Friday, November 26, 2010

திருக்குறளில் கலைகள்


திருக்குறளில் கலைகள்
கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆசிரியர் தமிழ்ப்பணி

சென்னையில் 26,27,-11-2010 நாட்களில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய உரை

திருவள்ளுவர் திருக்குறள் நற்பணி மையத்தின் சார்பில் திருக்குறள் கலை இலக்கிய சங்கமம் நடைபெறுவது மகிழத்தக்க ஒன்றாகும். இருபது ஆண்டுகளாக மிகச் சிறப்பாக நடத்திவரும் முனைவர் இலலிதா சுந்தரம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மகளிர்மாமணியான இலலிதா சுந்தரம் 1999ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நான்காம் மாநாட்டிற்கு வருகை தந்த பெருமைக்குரியவர். அண்மையில் மலேசியாவில் நடந்த பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்று பன்னாட்டுத்தமிழுறவுப் பணிகளில் இரண்டரக் கலந்தவர். எந்த அமைப்பாக இருந்தாலும் நான் என்று முன்னின்று செயலாற்றும் மன வளம் உடையவர். இந்த மன வளத்திற்கு அடிப்படை திருக்குறள் சிந்தனைகளே.

தமிழ் மறை:

தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளாக தோன்றிய தமிழ்ச் சான்றோர்கள் அனைவரும் திருக்குறள் தாக்கத்தினாலாயே நிலைபெற்றுள்ளனர். திருக்குறளின் கருத்துக்கள் உலகத்தையே வலம் வந்து தமிழனின் பேராற்றலை செப்பும் தமிழ் மறையாகும்.
நாம் வாழும் இந்நூற்றாண்டில் திருக்குறள் சிந்தனைகளால் தம் மக்களை நிலைபெறச் செய்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா. அவர்தம் வழியில் திருக்குறளை வாழ்வியலாகவே கொண்டு வாழ்ந்து தமிழினத்தையும் திருக்குறளையும் நிலைநிறுத்தியவர் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள். இந்த மாபெரும் கலைஞர்களை உருவாக்கிய திருவள்ளுவரின் திருக்குறள் அனைத்துமே கலை வாழ்வியல் சார்ந்து உலக மக்களுக்கு வந்துதித்த பெருங்கொடை..

உலகக் கலைஞானி:

உலகப் பெரும் ஞானி திருவள்ளுவர் வாழ்க்கையின் அறச் சிந்தனைகளை மென்மையாகவும், கடுமையாகவும் உணர்த்தியுள்ளார். நணபர்களுக்கு இன்னல் வருமேயாயின் அதை நீக்க மானிட உள்ளம் உணருமாரு உணர்த்தியுள்ளார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு (788)

தான் உடுத்தியிருக்கும் ஆடை தானாக நெகிழ்ந்தால் தன்னுடைய கைகள் உடனே தாங்கி மானம் காப்பதைப் போல் நண்பரின் இன்னல் கண்டு இயல்பாக இடையூற்றை நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். திருவள்ளுவர் வாழ்வியல் கலைகள் அனைத்தையும் அறிந்த கலைஞானி என்பதால் மானிட வாழ்வில் தாம் உடுத்தும் உடையைக்கொண்டே மிகப் பெரும் இடையூற்றை நீக்கி மகிழ மானிட சமுகத்திற்கு உணர்த்துகிறார்.

பகுத்தறிவுக் கலைக்கோமான்:

அவரவர் தம் வலிமையை அறிய வலியுறுத்தும் திருவள்ளுவர் வண்ணமயிலின் இறகைக் கொண்டு உணர்த்துகிறார். வண்ணமயிலை எண்ணும்போதே அதனுடைய அழகு மானிட உலகை மகிழச்செய்யும் அந்த மயிலின் இறகின் மென்மையையும் மனிதனின் மென்மையான மானிட வாழ்வையும் ஒப்பிட்டு வாழ்வியல் கருத்தை வழங்குகிறார்.மூடத்தனமாக எதையும் வலிமையறியாமல் செய்யக்கூடாது என்ற பகுத்தறிவுக் கலைக்கோமானாக உணர்த்துகிறார்.

பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (475)

மயிலின் தோகை மென்மையாக இருந்தாலும் அதனை மிகுதியாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும் தாங்கும் வலிமையறியாமல் தாக்கம் விளைவிப்பாரின் நிலையும் அதுதான் என உணர்த்தியுள்ளார். மானிட வாழ்வில் எண்ணற்றோர் தம் வலிமையறியாமலேயே படு பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உலகில் வாழும் மானிடர்களுக்கு எக் காலத்திலும் உணரும்வண்ணம் வாழ்வியல் உண்மைகளை உணரும் திருக்குறளுக்கு நிகர் வேறேதும் இல்லை.

உலகப் புரட்சிக் கலைஞன்:

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. தனக்காக மட்டுமின்றி அறம் பொருள் இன்பம் என அனைத்தையும் உய்த்துணர்ந்து தம்மையும் உலக மக்களையும் காக்கும் வாழ்வியல் மறையை வழங்கிய காவியக் கலைஞனாக நம் சிந்தையில் திருவள்ளுவர் குடிகொண்டுள்ளார். அந்த வாழ்வு குற்றமில்லாத வாழ்வாக வாழவேண்டும் அப்படி குற்றமேற்படின் அழிந்து போகும் என தீர்வாக கூறுகிறார்.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (435)

தவறு நேர்வதற்கு முன்பே குற்றத்தை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்க இயாலாதவர் வாழ்க்கை நெருப்பு முன் வைக்கோல் போர் போல அழிந்து விடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய திருவள்ளுவர் இன்று பாடியது போன்று எக் காலதிற்கும் ஒத்தது போன்று பாடியுள்ளார். அவருடைய கலைக் கண் மானிட சமுகம் மீட்சியுற குற்றமின்றி வாழ்வாங்கு வாழ கடுமையின் தன்மையை குறிப்பிட்டு உணர்த்தியுள்ளார்.

