Sunday, January 1, 2012

உலகத் தமிழர்கள் ஒரு குடைக்கீழ் இணைந்து தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவோம்


(1-1-2012அன்றுஇலக்குவனார் இலக்கியப் பேரவையின் சார்பில் நடந்த வீழாவில் உலகளாவிய நாடுகளில் வாழும் தமிழ் தமிழர்களைப் கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் ஆற்றிய உரை]

இலக்குவனார் இலக்கியப் பேரவையின் சார்பில் உலகளாவிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றிப் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழிற்கு தன் வாழ்நாளையே ஒப்புவித்த தமிழ்ப் போராளி இலக்குவனார் அவர்களின் திருப்பெயரில் பேரவை அமைத்து மாதந்தோறும் இலக்கியநிகழ்ச்சி நடத்தும் இரட்டையர்கள் கவிஞர் செம்பை சேவியர் புலவர் தேவதாசு அவர்களையும் நெஞ்சாரப் போற்றுகிறேன். இரு பெருமக்களும் மலேசியாவில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் நடத்திய 6ஆம் உலகத் தமிழர் ஒற்றுமை மாநாட்டில் கருத்துரை வழங்கிய பெருமக்கள். இராசராச சோழன் வென்ற கடாரம் பகுதியை கண்டு தமிழரின் பெருமையை உலகெங்கும் பரப்பும் இணையர்கள்.இருவரும் திராவிட இயக்க வழியினர்.ஆனால் ஒருவர் உச்சத்தில் உரைப்பவர் மற்றவர் அமைதியின் வடிவாய் மொழிபவர். வாழ்க பெருமக்கள் வளர்க அவர்களின் தொண்டு.நிகழ்ச்சிக்கு தலைதாங்கிய திருமதி தமிழ்மணி அவர்கள் அரியதொரு தலைமைஉரை ஆற்றினார்கள், வருகை தந்திருக்கும் அறிஞர் திருக்குறள் பாட்கரன்,கால்நடைத் துறை முன்னாள் துணை இயக்குநர் திரு பழநிச்சாமி வருகை தந்திருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் எனது பணிவார்ந்த வணக்கங்கள்.

தமிழர்கள் தொன்று தொட்டு உலகப் பார்வை உடயவர்கள். இந்தியாவிலிருந்து இரசியா சென்ற திருமதி இந்திராகந்தி அம்மையார் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் சொற்றொடரை பயன்படுத்தி இந்தியாவின் பெருமையை தமிழ் மூலம் உலகத்திற்கு நம்மின் உலகப் பார்வையை பெருமையுடன் பகன்றார்.

ஐயன் திருவள்ளுவர் உலகில் வாழ மனித குலத்திற்கே ஒரு திருமறையை வழங்கி் தமிழர்களின் பெருமையை 2000 ஆண்டுகட்கு முன்பே உலகறியச் செய்துள்ளார்.
அகநானூறு புறநானூறு பத்துப்பாட்டு போன்ற அனைத்து இலக்கியங்களும் தமிழர்களின் தொல்குடிப் பெருமையை விளக்கும் சான்றாக இன்றும் நம்மிடம் உள்ளன.

நான் தொடக்கக் கல்வியை இராமநாதபுர மாவட்டத்திலும், 5ஆம் வகுப்பு முதல் சென்னையிலும், புகுமுக வகுப்பு சென்னை த.பெ செயின் கல்லூரியிலும் இளநிலை வணிகவியல் பச்சையப்பன் கல்லூரியிலும் முதுகலை வணிகவியல் மதுரைப் பல்கலக் கழகத்தில் அஞ்சல் வழியிலும் பயின்றேன்.

