்பையும் படத் தொகுப்புபோல் நம் கண்முன் நிறுத்துகிறார்.

தி.மு.க சென்னை மாநகராட்சியைப் பிடித்து அப்போது பெருந்தலைவர் காமராசரின் சிலையை அன்றைய தலைமையமைச்சர் நேருவால் திறக்கச் செய்த அண்ணாவின் பேருள்ளத்தினை பதிவு செய்துள்ளார்.

மாநகராட்சித் தேர்தலில் மிகத் திறம்பட உழைத்து அன்றே சென்னை மாநகரட்சியைக் கைப்பற்றிய தலைவர் கலைஞருக்குத் தங்க மோதிரம் வழங்கி தங்க குனம் படைத்த கலைஞர் எனப் பாராட்டியதை எழுதி நெகிழ்கிறார். கட்சி தொடக்கத்திலிருந்து அண்ணா மறைவு வரை தலைவர் கலைஞரின் அப்பழுக்கில்லா உழைப்பையும் அண்ணாவுக்குப் பின் தந்தை பெரியார், பேரறிஞரின் அண்ணாவின் கொள்கைகளை ஆட்சியிலும் சமுதாயத்திலும் காக்கும் காவல் அரணாகக் குறிப்பிட்டுள்ளார்.

பல்லாற்றல் மிக்க பேரறிஞரின் புகழ் பரப்பும் நூல்களுள் இந்நூலில் அண்ணாவை அரசியல் இமயமாகவும், பண்பாட்டு இமயமாகவும் போற்றி மகிழ்கிறார்.
-திரு

No comments:

Post a Comment