கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர்
(பெரியார் திடலில் 28-11-11 அன்று புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் கவிமுரசு.வா.மு.சே.திருவள்ளுவர் வழங்கிய தொடக்க உரை)
தந்தை பெரியார் நடமாடி மறைந்து நிலையாக அவரது சிந்தனைகள் நிலையாக உள்ள இம் மண்ணில் பேசுவதை பெரும் பேறாகக் கருதுகிறேன்.இந் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் வழக்கறிஞர் வீரமர்த்தினி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பெரியார் கருத்தான பெண்விடுதலைக்கு வீரமர்த்தினி அம்மையார் அவர்கள் பெருஞ்சான்றாக உள்ளார்கள். கூட்டம் அதிகம் இல்லையெ என்ற கவலை தேவையில்லை. தந்தை பெரியார் கூறியது போன்று யார் தம் இதழை யார் வாங்குகிறார்களோ இல்லையோ நானே எழுதி அச்சடித்து இதழில் படிப்பேன் என்ற என்ற நெஞ்சுரம் வேண்டும்.
தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்ற இன்றைய தலைப்பில் சிறப்புரை ஆற்ற வந்துள்ள கவிஞானி கலைமாமணி மறைமலையான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணாவோடு தொண்டாற்றிய பெருமகன். அவரது பேச்சை கேட்க வராதவர்களே வருந்த வேண்டும் கூட்டம் நடத்துபவர்கள் அல்ல. பேரறிஞரின் பெருவாழ்வு என்ற அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று நூலைத் தமிழகத்திற்கு வழ்ங்கிய பெருமைக்குரியவர். தம் வாழ்நாளையே திராவிட இயக்கக் கொள்கைக்காக ஈகம் செய்யும் திராவிடத் திருமகன். ஆங்கிலத்திலும் தமிழிலும் மரபு வழிப் பாடல் இயற்றும் திறம் பெற்ற கவிஞானி. கடந்த தி.மு.க ஆட்சியில் அண்ணாவிருது கலைமாமணி விருதுகளைப் பெற்ற விருதாளர். என்னுடைய கற்றனைத்து ஊறும் நூல் வெளியீட்டிற்கு ஐயாவை அழைத்திருந்தேன். முன்தினம் மெய்ப்பு படிவத்தினைக் ஐயா பேசுவதற்காக கொடுத்துவிட்டு வந்தேன். இரவு படித்து மறுநாள் ஒரு அணிந்துரையே வழங்கி் வாழ்த்திய பண்பாளர் . இவ் விழாவில் தொடக்கவுரையாற்றுவது மிகப் பெருமையாகக் கருதுகிறேன்.
தலைவர் பெரியார் தளபதி அண்ணா வளர்த்த தூய தமிழ் என்பது அருமையான தலைப்பாகும். தந்தை பெரியார் இல்லையேல் தமிழர்களுக்கு தன்மான உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டிருக்காது. தமிழர்கள் உணர்ச்சியற்று இருந்திருந்தால் தமிழின் தனித்துவம் மேலும் அழிக்கப்பட்டிருக்கும். தலைவர் அண்ணா உருவாக்கிய தளபதிதான் அண்ணா. அண்ணா உருவாக்கிய தளபதிகள்தான் கலைஞர்,நாவலர்,பேராசிரியர்,அரங்கண்ணல், மதியழகன், போன்ற திராவிடத் தலைவர்கள். அவவழியில்தான் இன்று திராவிட இயக்கத்திற்கு பெருந்தூணாக இருந்து அவர்கள் கண்ட கனவையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் நிலைக்கச் செய்துள்ளார். இன்றும் போராடி வருகிறார். தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தந்தை வழியே தம்வழி என்று எப் பதவியும் விரும்பாமல் உலகம் எங்கும் பெரியார் சிந்தனையைப் பர்ப்பிவருகிறார்.
