Thursday, November 19, 2009

நூற்றாண்டு நாயகர் தூயோன் கக்கன்

மாசிலாத் தலைவன் எங்கள்
மாமணி காம ராசர்
காசிலாத் தொண்டின் வாழ்வாய்
கடமையைக் காத்த தூயோன்
கூசிடும் நாணம் இன்றி
குவித்திடும் அரசியல் வாழ்வில்
பேசிடும் வாழ்வாய் வாழ்ந்த
பெற்றிமைச் சான்றோன் கக்கன்!

அமைச்சராய் உயர்வு ஏற்றும்
அடிமட்ட வாழ்வாய் வாழ்ந்தார்
குமைந்திடும் வறியோர் எண்ணி
குடும்பமாய் துன்பம் ஏற்றார்
இமையதே கண்கள் காக்கும்
இனியநல் மக்கள் தொண்டர்
சுமையிலாத் தலிவர் நம்முள்
சுகத்தையே கண்டார் வென்றார்!

காவலர் அமைச்சுக் காலம்
கடமையாய் இளவல் வேலை
ஏவலாய்ப் பெற்றுத் தம்மின்
ஏந்தலைக் காணச் சென்றார்
காவலாய் வாழ்ந்த கக்கன்
காவலர் பணியைப் பெற்ற
மேவிடும் உறவைச் சாடி
மேதினி வென்றார் நின்றார்!

நூற்றாண்டு கண்ட நம்மின்
நுண்னுணர் தொண்டைப் போற்றி
நாற்றினில் காணும் நெற்கள்
நெறியுடன் வளர்தல் போன்றே
தூற்றிடும் இலஞ்சம் வஞ்சம்
துணிவோடு மாய்த்து நம்மில்
ஏற்றிடும் கக்கன் வாழ்வாய்
எண்ணியே எழுவோம் வெல்வோம்!

No comments:

Post a Comment