Monday, August 16, 2010

உலகத் திருமறை திருக்குறள்


உலகத் திருமறை திருக்குறள்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர், தமிழ்ப்பணி

[சென்னையில் குட்செப்பர்டு பள்ளியில் 15-8-2010 அன்று நடந்த விடுதலை நாள் விழாவில் திருக்குறள் அரங்கிற்கு தலைமையேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வழங்கிய உரை]

திருக்குறள் உலகின் ஒப்பற்ற மறை நூல். 2041 ஆண்டுகட்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர் உலக மானிடத்திற்கு திருக்குறளை அர்ப்பணித்துள்ளார். அறம் பொருள் இன்பம் என முப்பாலில் திருக்குறள் உள்ளது,.அறத்துப்பாலில் 39 குறள்களும் பொருட்பாலில் 56 குறள்களும் இன்பத்துப்பாலில் 38 குறள்களுமாக மொத்தம் 133 அதிர்காரங்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறள்கள் என 1330 திருக்குறளில் உள்ளது.

திருக்குறள் குறள் வெண்பா என்ற பாவடிவில் உள்ளது.இண்டு அடிகளில் குறளை இயற்றியுள்ளார். முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் மொத்தம் ஏழு சீர்களில் ஒரு குறள் உள்ளது. வடிவில் சிறிதாய் இருந்தாலும் பொருள் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைப்பது.

திருக்குறளுக்கு 20 நூற்றாண்டுகளாய் அறிஞர் பெருமக்கள் 500 உரை நூல்களுக்கு மேல் எழுதியுள்ளனர். காளிங்கர், மனக்குடவர், இறையனார், பரிமேழழகர், குறிப்பிடத்தக்கவர்கள். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் உரை எழுதியுள்ளார்.அறிஞர் மு.வ, கப்பலோட்டிய தமிழன் வ..உ.சி .பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் போன்ற பெருமக்களும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர்.

திருக்குறள் அனைத்து மக்களுக்கும் பொதுவானது திருக்குறளை 130க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். திருக்குறளை சி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சி.யூ.போப் அவர்கள் தம் கல்லறையில் ”தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்” எனப் பொறிக்கப் பணித்தார். இன்றும் இலண்டனில் உள்ள கல்லறையில் இந்த வரிகள் உள்ளன. யான் இலண்டன் சென்றபோது அந்தத் திருவாசகத்தைக் கண்டேன் திருக்குறளும் திருவாசகமும் எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை அறியாலாம்,

சீ.யூ.போப் அவர்களின் திருக்குறள் மொழிபெயர்ப்பை படித்த இரசிய நாட்டு மாமேதை லியோ டாட்ல்சுடாய் காந்தியடிகளுக்கு திருக்குறளின் உலக மகத்துவத்தைப் பற்றி எழுதிஉள்ளார். அண்ணல் காந்தி திருக்குறளை மூல நூலைப் படிப்பதற்காகவே தமிழ்மொழியைப் பயின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிற்ப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

உயிர்கள் அனைத்தும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் தொழில் திறமைகளிலே வேறுபடலாம் என மானிட சமூகத்தை சமமாக நோக்குகிறார். இந்தத் திருக்குறள் சொற்றோடரே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சின்னத்தில் திருவள்ளுவர் திருஉருவம் தாங்கி இடம் பெற்றது.

மாணவச் செல்வங்களாகிய தங்கட்கு திருவள்ளுவர்

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

கற்கவேண்டிய நூல்களைக் குற்றமில்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு அந்நூல்கள் காட்டிய வாழ்வு நெறியில் நிற்க வேண்டும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

மணற்கேணியை தோண்ட தோண்ட நீர் ஊற்று பெருகுவதுபொல நூல்களைப் படிக்க படிக்க அறிவு ஊற்று பெருகும்.