இன்று நாங்கள் நடத்தி வரும் தமிழ்ப்பணி இதழை அருமைத் தந்தையார் அவர்களால் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது என் வயது 12. தந்தையார் அவர்கள் கவிதை வெறியுடன் தமிழ் தமிழர் மேம்பாட்டிற்கு உழைத்த காலம். அருமைநண்பர் சேவியர் அவர்கட்கு நன்கு தெரியும். 1975 ஆம் ஆண்டு எண்ணச்சுடர் என்ற நூலினை 600 பக்க அளவில் தம் 40ஆம் அகவையில் வெளியிட்ட காலம் அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் நூல்கள். 1977 ஆம் ஆண்டு சுவாமி இராமதாசர் தம் மாணவரான தந்தையார் பெருங்கவிக்கோவை அழைத்தார். அன்று என் வயது 18. இளமையிலேயே அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கவேண்டிய சூழ்நிலை எம்மை ஆட்கொண்டது. யான் புகுமுக வகுப்பு முடித்தவுடன் திருவல்லிக்கேணியில் இன்று உள்ள கடையைத் திறந்து புத்தகங்கள் பதிப்புப் பணியைத் தொடங்கினார் தந்தையார். யான் மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்றேன். ஆரம்ப காலக்கட்டங்களில் என் தாயாருக்கு தமிழ் என்றாலே கோபம் வரும் ஏனென்றால் ஆரம்ப காலங்களில் எல்லாத் துன்பங்களையும் தாங்கிய பெருமாட்டி அல்லவா. என்னை வங்கி அதிகாரியாகவே காணவேண்டும் என்ற ஆசை. ஆனால் தந்தையாருடைய தீராத தமிழ் வேட்கை எனக்கு சூழழ் உருவாகி இன்றுவரை தமிழர்கள் வாழும் இடமெல்லாம் சென்று தமிழ்த்தொண்டு புரிகிறேன். அருமை நண்பர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஈப்போ நகரில் மலேசியத் திருமக்கள் செந்தமிழ்த் தொண்டர்சிகரம் எனும் பட்டம் பெறும் அளவிற்கு யான் தமிழ்ப்பணிக்காகவே வாழ்ந்து வருகிறேன்.

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் 6 மாநாடுகள் நடத்தி இருக்கிறோம் அதில் மூன்று மாநாடுகள் வெளீநாடுகளில். 1993 ஆம் ஆண்டு செர்மணி பெர்லின் நகரில் நடத்தினோம்.தமிழகத்திலிருந்து 93 வயது கிஆபே விசுவநாதம் ,நீதிஅரசர் வேணுகோபால்,முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், பெரியார் பெருந்தொண்டர் இறையன் உள்ளிட்ட 50 பெருமக்களை காக்சு அண்டு கிங்க்சு வழி அனுப்பிவைத்தேன். இன்று நால்வரும் அமரராகிவிட்டனர். 50 பெருமக்களும் 50 ஈழக் குடும்பங்களில் தங்கினர்.அவர்கள் செர்மனி பிரான்சு, இத்தாலி மூன்று நாடுகளும் சென்று பயணம் திரும்பினர். அமரர் தமிழ்க் குடிமகனார் தம் நூலில் ”வினைசெயல் வகையில் ஐயன் கூறியுள்ள குறள்களுக்கு சான்றாக செயல்படும் தம்பி திருவள்ளுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.அன்று சென்ற பெருமக்களுடன் ஈழ மக்களும் இன்று வரை உறவு பல்கிப் பெருகிவருகிறது.

சிங்கள் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைகளால் தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கலாம் என்று எண்ணினர். நாம் எண்ணிய ஈழம் கிடைக்காமலிருக்கலாம் ஆனால் தமிழ் இனம் உலகெங்கும் பரவி தமிழர்கள் உலக இனமாக வேறூன்றி உள்ளனர்.உறுதியாக ஈழம் மலரும். ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பகுதிகளில் அகதிகளாகச் சென்று குடியுரிமை பெற்று செம்மாந்த வாழ்க்கை வாழ்கின்றனர். இன்றும் தமிழ்ப் படங்களெல்லாம் உலகம் முழுமையும் வெளியாவதன் காரணம் ஈழத் தமிழர்கள் தமிழை மறவாமல் தமிழை காத்ததன் விளைவே. இன்றும் ஈழத் தமிழர்கள் இராசபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இலண்டன் நகரையே குழுக்கினர்.

கனடா நாட்டில் ஈழத் தமிழர்களின் எழுச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.அங்குள்ள மக்கள் அனைத்து தமிழ்ப் பண்பாடுகளையும் போற்றிப் பாதுகாக்கின்றனர். ஆண்மீக மனம் வீசும் திருக்கோயில்கள் உண்டு. யாழ்ப்பணத்து உணர்வுகளை எண்ணும் வண்ணம் அனைத்து வழிபாடுகளையும் கனடா வாழ் தமிழர்கள் நடைமுறையில் கொண்டுள்ளதை யான் கனடா பயணித்தபோது கண்டுள்ளேன்.

