Showing posts with label ilakkiyam. Show all posts
Showing posts with label ilakkiyam. Show all posts

Sunday, April 1, 2012

அவலம் அன்றோ

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(சென்னையில் ஆசிரியை கண்டித்ததற்காக மாணவன் கொலை செய்த கொடுமை கண்டு எழுதியது)

கல்வியை வணிகம் ஆக்கி
கருத்துமே கனியா வண்ணம்
நல்வழிப் படுத்த எண்ணா
நாட்டினர் இழிவுச் சிந்தை
பல்லூடகம் மோசம் காட்டி
பாதகம் கண்ட மோசம்
வெல்கதிர் மாணவன் இங்கே
வெட்டிய ஆசிரியை அந்தோ!

மழலையர் வளர்ப்பில் நம்மோர்
மாசிலா அன்பைத் தேரார்
உரம்தரும் தமிழக மண்ணில்
உலகினர் காணும் வேசம்
பலம்தரும் என்றே எண்ணி
பாசத்தை மறந்த போக்கால்
நலம்நிறை ஆசிரியை இங்கே
நசுங்கிடும் அவலம் அன்றோ!

கண்டிப்பு என்னும் வேலி
கருணையே துளியும் இன்றி
கொண்டிடும் வேக வீச்சால்
கொலைக்களம் சென்ற நாசம்
தண்டிக்கும் முறையை இன்றும்,
தலைமுறை ஏற்கா மாற்றம்
விண்டிடும் மாணவர் தம்மில்
விதைத்துள மோசம் தானே!

நல்லுள பெற்றோர் பெற்றார்
நாடுள சுற்றம் சூழ்ந்தார்
பள்ளியின் மேன்மை கண்டே
பாங்குடன் சேர்ந்தும் வென்றார்
உள்ளத்தால் சமூக மேன்மை
உன்னதம் மறந்த தன்மை
கள்ளமில் பிஞ்சு இன்றோ
கயமையர் சிறையில் அன்றோ

Saturday, March 31, 2012

திருக்குறள் திருத்தொண்டர் அவையம்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(11-3-2012 அனறு சென்னையில் கிராமபந்து கோட்டை சு முத்து நடத்திய திருக்குறள் திருத்தொண்டர் அவையம் நிகழ்ச்சியில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பை நிறுவி திருகுறளிற்காக அயராது பாடுபடும் கிராமபந்து கோட்டை சு முத்து அவர்களின் அழைப்பை ஏற்று உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி யடைகின்றேன். வருகை தந்திருக்கும் திருக்குறள் ஏழுமலை எனது ஆசான் சேச. இராசகோபாலன் நடைப்பயண அரிமா சி.மா.துரைராசு மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தைக் தெருவித்துக் கொள்கிறேன்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும் (466)

என்ற வள்ளுவர் வாய்மொழியை பின் பற்றாததாலேயே திருக்குறளே பைபில் குரானைப் போன்று தமிழர்கள் மறையாக நடைமுறைபடுத்த இயலாமல் உள்ளோம்.

பெருமக்களே அதைப் போக்கவே திருக்குறள் திருத்தொண்டர் அவையம் என்ற அமைப்பின் பெயரே மிகச் சிறந்த தொடராக உள்ளது. ஐயா கோட்டை சு முத்து மிகச் சிறந்த திருத்தொண்டர். தன் முதிர்ந்த நிலையிலும் எதையும் எதிர்பராது திருக்குறளிற்காக பாடுபடுகின்றார். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே. கிறித்தவர்கள் பங்குத்தந்தையாக உலகம் முழுமையும் உள்ளனர். மாவட்டம் வட்டம் என அனைத்துப் பகுதியிலும் முறையாக விவிலியத்தைப் பரப்புகின்றனர். அதைப் போன்று உலகம் முழுமையும் உள்ள திருக்குறள் திருத்தொண்டர்கள் ஒருங்கிணைந்து ஒரே சிந்த்னையாக திருக்குறளை பரப்பும் வழியைக் காணவேண்டும்.அதற்கு சரியான காலகட்டம் இதுவே.

செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்ற வள்ளுவப்பெருமானின் குறளிற்கேற்ப குறளிற்கே பெருமுயறசி கொண்டு உலகம் முழுமையும் பாடுபடுகின்றனர்.

அவ்வழியில் அமெரிக்காவில் வாழும் இராம் மோகன் அவர்கள் திருக்குறள் பதிப்பு 2000ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மிகச்சிறந்த பதிப்பு பைபிளைப் போன்று வெளியிட்டுள்ளார். திருக்குறள் மூலம், உரை, ஆங்கில ஆக்கம், ஆங்கில் மொழியாக்கம், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் படங்கள் என உலகத் தரத்தில் வெளியிட்டுள்ளார்.. 1820 பக்கங்கள் கொண்ட தொகுப்பாகும். அப்பெருமகனும் அதற்கு துணைநின்ற அனைவரும் திருக்குறள் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் ஐயன் திருவள்ளுவர் சிலையை நிறுவி திருமறை மாநாட்டை நடத்தி 1200 பக்க உலகளாவிய அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரை மலரை வெளியிட்ட முனைவர் பெரு.அ. தமிழ்மணி மிகச் சிறந்த திருக்குறள் திருத்தொண்டர். நான் மாநாட்டின் செயலராகப் பணியாற்றினேன். திருவள்ளுவர் சிலையை கொடை வழங்கியவர் செவாலியர் வி.சி சந்தோசம்.தமிழகத்திலிருந்து 160 பெருமக்கள் பங்கேற்றனர். பெருமக்கள் அனைவரும் திருத்தொண்டர்களே.

மலேசியத்திருநாட்டில் பத்துமலையைச் சுற்றி திருக்குறளை சலவைக் கல்லில் பதிய வைத்துள்ளனர். அந்நாட்டில் தமிழ் தமிழர் மேன்மையைப் போற்றும் டத்தொசிறி சாமி வேலு, கூட்டுறவுக்கழக டான்சிறி சோம சுந்தரம், மற்றும் அனைத்துப் பெருமக்களும் திருக்குறள் திருத் தொண்டர்களே. திருக்குறள் தொண்டர் மலேசியக் கவிஞர் செங்குட்டுவன் திருக்குறள் பாடல் திரட்டு என்ற பெரும் நூலை வெளியிட்டுள்ளார்

சுவிட்டசர்லாந்தில் பெர்ன் நகரில் வள்ளுவன் பாடசாலை என்ற அமைப்பை நிறுவி திருவள்ளுவர் ஆண்டை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார் முருகவேள் நந்தினி இணையர். அவருக்கு துணையாக உள்ளார் கருணாகரமூர்த்தி மற்றும் பெருமக்கள்.சுவிட்சர்லாந்தில் திருக்குறள் தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

மியான்மரில் யான் சென்றிருந்த போது தட்டோன் நகரில் மாரிமுத்து அவர்கள் முயற்சியால் கட்டிய வள்ளுவர் கோட்டத்தைக் கண்டேன். இப்போது அவர் காலமாகிவிட்டார். கோட்டத்தில் திருவள்ளுவர் சிலை முன் திருக்குறள் ஓதி வரவேற்றார் ஓதுவார் குருசாமி. .தட்டோனில் வள்ளுவர் கோட்டம் கட்ட முனைந்த பெருமக்கள், இன்றும் காத்து வரும் மியான்மார் தமிழர்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்றா குறள் வழி வாழ்ந்த பெருமகன் அமரர் வேலா. அரசாமாணிக்கம் குறாளயம் என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறந்த திருக்குறள் தொண்டாற்றியவர் திருக்குறள் வேலா அரசமாணிக்கம். குறளியம் என்ற இதழ் மூலமும் பல்வேறு மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி பெருந்தொண்டாறியவர். ஒரு பெரும் பொருட்செலவில் அவரோடு இணந்து தொண்டாற்றிய அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

திருகுறளிற்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து வாரந்தோறும் வள்ளுவர் கோட்டத்தில் கூட்டங்கள் மாநாடுகள் நடத்தி தம் இல்லத்தில் திருவள்ளுவர் திருக்கோயில் கட்டி பெருந் தொண்டாற்றும் குறள்ஞானி மோகன்ராசு அவர்கள் அவரோடு இணைந்து தொண்டாற்றும் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தமிழ் அறிஞர் பெருமக்களை அழைத்துச் சென்று அலகாபாத்தில் செவாலியர் வி.சி ச்ந்தோசம் அருமைத்தந்தையார் அவர்களோடு திருவள்ளுவர் சிலையை நிறுவிய பவள விழாக் காணும் தமிழாகர் ஆறு அழகப்பன் அவருக்குத் துணைநின்ற அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

தம் இல்லத்தின் முன் சிலையை நிறுவி தனி ஒரு பெண்ணாக சாதனை படைக்கும் செல்லம்மாள், ஆண்டுதோரும் திருவள்ளுவராண்டை கொண்டாடும் இலலிதாசுந்தரம், மார்கழி மாதாம் திருக்குறள் வீதி உலா வரும் வரலட்சுமி போன்ற மகளிர் பெருமக்கள் அவருக்குத் துணைநிற்கும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அமிரிக்கா வாசிங்டனில் திருவள்ளுவர் சிலையை நிறுவி பெருந்தொண்டாற்றிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

கனடாவில் திருக்குறள் மாநாடு நடத்தி சிறப்புக் கண்ட செல்லையா வேலுபிள்ளை மற்றும் ஆதரவீந்த அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

அந்தமானில் தமிழர் சங்கத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவி அருந் தொண்டாற்றும் பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

என் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள். எனக்குத் திருவள்ளுவர் என்ற பெயரை வைத்து உங்கள் முன்நிற்கிறேன், தம் வாழ்நாள் திருக்குறள் நெறி வாழ்ந்து சாதனை படைத்து திருக்குறள் செம்மொழிஉரை தந்த பெருமகன் அவரைச் சார்ந்து உலகளாவிய பெருமக்கள் அனைவரும் திருக்குறள் தொண்டர்களே.

பெருமக்களே யான் அமெர்க்காவில் நீயூயார்க் ஃகட்சன் நதியில் சுதந்திரதேவி சிலையைக் காணும்போது என் நினைவில் வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் நிறுவிய ஐயன் திருவள்ளுவர் சிலையே. வள்ளுவர்கோட்டம் குறளோவியம் என் வள்ளுவத் தொண்டுக்கு சிகரம் கண்டபெருமகன் கலைஞர். பெங்களூரில் மூடியே வைத்திருந்த திருவள்ளுவர் சிலையை திறந்த சாதனைத் தலைவர்.

பெருமக்களே யான் சிந்தையில் தோன்றிய பெருமக்களையெல்லாம் கூறெனேன். தற்போது திருக்குறள் சிந்தனை உலகம் முழுமையும ஆட்கொள்வதை உணரலாம். யான் முன்னமே குறிப்பிட்டது போன்று அனைவரும் இணைந்து திருக்குறள் மாவாட்டங்களாக வட்டங்களாக பிரித்து அனைவரும் பங்குத் தந்தைகள் விவிலியத்தை பர்ப்புவதைப் போல் பரப்பவேண்டும் என்ற வேணாவாவைக் கூறி விடைபெறுகிறேன்.

Wednesday, March 28, 2012

கொடும் பாதக இலங்கை வீழ்க!

கவிமுரசு. வா.மு.சே.திருவள்ளுவர்

மனித உரிமை மன்றம்
மதிப்பாய் ஐ.நா தன்னில்
துணிந்து அமெரிக்கா நன்றாய்
தூக்கி நிறுத்தும் வாய்ப்பை
இனிது இந்தியா தம்மை
இளித்த வாயோர் நம்மோர்
பணிய இலங்கை இன்றே
பதமாய் இணைந்தே வெல்க!

போரின் நாசச் செய்கை
பொதியாய் மக்கள் கொன்றார்
வேரின் இந்தியா இங்கோ
வேதனை ஏதும் இல்லை
பாரில் நாடுகள் கூடும்
பயங்கரச் செயலை எண்ணி
பாரே கண்டனம் செய்யும்
பாதக இலங்கை வீழ்க!

படுகொலை கண்டும் பதறா
பாவியர் வாழும் மண்ணாய்
கெடுமதி நன்றே செய்த
கேடும் விதைத்த மோசம்
நடுங்கும் கொலைகள் செய்த
நாச இலங்கை நேயம்
விடுக இந்தியத் தாயே
விரைந்து கொலைக்களம் ஏற்று!

மனித நேயம் காக்க
மாண்பாய் தீர்மானம் வெல்க
துணிந்து நாடுகள் ஏற்று
திறமாய் கண்டனம் செய்க!
பிணியாம் இராச பக்சே
பிடறி தெறிக்க ஓட
கனியும் அந்த நாளை
காலம் இணைந்தே வெல்க!

சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(25-3-2012 அன்று மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வி,ல் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மறைமலைநகர் வள்ளுவர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வி,ல் பங்கேற்பதை பெரும்பேறாகக் கருதுகிறேன். நிகழ்விற்கு தலைமைதாங்கும் நீதியரசர் பஞ்சாட்சரம் அவர்களே, திருக்குறள் ஓதிய மாணவி ஐசுவரியா அவர்களே திராவிடர் கழகதின் சார்பில் நூல் வழங்கிய முத்து, என்னைச் சிறப்பித்த செல்வராசு அவர்களே, நீதியரசர் அவர்கள் மூன்று செயற்செம்மல்கள் பழனி, சிம்சன் கண்ணன்,பற்றிச் சொன்னார்கள் மற்றுமொருவர் இங்கு இருக்கிறார் அவர்தான் பெரும்புலவர் புஞ்சையரசன்.
அப்பெருமகன் அருமைத் தந்தையார் தலைமையில் உண்ணாநோண்பு போராட்டம் நடந்தபொது முன்னோட்டப் பணிகளுக்கு தந்தையாயார் தில்லி சென்றார். அதுபோது அவரது மகன் தமிழாசிரியராகப் பணியாற்றும் கிருட்டிணமூர்த்தி இல்லத்திலேயே தங்க வைத்து இறுதிவரை தந்தையும் மகனும் ஆற்றிய தொண்டை எண்ணிப்பார்க்கிறேன். முதிர்ந்த நிலையிலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழும் பெருமகன்.

பெருமக்களே பல்லாண்டுகளாக தம் வாழ்நாள் பணியாக திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்தப் போராடி வரும் ஐவர் வழி வேம்பையனார் போன்ற காலத்திகால அறிஞர் பெருமக்களின் சிந்தனையை .கலைஞர் அரசு கொண்டுவந்தது இந்த அரசு தமிழாண்டை எடுத்தாலும் உணர்வோடு பரப்பி வரும் பெரியார் சிந்தனையாளருக்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் உங்களின் கரவொலிகளுக்கிடையில் பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன்.

வருகைதந்துள்ள ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும்எனது முதற்கண் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

அருமைப் பெரியார் வழிப் பெருந்தொண்டர் வேம்பையனார் எது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்டபோது சங்க இலக்கியத்தில் சமுதாயப் பார்வை எனும் தலைப்பில் பேசப் பணித்தார். சென்ற மாதம் கலைஞர் தொலைக்காட்சியில் என்னைப் பேட்டி கண்ட ஊடக அறிஞர் தம்பிராசா அவர்கள் தமிழகத்தில் நடந்து வரும் சல்லிக்கட்டு விளையாட்டின் அவசியம் குறித்து உரையாடினோம். மட்டைப்பந்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தமிழர்களின் வழிவழி சல்லிக்கட்டுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினேன். அப்பொது சங்க இலக்கியத்தில் உள்ள காட்சிகளை விரிவாகக் கூற இயலவில்லை இருப்பினும் அவ்வாய்ப்பை வேம்பையானார் வள்ளுவர் மன்றம் வழி வழங்கியுள்ளார்.

மானிட வாழ்வு இரு கூறுகளைக்கொண்டது ஒன்று அகம் மற்றொன்று புறம்.ஒருவனும் ஒருத்தியும் கற்பு நெறியில் வாழ்ந்து துய்க்கும் அன்பு இன்ப நெறியே அகம். கல்வி கொடை வீரம் செங்கோலாட்சி அனைத்தும் புறத்தால் வாழ்வியல் நிகழ்வுகள் அனைத்தும் எல்லோராலும் உணரப்படுபவை புறம். இந் நெறிகளில் அமைந்தவைகளே சங்க இலக்கியங்கள்.இவை எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.அவை ,முதல், கரு,உரி, என்ற முப்பொருள் அமைந்த அகப்பாடல்களாகவும் கொடை அளி செங்கோல் பற்றிய புறப்பாடல்களாகவும் பாடப் பெற்றவை . பாடல்கள் எண்ணிக்கை கொண்ட வகைகளைக் கொண்டே பதிற்றுப்பத்து, ஐங்குருநூறு அகநானூறு பு(13-31) புறநானூறு(13-31) எனப் பெயர்பெற்றன.அகப்பாடல்களில் குறுந்தொகை(4-8) நற்றினை அகநானூறு எனும் அடி வரையரையால் திட்டமிட்டுத் தொகுக்கப்பெற்றுள்ளன. பாவகையால் கலித்தொகை பரிபாடல் எனப் பெயர் பெற்றன.

தொகைநூல்களுள் குறுந்தொகை, நற்றினை, அகநானூறு ஐங்குறுநூறு கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன இவற்றுள் தினைவகையால் தனித்தனி புலவர்களால் பாடப்பெற்றவை ஐங்குறுநூறும் கலித்தொகையும் ஆகும்.

அகம் என்ற சொல்லால் குறிக்கப்படுவது அகநாநூறு மட்டுமே. இவை நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை நெடுந்தொகை என்றனர். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம் நித்திலக் கோவை என்ற மூன்று பிரிவுகளை உடைய தனிச் சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு.

கலித்தொகையில் முல்லைக்கலியில் சோழர் நல்லுருத்திரன் பாடிய பாடல் நம் தமிழர்கள் வீரத்தை செப்பும் முலலை நில மக்களின் மணக்கோலத்தை நம்முன் நிறுத்துகிறார்.

முல்லை நிலத்து ஆயர்குடி மக்கள் தம்மகள் பருவமெய்தியவுடன் ஒரு காளையையும் வளர்ப்பது மரபாம். இளைஞர்கள் ஏறுதழுவி அடக்கி பின் மங்கையை திருமணம் செய்வர் என்பதை முல்லைக் கலியில் கவிஞர் பாடியுள்ளார், முல்லைக் கலியில் உள்ள சில பாடல்கள்

அவ்வழி. முழக்கென இடியென முன்சமத்து ஆர்ப்ப
வழக்குமாறு கொண்டு வருபுவருபு ஈண்டி
நறையொடு துகள்எழ நல்லவர் அணிநிற்பத்
துறையும் ஆல்மும் தொல்வலி மராஅமும்
முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழுஉ (பாடல் 101- 10-15)

இளைஞர்கள் இடிமுமுழக்கமென ஆர்ப்பரித்து களத்தில் அடுத்து அடுத்து வந்து கூடினர் மணமும் தூசியும் சூழுமாறு பெண்கள் குழுமினர். மரபு வழி வணங்கி களத்தில் இளைஞர்கள் பாய்ந்தனர்.

மேற்பட்டு உலண்டின் திறன் ஒக்கும் புன்புருக்கண்
நோக்குஅஞ்சான் பாய்ந்த பொதுவனை சாக்குத்திக்
கொட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றங்காண் (101 – 15-17)

சாம்பல் நிறம் கொண்ட காளையின் கடும் பார்வைக்கு அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை கொம்பால் குத்திக் குலைக்கும் காட்சியைப்பார்

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர்விரிந் தன்ன கரிநெற்றிக்காரி
விடரிஅம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்தி குலைப்பதன் தோற்றங்காண் (101 – 20-23)

காதுகளில் செம்புள்ளிகளையுடைய வெண்மை நிறக் காளை அஞ்சாமல் பாய்ந்த பொதுவனை தன் கொம்பின் முனையால் குத்தும் காட்சியைப் பார்

நாம் ஒரு ஏறுபுகதலை நம் கண்முன் காண்பது போன்ற உணர்வை சங்ககாலப் பாக்கள் உணர்த்துகின்றன.

இகுளை இஃதுஒன்று கண்டை! இஃதுஒத்தன்!
கொட்டினத்து ஆயர் மகனன்றோ? மீட்டுஓரான்
போர்புகல் ஏற்றுப் பிணர்எருத்தில் தத்துபு
தார்போல் தழீஇ யவன் (103 – 32-35)

போரை விரும்பும் ஏற்றின் கலுத்தை கையால் ஒரு மாலையைப் போன்று தழுவிக்கொண்ட ஆய குடும்பத்தான் வலிமையைப்பார். காளை மீண்டும் வலிமைபெறாமல் அதனை இருகப் பற்றிக்கொண்ட மாவீரனைப் பார்.
கோவினத்து ஆயர் மகனன்றோ! ஓவான்
மறையேற்றின் மேலிருந்து ஆடித் துறை அம்பி
ஊர்வான்போல் தோன்று மவன். (103 – 37-39)

மச்சத்தை உடைய ஏற்றின்மேல் ஏறி வீற்றிருக்கின்ற ஆயன் நீர்த்துறை தெப்பத்தில் அமர்ந்து அதனை செலுத்துபவன் போலத் தோன்றுகிறான். அவன் பெருவீரன் ஏற்றைவிட்டு எளிதாக இறங்க வில்லை

அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர்துறந்து
நைவராரா ஆயமகள் தோள்! (103 – 65-67)

காளையின் கொம்புக்கு அஞ்சும் இளைஞனை ஆயர் குலத்து மங்கை மறுமையிலும் கணவனாகக் கொள்ளமாட்டாள் என்றும் வெறுப்பாள்.

செவலைக் காளையின் திறம்:

மருப்பில் கொண்டும் மார்புறத் தழீஇயும்
எருத்திடை அடங்கியும் இமில்இறப் புல்லியும்
தோளிடைப் புகுதந்தும் துதைந்துபா டேற்றும்
நிறைமேற் சென்றாரை நீண்மருப் புரச்சாடிக்
கொளலிடம் கொளவிடா நிறுத்தன ஏறு.
கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக்குத்திக்
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச்செகில் காணிகா!
செயிரின் குறைநாளால் பின்சென்று சாடி
உயிருண்ணும் கூற்றமும் போன்ம். (105 – 30-39)

காளையின் கொம்பைப் பிடித்தும் மார்போடு தழுவியும் தமது தோளால் கழுத்தை அகப்படுத்திப் பிடித்தும் போரிட்ட வீரர்களை ஏறுகள் முட்டி கீழே தள்ளி அடக்கவிடாமல் விலக்கின தழுவியவரையெல்லாம் குத்திக் கொன்றன அவற்றை நெருங்குவோர் இல்லை அத்தைகைய செவலைக்களை எமனை ஒக்கும்.

ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா
இருபெரு வேந்தரும் இகலிக்கண் ணுற்ற
பொருகளம் போலும் தொழூஉ(105 – 47-49)

ஏறுகளும் வீரர்களும் இரு பெரிய அரசர்கள் மாறாத பகைமையோடு தம்முள் எதிர்த்துப் பொரும் போர்க்களத்தை ஒக்கும்.

இப்பேற்பட்ட பெருமையுடைய ஏறு தழுவவதால் தமிழர்களின் மறம் நம்மை மெலிர்க்க வைக்கிறது. இத்தணை சிறப்புடைய சல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்யாமல் அனைத்து உதவிகளும் செய்து முறைப்படுத்தி தமிழர்களின் வீர விளையாட்டாக உலகம் முழுமையும் காணும் தமிழர் விளையாட்டாக முறைப்படுத்தவேண்டும்.

Wednesday, February 29, 2012

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் சொற்பொழிவு



[4-2-2012 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூக மன்றத்தில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்திய கவிச்சோலையில் ”எனது வெளிநாட்டுப் பயணங்கள் ”எனும் தலைப்பில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவரின் உரை]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் நடத்தும் இந் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்சி யடைகின்றேன். சென்ற முறை நான் சிங்கை தமிழ் எழுத்தாளார் கழக உலக மாநாட்டிற்கு வருகை தந்திருந்தேன். மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திய தலைவர் நா.ஆண்டியப்பன் அவர்களை சிறப்பிப்பதில் பேருவகை கொள்கின்றான். வருகை தந்திருக்கும் அருமைக் கவிஞர் கவிஞரேறு அமலதாசன் அவர்களை பொன்னாடை போர்த்தவும் எழுத்தாளர் கழகப் புரவலர் நாகை தங்கராசு அவர்களை மாலையணியவும் அன்போடு அழைக்கின்றேன். அருமைப்பெருமக்களே உலகத் தமிழ் எழுத்தாளர்களை சிங்கையில் கூட்டிய பெருமகனுக்கு உங்கள் கர ஒலிகளுக்கிடையே பாராட்டி மகிழ்கிறேன்.

கவிச்சோலையில் யான் சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் பங்கேற்று உரையாற்றி கவிஞர்களின் கவிதைப் பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்து அக்கவிதைகளை தமிழ்ப்பணியிலும் வெளியிட்டுள்ளேன். அப்போது மிகச் சிறப்பாக கவிபாடியா கவிஞர் மாதங்கி மாநாட்டில் மிகச் சிறந்த பங்கேற்பாளராக இருந்தார். கவிஞர்களை உருவாக்கும் பணியில் கவிச்சோலையின் பங்கு மகத்தான பங்காகும்
.
இன்றும் கவிஞர் பெருமக்கள் மிகச் சிறப்பாகாக் கவிதை பாடினீர்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, கைஃகு சிறுவர் பாடல் என அனைத்துத் துறையிலும் பாடினீரகள். அதில் மூவருக்கு பரிசுத் தொகையை என்னை வழங்கப் பணித்தீர்கள். பெறாத பெருமக்களும் அடுத்த நிகழ்வில் பரிசு பெறும் கவிதை வழங்கிய பெருமக்களே என வாழ்த்தி மகிழ்கிறேன். தங்களின் கவிதைகளையும் தமிழ்ப்பணியில் வெளியிடுவேன்.

ஐயா ஆண்டியப்பன் அவர்களின் நூலினைப் படித்து மகிழ்ந்தேன். நூலைப் படித்தால் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களின் மூன்று நாட்டு வரலாற்றை தம் வாழ்க்கையோடு இணைத்து நமக்குத் தந்துள்ளார் . வளரும் இலக்கியவாதிகள் அவசியம் படிக்கவேண்டிய நூல்.

அருமைத்தலைவர் ஆண்டியப்பன் அவர்கள் எனது வெளிநாட்டுப் பயணங்கள் எனும் தலைப்பில் உரையாற்றப் பணித்துள்ளார்கள். எனது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது சிங்கைதான். தமிழுக்கு அனைத்து வகையிலும் தமிழுக்கு முதண்மை தந்துள்ள சிங்கைக்கு 1998 ஆம் ஆண்டு வருகை தந்தேன்.வானூர்தி நிலையமானாலும், தொடர்வண்டி நிலையமானாலும், பெருந்து நிலையமானாலும், மக்கள் கூடும் பகுதிகளிலும் அழகு தமிழ் எழுத்தும் ஒலிப்பும் என்னைக் கவர்ந்தவை. மற்ற நாடுகளுக்கு முன்னோடி அதற்கு வித்திட்ட தமிழவேள் கோ.சா அவர்களை நெஞ்சாரப் போற்றுகிறேன். அதனைக் காத்துவரும் உங்களையும் வணங்குகிறேன்.

மலேசியா, தமிழர்கள் பரவி வாழும் தமிழ் உணர்வாளர்களின் களம்.உலகத்தமிழ் மாநாட்டிற்கே வித்திட்ட இடம். இன்றுவரை பல்வேறு மாநாடுகளை நடத்தி சாதனை படைத்தநாடு மலேசியாவிற்கு .தற்போது கூட பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு கோலாலம்பூரிலும், பெரியார் சிலை திறப்பு பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியிலும் நடைபெற்றது.மலேசியாவின் அனைத்து அமைச்சர்களும் பெருமக்களும் பங்கேற்றனர். மாநாட்டின் தமிழக ஒருங்கிணைப்பாளரகப் பொறுப்பேற்று பங்கு பெற்று தற்போது தங்கள் முன் நிற்கிறேன்.

இராசேந்திர சோழன் வென்ற கடாரம் கெடாவாக மலேசியாவில் உள்ளது. அங்கு 11 ஆம் நூற்றாண்டுக் கோயில் உள்ளது அதில் இந்து கோயில் என் பொறித்துள்ளார்கள் சோழன் வந்ததற்கான பதிவு அங்கில்லை. நாமெல்லாம் வரலாற்றை வரலாறாகப் பதிவு செய்யவேண்டும். நம் தலைமுறைக்காவது பதிய செய்ய வேண்டிய பொறுப்பு எழுத்தளார்களாகிய நமக்கு உண்டு. மலேசியாவில் பயணிப்பது தமிழகத்தில் பயணிப்பது போன்றே தோன்றும். மலேசியாவின் 3 தினஇதழ்களும் தமிழகச் செய்திகளையும் தமிழக எழுத்தாளர்களின் செய்திகளையும் வெளியிடுவதில் முதன்மை அவர்களுக்கே. 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் வழி நம் மாணவர்கள் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பங்கேற்று மகிழ்ந்திருக்கின்றேன்.மலேசியத் திருநாடு அன்று பேரறிஞர் அண்ணா கூறியதுபோல் தமிழர்கள் மலேசியாவில் வாழ்கிறார்கள் என்பது இன்றும் உண்மை.

எங்களது பன்னாட்டுத்தமிழுறவு மன்ற மாநாடு 6 நடத்தியுள்ளோம் அதில் மூன்று வெளிநாடுகளில் நடத்தியுள்ளோம். 3ஆம் மாநாடு செருமணி பெர்லினில் நடத்தினோம் அதில் முத்தமிழ்க்காவலர், கி.ஆ.பே.வி, நீதியரசர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்,பெரியார் பெருரையாளர் இறையன் போன்ற 50 பெருமக்கள்பங்கேற்றனர். குறிப்பிட்ட்டுள்ள நால்வரும் தற்போது இல்லை. 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கி மாநாட்டில்பங்கேற்றனர் இன்றும் பங்கேற்ற பெருமக்களோடு தமிழ்கத் தொடர்பு தொடர்கிறது.

1999 ஆன் ஆண்டு தாய்லாந்தில் பாங்க்காக் நகரில் மூன்றாம் மாநாடு நடத்தினோம் இலங்கை அமைச்சர் பெரியவர் தொண்டைமாண் புலிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தமிழகத்திலிருந்து 100 பெருமக்களும் மலேசியவிலிருந்து 40 பெருமக்களும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பங்கேற்றனர். உலகத்தமிழர்களை ஒரு குடைக்கீழ் அமர்த்திய மாநாடு. அதற்கு அருமைத் தந்தையார் அவருகளும் யானும் ஏற்ற சோதனைகள் ஏராளம்.விரிக்கின் பெருகும்.

2006ஆம் ஆண்ட்டு மலேசியா கோலாலம்பூர் நகரில் மலேயாப் பல்கலைக் கழகத்தில் 6 ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். மலேசியா அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். மலேசிய தேசியத் தலைவர் டத்தோ சாமிவேலு அவர்கள் பிரதமர் துறையின் அமைச்சர் பங்கேற்றது நினைவில் நிழலாடுகிறது. தமிழகத்திலிருந்து 70 பெருமக்கள் பங்கேற்றனர். சிங்கையிலிருந்தும் உலக நாடுகளில்ருந்தும் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர் அதுபோதுதான் அனைத்துப் பெருமக்களையும் சோழன் வென்ற கடாரம் பகுதிக்கு அழைத்துச் சென்று சாதனை படைத்தோம்.

ஐரோப்பாவில் இலண்டன், ப்ரான்சு,செருமணி, சுவிட்சர்லாந்து நாடுளில் தமிழர்களின் அன்பில் நனைந்திருக்கிறேன் நேரம் கருதி விரிக்க இயலாது. ஒமன், கத்தார், அபுதாபி,சப்பான், அமெரிக்கா,கனடாபோன்ற நாடுகளில் பயணித்திருகிறேன்.

ஐரோப்பிய நாடுகளிலும் கண்டாவிலும் ஈழத்தமிழர்கள் வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கை நாட்டியம் நடனம் என அனைத்துத் துறையிலும் மேலோங்கி உள்ளனர். விடுதலை வேட்கையில் எள்ளளவும் குறையா வண்ணம் ஈழமே குறிக்கோளாய்க் கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் நம்மவர்கள் செல்வச்செழிப்பில் உள்ளனர். அமெரிக்காவின் அனைத்து சங்கங்களும் இணைந்து பெட்னா என்ற அமைப்பை நிறுவி மாநாடுகள் நடத்துகின்றனர். பெரும்பாலான சங்கங்கள் பத்த்ரிக்ககைகள் நடத்தி தமிழை நாட்டியத்தை வளர்க்கின்றனர்.

மியான்மரில் தமிழர்கள் எல்லா நிலையிலும் மேலோங்கி உள்ளனர். அங்கு உள்ள கோயில்களெல்லாம் சிங்கப்பூரில் உள்ள கோயில்களைப் போல் புதுப்பித்துள்ளனர். தமிழ் படிப்பதற்கு எந்த வாய்ப்பும் வசதியும் இன்றி உள்ளனர். அறிஞர் மு.வ. பிறகு எழுத்தாளர்களே அங்கு உள்ளவர்களுக்குத் தெரியவில்லை.தமிழ்த் தொலைக்காட்சிகள் தெரிந்தாலும் இருக்கும் தமிழையே கெடுகின்றது என் வறுந்தினர்.