வாய்மையைப் பற்றி திருக்குறளில் ஒரு குறள்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளதுள் எல்லாம் உளன்

நம் திருவள்ளுவரே உண்மை வாழ்க்கை வாழ்ந்தமையால்தான் அவர் உலக மக்கள் உள்ளங்களெல்லாம் வாழ்கிறார். நம் அண்ணல் காந்தியடிகள் தன் வாழ்வையே பொய்மையின்றி நம் மக்களின் வறுமை எண்ணி அரை வேட்டி கட்டிக்கொண்டு நமக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.ஆதலால்தான் நம் உள்ளங்களிலெல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார்.

அறன் வலியுறுத்தலில் திருவள்ளுவர்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

அறம் என்பது குற்றமில்லாத தூய்மைக் காப்பே. மனத் தூய்மையற்ற அனைத்தும் வெற்று ஆரவார ஆர்ப்பாட்டமே எனக் கூறுகிறார். மனத்தால் தூய்மை இன்றி பொய் சூதுகளோடு வாழ்வோர் என்ன அறம் செய்யினும் ஆரவாரமே.

ஈகையின் சிறப்பைப் பற்றி திருவள்ளுவர்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

பயன் கருதிச் செய்வது ஈகையாகாது. எவ்வித வாய்ப்புமற்ற ஏழை மக்களுக்க்குக் கொடுக்கும் ஈகையே சிறந்ததாகும் கல்வியறிவில்லாத ஏழை மாணவனுக்கு கல்வி கற்ற்பிப்பதும் ஈகையே. இந்த ஈகையே கிறித்துவப் பள்ளிகள் பல் நூற்றாண்டுகளாகச் செய்து வருகின்றன. அச்சிறுப் பாக்கத்தில் அருட் தந்தை ரெசிசு என்பவர் தன் மறை மாவட்டத்தில் உள்ள நரிகுறவர் பிள்ளைகளைத் தத்தெடுத்து கல்வி, உடை உறையுள் கொடுத்து ஆதரித்தார் இதுவல்லவோ ஈகை.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

உணவின்றி பட்டினியால் வாடுவோரின் பசியைத் தீர்க்க பொருள் பயன்பட வேண்டும்.அவ் வயிறே பொருளுடையவன் சேர்த்துவைக்கும் வங்கியாகும்.

வான்புகழ் தந்த வள்ளுவனின் சிலையை மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் குமரி முனையில் 133 அடி சிலையை நிறுவியுள்ளார். அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கட்சென் நதியில் உள்ள சுதந்திரதேவி சிலையைக் கண்டுள்ளேன்.அதே போன்று திருவள்ளுவர் சிலையை முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடலில் நிறுவிய முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞரை தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றிபாராட்டும். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்து அங்கு 1330 திருக்குறளும் சலவைக் கற்களில் பதியச் செய்துள்ளார்.

பர்மாவில் வள்ளுவர் கோட்டம் உள்ளது. பர்மீயத் தமிழர்கள் யான் அங்கு சென்றபோது திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி என்னை வரவேற்றனர்.

இசுலாமிய நாடான மலேசியாவில் திருக்குறள் மாநாடு கண்டு தோட்டப்புற மாளிகையில் நிற்கும் நிலையில் திருவள்ளுவர் செம்மாந்து உள்ளார். பத்துமலையில் மலேசியப் பெருமக்கள் திருக்குறளை பதிய வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் வாசிங்க்டனில் அமெரிக்கத் தமிழர்கள் மாநாடு கண்டு திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளனர்.

கனடா,ஐரோப்பிய நாடுகள், தென்னாப்ரிக்கா,உலகின் அனைத்துப் பகுதியிலும் நாள்தோரும் திருக்குறள் சிந்தனைகள் வலம் வருகின்றன.

இந்தியாவின் பலப்குதியிலும் திருவள்ளுவர் சிலை நிறுவி திருக்குறள் சிந்தனைகள் போற்றப்படுகின்றன.

உலகிற்கே வழிகாட்டியாக திருவள்ளுவர் படைத்த திருக்குறள் வழி வாழ்வதே உலகம் உய்த்துணர்ந்து வாழும் நெறியாகும்.

No comments:

Post a Comment