டோரண்டோ நகரின் முக்கிய சாலையில் சுற்றிச் செல்லும் சாலைகளுக்கு நடுவில் உள்ள அரங்கில் ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ஈழ மக்களின் பெருங்கூட்டம் ஈழத்தில் நடைபெறும் கொடுரங்களை வெளிச்சமிட கனடா நாட்டின் சனநாயத்தை அறிய முடிந்தது.

அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் கெரலசிசு சிம் அவர்களை நன்பர்களுடன் சந்தித்தேன். அப் பெருமகன் தன்னுடைய முகவரி அட்டையைத் தந்தார் அந்த அட்டையில் தம் பெயரையும் முகவரியையும் தமிழில் அச்சிட்டிருந்தார். வியப்புடன் அவருடன் வினவியபோது என்னுடைய தொகுதியில் தமிழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்காகவே தமிழில் அச்சடித்துள்ளேன் எனக் கூறினர். தாம் அச்சடித்துள்ள மற்ற அறிக்கைகளையும் காண்பித்தார். இந்திய நாடாளுமன்றத்தில். 8 கோடி தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழில் பேசமுடியாத அவலமே இன்னும் தொடர்கிறது. தமிழ்நாட்டில் வாழும் குழந்தைகள் தமிழ் மொழியில் படிக்க ஆர்வமின்மையை எண்ணும் போது நெஞ்சு விம்மியது.

அமெரிக்கத் தமிழர்கள் அனைத்துச் தமிழ்ச் சங்கங்களும் இணைந்து அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு(பெட்னா) என நிறுவி ஆண்டுதோறும் ஒவ்வோறு மாநிலத்திலும் தமிழகத்திலிருந்து அழைத்து மிகச் சிறப்பாக நடத்துகின்றனர். 2006ஆம் நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றேன். சினிமா கவர்ச்சிகள்தான் அங்கும் ஆட்கொண்டுள்ளது. ஈகம் செய்த தமிழர்களை கண்டு பாராட்டும் போக்கு குறைவே.

அமெரிக்கா நாயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா கனடா இருநாட்டின் எழிலாய் உள்ளன. இரு நாடுகளிலிருந்தும் எழிலைக் கண்ட்டுள்ளேன்.கண்ட காட்சிகளை பாருலாப் பாக்கள் நூலில் பாடியுள்ளேன். அமெரிக்கா நாட்டின் நயாகாரப் பகுதியில் வருக வருக என தமிழில் பொறித்துள்ளனர். ஃபுளொரிடா தமிழ்ச்சங்கம், வாசிங்க்டன் தமிழ்ச் சங்கம் உரையாற்றினேன். புளரோரிடா தமிழ்ச் சங்க உரையைப் பற்றி அதன் தலைவர் சீத்தாராமன் ஐயாவிற்கு வரைந்த மடலை இம் மன்றத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அமெரிக்கா சீத்தாராமன் மடல்.

Yesterday Thiru Valluvar spoke at our Tamil Sangam meeting. To all of us, it was like listening to you. Thiru Valluvar has the same depth and authority of thoughts and he expresses them just as well.

You must be very proud to have developed him to carry the Chemmozhi Chudar in your footsteps.

Thiru Valluvar Ayya - though it was not a larger crowd becuse of the short notice and a week day, those who came sincerly enjoyed listening to your thoughts. Let us all work towards the World Tamil Conference in Florida as suggested by Dr. Raj. Please stay in touch with me and Dr. Raj

இலண்டன் மாநகரில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். யான் இலண்டனில் வானூர்தி நிலையம் செல்வதற்கு ஒரு வாடகை ஊர்தியில் பயணித்தேன். டேவிட் என்ற ஈழ ஒட்டுநர் வண்டியை ஒட்டிச்சென்றார்.யான் தமிழராய் உள்ளதால் பேச்சைத் தொடங்கினேன். அவர்கோபத்துடன் என்னுடன் பேசுவதற்கு விருப்பிமின்மையாக இருந்தார். மிகவும் முயன்று பேச்சுக் கொடுத்து வந்தேன். அவர் கூறினார் இந்தியத் தமிழர்களே மோசம் எனக் கூறினார். நான் அப்படிக் கூறக் கூடாது அங்கு தங்களுக்காக போராடுபவர்கள் பலர் உள்ளனர். ஈழத் தமிழர்க்காக நாம் நடத்திய போராட்டங்களைக் கூறினேன். அவர் தன்னுடைய ஈழ மண்ணில் இந்திய அமைதிப் படை சென்றபோது ஒருதமிழ்வீரர் தம்மை வேகமாக திட்டி அடித்ததில் மயக்கமடைந்ததாகவும் பின் அதே வீரர் இல்லம் வந்து நான் அடிக்காமல் இர்ந்தால் உன்னை சுட்டிருப்பார்கள் என்னை மண்ணித்துவிடு என்று கூறியதைக் கூறினார். அன்று தப்பித்து இன்று இங்கு உள்ளேன் என்றார். எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு இராணுவ வீரருக்கு உள்ள தமிழ் உணர்வைப் பார்த்தீர்களா டேவிட் என்று கூறினேன்.எங்கிருந்தாலும் தமிழர்கள் உணர்வுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் எனக் கூறினேன்.வானூர்தி நிலையம் வந்தது கட்டணம் வாங்க மறுத்து என் பெட்டிகளை அவரே கொண்டு வந்து வழியணுப்பினார். ஆனால் இன்று ஏற்பட்ட கோடுரங்களையும்க ண்டு இந்திய அரசின் பாரா முகமும் அவரது கோபம் நியாயாமனதுதான் என்று எண்ணி இன்று நோகிறேன்.

பாரிசு நகரத்திற்கு ஈரோ பேருந்து மூலம் இலண்டனிலிருந்து பயணித்திருக்கிறேன் .ஈரோ தொடரவண்டியும் உண்டு. பாரிசில் உள்ள லாசேப்பல் பகிதி தமிழ் நாடோ என்று தோன்று அளவிற்கு தமிழ்க் கடைகள் ஈழமுரசு பத்திரிக்கை அலுவலகம் என ஈழத் தழிழர்களாலும் புதுச்சேரி தமிழர்களாலும் தமிழ் மணம் கமலும்

பாரிசிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தொடர் வண்டி மூலம் சென்றேன். தொடர் வண்டியில் ஈழத் தமிழர்கள் பலர் பயணிக்கின்றனர்..ஐரோப்பிய நாடுகளிலிருந்து பலர் நம் சொந்தங்களை நம் ஊர்களில் காண்பதுபோல் அங்கு தமிழர்களால் பயணிக்கப்படுகிறது சுவிட்சர்லாந்து பெர்ன் நகரில் வள்ளுவன்பாடசாலை என்ற பள்ளிமூலம் தமிழை பயிற்றுவிகின்றனர்.அங்கு ஒரு பூப்புனித் நீராட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். நம் ஊரில் நடப்பது போன்றே மண்டபத்தில் உறவோடு இணைந்து மகிழ்கின்றனர்.

செர்மணியில் ப்ராங்பர்ட், எசன், ரெய்னே, பேன் ,கூலிம், பெர்லின், ஒஃனோபர் போன்ற நகர்களுக்கு பயணித்திருக்கிறேன். தமிழ் மன்றம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்,என பல்வேறு தமிழ் அமைப்புகள் சிறப்பாகச் செயல் படுகின்றன. தமிழர்கள் பரத நாட்டியம் இசைவல்லுனர்களாகவும் உள்ளனர் ரெய்னே நகரில் ஒரு பாலத்தின் மேல் பல்வேறு மொழிகளில் உள்ள வரிகள் உள்ளன அவற்றுள். ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் சொற்றொடரைக் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தியத் தமிழர்கள் ஆங்கிலேயர்களால் கூலிகளாக மலேசியா பர்மா, மொரிசியசு, ரீயூனியன், தென் ஆப்ரிக்கா போன்ற பகுதிகளுக்கு கப்பல்களில் அழைத்துச் சென்றனர்.சென்றவர்கள் கரும்புத் தொட்டங்களிலும் அந்த ஊர்களை காடுமேடுகளைத் திருத்தி நகர்களை அமைத்தனர். அதில் மாண்டவர்கள் பலர். கொடுரமான நோய்களுக்க்கு ஆட் கொண்டவர்கள் பலர். காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இன்று அவரது வழியினர் அந்தந்த நாட்டிற்கேற்ப குடியுரிமை பெற்று மண்ணின் மைந்தர்களாக உள்ளனர்.