உலகெங்கும் வாழும் நம்மவர்கள் திரைப்படத்திற்கு முன்னுரிமை வழங்குகின்றனர். திரைப்படம் பார்ப்பதை தவறு என்று கூறவில்லை. மாநாடு நடத்துபவர்கள்கூட திரைப்பட சார்ந்தவர்களுக்க்கே முத்ன்மை வழங்குகின்றனர். மொழிக்காகவும் இனத்திற்காகவும் பாடுபட்டவர்களை இனம் காண்பதில்லை.குறைந்த அளவு இலக்கிய அமைப்பு நடத்தும் எம்மைப் போன்றவர்களிடம் கருத்தும் கேட்பதில்லை. தமிழ்கத்தில் தமிழுக்காகப் போராடும் பெருமக்களை அழைத்து அறிந்தால்தான் நம் மொழி நம் மேன்மையுறும்.
மிகக் குறுகிய காலத்தில் எனது வருகையைக் கூறியவுடன் நிகழ்வை ஏற்பாடு செய்த சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன் அவர்கட்கும்,செயாலாளர் அருணாச்சலம் அவர்கட்கும் வருகை தந்துள்ள பெருமக்கள் கவிஞரேறு அமலதாசன், தமிழாசிரியர் சிவசாமி, புரவலர் நாகை தங்கராசு கவிதைபாடிய கவிஞர் பெருமக்கள் மற்றும் அனைத்துப் பெருமக்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

மலேசியா கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை



[7-2-2012 அன்று கிள்ளானில் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் தலைவர் ப.கு.சண்முகம் ஏற்பாட்டில்கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு நடந்ததமிழ் தமிழர் சிந்தனை கலந்துரையாடலின்போது கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரின் உரை]


கிள்ளானில் உலக்த் தமிழ்ப்பண்பாடு இயட்க்கத்தின் சார்பில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுரோடு தமிழ் தமிழர் சிந்தனை சந்திப்பு. நடைபெற்றது..தலைவர் ப.கு.சண்முகம் அவர்களும் அறிஞர் முரசு நெடுமாறன் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.கிள்ளான் நகர தமிழ்ச்சான்றோர்கள் பங்கேற்றனர்.

முரசு நெடுமாறன் அவர்கள் தமிழகத்தில் தமிழ் ஆண்டு எடுத்துள்ளார்கள். தமிழகமே கொதித்து எழுந்திருக்க வேண்டாமா அங்கு தமிழ் அறிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற மன் வேதனையைத் தெருவித்தார்.

தமிழக மக்கள் மாற்றம் எனக் கூறி மக்கள் வழங்கிய தீர்ப்பே இந்த மோசமான நிலைக்குக் காரணம் என்றேன்,எங்களது பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் அருமைத்தந்தையார் அவர்கள் தலைமையில் பிப்ரவர் 12 முதல் 23 வரை தமிழாண்டை மீண்டும் கொணர்ந்திட ஊர்திப் பயணமாக ஊர்தோறும் தெருமுனைக்கூட்டங்கள் தமிழ் ஆர்வலர்கள் எழுச்சியை ஏற்படும் வண்ணம் அமைத்துள்ளோம். தமிழ்ப்பணியில் வெளியிட்ட அடவணையையும் காண்பித்தேன்.

கலைஞர் தொலைக்காட்சியில் சிற்ப்புச் செய்தியாளர் தம்பி ராசா அவர்கள் என்னைப் பேட்டி கண்டார்கள். தமிழ் ஆண்டை இந்த அரசு எடுத்ததற்கு உலகத் தமிழினமே வெட்கித் தலைகுனிகிறது எனக் கூறினேன். அதை மெய்ப்பிக்கும் வண்ணம் மலேசியத் தமிழர்களாகிய தாங்கள் கடுமையாகச் சாடியுள்ளீர்கள். இதை தமிழ்கம் முழுமையும் பப்புவோம்

மலேசியாவைச் சார்ந்தவர்களுக்கு எந்தப் பரிசும் வழங்குவதில்லை இதை தமிழகம் நடைமுறைப் படுத்தவேண்டும் என தலைவர் ப கு சண்முகம் வினவினார்.

அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கே தமிழக அரசு பரிசு வழங்கியுள்ளதை நினைவில் கொள்ளவேண்டுகிறேன் . செம்மொழி மாநாட்டின்போது உலகம் முழுமையும் உள்ள தமிழ் அறிஞர்களை கலைஞர் அரசு அழத்ததையும் வெளிநாட்டு அறிஞர்களுக்கே செம்மொழி விருது வழங்கியதையும் குற்ப்பிட்டேன். தமிழுக்கு ஆற்றிய ஒப்பற்ற செயல்களைப் போற்ற வேண்டும் அவ்வாறு நாம் போற்றாத்த போது செய்திகள் திரிக்கப்படுகின்றன. செய்திகள் திரிக்கப்படும்போது நாம் தமிழ் ஆட்சியை இழக்கிறொம் என்பதை நினைவிகொள்ள வேண்டும்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினோம். திரளாகப் பங்கேற்று. மலேசிய மக்கள் மிகச் சிறப்பாக நடத்தினீரகள். இந்தத் தருணத்தில் மலேசிய மக்களுக்கும் அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இலண்டனிலிருந்து வருகை தந்துள்ள டாக்டர் சுடான்லி செயராசு குடும்பதினருக்கு என் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன். பெருமகன் ஈழ மக்கள் இலண்டனில் பணியாற்றும் வேகத்தைக் கூறினார். அவர்களோடு இணைந்து உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழ விடுத்லைக்குப் பாடுபடுவோம்.

இறுதியாக செயராசு அவர்கள் சிறந்த பாடகர் என நிருபித்துள்ளார். ஐயா சண்முகம் அவர்கள் சந்திரபாபு பாடலை வேண்டியவுடன் பம்பரக் கண்ணாலே பாடலைப் மிகச் சிறப்பாகப் பாடி இலண்டனுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். பெருமனாருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

அரும்பாடுபட்டு இந் நிகழ்வை அமைத்த தலைவர் ப.கு. சண்முகம் அவர்கட்கும், அறிஞர் முரசு நெடுமாறன் அவர்கட்கும். இங்கு என்னை அழைத்து வந்த கவிஞர். கோ.வி. பெருமாள் அவர்கட்கும் கலந்து கொண்ட பெருமக்கட்கும் எனது நன்றி கூறி விடைபெறுகிறேன்.

மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரைப் பொழிவு




[2-2-2012 அன்று மலேசியா தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் தைப்பிங் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில்
கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின்உரை]

தைப்பிங் தமிழ் ஆர்வலர்கள் சார்பில் கவிஞர் பொன் சமுகம் நடத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்கு பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் நேற்று சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் உத்தம்மஞ்சோங் பகுதியில் உரையாற்றினேன். அங்கிருந்து செயல் வீரர் விசயன் அவர்கள் தாப்பாவில் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கிருந்து பெரியார் நெறியாளர் முனியரசன் அவர்கள் ஒரே தொடர் ஓட்டமாக தைப்பிங் நகருக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் யான் பங்கேற்பதற்கு உருதுணையாக இருந்த பெருமக்களுக்கு உங்களின் சார்பில் நன்றியை தெருவித்துக் கொள்கிறேன்.

நான் வாயிலில் நுழைந்த உடன் பெரியவர் முத்துசாமி அவர்கள் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்களின் நலத்தை வினவி நூற்றாண்டு கண்ட தோட்டப்புறப் பள்ளியீன் மலரை வழங்கினார்கள். பெருமக்களே எங்களின் மலேசியத் தொடர்பு 1977ஆம் ஆண்டுமுதல் இன்றும் தொடர்கிறது. இங்கு வாழ்ந்து தமிழகத்தில் மறைந்த சுவாமி இராமதாசர் அவர்கள் தம்முடைய மணிவிழாவிற்கு தம் மாணவனான அருமைத் தந்தையாரை பயணச்சீட்டு வழங்கி அழைத்தார்கள். அது போது மலேசியாவின் பட்டிதொட்டியெல்லாம் தந்தையரை அழைத்துச் சென்றார்கள். ஆய கலைகள் 64 யையும் அறிந்த அந்தத் தமிழ் முனிவரின் வற்றாத பேரன்பே இந்த மலேசியச் சொந்தங்கள்.

இந்த இந்து வாலிப சங்க மண்டபத்தில் பெருந்திரளாக பெருமக்கள் கூடியுள்ளீர்கள். மலேசியாவில் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் உணர்வையும் கட்டிக்காக்கும் உங்களை வணங்கி மகிழ்கிறேன். என்னோடு வருகைதந்துள்ள குடியாத்தம் குமணன்,செந்தமிழ்முரசு செந்தமிழ்விரும்பி அ.நாகேசுவரராவ் அவர்களுக்கும் வணக்கங்கள்.

பன்னாட்டுத் பகுத்தறிவு மாநாட்டின் தமிழகத்தின் ஒருங்கிணைப் பாளராகப் பொறுப்பேற்று 40 பேராளர் பெருமக்கள் கோலாலம்பூரில் உரையாற்றி மலேசியாவே பெரியார் கருத்துக் கள்மாக இருந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன்.

இன்று நாம் பெரியாரின் சிந்தனைகளால் எல்லா நிலைகளிலும் மேலோங்கி நிற்கிறோம் தந்தை பெரியார் நம்மிடம் புரையாடிப் போயிருந்த சீர்கேடுகளை நீக்கி மனிதனை மனிதானாக வலம் வரவைத்தவர். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடுகளை நீக்க தம் வாழ்நாளையே தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கிய தீரர்.பெண் அடிமைத் தனத்தை வேரறுத்து பெண்சமுதாயம் தழைத்து ஓங்க புரட்சித் திட்டம் வழங்கியவர். பெண்கள் சொத்துரிமைக்கு முழக்கமிட்ட மாமேதை. அன்று குலக் கல்வித் திட்டத்திற்கு சாவுமணி அடித்ததால்தான் இன்று நம்மக்கள் மேல் நிலையில் உள்ளார்கள். மேல்நிலையில் உள்ளவர்களெல்லம் நன்றியோடு பெரியார் கொள்கைகளை நம் தலைமுறியிடம் பரப்பியியிருந்தால் மீண்டும் பல இழிவுகளுக்கு ஆளாயிர்க்க மாட்டோம்.

பெரியாரின் திராவிடர் கழகம் மிகச் சிறப்பாக தமிழகத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் வெற்றிநடைபோடுகிறது. இந்தியாவெங்கும் உலகம்மெங்கும் பெரியார் கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தில்லியிலேயே பெரியார் மையத்தை நிறுவி பெரியாரின் கருத்துக்கு உரம் சேர்த்துள்ளார்கள். நம் தன்மான இயக்கத்தின் தலைவரும் மாநாட்டின் தலைவருமான எழுத்தாண்மை ஏந்தல் முனைவர் பெரு.அ தமிழ்மணி அவர்கள் மலேசியாவில் பினாங்கு மாநிலத்தில் கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலையை நிறுவியுள்ளார்கள். மலேசிய மக்கள் பெரியார் இருமுறை வந்தபோது காட்டிய அன்பு மகத்தானது அதனது தொடர்ச்சிதான் மாநாடும் சிலை திறப்பும்.பெரியார் கொள்கைகளை இன்று நாம் மறந்து நம்மை மாற்றான் ஆளும் ஏளனத்திற்கு ஆளாகியுள்ளாம். இந்நிலையைத் தகர்க்க பட்டிதொட்டியெல்லாம் அவர் வழியில் நின்று தமிழன் தன்மானத்தை நிலைநாட்டுவோம்.

அன்புப் பெருமக்களே தமிழர்கள் தலைகுனியச் செய்யும் செயல்கள் தமிழ் நாட்டில் நடைபெற்றுவருகின்றன. தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள் தலைமையில் திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட்டு அறிவித்தார்கள். முந்தைய கலைஞர் அரசு தமிழாண்டாக் அறிவித்தது. இப்போது உள்ள தமிழக அரசு தமிழாண்டை நீக்கி உத்தரவு போட்டுள்ளது.தமிழனின் இளித்தவாய்த் தனத்தால் வந்த இழப்பு.

தமிழ் ஆண்டை நான் அனைவரும் நடைமுறையில் கொண்டு வரவேண்டும். தாங்கள் அடித்துள்ள அழைப்பிதழ் அழகு தமிழில் அழகாக உள்ளது, இன்மேல் தாங்கள் அச்டிக்கும் அழைப்பிதழ்களில் தமிழ் ஆண்டை நடைமுறைப்படுத்த வேண்டும்..

பெரியார் வழிவந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை இராசதானி என்ற்றிருந்ததை சட்டமன்றத்தில் தமிழ்நாடு என அனைவரது ஒப்புதலோடும் மாற்றிய பெருமைக்குரியவர்.அறிஞர் வழி வந்த கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஒருமன்தாகக் கொண்டுவந்த தமிழாண்டு தீர்மாணத்தை புறந்தள்ளுவது திருவள்ளுவரைப் புறந்தள்ளுவதாகும். ஆகையால் பெருமக்களே நம் ஆண்டு தை தமிழாண்டு திருவள்ளுவர் ஆண்டுதான் என்ற சிந்தையில் கொண்டு நடைமுறைப் படுத்துவோம்.எங்களது தமிழ்ப் பணி இதழ் தமிழாண்டு திருவள்ளுவராண்டு 2043 மலராகவே வெளியீட்டு வருகிறோம். தாங்களும் திருவள்ளுவராண்டை தங்கள் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துங்கள்.

ஐயன் திருவள்ளுவர் சிந்தனையையும், திருவள்ளுவர் ஆண்டையும் இரு கண்களாகக் காப்போம் காப்ப்போம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

Sunday, February 26, 2012

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை




(1-2-2012 அன்று மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் பகுதியில் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெற்ற தமிழர் திருநாள் நிகழ்வில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவரின் உரை)

மலேசிய சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் தமிழ் நெறிக்கழகம் சார்பில் நடபெறும் தமிழர் திருநாள் நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன். மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூரில் எழுத்தாண்மைஏந்தல் முனைவர் பெரு.அ. தமிழ்மணி நடத்திய பகுத்தறிவு மாநாட்டிற்கும் பினாங்கு கப்பளா பத்தாசு பகுதியில் பெரியார் சிலை திறப்பு நிகழ்விலும் பங்கேற்றும் தமிழகப் பேராளர்களின் ஒருங்கிணப்பாளராகவும் பொறுப்பேற்று 40 பெருமக்களை தமிழகத்திலிருந்து அழைத்துவந்தும் இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பதில் பேருவகையடைகின்றேன்.

மாநாட்டின் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் வாசு அவர்களும் மாநாட்டின் இளைஞர் அணித்தலைவர் அன்புவாணன் அவர்களும் கப்பளா பத்தாசிலிருந்து எங்களை தாப்பா நகருக்கு அழைத்துச் சென்று அருகில் உள்ள பகுதிகளுக்கும் குறிப்பாக தாப்பா தமிழ்ப்பள்ளிக்கும் அழைத்துச் சென்று இன்று இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்து எங்களை விசயன் அரவணைப்பில் உலா வரச் செய்துள்ளார்கள் அப் பெருமக்களுக்கு உங்களின் சார்பாக நன்றியைத் தெருவித்துக்கொள்கிறேன். உலகத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுபேற்று மலேசியாவில் வெற்றிகரமான் மாநாடு நடத்திய் ப.கு.சண்முகம் அவர்கள், இந்நிகழ்வு சிறப்புடன் நடக்க பெரும்பங்காற்றிய ம.இ.க.பெருமக்கள் எதிர்க்கட்சிப் பெருமக்கள் இங்கே வருகை தந்துள்ளனர். இங்கே வருகை தந்திருக்கும் ஒளவை, கண்ணகி, திருவள்ளுவர்,பாரதியார் உருவில் உள்ள சிறுவர்கள் திருக்குறள் பாடி இங்கே அமர்ந்துள்ள மாணவச் செல்வங்கள், மாணவச் செல்வங்களை வளர்த்துள்ள பெற்றோர்கள் எம்மோடு வருகை தந்து உரையாற்றியுள்ள புரட்சி இயக்குநர் வேலு பிராபாகன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இளம் சேக்குவரா, செந்தமிழ்முரசு செந்தமிழ் விரும்பி அனைவர்க்கும் என் கரம் குவிந்த வணகத்தைத் தெருவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் பாடிய நம் செல்வங்கள் மிகச்சிறப்பாகப் பாடினார்கள். அவர்களை வழி நடத்தும் விசயன் அர்களின் சகோதரி திருக்குறள் வகுப்புக்கு பெற்றோர்கள் அனைவரும் அனுப்புங்கள் என வேண்டுகோள் விடுத்தார். பெருமக்களே தமிழர்கள் திருக்குறளை மறந்த காரணத்தினாலேயே நம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளானோம். திருக்குறள் வழி அருமைச் சகோதரி நம் குழந்தைகளை சான்றோராக தன்மானத் தலைவர்களாக உருவாக்குகிறார் என்பதறிந்து இறும்பூதெய்துகின்றேன்.

தன்மானத் தந்தை பெரியார் அவர்களின் திரூஉருவச்சிலையை அவர்கள் கால்பதித்த பினாங்கு மாநிலத்தில் நிறுவியுள்ளீர்கள். அந்தப் பெருமகன் இல்லையென்றால் தமிழகத்தில் நாம் புறம் தள்ளப்பட்டு கைக்கூலிகளாக இன்னும் இடுப்பில் துண்டையும் செருப்பைக் கையிலும் தூக்கிக் கொண்டு அடிமைகளாகவே இருந்திருப்போம். செலவந்தக் குடும்பத்தில் பிறந்த பெரியார் அவர்கள் அனைத்தையும் துறந்து ஆட்சி அதிகாரத்திற்கு அப்பால் மக்களுக்காவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாக மறவர். அப்பெருமகனுக்கு மலேசிய மக்கள் காட்டிய நன்றியே கோலாலம்பூர் மாநாடும் பினாங்கு சிலைதிறப்பும்.

நான் பன் முறை மலேசியா வந்திருந்தாலும் இப் பகுதிக்கு தற்போதுதான் வந்துள்ளேன். தங்களின் ஆர்வமும் அன்புப் பெருக்கும் எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது. தமிழ்ச் சான்றோர்களின் வேடத்தில் வந்த பிள்ளைகளெல்லாம் அப் பெருமக்கள் வழங்கிய சிந்தனைகளை நினைவில் கொள்ளுங்கள். அதன் படி வாழ்வை மேற்கொள்ளுங்கள்.

விசயன் அவர்கள் தம்முடைய நண்பர் இலக்குமணன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். இலக்குமணன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது தாம் வங்கிக்கு காசோலை தமிழில் எழுதி இருந்ததால் அதை திருப்விட்டதாகவும், இச் செய்தியை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பெரும் பரபரப்பை உண்டாக்கி பின் வங்கித் தலைமையே அவரிடம் பேசி தற்போதுவரை தமிழிலேயே காசோலை வழங்கிய வருகிறார். இந்தப் போராட்ட குணம் தமிழர்களுக்கு வர வேண்டும். இந்த சிம்பாங் அம்பாட் மெலிந்தாங் இலக்கிய உணர்வும் தமிழ் வேட்கையும் உள்ள பகுதியாக உணர்கிறேன்.

விசயன் அவர்கள் பாரதியார் தமிழ்ப் பள்ளிக்கும் தோட்டப் புறம் உள்ள தமிழ்ப் பள்ளிக்கும் அழைத்துச் சென்றார். உண்மையிலேயே பள்ளி மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப் பட்டு நம் தமிழ்ச் செல்வங்கள் அருமையாக தமிழ் பயில் கின்றனர். வெல்லத் தமிழ் என்றும் வாழும் என்பதை இப் பள்ளிகளைக் காணும்போது உணர்க்கிறேன்.

இங்கிருந்து 20 கல் தொலைவில் உள்ள பேராறு தாப்பா ஆறும் கடலில் முக்கோணமாக சங்கமிக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார் விசயன். புரட்சி இயக்குநர் வேலு பிராபாகரன் தமது படத்திற்கு காட்சி எடுக்கும் அளவிற்கு எழில் கொஞ்சும் அழகு.

திருமிகு இரஞ்சன் அவர்கள தமிழ் குழுவோடு எம்மோடு பேசும்போது ஈழத்தில் நடந்த கொடுரத்தையும் கையாலாகாத நிலையில் நாம் இருந்ததையும் உணர்சிபொங்கக் குறிப்பிட்டார்.

இதையெல்லாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் தமிழர்களிடம் அத்துணை உணர்வுகளும் இப்பகுதியில் மேலோங்கி உள்ளது.

அருமைசான்ற பெருமக்களே ஐயன் திருவள்ளுவர் வாய் மொழி நெறியையும், தந்தை பெரியாரின் சம்த்துவக் கோட்பாட்டையும் நாம் ஒழுகி நடந்தோமானால் நம்மை யாரும் வீழ்த்தமுடியாது என்று கூறி விடைபெறுகிறேன்.

Thursday, January 26, 2012

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் - 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு அறிஞர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை



மறைமலை இலக்குவனார்
52/3 சௌந்தரியா குடியிருப்பு,அண்ணாநகர் மேற்கு விரிவு,சென்னை-600 101.
மேனாள் மாநிலக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர்,
மேனாள் சிறப்பு வருகைப்பேராசிரியர்,
கலிபோர்னியாப் பல்கலைக்கழகம்,பெர்க்கிளி.
ஆசிரியர்,’செம்மொழிச்சுடர் ‘-மின்னிதழ்.
. www.semmozhicchutar.com
தொலைபேசி:26153561 கைப்பேசி:9445407120
அணிந்துரை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர்.உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர்.’கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர்.கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டு வனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி.
‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர்.


தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத் தலைமையமைச்சர் வாசபேயரைக் கண்டு உரிமைக்குரல் எழுப்பிவந்தவர்.ஈழத்தில் இரண்டு நூறாயிரம் தமிழர் கொடுமையான முறையில் கொலைசெய்யப்பட்ட வேளையில் கொதித்தெழுந்தவர்.இனப்படுகொலையாளனைப் ‘போர்க்குற்றவாளி’ என்றறிவிக்கவேண்டுமென இற்றைத் தலைமையமைச்சர் மனமோகனரிடம் மன்றாடியவர்.
சென்னைமுதல் குமரிவரைத் தமிழ்நடைப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டைத் தம் காலாலளந்தவர். நூற்றுக்கணக்கான நூல்கள் எழுதித் தமிழின் பெருமையை நூலாலளந்தவர்.
நாள்தோறும் உரிமைமுழக்கம்,பொதுக்கூட்டம்,இலக்கிய அரங்கம், பாட்டரங்கம் என அரங்குகள் கண்டு தமிழர் உள்ளத்தில் கடுகளவேனும் மொழியுணர்வும் இனவுணர்வும் மலர்ந்திட அயராதுழைப்பவர்.அறிவறிந்த மக்கட்பேறு பெற்று அவர்கள் மூலமும் தமிழுக்குத் தொண்டு புரிந்துவரும் எடுத்துக்காட்டான தந்தை.

ஆற்றல் சால் இதழாளர்.கடந்த நாற்பத்திரண்டாண்டாகத். ’தமிழ்ப்பணி’எனும் இதழைப் பல்வேறு அல்லல்களிடையேயும் அயராது நடத்தித் தமிழினத்தைத் தட்டியெழுப்ப முயன்றுவருபவர்.உணர்வுப்பெருக்குடன் பொழிவாற்றும் நாவலர்;

வடசொற்கடிந்து தனித்தமிழ் பேணும் தமிழ்க்காவலர்.
இன்முகம் காட்டி இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் போற்றிப் பகைவரையும் நண்பராக்கிடும் நயமிக்க பண்பாளர்.

அனைத்திற்கும் மேலாக மனிதநேயத்தை உயிரெனப் போற்றும் தலைசிறந்த மனிதர்.
வாழ்வுமுழுதும் எதிர்நீச்சல் மேற்கொள்வதிலேயே காலம்கழித்துவரும் பெருங்கவிக்கோ அவர்களின் இக் காப்பியப் படைப்புமுயற்சியும் ஓர் எதிர்நீச்சல்பணியாகவே அமைந்துள்ளது எனலாம்.

பெருங்கவிக்கோ வா.மு.சே.அவர்களின் நோக்கம் விழுமியது.தமிழ்நாட்டின் வரலாற்றை- குமரிக்கண்டக் காலம் முதல் இன்றுவரையிலான வரலாற்றுநிகழ்வுகளை ஆவணப்படுத்த- விழைகிறார்.இத்தகைய உயரிய நோக்கத்தை இதுவரை எந்தத் தமிழ் எழுத்தாளரும்,பாவலரும் வெளிப்படுத்தியதில்லை. அவ்வகையில் வா.மு.சே. தன்னிகரின்றித் தனித்த சிறப்பு மிக்க சிந்தனையாளராகத் திகழ்கிறார்.தமிழ்நில வரலாற்றுடன் அருள்மொழியன் கதையும் பின்னிப் பிணையப்படுகிறது.ஒரு நடப்பியல்நெறி சார்ந்த தோற்றத்தை உருவாக்குதற்கு இங்ஙனம் அமைத்தார் எனலாம். செய்திச்செறிவு படிப்போர்க்குச் சலிப்பூட்டும் எனக் கருதிச் சுவைமிக்க வாழ்க்கைக்குறிப்புகளை இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தோடு எழுத்துக்களைப் புனைந்தோர் இதுகாறும் தமிழ்நாட்டில் இல்லை என்பதால் பெருங்கவிக்கோ நம் அனைவரின் பாராட்டையும் பெறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுத் தமிழ்நில வரலாற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இலக்கியம் புனையும் பணியைத் துணிவுடன் மேற்கொண்டுள்ளார். எனவே பெருங்கவிக்கோ தமிழ்கூறு நல்லுலகின் பெரும் போற்றுதலுக்குரியவர் எனலாம்.

உங்கள் கைகளில் தவழும் மூன்றாம் காண்டத்தில் எதிர்நீச்சல் திருமணமாக அமையும் இறையன் –திருமகள் இணையர் திருமணமும் காப்பியத்தலைவன் அருள்மொழி-சேதுமதி திருமணமும் அவற்றின் சமுதாயப்பின்புலத்துடன் இனிது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
புரியாத வடமொழி மந்திரம் ஓதி நடத்தப்பெறும் திருமண வழமையில் ஊறித் திளைத்த மூடநம்பிக்கை மிக்க மக்களை எவ்வாறு அருள்மொழி எதிர்கொள்கிறார்,அவரகளின் இசைவுடன் எவ்வாறு தமது திருமணத்தைத் தமிழ்மணம் கமழச் செய்தார் என்னும் வரலாறு சுவைமிக்கது.அக் காலத் தமிழ்மக்கள் சனாதனிகளின் வடமொழி ஆதிக்கத்தைப் புனிதமெனப் போற்றி
உச்சிமேற்கொண்ட அவலம் நம் நெஞ்சை உருக்குகிறது.பெரியார் மட்டும் தோன்றியிராவிடின். . . .?எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
காப்பியப் புலவர்களின் நெறியில் நம் பெருங்கவிக்கோ இயற்கைக் காட்சிகளைக் கவினுறப் படைத்துள்ளார்.

குற்றால அருவியின் வீழ்ச்சி-சத்தம்
கோடி இசையும் தாரா மாட்சி-ஒப்பில்
நற்றாள மத்தளத்தின் இசைபோல்-அதிர்ந்து
நாளோடும் பொழுதோடும் கேட்கும்-என்றும்
பற்றிய விடாதவர்கள் போலே-சூழ்ந்த
பறவைகளோ கீத இசை பாடும்-எங்கும்
அற்புதங்கள் சூழ்ந்திருக்கும் ஆட்சி-அந்த
அருமைக்கு நிகரேது நீட்சி!

எனக் கவிஞர் புனைந்துரைக்கும் இயற்கைநலன் குற்றாலத்தையே நம் கண்முன் கொணர்கின்றதன்றோ?

’குமரிக் கதிரெழுச்சிச் செவ்விகாண் படலம்’மிகச் சிறப்பாகக் குமரிக்கடலின் இயற்கைமாண்பை நயமுற நவில்கிறது.

காலைக்கதிர்ச் செல்வனைப் பதுங்கி எழும் அரிமா என உருவகப்படுத்துகிறார்.கீழ்வானின் சிவப்பைத் தலைவன் காக்கச் சிந்தும் குருதியா? என வினவி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார்.

’கதிரும் நிலவும் காண் கவின்படலம்’ என்னும் படலத்தில் குமரிக்கடலில் கதிரும் நிலவும் சந்திக்கும் மாலைநேரக் காட்சியைச் சிறப்புறச் சொல்லோவியப்படுத்துகிறார்.

எதிரெதிர் முக்கடல் முன்னே-அந்தி
இரவியும் பூரண நிலவும்
மதிகதிர் சந்திப்புக் காட்சி-ஆட்சி
மாநில வையகம் முற்றும்
பதிஎதும் கண்டிட இயலா-மாட்சிப்
பண்கடல் குமரிமுனையில்
விதித்ததோர் இயற்கைசெய் விதியே-காண
வேண்டுமே தவம் கோடி மதியே!

எனக் கவிஞர் மகிழும்வேளையில் நாமும் அச் சொல்லோவியத்தை நம் மனக்கண்முன் கண்டு சுவைக்கிறோம்.

‘இருசுடர்த்தோற்றம்’ புனைதல் காப்பியநெறிகளுள் இன்றியமையாதது.இதனைத் திறம்படச் செயற்படுத்திக் கவிஞர் நம் போற்றுதலைப் பெறுகிறார்.
தமிழர்தம் வாழ்வியல்நூலாகிய தமிழ்மறை திருக்குறளை ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிய திறத்தையும் டால்சுடாய் காந்தியடிகளுக்குத் திருக்குறளை எடுத்துரைத்த வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார் பெருங்கவிக்க

காந்தியத்தின் நெறியாகி
கண்ணனவர் உரைநிகழ்த்தும்
மாந்தரிலே காந்தியைப் போல்
மாமனிதர் யாருமுண்டோ?
ஆந்துணையர் டால்சுடாய்தான்
அறிமுகத்தால் திருக்குறளை
ஏந்திஆங்கி லம்கற்க
ஏகசோதிக் கருத்தொளிகள்!(பக்.408)

என்னும் கவிஞரின் வரலாற்றுக்குறிப்பு இன்றைய காலத்திற்குத் தேவையான ஆவணப்பதிவாகும்.
திருக்குறளை உருசியநாட்டின் டால்சுடாய் கற்றே
அள்ள அள்ளக் குறையாத அமுதம் என்றே
அண்ணலுக்கு மடல்விடுக்க அறிந்தார் அண்ணல்!(பக்.175)
என்னும் கவிஞரின் குறிப்பு தமிழர்க்கு வரலாற்றுண்மையை நினைவூட்டும் செம்மையான பதிவு ஆகும்.

ஏனெனில் ஓர் எழுத்தாளர் டால்சுடாய் திருக்குறளைக் காந்தியடிகளுக்கு எழுதவில்லை என முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கமுயன்றுள்ளார்.1908-ஆம் ஆண்டு “ஓர் இந்துவுக்குக் கடிதம்”என்னும் தலைப்பில் டால்சுடாய் எழுதிய மடல் அவரைப் பற்றிய வலைத்தளத்தில் இன்றும் காணக்கூடிய வகையில் இணையதளத்தில் உள்ளது.எனவே பெருங்கவிக்கோ இதனை வலியுறுத்தும் வகையில் தமது காப்பியத்திலும் பதிவுசெய்துள்ளமை எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் தொலைநோக்குடையது.
இதுபோன்றே

இந்தி ஆதிக்க எதிர்ப்பு-பக்.57-58& பக்.328
மும்முனைப்போராட்டம்- பக்.58-59
திபெத்தில் சீன மேற்சேறல்-பக்.150
தில்லையாடி வள்ளியம்மை தீரம்-பக்.152
எல்லைகாத்த ம.பொ.சி. – பக்.209-210
சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்-பக்.214-215
வள்ளலார்- பக்.217-218
அண்ணா- பக்.218-219
அரசர் அண்ணாமலையார்- பக்.220
கல்லக்குடி போராட்டம்- பக்.222-223
நேருவுக்கு கருப்புக்கொடி- பக்.224-225&பக்.329
மறைமலையடிகள் திருவள்ளுவர்
காலத்தை வரையறுத்தமை- பக்.360-361
தந்தை செல்வா-பக்.422
என வரலாற்றுச்செய்திகளை வாரிவழங்கி ’இக்காலப் பரணர்’ எனத் திகழ்கிறார்.



இந்தி ஆதிக்க எதிர்ப்புப் படலம் 55-59
தமிழர்கள் முனைப்பெழுச்சிப் படலம் 224-233
சங்கரலிங்கனார் தவம் நோற்ற படலம் 327-337
என்னும் படலங்கள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன.
இங்ஙனம் இயற்கைப்புனைவிலும் வரலாற்றுப் பதிவிலும் ஈடற்றுவிளங்கி ஒப்பற்ற காப்பியத்தை வடிவமைத்துள்ளார்.
நூலைப் படித்துப் பயன் கொள்க.தமிழுக்குத் தொண்டாற்றுவதே தம் வாழ்வின் குறிக்கோள் எனக் கொண்டு வினையாற்றும் பெருங்கவிக்கோ அவர்களின் பெருமுயற்சிக்குத் துணைபயக்கும் வகையில் இந் நூலை வாங்கிப் படித்துத் தோழர்களுடன் விவாதம் நிகழ்த்துக.நூலைக் கற்றார், தம் திறனாய்வுகளை நூலாசிரியர்க்குத் தெரிவிப்பது, அவரை இன்னும் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.வாசகர் தம் கருத்துரைகள் ஆசிரியரை அவர்தம் படைப்புப்பணியில் மென்மேலும் முடுகி முன்னேற உதவும் என்பதனை நினைவிற்கொள்க.

”விலைப்பொருட்டால் நூல்தன்னை வாங்குவார் இலரேல்
கலைப்பொருட்டால் இயற்றத் துணிவார் எவரே?”
என்னும் என் தந்தையார் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் பொன்மொழியை முன்வைத்துத் தமிழன்பர் அனைவரும் நூலை வாங்கிப் பொருளிழப்பிலிருந்து நூலாசிரியரைக் காக்கவேண்டுமென்னும் என் வேண்டுகோளுடன் என்னுரையை நிறைவுசெய்கிறேன்.
இன்னும் ஏழு காண்டங்கள் இயற்றி வெளியிடக் கவிஞர் திட்டமிட்டுள்ளார்.அவர்து ஒப்பற்ற இப் பணி அவருக்கு மட்டுமின்றித் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமைசேர்க்கும் பெரும்பணி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இத்தகைய ஒப்பற்ற பெருங்காப்பியத்தை வடித்துக் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் காலமெல்லாம் புகழ்பெற்றோங்க என் உளமார்ந்த வாழ்த்துகள்.

வெல்க தமிழ்! ஓங்குக பெருங்கவிக்கோ அவர்களின் தமிழ்த்தொண்டு!

அன்புடன்,
மறைமலை இலக்குவனார்

Friday, January 6, 2012

பொன்விழாக் காணும் நாயகன் உத்தமன் சத்தியன் வித்தகன் உன்னத ஈகையன் கவியரசன் வாழிய வாழியரோ


பெருங்கவிக்கோ

வாழிய வாழிய வாழியவே – உயிராம்
மாமகன் மதிமகன் குடிவாழிவித்த கொடைமகன் கவியரசன் (வாழிய)
ஆழிசூழ் உலகில் அண்ணன் தம்பிகள் தங்கை வாழத்
சூழினும் இடர்பல துணாஈநின் காப்பவன் கவியரசன் (வாழிய)

அம்மா சேதுமதி ஆணையை அனுவும் தவறாதவன்
அத்தாயே தன்வழி காட்டியாய் அகத்தாறு வாழ்பவன்
தம்மால் முடிந்ததை தக்கார்க்கு உதவும் சால்பினன்
தனைஇழந்தும் தன்குடி உயர்த்திய சான்றோனிவன் (வாழிய)

தந்தைசொல் மிக்கதோர் மந்திரமில் எனும் தகைமொழி
தனைப்போற்றினும் இணைவாதமும்ம் தாக்கிட உண்மை தேர்பவன்
உந்திவாழும் முயற்சியால் தன்னையே உருவாக்கி ஆள்பவன்
உத்தமன் சத்தியன் வித்தகன் உன்னத ஈகையன் கவியரசன் (வாழிய)

சமுதாய உணர்வுடை தந்தைவழி நடப்பவன் கணினியில்
தரணியை உயர்த்திடும் தமிழ்வழி உயர்த்திடும் தாயவன்
அமுதுதான் கிடைப்பினும் அதையும் பிறர்க்கு பகிர்ந்தீந்து
அகிலமனித நேயம் அறம்வளர் ஆக்கங்கொள் கவியரசன் (வாழிய}

இறையருள் எட்டுத்திசையும் தாள்பதித்த தந்தைவழி
எம்தமிழ் தமிழினர் ஏற்றம்பெற உழைப்பவன்
நன்று ஐம்பதகவை கண்டனன் நாநிலம் ஓங்கிடவே
நயன்வினை பயன்வினை நாயகனாய் நனிசெயல் கவியரசன் (வாழிய}

கணவன் வழியே தன்வழிஎனக்கருதும் கவியரசன் நன்மனைவி
கவின் தமிழ்நடைப்பாவை காப்புத்தாய் முத்துமாரி
மணவினை நாள்போல் மனம்கிழ்ந்து உன்உளமுளார்
வானகமும் வையகமும் வாழ்த்துமாறுஉன்பணிதொடர்கவேகவியரசே(வாழிய}

அப்பாஎன் சுமையையும் அன்புறுக் கவியே நீ தாங்கினாய்
அன்னையின் மனமென்றும் உன்னையே போற்றி மறைந்தனளே
முப்பால் தமிழ்க்குடிக்கும் முன்னுரையாய் திகழ்பவனே
மூத்துமூத்து என்முதுமை விழுதாகி யாத்துக் குழிமண் என்னுடல் உன்கைபோடவெ கவியரசே நீ (வாழிய}

ஒளிஉள்ளவரை உந்தொண்டுகள் ஒங்கிட வாழியரோ
உடன்பிற்ப்புகள் உறவுகள் உரிமை நட்புகள் உவந்திட வாழியரோ
களிமல்கும் உலகின்பம் உலகுறவு உலகுரிமை போற்றியே வாழியரோ
கலைமல்கும் குடிப்பெருமை காவல் தெய்வங்கள் காத்திட வாழியரோ
கவியரசே (வாழிய}

தேடித்தேடி கோடிக்கோடி திரவியம் தேடுக தேடுக தேடுகவே
தேடியபொருளை திசைத்தமிழ் ஓங்கிட நாடியே வழங்குகவே
பாடிய உந்தந்தை பாட்டெலாம் நனவாக அடித்தளம் ஆக்குகவே
பாரெலாம் வாழ்ந்திட நீரலையினும் நெடிநாள் வாழிய வாழிய
கவியரசன் வாழிய வாழியவே (வாழிய}

பல்லாண்டு வாழ்க நல்லாண்டு வாழ்க வாழ்கவெ
வெல்லாண்டு நூறாண்டு மேலாண்டு கவியரசன் குடி வாழிய வாழியவே
(வாழிய}

Sunday, January 1, 2012

உலகத் தமிழர்கள் ஒரு குடைக்கீழ் இணைந்து தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவோம்


(1-1-2012அன்றுஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் சார்பில் நடந்த வீழாவில் உலகளாவிய நாடுகளில் வாழும் தமிழ் தமிழர்களைப் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் சார்பில் உலகளாவிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றிப் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழிற்கு தன் வாழ்நாளையே ஒப்புவித்த தமிழ்ப் போராளி இலக்குவனார் அவர்களின் திருப்பெயரில் பேரவை அமைத்து மாதந்தோறும் இலக்கியநிகழ்ச்சி நடத்தும் இரட்டையர்கள் கவிஞர் செம்பை சேவியர் புலவர் தேவதாசு அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இரு பெருமக்களும் மலேசியாவில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் நடத்திய 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் கருத்துரை வழங்கிய பெருமக்கள். இராசராச சோழன் வென்ற கடாரம் பகுதியை கண்டு தமிழரின் பெருமையை உலகெங்கும் பரப்பும் இணையர்கள்.இருவரும் திராவிட இயக்க வழியினர்.ஆனால் ஒருவர் உச்சத்தில் உரைப்பவர் மற்றவர் அமைதியின் வடிவாய் மொழிபவர். வாழ்க பெருமக்கள் வளர்க அவர்களின் தொண்டு.நிகழ்ச்சிக்கு தலைதாங்கிய திருமதி தமிழ்மணி அவர்கள் அரியதொரு தலைமைஉரை ஆற்றினார்கள், வருகை தந்திருக்கும் அறிஞர் திருக்குறள் பாட்கரன்,கால்நடைத் துறை முன்னாள் துணை இயக்குநர் திரு பழநிச்சாமி வருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள்.

தமிழர்கள் தொன்று தொட்டு உலகப் பார்வை உடயவர்கள். இந்தியாவிலிருந்து இரசியா சென்ற திருமதி இந்திராகந்தி அம்மையார் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் சொற்றொடரை பயன்படுத்தி இந்தியாவின் பெருமையை தமிழ் மூலம் உலகத்திற்கு நம்மின் உலகப் பார்வையை பெருமையுடன் பகன்றார்.

ஐயன் திருவள்ளுவர் உலகில் வாழ மனித குலத்திற்கே ஒரு திருமறையை வழங்கி் தமிழர்களின் பெருமையை 2000 ஆண்டுகட்கு முன்பே உலகறியச் செய்துள்ளார்.
அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு போன்ற அனைத்து இலக்கியங்களும் தமிழர்களின் தொல்குடிப் பெருமையை விளக்கும் சான்றாக இன்றும் நம்மிடம் உள்ளன.

நான் தொடக்கக் கல்வியை இராமநாதபுர மாவட்டத்திலும், 5ஆம் வகுப்பு முதல் சென்னையிலும், புகுமுக வகுப்பு சென்னை த.பெ செயின் கல்லூரியிலும் இளநிலை வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியிலும் முதுகலை வணிகவியல் மதுரைப் பல்கலக் கழகத்தில் அஞ்சல் வழியிலும் பயின்றேன்.

இன்று நாங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பணி இதழை அருமைத் தந்தையார் அவர்களால் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது என் வயது 12. தந்தையார் அவர்கள் கவிதை வெறியுடன் தமிழ் தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்த காலம். அருமைநண்பர் சேவியர் அவர்கட்கு நன்கு தெரியும். 1975 ஆம் ஆண்டு எண்ணச்சுடர் என்ற நூலினை 600 பக்க அளவில் தம் 40ஆம் அகவையில் வெளியிட்ட காலம் அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நூல்கள். 1977 ஆம் ஆண்டு சுவாமி இராமதாசர் தம் மாணவரான தந்தையார் பெருங்கவிக்கோவை அழைத்தார். அன்று என் வயது 18. இளமையிலேயே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கவேண்டிய சூழ்நிலை எம்மை ஆட்கொண்டது. யான் புகுமுக வகுப்பு முடித்தவுடன் திருவல்லிக்கேணியில் இன்று உள்ள கடையைத் திறந்து புத்தகங்கள் பதிப்புப் பணியைத் தொடங்கினார் தந்தையார். யான் மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்றேன். ஆரம்ப காலக்கட்டங்களில் என் தாயாருக்கு தமிழ் என்றாலே கோபம் வரும் ஏனென்றால் ஆரம்ப காலங்களில் எல்லாத் துன்பங்களையும் தாங்கிய பெருமாட்டி அல்லவா. என்னை வங்கி அதிகாரியாகவே காணவேண்டும் என்ற ஆசை. ஆனால் தந்தையாருடைய தீராத தமிழ் வேட்கை எனக்கு சூழழ் உருவாகி இன்றுவரை தமிழர்கள் வாழும் இடமெல்லாம் சென்று தமிழ்த்தொண்டு புரிகிறேன். அருமை நண்பர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஈப்போ நகரில் மலேசியத் திருமக்கள் செந்தமிழ்த் தொண்டர்சிகரம் எனும் பட்டம் பெறும் அளவிற்கு யான் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து வருகிறேன்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6 மாநாடுகள் நடத்தி இருக்கிறோம் அதில் மூன்று மாநாடுகள் வெளீநாடுகளில். 1993 ஆம் ஆண்டு செர்மணி பெர்லின் நகரில் நடத்தினோம்.தமிழகத்திலிருந்து 93 வயது கிஆபே விசுவநாதம் ,நீதிஅரசர் வேணுகோபால்,முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், பெரியார் பெருந்தொண்டர் இறையன் உள்ளிட்ட 50 பெருமக்களை காக்சு அண்டு கிங்க்சு வழி அனுப்பிவைத்தேன். இன்று நால்வரும் அமரராகிவிட்டனர். 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கினர்.அவர்கள் செர்மனி பிரான்சு, இத்தாலி மூன்று நாடுகளும் சென்று பயணம் திரும்பினர். அமரர் தமிழ்க் குடிமகனார் தம் நூலில் ”வினைசெயல் வகையில் ஐயன் கூறியுள்ள குறள்களுக்கு சான்றாக செயல்படும் தம்பி திருவள்ளுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.அன்று சென்ற பெருமக்களுடன் ஈழ மக்களும் இன்று வரை உறவு பல்கிப் பெருகிவருகிறது.

சிங்கள் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளால் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கலாம் என்று எண்ணினர். நாம் எண்ணிய ஈழம் கிடைக்காமலிருக்கலாம் ஆனால் தமிழ் இனம் உலகெங்கும் பரவி தமிழர்கள் உலக இனமாக வேறூன்றி உள்ளனர்.உறுதியாக ஈழம் மலரும். ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பகுதிகளில் அகதிகளாகச் சென்று குடியுரிமை பெற்று செம்மாந்த வாழ்க்கை வாழ்கின்றனர். இன்றும் தமிழ்ப் படங்களெல்லாம் உலகம் முழுமையும் வெளியாவதன் காரணம் ஈழத் தமிழர்கள் தமிழை மறவாமல் தமிழை காத்ததன் விளைவே. இன்றும் ஈழத் தமிழர்கள் இராசபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இலண்டன் நகரையே குழுக்கினர்.

கனடா நாட்டில் ஈழத் தமிழர்களின் எழுச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.அங்குள்ள மக்கள் அனைத்து தமிழ்ப் பண்பாடுகளையும் போற்றிப் பாதுகாக்கின்றனர். ஆண்மீக மனம் வீசும் திருக்கோயில்கள் உண்டு. யாழ்ப்பணத்து உணர்வுகளை எண்ணும் வண்ணம் அனைத்து வழிபாடுகளையும் கனடா வாழ் தமிழர்கள் நடைமுறையில் கொண்டுள்ளதை யான் கனடா பயணித்தபோது கண்டுள்ளேன்.

டோரண்டோ நகரின் முக்கிய சாலையில் சுற்றிச் செல்லும் சாலைகளுக்கு நடுவில் உள்ள அரங்கில் ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ஈழ மக்களின் பெருங்கூட்டம் ஈழத்தில் நடைபெறும் கொடுரங்களை வெளிச்சமிட கனடா நாட்டின் சனநாயத்தை அறிய முடிந்தது.

அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் கெரலசிசு சிம் அவர்களை நன்பர்களுடன் சந்தித்தேன். அப் பெருமகன் தன்னுடைய முகவரி அட்டையைத் தந்தார் அந்த அட்டையில் தம் பெயரையும் முகவரியையும் தமிழில் அச்சிட்டிருந்தார். வியப்புடன் அவருடன் வினவியபோது என்னுடைய தொகுதியில் தமிழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்காகவே தமிழில் அச்சடித்துள்ளேன் எனக் கூறினர். தாம் அச்சடித்துள்ள மற்ற அறிக்கைகளையும் காண்பித்தார். இந்திய நாடாளுமன்றத்தில். 8 கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழில் பேசமுடியாத அவலமே இன்னும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகள் தமிழ் மொழியில் படிக்க ஆர்வமின்மையை எண்ணும் போது நெஞ்சு விம்மியது.

அமெரிக்கத் தமிழர்கள் அனைத்துச் தமிழ்ச் சங்கங்களும் இணைந்து அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு(பெட்னா) என நிறுவி ஆண்டுதோறும் ஒவ்வோறு மாநிலத்திலும் தமிழகத்திலிருந்து அழைத்து மிகச் சிறப்பாக நடத்துகின்றனர். 2006ஆம் நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றேன். சினிமா கவர்ச்சிகள்தான் அங்கும் ஆட்கொண்டுள்ளது. ஈகம் செய்த தமிழர்களை கண்டு பாராட்டும் போக்கு குறைவே.

அமெரிக்கா நாயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா கனடா இருநாட்டின் எழிலாய் உள்ளன. இரு நாடுகளிலிருந்தும் எழிலைக் கண்ட்டுள்ளேன்.கண்ட காட்சிகளை பாருலாப் பாக்கள் நூலில் பாடியுள்ளேன். அமெரிக்கா நாட்டின் நயாகாரப் பகுதியில் வருக வருக என தமிழில் பொறித்துள்ளனர். ஃபுளொரிடா தமிழ்ச்சங்கம், வாசிங்க்டன் தமிழ்ச் சங்கம் உரையாற்றினேன். புளரோரிடா தமிழ்ச் சங்க உரையைப் பற்றி அதன் தலைவர் சீத்தாராமன் ஐயாவிற்கு வரைந்த மடலை இம் மன்றத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அமெரிக்கா சீத்தாராமன் மடல்.

Yesterday Thiru Valluvar spoke at our Tamil Sangam meeting. To all of us, it was like listening to you. Thiru Valluvar has the same depth and authority of thoughts and he expresses them just as well.

You must be very proud to have developed him to carry the Chemmozhi Chudar in your footsteps.

Thiru Valluvar Ayya - though it was not a larger crowd becuse of the short notice and a week day, those who came sincerly enjoyed listening to your thoughts. Let us all work towards the World Tamil Conference in Florida as suggested by Dr. Raj. Please stay in touch with me and Dr. Raj

இலண்டன் மாநகரில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். யான் இலண்டனில் வானூர்தி நிலையம் செல்வதற்கு ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன். டேவிட் என்ற ஈழ ஒட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.யான் தமிழராய் உள்ளதால் பேச்சைத் தொடங்கினேன். அவர்கோபத்துடன் என்னுடன் பேசுவதற்கு விருப்பிமின்மையாக இருந்தார். மிகவும் முயன்று பேச்சுக் கொடுத்து வந்தேன். அவர் கூறினார் இந்தியத் தமிழர்களே மோசம் எனக் கூறினார். நான் அப்படிக் கூறக் கூடாது அங்கு தங்களுக்காக போராடுபவர்கள் பலர் உள்ளனர். ஈழத் தமிழர்க்காக நாம் நடத்திய போராட்டங்களைக் கூறினேன். அவர் தன்னுடைய ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை சென்றபோது ஒருதமிழ்வீரர் தம்மை வேகமாக திட்டி அடித்ததில் மயக்கமடைந்ததாகவும் பின் அதே வீரர் இல்லம் வந்து நான் அடிக்காமல் இர்ந்தால் உன்னை சுட்டிருப்பார்கள் என்னை மண்ணித்துவிடு என்று கூறியதைக் கூறினார். அன்று தப்பித்து இன்று இங்கு உள்ளேன் என்றார். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு இராணுவ வீரருக்கு உள்ள தமிழ் உணர்வைப் பார்த்தீர்களா டேவிட் என்று கூறினேன்.எங்கிருந்தாலும் தமிழர்கள் உணர்வுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் எனக் கூறினேன்.வானூர்தி நிலையம் வந்தது கட்டணம் வாங்க மறுத்து என் பெட்டிகளை அவரே கொண்டு வந்து வழியணுப்பினார். ஆனால் இன்று ஏற்பட்ட கோடுரங்களையும்க ண்டு இந்திய அரசின் பாரா முகமும் அவரது கோபம் நியாயாமனதுதான் என்று எண்ணி இன்று நோகிறேன்.

பாரிசு நகரத்திற்கு ஈரோ பேருந்து மூலம் இலண்டனிலிருந்து பயணித்திருக்கிறேன் .ஈரோ தொடரவண்டியும் உண்டு. பாரிசில் உள்ள லாசேப்பல் பகிதி தமிழ் நாடோ என்று தோன்று அளவிற்கு தமிழ்க் கடைகள் ஈழமுரசு பத்திரிக்கை அலுவலகம் என ஈழத் தழிழர்களாலும் புதுச்சேரி தமிழர்களாலும் தமிழ் மணம் கமலும்

பாரிசிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தொடர் வண்டி மூலம் சென்றேன். தொடர் வண்டியில் ஈழத் தமிழர்கள் பலர் பயணிக்கின்றனர்..ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலர் நம் சொந்தங்களை நம் ஊர்களில் காண்பதுபோல் அங்கு தமிழர்களால் பயணிக்கப்படுகிறது சுவிட்சர்லாந்து பெர்ன் நகரில் வள்ளுவன்பாடசாலை என்ற பள்ளிமூலம் தமிழை பயிற்றுவிகின்றனர்.அங்கு ஒரு பூப்புனித் நீராட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். நம் ஊரில் நடப்பது போன்றே மண்டபத்தில் உறவோடு இணைந்து மகிழ்கின்றனர்.

செர்மணியில் ப்ராங்பர்ட், எசன், ரெய்னே, பேன் ,கூலிம், பெர்லின், ஒஃனோபர் போன்ற நகர்களுக்கு பயணித்திருக்கிறேன். தமிழ் மன்றம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்,என பல்வேறு தமிழ் அமைப்புகள் சிறப்பாகச் செயல் படுகின்றன. தமிழர்கள் பரத நாட்டியம் இசைவல்லுனர்களாகவும் உள்ளனர் ரெய்னே நகரில் ஒரு பாலத்தின் மேல் பல்வேறு மொழிகளில் உள்ள வரிகள் உள்ளன அவற்றுள். ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் சொற்றொடரைக் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தியத் தமிழர்கள் ஆங்கிலேயர்களால் கூலிகளாக மலேசியா பர்மா, மொரிசியசு, ரீயூனியன், தென் ஆப்ரிக்கா போன்ற பகுதிகளுக்கு கப்பல்களில் அழைத்துச் சென்றனர்.சென்றவர்கள் கரும்புத் தொட்டங்களிலும் அந்த ஊர்களை காடுமேடுகளைத் திருத்தி நகர்களை அமைத்தனர். அதில் மாண்டவர்கள் பலர். கொடுரமான நோய்களுக்க்கு ஆட் கொண்டவர்கள் பலர். காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இன்று அவரது வழியினர் அந்தந்த நாட்டிற்கேற்ப குடியுரிமை பெற்று மண்ணின் மைந்தர்களாக உள்ளனர்.

பர்மாவில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் அகதிகளாகத் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். கப்பல்களிலும் கால்நடையாகவும் தமிழர்கள் இடம் பெயர்ந்தனர். இந்தக் கொடூரத்தை பர்மா வழிநடைப்பயணம் நூலில் அங்கு வாழ்ந்து இடம்பெயர்ந்த அறிஞர் சாமிநாத சர்மா அவர்கள் தம் நூலில் எழுதியுள்ளார்கள்.தமிழ்மண் பதிப்பகம் சாமிநாத சர்மாவின் நூல்களையெல்லாம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கும் பர்மாவிற்கும் தொடர்பற்ற 40 ஆண்டுகால் இடைவெளிக்குவெளிக்குப் பின்பு யான் கல்கத்தா வழியாக யங்கூன் சென்றேன். சென்றது முதல் திரும்பும் வரை பர்மாத் தமிழர்கள் அன்புப் பிடியில் கட்டுண்டேன்.நீண்ட காலம் காலம் காணமல் இருந்த உறவுகள் உணர்வுகளைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.அறநெறிக்கழகம், வள்ளலார் மன்றம்,இந்து மன்றம்,தமிழ்ப்பள்ளிகள் என தமிழ் சார்ந்த அமைப்புகள் ஏராளம். ஒவ்வொரு நாளும் தமிழ் அன்பர்கள் விருந்தோம்பல். குடும்பமே சூழ்ந்து நின்று பரிமாறுவார்கள் ஐயன் திருவள்ளுவரின் விருந்தோம்பல் அதிகாரத்தின் நிலையை அங்கு உணராலாம்.

தட்டோன் என்ற பகுதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்கள். திருக்குறளை ஓதி எங்கட்கு வரவேற்பு அளித்தனர்.கோயில்கள் எல்லாம் மிகப் பொலிவுற்று விளங்குகின்றன. யங்கூனில் உள்ள கோவிந்தராசப் பெருமாள் ஆலயத்திற்கு 5 கோடி பர்மீயப் பணம் வழங்கியுள்ளார் என்றால் தமிழர்கள் பொருளாதார நிலையை அறியலாம்.

நூற்றாண்டு விழாக் காணும் அறிஞர் மூ.வ. பிறகு எந்த நூல்களும் அங்கு சென்றடையவில்லை.யான் பர்மா சென்றவந்த பிறகு பர்மா மண்ணிலே என்ற நூலில் அனைத்து விபரங்களும் எழுதியுள்ளேன்.பர்மா பயணத்திற்கு வழிவகுத்த பேராசிரியர் ஆறு.அழகப்பன்.அந்நூலிற்கு வழங்கிய அணிந்துரையில்

“பர்மா இலங்கை சிங்கப்பூர் மலேசியா முதலிய தமிழர்கள் வாழும் நாடுகளில் திருவள்ளுவரைப் போன்ற ஆளுமை,ஒப்புரவு குணம் உள்ளவரைத்தான் தூதராக தூதர் அலுவலகங்களில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.அந்தத் தகுதிகள் அனைத்தும் வா.மு.சே.திருவள்ளுவருக்கு உண்டு என்பதுதான் ஆழமான கருத்து” எனக் கூறியுள்ளார்.

பர்மாவில் நம் தமிழர்கள் விட்டுச்சென்ற சொத்துக்களையெல்லாம் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துத் திரும்பினோம்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் தமிழர்கள் உயர்ந்த உன்னத நிலையில் உள்ளனர். தமிழர்களுக்கு ஆட்சியமைப்ப்பில் அதிகாரம் வழங்கியுள்ளனர். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. பேருந்து தொடர்வண்டி, தொடர்வண்டி நிலையங்கள் எங்கும் தமிழ் உள்ளது தமிழ் முரசு என்ற இதழ் அழகு தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.சிங்கப்பூரில் தமிழ் பள்ளிகளில் பாட மொழியாக உண்டு. சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் ஏராளம்,. அண்மையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு சிறப்பாக நடத்தினர்.தமிழ்த் தொலைக்காட்சியும் வானொலியும் இங்கு சிறப்பகாச் செயல்படுகின்றன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றால் அது மலேசியாவில் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது இன்றும் முற்றிலும் உண்மை. மலேசியாவில் தமிழர்கள் ஆட்சி அமைப்பில் உள்ளனர்.. மலேசியப் பல்கலைக்க் கழகத்தில் தமிழ்த்துறை உண்டு. எண்ணற்ற தமிழ் மாநாடுகள் இப்பல்கலைகழகத்தில் நடந்துள்ளது. பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு இங்கு நடைபெற்றது. தலைமை அமைச்சரின் மலேசிய பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறையின் அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோசூன் கூன், தேசியத்தலைவர் சாமிவேலு மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இங்கு தமிழ்த் துறையில் பணியாற்றிய ஈழத்து தனிநாயக அடிகள்தான்உலகத் தமிழ் மாநாடு நடக்க வித்திட்டவர்.தமிழ் நேசன், மக்கள் ஓசை,மலேசிய இதழ்களும் பல்வேறு வார மாத தமிழ் இதழ்களும் வெளிவருகிறது.. இங்கு 500 மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்த் தொலைக்காட்சி வானொலி சிறப்பாகச் செயல்படுகிறது.


மலேசியாவில் நடைபெற்ற ப.த.உ.மா 6ஆம் மாநாட்டிற்கு சிறப்பாக வருகை தந்த பேராளர்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இராசேந்திரசோழன் கால் பதித்த கடாரம் பகுதிக்குச் சென்றோம். தற்போது மலேசிய அரசு அப் பகுதியை அருங்காட்சியகமாக வைத்துள்ளனர். நம் தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களான சிலைகள் நம் மக்கள் பயன்படுத்ததிய கற்பொருட்கள் அனைத்தும் உள்ளன.கடல் வழி வாணிபமும் நாடுகளையும் தன்வயப் படுத்திய சோழனின் ஆற்றல் மலைப்படையவைக்கிறது.பூசாங் பள்ளத்தாக்கின் வழியாக கடல் வழி காடாரத்தை வென்றுள்ளான் சோழவேந்தன். கற்கோயில்களின் சுற்றுச்சுவர்கள் பாதுகாகக்ப்பட்டுவருகின்றன. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்ற குறிப்பும் உள்ளது.மாநாட்டிற்கு வருகைதந்த சோழன் வழித்தோன்றல்களான பெருமக்கள் அனைவரும் மலைமீது ஏறி சோழனின் ஆற்றலைக் கண்டு வியந்தனர்.ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் உணர்வாளர்கள் அப் பகுதி முழுமையும் கண்டு பதிவுகளை நெஞ்சிலும் ஒளிப்படக் கருவியிலும் பதிவு செய்தனர்.அங்கிருந்து தரைவழியாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் தாய்லாந்தை நாட்டை அடையலாம். இன்று தரைவழியாகச் செல்லக் கூடிய பகுதியை கடல் வழி கடந்து உலகை ஆண்ட சோழனை எண்ணுங்கால் தமிழனின் ஆற்றல் தலைவணங்கச் செய்கிறது.மலேசியா செல்லும் உலகப் பெருமக்கள் கடாரம் சென்று மண்ணை வணங்குங்கள்.

யாங்கள் 1993ஆம் ஆண்டு அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையி 50 தமிழ் அறிஞர்களுடன் 50 நாட்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழங்கி தமிழ் உணர்ச்சியை ஏற்படுத்தினோம்.தொடர்ந்து ஊர்திப் பயணமாக உணர்ச்சி குன்றா வண்ணம் தமிழகத்தை வலம் வருகிறோம், தமிழா சாதியை மற தமிழை நினை, தமிழா மதத்தை மற தமிழை நினை, தமிழா கட்சியை மற தமிழை நினை என்பது தாரக மந்திரம். இந்த மந்திரத்தைக் கொண்டு உலகத் தமிழர்கள் ஒரு குடைக்கீழ் வந்து தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவோம்,

வாழ்க தமிழ்! ஓங்குக உலகத் தமிழர் ஒற்றுமை!வீழ்க தமிழர் வேற்றுமை. நன்றி வணக்கம்.

Wednesday, December 28, 2011

பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன்


டத்தோ அவர்களுக்கு இம்மாதம்(23-11-11) 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் டத்தோ வி.க.செல்லப்பன் தலைமையில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் சொற்பொழிவு


(1-11-2011 அன்று மலெசியா காலேசு அஞ்சோங் செலட்டான் மண்டபத்தில் கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டு விழாவில் கவிமுரசு வா,மு.சே. திருவள்ளுவரின் உரை)
நிகழ்விற்கு தலைமைதாங்கும் மலேசியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களே இப்பகுதி கல்வி அதிகாரி சந்திரன் அவர்களே, நீண்ட கால நண்பர் ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களே நூல் அறிமுக விழாவிற்கு வருகைதந்துள்ள மலேசியத் திருநாட்டின் தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் டத்தோ வி.க.செல்லப்பன் அவர்களின் தீப ஒளி வாழ்த்து எனக்கும் தந்தைக்கும் அனுப்பிக் கொண்டு வருகிறார். இவ்வாண்டும் நான் சிங்கப்பூர் உலக எழுத்தாளர் மாநாட்டிற்காக பயணத்திற்காகப் புறப்படும்போது ஐயா அவர்களின் வாழ்த்து அட்டையைப் பெற்றேன். மலேசியா வந்தவுடன் ஐயா அவர்களிடம் நன்றியை தொலைபேசியில் தெருவித்தேன். அதன் பயனே இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

எப்போது மலேசியா வந்தாலும் செப்பாங்க் பகுதியில் ஒரு கலந்தரையாடல் முடித்துத்தான் செல்வேன். அதற்கு முழு முதற்காரணமாக இருந்தவர் மின்மினி இதழ் ஆசிரியரும், மூவிகு அச்சக உரிமையாளரும், சாதனைத் தலைவர் சாமிவேலர் போன்ற எண்ணற்ற நூல்களின் ஆசிரியரும், இப்பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை பல்லாண்டுகளாக மிகச்சிறப்பாக நடத்தியவருமான அமரர் வி.கு. சந்திரசேகர். அவர்களின் இழப்பு தமிழ் கூறு நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழ்ந்து பல் வகையிலும் துன்புறும் உங்கள் அனைவரின் துன்பத்திலும் பங்கேற்கிறேன்.

ஐயா டத்தோ அவர்களிடம் பேசியபோது நான் இங்கு வரும்போது ஒருகலந்துரையாடல் வைப்பதாகக் கூறி ஆசிரியமணி ஆறுமுகம் அவர்களிடம் தொடர்புகொள்ளப் பணித்தார். ஆசியமணி ஆறுமுகம் பேரார்வத்தோடு இந்நிகழ்வை மிகச் சிறப்பாக் ஏற்பாடு செய்துள்ளார்கள். பெருமகனாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன், எம்மோடு பல்லாண்டு தொடர்புடைய புலவர் முனியாண்டி அவர்கள் சந்திரசேகரோடு மதுரையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற ஐந்தாம் மாநாட்டில் பங்கேற்ற பெருமகன் இங்கு வருகை தந்துள்ளார்.

கல்வி அதிகாரி சந்திரன் அவர்கள் தமிழுணர்வுடன் ஆற்றிய உரை நெஞ்சை நெகிழவைத்தது. டத்தோ அவர்கள் குறிப்பிட்டபோது தந்தையார் அவர்களின் அயராப் பணியையும் தொய்வின்றி நடைபெறும் தமிழ்ப்பணி இதழின் சிறப்பையும் குறிப்பிட்டார்கள். மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மாநாட்டு மலரை பெற்று சிறப்பித்த புரவலர் பெருமகன் டத்தோ.

பெருமக்களே யான் மலேசியா வரும்போதெல்லாம் முழுமையாக தமிழ்ப்பணி இதழ் உறுப்பினர் கூழாத்தை உருவாக்குவதில் முனைப்பாக இருப்பேன். அவ்வகையில் இவ்விதழ் மலேசியாவில் மாநாடு நடத்துவற்கு பெருந்துணையாக இருந்தது.

யான் உலக நாடுகள் பலவற்றிர்க்கும் தந்தையார் அடிச்சுவட்டில் பயணித்திருக்கிறேன். உலக நாடுகள் முழுமையும் தமிழ் உறவை உருவாக்கிய பெருமை பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்திற்கு உண்டு. அம் மன்றத்தின் இயக்குநராக செயல்பட்டு வருகிறேன்.

டத்தோ அவர்களுக்கு இம்மாதம் 23 ஆம் நாள் 75 நிறைவடைகிறது என்றார்கள். பவழ விழா நாயகர் டத்தோ வி.க.செல்லப்பன் அவரகட்கு பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பாகவும் உலகத் தமிழர்களின் சார்பாகவும் இந்த அவையின் கர ஒலிகளுக்கிடையே போர்ர்தி வாழ்த்தி வணங்கி மகிழ்ச்சியடைகிறேன்.

கற்றனைத்து ஊறும் நூலில் மலேசிய, சிங்கை, பர்மா, பொன்ற நாட்டிலுள்ள தமிழர்களைப் பற்றி என் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளேன். ம.இ..க. தேசியத் தலைவர் டத்தோசிறி சாமிவேலு அவர்கள் உருவாக்கியுள்ள எய்ம்சு பல்கலைக்கழகம், இராசேந்திர சோழன் வென்றா கடாரம் பகுதியைப் பற்றியும் இன்நூலில் விளக்கியுள்ளேன்.

அண்மையில் நடந்த ஈழப் போரில் வீரத் தமிழர்கள் நயவஞ்சகத்தால் அடக்கப்பட்டார்கள். அடக்கிவிட்டதாக சிங்கள ஏகாதிபத்தியம் எண்ணிக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல இன்று தமிழர்கள் உலகம் முழுமையும் பரவியுள்ளார்கள். தமிழரகள் உலக இனமாக வலம் வருகிறது. ஐ.நா. மன்றம் சிங்கள போர்க்கொடுமையை வண்மையாக கண்டித்துள்ளது.

யாங்கள் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் அறிஞர்களைத் திரட்டி டெல்லியில் அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் உண்ணாவிரதம் இருந்து தலமையமைச்சர் மண்மோகன் சிங்கைச் சந்தித்து போர்க் குற்றவாளி இரசபக்சே மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா வை நிர்பந்திக்க இந்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்.தமிழ்ப்பணியில் வெளியான செய்தி அனைவரையும் அடைந்திருக்கிறது. டத்தோ அவர்களும் படித்ததாக கூறினார்கள்.

ஈழமக்கள் ஏற்ற துன்பங்கள் எண்ணிலாடங்காதவை. அடக்கிவிட்டதாக யாரும் எண்ணக்கூடாது உறுதியாக ஈழம் பிறக்கும். உணர்வுகள் தனலாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

தமிழ் உணர்வோடும் சிந்தனையோடும் இந்நிகழ்சியை நடத்திய அனைவருக்கும் நன்றியை கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் நடத்தும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாடு



(31-10-11 அன்று மாலை 3 அளவில் மலேசியாவில் சிலாங்கூர் பத்துகுகை பகுதியில் உள்ள தமிழர் தன்மான இயக்க அலுவலகத்தில் நடந்த மாநாட்டு குழுக் கூட்டத்தில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் ஆற்றிய உரை)

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் வரும் சனவரி மாதம் பகுத்தறிவு மாநாடு நடத்த திட்டமிட்டு தன்மானச்செம்மல் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் பணியாற்றிவரும் தங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உலகத் தமிழ்மறை மாநாடு ஒப்பற்ற முறையில் ஐயா தமிழ்மணி அவர்கள் நடத்தி திருவள்ளுவர் பெருமானை தோட்ட மாளிகையில் நிறுவிய பெருமைக்குரியவர். தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களையும் மாநாட்டில் ஒருகுடைக்கீழ் கூட்டிய பெருமகன் தன்மானச் செம்மல். இந்திய ஏற்பாட்டுக் குழுவிற்கு யான் செயலாளராகவும், இலக்கியச்சுடர் மூவேந்தர் முத்து தலைவராகவும் செயல்பட்டு மாநாட்டு வெற்றிக்கு பாடுபட்டோம்.

தமிழர்கள் தன்நிலை மறந்த இக் காலகட்டத்தில் தம் வாழ்நாள் காலம் தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதே எம் பணி என்று தமிழ்மணி அவர்கள் பகுத்தறிவு அனல் பறக்கக் கூறினார்கள். அதற்காகவே இங்கு பகுத்தறிவு மாநாடு நடத்துகிறேன் என்று உணர்ச்சிப் பெருக்கானார்கள்.

தந்தைபெரியாரின் ஈகத்தை தந்தை பெரியாரின் வேகத்தை தந்தை பெரியாரின் கருத்துக்களைப் நிலைநாட்டும் அனைவரையும் அழைத்து இங்கு மாபெரும் உணர்ச்சி மாநாட்டை நடத்த உள்ளார்கள். அதற்கு என்னையும் இந்திய ஒருங்கிணைப்பாளராக பணித்துள்ளார்கள். யான் தமிழகத்தின் பெருமக்களோடு கலந்து மாநாட்டின் வெற்றிக்கு துணைநிற்பேன் என்பதை உங்களிடம் தெருவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கப்பலில் தமிழகத்திலிருந்து மாலேசியாவிற்கு வருகைதந்தபோது பினாங்கு துறைமுகத்தில் காலடி பதித்தார்கள். அவர் காலடி பதித்த பினாங்குத் தீவில் பெரியாரின் திரூஉருவச் சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளீர்கள். பெரியாரின் சொற்பொழிவுகளும், பெரியாரின் பகுத்தறிவுப் பயணம் நடந்த மலேசிய மண்ணில் மாநாட்டோடு அவரது சிலையும் நிறுவப்போவது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வாகும். அதற்கு துணைநிற்கும் அத்துனை பெருமக்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

தந்தைபெரியார் அவர்களின் பகுத்தறிவுப் பயணம் நமக்கெல்லாம் அஞ்சாமையை தரும் வாழ்க்கைப் பயணமாகும். யான் பர்மா சென்றிருந்தபோது அங்கிருக்கும் பெருமக்கள் பெரியார் வருகையைப் பற்றிக் குறிப்பிட்டபோது. கோயில்களிலேயே பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தார்கள் என்றுகூறினர். அவரது பேச்சுக்கு தடை விதித்தவுடன் யாரும் பெருமகனை வழிஅனுப்ப வரவில்லை. தந்தை அவர்கள் அங்கு இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சாவில் பயணித்து வானூர்திநிலையம் சென்ற அஞ்சா நெஞ்சர் என்றனர்.

யான் மலேசியா வரும்போதெல்லாம் சந்திக்கும் பெருமக்கள் ரெ.சு.முத்தையா ,மா.தனபாலன், விந்தைக்குமரன், வா.அமுதவாணன், த.சி.முருகன், பொன்.சண்முகம் மற்றும் பெருமக்கள் அனைவரையும் காணும்போது பெருமகிழ்ச்சியடைகிறேன்.
மாநாட்டுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க கூட்டத்தில் என்னுடைய கற்றனைத்து ஊறும் நூலை அறிமுகம் செய்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ் தமிழர் நலனுக்காகவே தம் வாழ்நாளை ஒப்புவித்து ஈகம் செய்யும் பெருமகன் தன்மானத் தலைவர் முனைவர் பெ.அ. தமிழ்மணி அவர்களை அருமைத் தந்தையார் அவர்களின் சார்பாகவும்,உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சாரப் போற்றுகிறேன்.

திருவள்ளுவர் ஆண்டு 2043 தைத்திங்கள் நடைபெறும் பன்னாட்டுப் பகுத்தறிவு மாநாட்டிற்கு தமிழகப் பேராளப் பெருமக்களோடும், தலைவர்களோடும் வருவேன் என உறுதி கூறி விடைபெறுகிறேன்.

Tuesday, December 27, 2011

மலேசியாவில் கோலாலம்பூர் நகரில் நண்பர்களுடன் கலந்துரையாடல்


(மலெசியாவில் கோலாலம்பூர் நகரில் 31/4 ஈப்போ சலையில் உள்ள பிரைமா அரங்கில் 31-10-2011 அன்று மாலை 6மணிக்கு நடந்த கலந்துரையாடலில் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்)

மலேசியத் திருநாட்டில் கோலாலம்பூர் நகரில் உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டை நடத்திய அண்ணன் தர்மலிங்கம் அவர்களுக்கும்,அவருக்கு ஒத்துழைப்பு நல்கிய இராசரட்னம் அவர்கட்கும் நன்றியை தெருவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். திருக்குறள் சான்றோன் பெருமாள் அவர்கள் வருகை தந்து சிற்ப்பித்துள்ளார்கள் அவர்கட்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, போன்ற நாளிதழ்களிலிருந்து இதழாளப் பெருமக்களெல்லாம் இங்கெ வருகை தந்து நான் எழுதிய கற்றனைத்து ஊறும் நூலைப்பற்றி வினாக்களை தொடுத்து எம் கருத்தை பதிவு செய்கிறீர்கள் தங்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்நூலில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் சிறப்புகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். யாங்கள் நடத்திய மாநாடுகள் பற்றியும் பதிவு செய்துள்ளேன்.

நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆற்றிய உரைகளையெல்லாம் தொகுத்து வழங்கியுள்ளேன்.

மலேசிய நாட்டில் தமிழர் உயர்வுக்கு வித்திட்ட சாதனைத்தலைவர் சாமிவேலு, டான்சிறீ சோமசுந்தரம் உள்ளிட்ட பல்வேறு பெருமக்களின் சிறப்புக்களைக் குறிப்பிட்டுள்ளேன்.

நண்பர் அவர்கள் திராவிட இயக்கங்களைப் பற்றிக் கேட்டார்கள். அவரது வயது 55 அவருக்கே தமிழர் வரலாறு தெரியவில்லையென்றால் .அவர்தம் வழியினர் எப்படி அறிவார்கள் என்பது வருத்தத்திற்குரிய ஒன்றே.

தந்தைபெரியார் இல்லையென்றால் தமிழர்கள் இன்னும் அடிமைகளாகவே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அறிவாசான் பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தமிழகத்தை தம் ஆளுகைக்கு கொணர்ந்த பெருமை பேரறிஞர் அண்ணாவைச்சாரும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வரானவுடன் பெரியாரின் சுயமையாதைத் திருமணத்தை சட்டமாக்கி சுயமரியாதைச் சுடரொளி பரவச் செய்தார். சென்னை இராச்தனி என்றிருந்த தமிழகத்தை தமிழ்நாடு பேராயக் கட்சியினரையும் அரவனைத்து தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் செய்தார். அண்ணா தமிழ்நாடு என்று கூற அனைவரும் வாழ்க என்று கூறி தமிழ் நாட்டின் பெருமையை நிலைநாட்டினர்.

அந்தத் திராவிட இயக்கத்தின் கோட்டையாக முத்தமிழறிஞர் கலைஞரும், பேராசிரியர் க. அன்பழனார் அவர்களும் செம்மாந்து செயலாற்றுகின்றனர். திராவிட இயக்கத்தின் அரணாகவும் பகுத்தறிவுக் கொள்கையின் தூணாகவும் இந்தத் தலைமுறையை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.89 அகவை கலைஞரும் 90 அகவை பேராசிரியரும் வாழ்ந்துவரும் காலத்தில் நாம் வாழ்கிறோம் எனபதே நாம்பெற்ற பேறாகும்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் சிந்தனைகளை சிந்தாமல் சிதறாமல் இந்தத் தலைமுறைக்கு இந்தியா,ஏன் உலகம் முழுமையும் நிலைநாட்டி வருகிறார்.

மலேசிய மண்ணில் பெரியாரின் சிந்தனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அக் கருத்துகள் மேலும் மக்களின் சிந்த்னையைத் தூண்டும் வண்ணம் செயல் படுவது நம் ஒவ்வொருவரின் கடமையகும்.

Sunday, December 25, 2011

உலகத்தமிழர்களுக்கு உணர்ச்சித் தொண்டாற்றும் மகளிர்மாமணி பேராசிரியர் இந்திராணி மணியன்


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

[சென்னையில் 25-12-2005 அன்று சி.ஆர்.டி உணவகத்தில் பேராசிரியர் இந்திராணி மணியன் 5 நூல்கள் வெளியீட்டு வீழாவில் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

பேராசிரியர் இந்திராணி மணியன் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் மட்டுமல்ல ஒரு இனப் பற்றாளர். தமிழர்களின் அறியாமையையும் தமிழர்களின் ஒற்றுமை இன்றி வாழ்வதையும் கண்டு உள்ளம் கொதிப்பவர். தம் உணர்வுகளை அவ்வப்போது எம் தமிழ்ப்பணியில் எழுதியுள்ளார்.

வடஆற்காடு மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்து சென்னையில் உயர்கல்வி பயின்று இந்தியத் தலைநகராம் தில்லியில் 35 ஆண்டுகள் பணியாற்றிய பெருமைக்குரிய பெருந்தகை. தலைமைப் பண்புமிக்க சான்றோன் மணியன் அவர்களைப் கணவனாகப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த பெருமாட்டி. இணையர்களின் உழைப்பை தில்லித் தமிழ்ச்சங்கம் என்றும் செப்பும்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி தமிழர்களுக்கு தில்லியில் அரும்பாடுபட்ட இணயர்கள்.

1990ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுத் தமிழுறவு மன்ற மாநாட்டில் இணையர்கள் இருவரும் பங்கேற்று தமிழர் நலக் கருத்துக்களை வழங்கிய பெருமக்கள்.
1999ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 4ஆம் மாநாட்டை நடத்தினோம். அம்மாநாட்டிற்கு இணயர் இருவரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.அம்மையார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழும் தமிழரும் எனும் தலைப்பில் உலகளாவிய மொழிகளுள் தமிழுக்குரிய சிறப்பையும் தமிழர்களின் மேன்மையும் பற்றி சிறப்பாக உரையாற்றியது நெஞ்சில் நிழழாடுகிறது.

மாநாட்டில் பாவேந்தரின் சங்கே முழங்கு பாடலுக்கு மலேசியா ஆசிரியமணி மாணிக்கம் அழைத்துவந்த நாட்டிய ராணி உமாவை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தன்நூலிலும் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்துள்ளார்கள்.

தனது பேராசிரியப் பணியை முடித்து சென்னைக்கு வந்து இணையர்கள் குடியேறிவிட்டனர். அவர்களது வருகை சென்னைக்கு ஒரு சிறப்பான வரவாகும். அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்புடைய இணையர்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் வழிகாட்டும் பண்புடைய ஈர நெஞ்சர்கள். யார் அழைத்தாலும் தமிழ் தமிழர் மேன்மைக்கு சென்று உரையாற்றி தாம் பெற்ற அறிவையும் பொருளையும் சமுதாயத்திற்கு வழங்கும் மேன்மக்கள்.

2009ஆம் ஆண்டு பன்னாட்டுத்தமிழுறவு மன்ற 6ஆம் மாநாட்டிற்கு அழைத்தபோது மணியன் அவர்கட்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் பேராசிரியை மட்டு அனுப்பிவைத்தார். மலேசிய பல்கலைக்கழகத்திலும், ஈப்போ மகளிர் மாநாட்டிலும் அம்மையாரின் உரை மலேசிய தமிழ் மக்களுக்கு தமிழ் விருந்தாக இருந்தது. தம்முடைய முதுமையைப் பொருட்படுத்தாது மாநாட்டி;ல் மகிழ்ச்சியோடும் தமிழ் உணர்வோடும் பயணித்த காட்சி என் மனக்கண்முன் தோன்றுகிறது.

அவ்வாண்டே சென்னையில் பேராசிரியப் பெருமகானார் க. அன்பழகனார் தலைமையில் நடைபெற்ற என்னுடைய பொன் விழாவிற்கு இணையர்கள் வருகைதந்து வாழ்த்திய வாழ்த்தை பெரும் பேறாகாவே கருதுகிறேன்.

அம்மையாரின் கட்டுரைகள் பலவற்றை தமிழ்ப்பணியில் வெளியிட்டுள்ளேன். ஈழத்த் தமிழரகட்கு அம்மையார் எழுதிய உணர்ச்சிமிக்க கட்டுரைகள் காலத்தால் அழிக்கமுடியாக் காவியம். ஈழத்தமிழரகட்கு நாமெல்லாம் ஒன்று சேர்ந்துவிடுதலையை வாங்கித் தரவில்லையே என்ற ஏக்கம் இன்னும் அவருள் தனலாக உள்ளது.

தமிழகத்திற்கு வெளியே பல்லாண்டு காலம் வாழ்ந்ததால் நம்மவர்களின் தாழ்வு அம்மையாருக்கு நன்றாக அறிந்தவர்கள் அந்தத் தாழ்ச்சியைப் போக்க தமிழகத்தில் அயராமல் எழுதிக்கொண்டும், உரையாற்றியும் நூல்கள் வெளியிட்டும் தம்அயரா உழைப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் இன்று வெளியிடப் பெறும் ஐந்து நூல்கள்.
அண்மையில் அம்மையாருக்கு உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலும் அருகோ அவர்களின் பவழ விழவிற்கு வருகை தந்தபோது உணர்ச்சி உரையாற்றினார்கள்.உரையாற்றி முடியும் தருவாயில் மயக்க நிலையடைந்து தள்ளாடினார்கள். தம் உடல் பலமற்றுப் போனாலும் உணர்ச்சி குன்றாப் பேச்சு வந்திருந்தோர் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு

செந்தாமரை எழிலுடைய அம்மையார் அவர்களின் உள்ளம் அந்த உள்ளத்திற்கேற்ற உயர்ந்த எண்ணமுடைய அம்மா அழகாக கொஞ்சு தமிழில் அத்தான் என்று அழைக்கும் கணவர் மணியன். தம் தாயின் நூல்கள் வெளியீட்டு விழாவை ஐந்து நட்சித்திர உணவகத்தில் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து வெளியிடும் மகன்- செம்மல்- அமெரிக்காவிலிருந்து வருகை தந்து அன்னையின் புகழ்பாடும் மகள் நன்மதி-. ஆகியோரை நெஞ்சாரப் போற்றுகிறேன்.
பேராசிரியர் அவர்கள் உடல் நலத்தைப் பேணி பல்லாண்டு காலம் என்றும்போல் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்ற உலகத் தமிழர்களின் சார்பில் வணங்கி வாழ்த்திகிறேன்.

Friday, December 2, 2011

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ்

கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்

(பெரியார் திடலில் 28-11-11 அன்று புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய தொடக்க உரை)

தந்தை பெரியார் நடமாடி மறைந்து நிலையாக அவரது சிந்தனைகள் நிலையாக உள்ள இம் மண்ணில் பேசுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியார் கருத்தான பெண்விடுதலைக்கு வீரமர்த்தினி அம்மையார் அவர்கள் பெருஞ்சான்றாக உள்ளார்கள். கூட்டம் அதிகம் இல்லையெ என்ற கவலை தேவையில்லை. தந்தை பெரியார் கூறியது போன்று யார் தம் இதழை யார் வாங்குகிறார்களோ இல்லையோ நானே எழுதி அச்சடித்து இதழில் படிப்பேன் என்ற என்ற நெஞ்சுரம் வேண்டும்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்ற இன்றைய தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்துள்ள கவிஞானி கலைமாமணி மறைமலையான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவோடு தொண்டாற்றிய பெருமகன். அவரது பேச்சை கேட்க வராதவர்களே வருந்த வேண்டும் கூட்டம் நடத்துபவர்கள் அல்ல. பேரறிஞரின் பெருவாழ்வு என்ற அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழகத்திற்கு வழ்ங்கிய பெருமைக்குரியவர். தம் வாழ்நாளையே திராவிட இயக்கக் கொள்கைக்காக ஈகம் செய்யும் திராவிடத் திருமகன். ஆங்கிலத்திலும் தமிழிலும் மரபு வழிப் பாடல் இயற்றும் திறம் பெற்ற கவிஞானி. கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணாவிருது கலைமாமணி விருதுகளைப் பெற்ற விருதாளர். என்னுடைய கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டிற்கு ஐயாவை அழைத்திருந்தேன். முன்தினம் மெய்ப்பு படிவத்தினைக் ஐயா பேசுவதற்காக கொடுத்துவிட்டு வந்தேன். இரவு படித்து மறுநாள் ஒரு அணிந்துரையே வழங்கி் வாழ்த்திய பண்பாளர் . இவ் விழாவில் தொடக்கவுரையாற்றுவது மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.

தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்பது அருமையான தலைப்பாகும். தந்தை பெரியார் இல்லையேல் தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டிருக்காது. தமிழர்கள் உணர்ச்சியற்று இருந்திருந்தால் தமிழின் தனித்துவம் மேலும் அழிக்கப்பட்டிருக்கும். தலைவர் அண்ணா உருவாக்கிய தளபதிதான் அண்ணா. அண்ணா உருவாக்கிய தளபதிகள்தான் கலைஞர்,நாவலர்,பேராசிரியர்,அரங்கண்ணல், மதியழகன், போன்ற திராவிடத் தலைவர்கள். அவவழியில்தான் இன்று திராவிட இயக்கத்திற்கு பெருந்தூணாக இருந்து அவர்கள் கண்ட கனவையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிலைக்கச் செய்துள்ளார். இன்றும் போராடி வருகிறார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தந்தை வழியே தம்வழி என்று எப் பதவியும் விரும்பாமல் உலகம் எங்கும் பெரியார் சிந்தனையைப் பர்ப்பிவருகிறார்.

நமசுக்காரம் வணக்கமாகவும், சேமம் நலமாகவும், நாசுட்டா சிற்றுண்டியாகவும், சுபம்கூர்த்தம் திருமணமாகவும், இப்படி வழங்கிவந்த சமற்கிருத சொற்களையெல்லாம் தமிழில் வழக்கில் கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும். குறிப்பாக தந்தை பெரியாரையும் தளபதி அண்ணாவுமே தளகர்த்தர்கள். பட்டி தொட்டிகளிளெல்லாம் செந்தமிழ் உரைகளை நிகழ்த்தி ஆட்சியையே பிடித்த இயக்ககம் திராவிட இயக்கம்.

பெரியார் அவர்களின் இதழ்கள் அனைத்தும் தமிழ் தமிழர்தம் உயர்விற்காகவே நடத்தப்பட்டவை. அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுக்கெல்லாம் பயிற்சிப்பட்டறையாக இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் சமற்கிருதத்திற்குப் பதிலாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பேச்சிலும் எழுத்திலும் வலியுறுதியவர். அவர்வழி அண்ணா அவர்களின் தமிழ்நடை தமிழ் நாட்டையே தம் கைக்குள் கொணர்ந்த செந்தமிழ்ப் பேச்சாளர் இதழாளர்..

அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானி என்று இருந்த பெயரை தமிழ் நாடு என எதிர்க்கட்சிகளையும் இணைத்து பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு என மூன்றுமுறை முழங்க வாழ்க என என அனைவரும் சட்டமன்றத்தில் வாழ்த்தியது வரலாறு.
பேரறிஞர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அசெம்லியை சட்டமன்றம், சபாநாயகரை பேரவைத் தலைவர் என்றும் அவைமுன்னவர், சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற சொற்களும்,அனைவரையும் தமிழிலேயே உறுதிமொழி எடுக்கவைத்த பெருமையும் தளபதி அண்ணாவையே சாரும்
.
மூத்த முதல் மொழியான தமிழை நிலைநிறுத்திய பெருமை காலகாலம் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களையும் அறிஞர்களையும் வேந்தர்களையும் சாரும். கல்வெட்டுகள் வழியும் ஓலைச்சுவடிகள், நூல்கள் வழி நமக்கு சான்றாக உள்ளன. இடையிலே வந்த ஆரியர்கள் நம் மொழிமீது சமற்கிருதத்தை தினித்தும், மூடபழக்கங்களைத் தினித்தும் நம்மை அடிமையாக்கினர்.

கிறித்துவத்தைப் பரப்ப வந்த ரேனியசு, கிரால், சி.யு.போப், பெசுக்கி, ஆர்டன் போன்ற பெருமக்கள் தமிழின் பெருமையை உணர்ந்து உலகிற்கு உணரவைத்தனர். உச்சமாக பெசுக்கி பெருமகன் தம் பெயரை வீரமாமுனிவர் என தனித்மிழிலேயே மாற்றிக்கொண்டார்.

பின் தலைவர் பெரியார்வழியும் தளபதி அண்ணா வழியும் தூய தமிழ் திராவிட இயக்கத்தலைவர்களால் நிலைநாட்டப்பட்டது. இந்த அரிய விழாவில் தொடக்க உரையாற்ற வாய்ப்பளித்த வழக்கறிஞர் வீரமர்த்தினிக்கும், கவிஞானி மறைமலையானுக்கும் மீண்டும் நன்றியைக் கூறி மகிழ்கிறேன். வாழ்க தந்தை பெரியாரின் தூய தமிழ் வளர்க தளபதி அண்ணாவின் தூய தமிழ் என்று கூறி அமைகிறேன். நன்றி. வணக்கம்.

Monday, November 21, 2011

ஆவேசப் பேராசான் முனைவர் அருகோ


கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

(முனைவர் அருகோ அவர்களின் பவழவிழா மலருக்கு ஆசிரியர் கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய கட்டுரை)

பவழவிழாக் காணும் நாயகர் கவிச்செம்மல் முனைவர் அரு.கோபாலன் சங்கரன்கோவிலில் தமிழ்குடியில் பிறந்து நாம்தமிழர் இயக்கத் தந்தை சி.பா. ஆதித்தனாரால் அருகோ என விளம்பப்பட்டவர். தமிழிற்காகவும் தழிழர்கட்காகவும் தம் வாழ்நாளை ஒப்படைத்த பெருமகன். எம் இளம் வயதிலிருந்தே முனைவரின் பெருமையை உணர்ந்தவன். தந்தையாரின் நாற்பது ஆண்டுகால நண்பர். அன்றைய காலங்களில் வில்லிவாக்கத்திலிருந்து மிதிவண்டியில் சுற்றி சுற்றிச் தமிழ் தமிழர் சிந்தனையைக் காத்த இன்றும் காக்கும் செயல் மறவர்.

நாம்தமிழர் இயக்கத்தின் தளபதியாக வாழ்ந்து தலைமையே கொள்கை மறந்தாலும் இன்றும் அந்தக் கொள்கையையே தம் வாழ்வுப் பணியாக உரமேற்றிகொண்டிருப்பவர்.
உலகநாடுகளைப்பற்றியும், விடுதலை பெற்ற நாடுகளைப்பற்றியும் தலைவர்கள் பற்றியும் இன்றைய தமிழ் உணர்வாளர்களுக்கு உரைவீச்சாலும் எழுத்தாலும் அறிவூட்டிய பேராசான்.
அருகோவின் எழுத்து உலகம் போற்றும் எழுத்து.பல்வேறு இதழ்களை உருவாக்கிய பெருமகன். எம்தந்தையார் வெளிநாடு சென்றபோதெல்லாம் தமிழ்ப்பணிக்கும் பெருமகன் வழங்கிய பங்களிப்பை நன்றியோடு எண்ணுகிறேன். தற்போது முப்பது ஆண்டுகளாக வெளிவரும் எழுகதிர் இதழ் தமிழர்களின் கலைக்களஞ்சியம். தமிழகம் ஈழம் தமிழ்த்தேசியம், பார்ப்பன ஆதிக்கம், அயலார் ஆதிக்கம், திராவிட திசைமாற்றம், புலம்பெயர் தமிழர் என அனைத்துத் தளங்களிலும் தம் கருத்தை அஞ்சாமல் பதிவு செய்து அதற்காகப் போராடும் போராளி.

1982 ஆம் ஆண்டு கால கட்டத்தில் அருமைத் தந்தையார், அருகோ, தணிகைக்கோ இரசீது மூவரும் அன்று ஓடிய போட்மெயில் தொடர்வண்டியில் இராமேசுவரம் சென்று ஈழத்திற்குச் சென்றனர். யான் பெருமக்களை வழியணுப்பி வைத்தேன். காந்தியத்தின் தலைவர் இராசசுந்தரமும் பெரியவர் டேவிட் அவர்களும் ஈழத்தின் முக்கு முடுக்கெல்லாம் கூட்டிச் சென்று மக்களைக் கண்டு தொண்டாற்றித் திரும்பினர்.இராசசுந்தரம் அவர்கள் வெளிக்கடை சிறையில் கோடூரமாக தாக்கப்பபட்டு சிங்களக் கயவர்களால் கொலைசெய்யப்பட்டார். டேவிட் அவர்கள் தமிழகத்தில் வந்து பணிகளைத் தொடர்ந்தார். தூப்பாக்கிச் சூட்டினூடே ஈழத்தை வலம் வந்த மூவரின் துணிவு அவர்களது நெஞ்சுரத்தை புலப்படுத்தும். இந்தப் பயணத்தை வழிவகுத்தவர் அருகோ.

அருமைத் தந்தையார் அவர்களின் உலகத் தொடர்பால் கிடைத்த நன்முத்து மருத்தவர் பஞ்சாட்சரம். அபெருமகன் நீயூயார்க்கில் தந்தையார் தலைமையில் நடைபெற்ற ஈழமாநட்டில் தமிழகத்தின் முன்னணித் தலைவர்களோடு அருகோவும் பங்கேற்று தொடர்ந்து நிலைகொண்டு சீரிய தொண்டாற்றி வருபவர்.

அருகோ ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்களோடும் தற்போது அவரது திருமகன் வழக்கறிஞர் சந்திரகாசன் அவர்களோடும் நீக்கமற நிறைந்து செயலாற்றுபவர். இந்த அமைப்பின் வழி புலம் பெயர்ந்து தமிழகதில் வாழும் மக்கட்கு உற்றுழி உதவி செய்யும் பெருமகன்.

அருகோ ஒரு சிறந்த மரபு வழிக் கவிஞர். எழுகதிரில் அவரது கவிதைகள் தமிழ் உணர்வை கிளர்ந்தெழச் செய்யும் வலிமையுடையவை. பாட்டுக்கொருபுலவன் பாரதியும் புரட்சிக்கவிஞர் பாவேந்தரும் தமது இரு கண்கள் என முழக்கமிடுபவர்.

பவழவிழாக் காணும் நாயகர் முனைவர் அருகோவின் சிந்தனைகளை பதிவு செயவதில் பெருமிதமடைகின்றேன்.

”ஒற்றுமையில்லையே என்ற ஒப்பாரியை யூதர்களைப் பார்த்தேனும்,சுண்டக்காய் இசுரேலைக் கண்டேனும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் கைவிட முன்வரவேண்டும்”

’திருக்குறள் தமிழில் இருப்பதால் அது தமிழ் மறையுமாகும். அம் முறையில் அதைத் தமிழ்த்தேசிய நூலாக முதலில் ஆக்கிவிட்டு அடுத்து சர்வதேசிய நூலாக ஆக்க முயற்சிப்பதே அறிவுடைமையாகும்”

”ஆங்கிலமென்ன உலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் விரும்புவோர் படிக்கட்டும் அரசு அதற்கு வழிவகை செய்து கொடுக்கட்டும் ஆனால் பயிற்றுமொழியாகத் தமிழ் நாட்டில் தமிழ்மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் மாறுபடுப்வர்கள் தமிழுக்கு நன்மை செய்வோர் ஆகமாட்டார்கள் தமிழுக்கு இரண்டகம் செய்பவர்களே ஆவார்கள்.”

”இன்று தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தைப் பயங்கரவாதமென்று சொல்லி இராணுவத்திவிட்டு அழித்த சிங்கள ஆட்சியாளர்கள் அன்று தமிழ் அற்ப்போராளிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்தார்களா இல்லை. ஒருதலைப்பட்சமாக காலால் போட்டு மிதித்தார்கள்.ஆகவே, தமிழீழத்தைத் தவிர அங்கு தமிழர் பிரச்சனைக்கு வேறு தீர்வே கிடையாது”

”இன்றைய தமிழகம் வடக்கு தெற்கு என்று பிரிக்கப்படுமானால் தங்களுக்கிடையிலான போட்டியில் சாதித் தமிழர்களே அதற்குத் துணைபோவார்கள். தமிழகம் ஒன்றாக இருக்கிறபோதே காட்டிக்கொடுப்புகளும், கூட்டிக் கொடுப்புகளும் தமிழின ஒற்றுமைக்கும் உரிமைக்கும் பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன என்னும்போது இரண்டுபட்டால் கேட்க வேண்டியதே இல்லை.”

”இன்றைக்கு தமிழகத்தில் இல்லாத எப்பகுதியும் அயலாருடையது. அதில் உரிமை கோரத் தமிழர்க்கு ஞாயமிலலை என்று நினைப்பது ஒன்று. இரண்டு மொழிவழி மாநிலம் அமைவதற்கு முன்பிருந்த அகண்ட தமிழகம் பற்றி அறியாமலிருப்பது.”

”பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் தமிழரல்லாதார் தமிழன் தலையில் மிளகாய் அறைப்பதை எதிர்ப்பதால் பார்ப்பனர் தொடர்ந்தும் தமிழன் தலையில் மிளகாய் அறைக்க என்று ஒப்புக்கொள்வதால் நீங்கள் பொருள் கொள்வதுதான் முறையற்றது.”

எழுபத்தைந்து ஆண்டுகள் தமிழினத்திற்கு தம் அயர்விலா உழைப்பை வழங்கிய மூதிளைஞர் முனைவர் அருகோ அவர்களை அருமைத் தந்தையார் சார்பாகவும் உலகத் தமிழர்கள் சார்பாகவும் நெஞ்சார வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்

Saturday, November 19, 2011

அண்ணா நூற்றாண்டுக் கோயில்

கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

அறிவுக் களஞ்சியத் தேராம்
அண்ணா நூற்றாண்டுக் கோயில்
செறிவுத் திறனைத் தூக்கல்
செந்தமிழ் மக்களைச் சாய்த்தல்
பரிவுப் பொருளைத் தந்தே
பாதகம் விளைத்தல் நன்றா
உரிமை நூலகம் காத்தல்
உலகுள கருத்தைப் போற்றல்!

குழந்தைகள் மருத்துவம் பேணக்
குறையிலா இடத்தைத் தேர்க
கழனியை மாற்றவே சாடும்
கற்றவர் வாழும் நாட்டில்
தலமுயர் நூலகம் மாற்றல்
தமிழர்கள் புதைத்தல் அன்றோ
பலமதாம் அறிவுத் தேரை
பந்தமாய்க் காப்போம் இன்றே

கண்ணிலா மக்கள் காண
கருத்து ப்ரய்லி உண்டு
மண்ணுல நூல்கள் எல்லாம்
மகத்துவ நூலகம் உண்டு
எண்ணிலாக் கருத்தைக் காண
இணையதள வாய்ப்பு உண்டு
தன்னேரில் அரங்கம் எல்லாம்
தகுதியை அரசே மாய்த்த(லா)?

ஆசியா முதன்மைக் கண்ட
அருமை நூலகம் ஈதே
மாசிலாச் செயலச் செய்த
மாண்பமை கலைஞர் சிந்தை
தூசியைத் துடைத்தல் விட்டு
துன்பத்தைத் தருதல் நன்றோ?
காசிலா எழ்மை மக்கள்
கதறல் உம்மைச் சாய்க்கும்!