பேருழைப்புக் கலைஞன்:

உழைப்பையும் முயற்சியையும் திருவள்ளுவர் மானிடத்தின் உயிராக உணர்த்தியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே முயற்சியும் உழைப்புமே நற்பயனைத் தரும் என வலியிறுத்தியுள்ளார்.அக் காலத்திலும் இன்றும் பண்டாரங்களாகவே வாழ்ந்து எந்த உழைப்பும் இன்றி வாழ்வோரைச் சாடி உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் மகுடமான புரட்சிக் கலைஞனாக உள்ளார். தன்னுடைய வாழ்வியலுக்கே திண்டாடும் பலர் பக்தி என்ற போர்வையில் கடன் பெற்று தம் வாழ்வையே அழித்து பக்தியைப் புலப்படுத்துகின்றனர். தான் எந்தக் காரியத்திற்காக நம்மை அணியப்படுத்தி உலகில் வாழ்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சோம்பேறிகளாக பக்தி என்ற வலையத்தில் வலம் வருகின்றனர் அவர்களையெல்லாம் தகர்த்து நிலைகுலையச் செய்யும் பேருழைப்புக் கலைஞனாக திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளாக வலம் வருகிறார்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

தெய்வத்தை நம்பி மூடத்தனமாக வாழும் பிறவிகளே தங்களின் குறிக்கோளும் முயற்சியும் உழைப்பும் இருக்குமேயானால் வெற்றிபெற முடியும் என பாட்டாளிக் கலைஞனாக திருவள்ளுவர் மெய்சிலிர்க்க வைக்கிறார். உலகில் வெற்றி பெற்ற பெருமக்களின் வாழ்வியலைக் கண்டோமானால் வள்ளுவப் பேராசானின் கருத்தை உணர முடியும்.

அருட் கலைஞன்:

பொருளுடையோர் பொருளை அருள் வழியில் பயன்படுத்தவும் வழிகூறுகிறார். அருளை அன்பு ஈனும் குழந்தையாகக் கண்டு குழந்தையைப் பேணுவதுபோல் அறப்பணீகளை வலியுறுத்தி உலக மக்களிடம் மனித நேயத்தை மீக்கெழச் செய்கிறார். மனிதம் வாழ்விக்க வந்த அருட்கலைஞராக பொய்யாமொழியார் நெஞ்சம் நிறைகிறார்.

அருளெனும் அன்புஈன் குழவி பொருளெனும் செல்வச் செவிலியால் உண்டு (757)

அன்பு என்ற தாய்பெற்ற பிள்ளைதான் அருளாகும். அந்த மழலையை வளர்க்கும் பொறுப்பு செவிலித்தாயாகிய பொருளுக்கு உண்டு. என பொருளுடையோரின் பொறுப்பை உலகுக்கு உணர்த்துகிறார். வறுமை தலைவிரித்தாடும் நம் நாட்டில் பொருளுடையோர் 45 விழுக்காடு உள்ளனர். திருவள்ளுவர் கூறிய மறையை முழுமையாகப் பின்பற்றுவோமானால் நம் நாட்டில் வறுமையை முற்றுமாக ஒழித்துவிட முடியும். பொருளுள்ளவர்கள் செவிலித்தாயாக வலம் வந்தால் அருளாகிய குழந்தை செழிப்படையும்.

இல்லற நல்லறக் கலைஞன்:

இல்லற இன்பத்தை முற்றும் முழுமை உணர்ந்த இல்லறக் கலைஞர் நம் பாட்டன். மானிட வாழ்வில் அறம் பொருள் இன்பம் என பட்டியலிட்டு வாழ்வின் முழுமையை உணர்த்தியுள்ளார்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. (1323)

வாழ்விணையரின் காதலை உணர்த்தும் திருவள்ளுவர் நீரும் நிலமும் கலந்தமையைக் குறிப்பிடுவது இல்லறத்தின் நல்லறக் கலைஞராக நிலைபெறுகிறார்.இல்லற இணையர் காணும் இன்பம் புத்தேள் உலகத்திலும் இல்லை என அறுதியிட்டுக் கூறுகிறார்.

முடிவுரை:

உலகமக்களின் நலனுக்கு வாழ்பவர்கள். உள்ளத்தாலும் செயலாலும் உண்மையாக வாழ்பவர்கள் உலக மக்களின் நெஞ்சங்களில் என்றும் வாழ்வர். உலகப் பொதுமறை வழங்கிய பொய்யாமொழியார் இன்றும் மக்கள் நெஞ்சங்களில் நிலைத்துள்ளார். மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெருமக்கள் வள்ளுவப் பெருமான் குறள்போல் நிலையாக வாழ்ந்து வருகின்றனர்.

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன். (294)

உளத் தூய்மையாக சொல்லும் செயலும் ஒன்றாக தூய்மையான வாழ்வு வாழ்பவர்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்வான் என உண்மையை உலகோர் பின்பற்ற பதியம் போட்டுள்ளார் திருவள்ளுவர்.

No comments:

Post a Comment