பர்மாவில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால் அகதிகளாகத் தமிழர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். கப்பல்களிலும் கால்நடையாகவும் தமிழர்கள் இடம் பெயர்ந்தனர். இந்தக் கொடூரத்தை பர்மா வழிநடைப்பயணம் நூலில் அங்கு வாழ்ந்து இடம்பெயர்ந்த அறிஞர் சாமிநாத சர்மா அவர்கள் தம் நூலில் எழுதியுள்ளார்கள்.தமிழ்மண் பதிப்பகம் சாமிநாத சர்மாவின் நூல்களையெல்லாம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கும் பர்மாவிற்கும் தொடர்பற்ற 40 ஆண்டுகால் இடைவெளிக்குவெளிக்குப் பின்பு யான் கல்கத்தா வழியாக யங்கூன் சென்றேன். சென்றது முதல் திரும்பும் வரை பர்மாத் தமிழர்கள் அன்புப் பிடியில் கட்டுண்டேன்.நீண்ட காலம் காலம் காணமல் இருந்த உறவுகள் உணர்வுகளைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.அறநெறிக்கழகம், வள்ளலார் மன்றம்,இந்து மன்றம்,தமிழ்ப்பள்ளிகள் என தமிழ் சார்ந்த அமைப்புகள் ஏராளம். ஒவ்வொரு நாளும் தமிழ் அன்பர்கள் விருந்தோம்பல். குடும்பமே சூழ்ந்து நின்று பரிமாறுவார்கள் ஐயன் திருவள்ளுவரின் விருந்தோம்பல் அதிகாரத்தின் நிலையை அங்கு உணராலாம்.

தட்டோன் என்ற பகுதியில் வள்ளுவர் கோட்டம் அமைத்துள்ளார்கள். திருக்குறளை ஓதி எங்கட்கு வரவேற்பு அளித்தனர்.கோயில்கள் எல்லாம் மிகப் பொலிவுற்று விளங்குகின்றன. யங்கூனில் உள்ள கோவிந்தராசப் பெருமாள் ஆலயத்திற்கு 5 கோடி பர்மீயப் பணம் வழங்கியுள்ளார் என்றால் தமிழர்கள் பொருளாதார நிலையை அறியலாம்.

நூற்றாண்டு விழாக் காணும் அறிஞர் மூ.வ. பிறகு எந்த நூல்களும் அங்கு சென்றடையவில்லை.யான் பர்மா சென்றவந்த பிறகு பர்மா மண்ணிலே என்ற நூலில் அனைத்து விபரங்களும் எழுதியுள்ளேன்.பர்மா பயணத்திற்கு வழிவகுத்த பேராசிரியர் ஆறு.அழகப்பன்.அந்நூலிற்கு வழங்கிய அணிந்துரையில்

“பர்மா இலங்கை சிங்கப்பூர் மலேசியா முதலிய தமிழர்கள் வாழும் நாடுகளில் திருவள்ளுவரைப் போன்ற ஆளுமை,ஒப்புரவு குணம் உள்ளவரைத்தான் தூதராக தூதர் அலுவலகங்களில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.அந்தத் தகுதிகள் அனைத்தும் வா.மு.சே.திருவள்ளுவருக்கு உண்டு என்பதுதான் ஆழமான கருத்து” எனக் கூறியுள்ளார்.

பர்மாவில் நம் தமிழர்கள் விட்டுச்சென்ற சொத்துக்களையெல்லாம் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துத் திரும்பினோம்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளெல்லாம் தமிழர்கள் உயர்ந்த உன்னத நிலையில் உள்ளனர். தமிழர்களுக்கு ஆட்சியமைப்ப்பில் அதிகாரம் வழங்கியுள்ளனர். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது. பேருந்து தொடர்வண்டி, தொடர்வண்டி நிலையங்கள் எங்கும் தமிழ் உள்ளது தமிழ் முரசு என்ற இதழ் அழகு தமிழில் வெளிவந்து கொண்டிருக்கிறது.சிங்கப்பூரில் தமிழ் பள்ளிகளில் பாட மொழியாக உண்டு. சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகள் ஏராளம்,. அண்மையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு சிறப்பாக நடத்தினர்.தமிழ்த் தொலைக்காட்சியும் வானொலியும் இங்கு சிறப்பகாச் செயல்படுகின்றன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றால் அது மலேசியாவில் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது இன்றும் முற்றிலும் உண்மை. மலேசியாவில் தமிழர்கள் ஆட்சி அமைப்பில் உள்ளனர்.. மலேசியப் பல்கலைக்க் கழகத்தில் தமிழ்த்துறை உண்டு. எண்ணற்ற தமிழ் மாநாடுகள் இப்பல்கலைகழகத்தில் நடந்துள்ளது. பன்னாட்டுத் தமிழுறவு மன்ற 6ஆம் மாநாடு இங்கு நடைபெற்றது. தலைமை அமைச்சரின் மலேசிய பிரதமர் துறையின் ஒற்றுமைத் துறையின் அமைச்சர் டான்சிறீ டாக்டர் கோசூன் கூன், தேசியத்தலைவர் சாமிவேலு மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இங்கு தமிழ்த் துறையில் பணியாற்றிய ஈழத்து தனிநாயக அடிகள்தான்உலகத் தமிழ் மாநாடு நடக்க வித்திட்டவர்.தமிழ் நேசன், மக்கள் ஓசை,மலேசிய இதழ்களும் பல்வேறு வார மாத தமிழ் இதழ்களும் வெளிவருகிறது.. இங்கு 500 மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. தமிழ்த் தொலைக்காட்சி வானொலி சிறப்பாகச் செயல்படுகிறது.