நமசுக்காரம் வணக்கமாகவும், சேமம் நலமாகவும், நாசுட்டா சிற்றுண்டியாகவும், சுபம்கூர்த்தம் திருமணமாகவும், இப்படி வழங்கிவந்த சமற்கிருத சொற்களையெல்லாம் தமிழில் வழக்கில் கொண்டுவந்த பெருமை திராவிட இயக்கத்தைச் சாரும். குறிப்பாக தந்தை பெரியாரையும் தளபதி அண்ணாவுமே தளகர்த்தர்கள். பட்டி தொட்டிகளிளெல்லாம் செந்தமிழ் உரைகளை நிகழ்த்தி ஆட்சியையே பிடித்த இயக்ககம் திராவிட இயக்கம்.
பெரியார் அவர்களின் இதழ்கள் அனைத்தும் தமிழ் தமிழர்தம் உயர்விற்காகவே நடத்தப்பட்டவை. அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுக்கெல்லாம் பயிற்சிப்பட்டறையாக இருந்தது. தந்தை பெரியார் அவர்கள் சமற்கிருதத்திற்குப் பதிலாக தமிழைப் பயன்படுத்த வேண்டும் என பேச்சிலும் எழுத்திலும் வலியுறுதியவர். அவர்வழி அண்ணா அவர்களின் தமிழ்நடை தமிழ் நாட்டையே தம் கைக்குள் கொணர்ந்த செந்தமிழ்ப் பேச்சாளர் இதழாளர்..
அண்ணா அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் சென்னை இராசதானி என்று இருந்த பெயரை தமிழ் நாடு என எதிர்க்கட்சிகளையும் இணைத்து பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு என மூன்றுமுறை முழங்க வாழ்க என என அனைவரும் சட்டமன்றத்தில் வாழ்த்தியது வரலாறு.
பேரறிஞர் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அசெம்லியை சட்டமன்றம், சபாநாயகரை பேரவைத் தலைவர் என்றும் அவைமுன்னவர், சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற சொற்களும்,அனைவரையும் தமிழிலேயே உறுதிமொழி எடுக்கவைத்த பெருமையும் தளபதி அண்ணாவையே சாரும்
.
மூத்த முதல் மொழியான தமிழை நிலைநிறுத்திய பெருமை காலகாலம் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களையும் அறிஞர்களையும் வேந்தர்களையும் சாரும். கல்வெட்டுகள் வழியும் ஓலைச்சுவடிகள், நூல்கள் வழி நமக்கு சான்றாக உள்ளன. இடையிலே வந்த ஆரியர்கள் நம் மொழிமீது சமற்கிருதத்தை தினித்தும், மூடபழக்கங்களைத் தினித்தும் நம்மை அடிமையாக்கினர்.
கிறித்துவத்தைப் பரப்ப வந்த ரேனியசு, கிரால், சி.யு.போப், பெசுக்கி, ஆர்டன் போன்ற பெருமக்கள் தமிழின் பெருமையை உணர்ந்து உலகிற்கு உணரவைத்தனர். உச்சமாக பெசுக்கி பெருமகன் தம் பெயரை வீரமாமுனிவர் என தனித்மிழிலேயே மாற்றிக்கொண்டார்.
பின் தலைவர் பெரியார்வழியும் தளபதி அண்ணா வழியும் தூய தமிழ் திராவிட இயக்கத்தலைவர்களால் நிலைநாட்டப்பட்டது. இந்த அரிய விழாவில் தொடக்க உரையாற்ற வாய்ப்பளித்த வழக்கறிஞர் வீரமர்த்தினிக்கும், கவிஞானி மறைமலையானுக்கும் மீண்டும் நன்றியைக் கூறி மகிழ்கிறேன். வாழ்க தந்தை பெரியாரின் தூய தமிழ் வளர்க தளபதி அண்ணாவின் தூய தமிழ் என்று கூறி அமைகிறேன். நன்றி. வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment