Thursday, May 5, 2011

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு



கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை)

கள்ளக்குறிச்சியில் செம்மொழி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெறும் திருக்குறள் தேசிய நூல் தமிழ் மைய ஆட்சி மொழி மாநாடு ஆய்வரங்கில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விழாவிற்கு தலைமை வகிக்கும் உலகத் தமிழ்க்கவிஞர் பேரவைத் தலைவர் புலவர் கு சீத்தா, தன்னுடைய மனைவி இறந்தும் சோகம் கலையாமல் இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள கொள்கை மறவர் தமிழ்மறையான், விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்ப்பணி வாசகர் வட்டத்தை கூட்டி தமிழ்ப்பணீக்கு உரமூட்டிய கவிமாமணி சி.விக்கிரமன், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவாருரிலிருந்து அரிய தொண்டாற்றும் புலவர் வெற்றிப்பேரொளி, திருக்குறள் பணியையே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு பணீயாற்றும் மூத்தபெருமகன் கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வரதராசனார், அவர்தம் வழியில் தொண்டாற்றும் மக்கள் மதிவாணர், இராமானுசம் பாவேந்தர் பாடல்களைப் பாடி மகிழ்வித்த சித்ராமணி அம்மையார் , இசுரேல் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பொறியாளர் எய்தான் டொரான் மற்றும் பெருமக்களையெல்லாம் காணும்போது சென்னையிலிருந்து வந்த களைப்பு நீங்கி களீ பேருவகை கொள்கின்றேன்.

. மனமோகனதாசனின் ஆசிரியர் பேசும்போது அவர் தொடக்கப்பள்ளி படிக்கும் காலத்தில் மோகன்தாசுகரம்சந்த் காந்தி எனும் பெயரை மனமோகனதாசன் என மாற்றியதாகக் கூறினார்கள். அண்ணல் அவர்களின் பெயராலேயே மனமோகனதாசன் என செந்தமிழிலே நாமெல்லாம் அழைத்து வருகிறோம். தமிழ் உணர்வோடும், போராட்ட எண்ணத்தோடும் தொண்டாற்றும் அன்புநெஞ்சர். நம் குடியரசு என்ற இதழை செம்மொழி தழைக்க அரும்பாடுபட்டு நடத்தும் பெருமைக்கு உரியவர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற கருத்துக்குச் சொந்தக்காரர். இந்த மாபெரும் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி என்னை தமிழறிஞர்கள் படத்தை திறந்து வைத்து சிற்ப்புரையாற்ற அழைத்தமைக்கு மனமோகனதாசனுக்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்

காலம் காலமாக தமிழ் தமிழரை எண்ணும் வண்ணம் ஐயன் திருவள்ளுவர்,ஒளவையார், சி.இராமகிருட்டிணன்,இலக்குவனார், தாளமுத்து நடராசன்,முத்துக்குமார் ஆகியோர் படங்களைத் திறந்து அவர்களது தொண்டுகளையும் அவற்றைத்தொடர்ந்து நாம் தொடர வேண்டிய பணிகளையும் அறிஞர் பெருமக்களும் கவிஞர்களும் ஆய்வறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள மொழிகளில் தமிழ் முதன்மையான மூத்த மொழி. காலத்தால் அழியாத முன்னோடி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட மொழி. இரசியா சென்ற பாரதப் பிரதமர் அன்னை இந்திரா அவர்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற கனியன் பூங்குன்றனாரின் பாடலைப் பாடி இந்திய இலக்கியக் கூற்றாகக் கூறிய பெருமைக்குரிய மொழி தமிழ் மொழி. முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் பூங்குன்றனாரின் பாடலையும் திருக்குறளையும் பாடி இந்திய இலக்கியமாகக் கூறிய பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி. அண்ணல் காந்தியடிகள் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைப் பயின்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். யான் செருமனி நாடு சென்றிருந்தபோது சகோதரர் கணேசலிங்கமும் நண்பர்களும் ரெய்னே நகரை சுற்றிக்காண அழைத்துச் சென்றனர். அதுபோது ஒரு பாலத்தில் தமிழில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை செதுக்கி வைத்துள்ளனர். இது என்ன விந்தை என வினவியபோது உலகின் சிறந்து கருத்துக்களை ஆங்காங்கே செர்மனியில் பதிய வைத்துள்ளனர் என நண்பர்கள் கூறினர்.

தமிழகத்திற்கு மதத்தைப் பரப்பவந்த அறிஞர் சி.யூ.போப்., தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்து தன்னைத் தமிழ் அன்பராக நீக்கமற நிறைந்து அருந்தொண்டாற்றினார். இலண்டனில் உள்ள அவரது கல்லறையில் ”தமிழ் மாணவர் இங்கே உறங்குகிறார்” என பொறித்து வைத்து தமிழின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.யான் இலண்டன் சென்றபொது கண்டு மெய் சிலிர்த்தேன். அதே போன்று பெசுக்கி எனும் பாதிரியார் தன்னை வீரமாமுனிவர் எனப் பெயரை மாற்றி தமிழுக்கு சதுராகராதியையும் எண்ணற்ற நூல்களையும் படைத்து தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார். அறிஞர் கால்டுவெல். எல்லிசு போன்ற பெருமக்கள் தமிழின் தொன்மையை ஆய்ந்து நிலைநாட்டியுள்ளனர்.

காலம் காலமாக அடிமைப் பட்டிருந்த தமிழர்கள் தந்தை பெரியாரின் எழுச்சியால் தன்மான உணர்வைப் பெற்று சிலிர்த்தெழுந்தனர்.பெரியாரின் வழித் தோன்றல் பேரறிஞர் அண்ணா தமிழாலேயே ஆட்சியைப் பிடித்தார். தமிழ்நாடு எனப் வரலாற்றுப் பெருமைமிக்க பெயர் மாற்றம் கண்டார். அவர் வழி வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெரியார் அண்ணா சிந்தனைகளையெல்லாம் செயல் வடிவமாக்கினார்.அனைத்திற்கும், முத்தாய்ப்பாக காலாதிகாலம் நாம் போராடிய தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார், உலகே வியக்கும் வண்ணம் கோவையில் செம்மொழி மாநாட்டைக் கூட்டி தமிழ் தமிழரின் பெருமையின் சிகரம் கண்டார்.

நாமெல்லாம் கூடி கூட்டம் நடத்தி, மாநாடுகள் கண்டு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப் போராடி வருகிகிறோம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தம் தேர்தல் அறிக்கையிலேயே தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். செம்மொழித் தகுதியை பெற்றதைப் போல் முத்தமிழறிஞர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்தி தமிழை ஆட்சி மொழியாக்குவோம் எனச் சூளுரை மேற்கொள்வோம்,தமிழை ஆட்சிமொழியாக்கினால் இந்தியாவிற்கே பெருமை இந்தியாவின் கூட்டாட்சி கொள்கைக்குப் பெருமை பயப்பதாக இருக்கும்,

நமது அடுத்த கோரிக்கை திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிப்பது. திருக்குறள் மனித குலத்திற்கே திருவள்ளுவரால் படைக்கப்பட்ட மறை நூல். உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மறை. தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போற்றிவணங்கும் மறை நூல். யான் பர்மா சென்றபோது தட்டோன் பகுதிக்கு நமது அறநெறிக்கழகத் தலைவர் கலைச்செல்வன் அழைத்துச் சென்றார்.அங்கே அமரர் மாரிமுத்து அவர்களின் அயரா முயற்சியால் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்.அங்கு யாங்கள் சென்ற போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ஓதுவாராக உள்ள குருசாமி அவர்கள் திருக்குறளை ஓதி எங்களை வாழ்த்தினார். பர்மாவிற்கும் நமக்கும் 40 ஆண்டுகள் தொடர்பற்ற நிலையிலிருந்தாலும் உணர்வுகள் நீங்காமல் நிலைத்திருப்பதை அறியமுடிந்தது.

திருக்குறள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல நகரங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு வருகின்றன. மனித குலத்திற்கே பேரோளியாம் திருக்குறள் குறித்த மாநாடுகள் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் நடைபெற்று திருக்குறள் உலகப் பொதுமறையாக உள்ளது. நமது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றத்தில் திருக்குறளைக் கூறியே நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் ஐயன் சிலையை நிறுவி உலகையே உற்று நோக்க வைத்துள்ளார்.

உலகறிந்த நாடறிந்த பொதுமறையாம் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க மாநாட்டின் சார்பில் கோரிக்கை வைப்பதில் இறும்பூதெய்துகின்றேன்

No comments:

Post a Comment