மலேசியாவில் நடைபெற்ற ப.த.உ.மா 6ஆம் மாநாட்டிற்கு சிறப்பாக வருகை தந்த பேராளர்கள் அனைவரும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இராசேந்திரசோழன் கால் பதித்த கடாரம் பகுதிக்குச் சென்றோம். தற்போது மலேசிய அரசு அப் பகுதியை அருங்காட்சியகமாக வைத்துள்ளனர். நம் தமிழகத்தின் வரலாற்றுச் சின்னங்களான சிலைகள் நம் மக்கள் பயன்படுத்ததிய கற்பொருட்கள் அனைத்தும் உள்ளன.கடல் வழி வாணிபமும் நாடுகளையும் தன்வயப் படுத்திய சோழனின் ஆற்றல் மலைப்படையவைக்கிறது.பூசாங் பள்ளத்தாக்கின் வழியாக கடல் வழி காடாரத்தை வென்றுள்ளான் சோழவேந்தன். கற்கோயில்களின் சுற்றுச்சுவர்கள் பாதுகாகக்ப்பட்டுவருகின்றன. பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் என்ற குறிப்பும் உள்ளது.மாநாட்டிற்கு வருகைதந்த சோழன் வழித்தோன்றல்களான பெருமக்கள் அனைவரும் மலைமீது ஏறி சோழனின் ஆற்றலைக் கண்டு வியந்தனர்.ஆய்வறிஞர்கள் பேராசிரியர்கள் தமிழ் உணர்வாளர்கள் அப் பகுதி முழுமையும் கண்டு பதிவுகளை நெஞ்சிலும் ஒளிப்படக் கருவியிலும் பதிவு செய்தனர்.அங்கிருந்து தரைவழியாகச் சென்றால் ஒரு மணி நேரத்தில் தாய்லாந்தை நாட்டை அடையலாம். இன்று தரைவழியாகச் செல்லக் கூடிய பகுதியை கடல் வழி கடந்து உலகை ஆண்ட சோழனை எண்ணுங்கால் தமிழனின் ஆற்றல் தலைவணங்கச் செய்கிறது.மலேசியா செல்லும் உலகப் பெருமக்கள் கடாரம் சென்று மண்ணை வணங்குங்கள்.

யாங்கள் 1993ஆம் ஆண்டு அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையி 50 தமிழ் அறிஞர்களுடன் 50 நாட்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என முழங்கி தமிழ் உணர்ச்சியை ஏற்படுத்தினோம்.தொடர்ந்து ஊர்திப் பயணமாக உணர்ச்சி குன்றா வண்ணம் தமிழகத்தை வலம் வருகிறோம், தமிழா சாதியை மற தமிழை நினை, தமிழா மதத்தை மற தமிழை நினை, தமிழா கட்சியை மற தமிழை நினை என்பது தாரக மந்திரம். இந்த மந்திரத்தைக் கொண்டு உலகத் தமிழர்கள் ஒரு குடைக்கீழ் வந்து தமிழ் தமிழரின் பெருமையை நிலை நிறுத்துவோம்,

வாழ்க தமிழ்! ஓங்குக உலகத் தமிழர் ஒற்றுமை!வீழ்க தமிழர் வேற்றுமை. நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment