(4-4-2015 அன்றுதென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவின்போது தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் எழுதிய கவிதை)
பொருளறிய மண்விட்டே கடல்வழியைக் கொண்டே
புகழ்சுற்றம் புறக்கணித்தே ஆப்ரிக்கா சென்றார்
அருளறியா ஆங்கிலேயர் அடக்குமுறை ஏற்றே
அகதிகளாய் மொழியிழந்து உறவிழந்து உள்ளார்
கருவிழிபோல் பெயரங்கு தமிழிலேயே உண்டு
கற்பதெல்லாம் ஆங்கிலமே கருதுமொழி இல்லை
உருவினிலே தமிழர்களாய் உ;லகிடையே உள்ளார்
உன்னதமாம் தமிழ்மொழியே அவர்வாழ்வில் இல்லை
நூற்றாண்டின் மேலாய்நம் முன்னோர்கள் விட்ட
நுண்தமிழர் நலிவைத்தான் போக்கினோம் இன்றே!
கற்றபதற்கே இராமசாமி பல்கலையின் வேந்தர்
கருணைமிகு மிக்கிசெட்டி பெருவள்ளல் சேர்ந்தே
பொற்பதத்தால் தமிழன்னை காப்பதற்கு அங்கே
பூவுலகபண் பாட்டுடைய மாந்தரெலாம் கூட்டி
நற்றவத்தால் நாம்கண்டோம் பட்டமேற்பு விழாவும்
நாநிலத்தை வலம்வந்த பெருங்கவிக்கோ முன்னே!
நாற்பதின்மேல் தமிழ்ப்பட்டம் மண்மக்கள் பெற்றார்
நல்மோங்க தமிழ்த்தாயும் நாமகளாய் எழுவாள்
பொற்புடைய ஆப்ரிக்கா காந்திமகான் ஈகம்
புகழ்வானின் நினைவிடமும் நற்பெருமை செப்பும்
தற்பெருமை இல்லாநம் ஆப்ரிக்காத் தமிழர்
தவவலுவாம் தேவாரம் பாடிவளம் உள்ளார்
கற்பதுவும் தமிழதனை ஆங்கிலத்தின் வழியே
கலைக்கோயில் நம்பண்பை நாயகமாய்க் கொண்டார்!
எழுச்சிமிகு கலைகள்வழி பாட்டுவழிக் கூத்தும்
ஏற்றமிகு நம்டர்பன் நகர்த்தந்தை பேச்சும்
விழுதுகளாய் வாழுமுயிர் மிக்கிசெட்டி மக்கள்
விருந்தோம்பல் வியனாற்றல் அரவணைப்புப் பாங்கும்
தழுதழுத்து நெஞ்சம்விம்மி மிக்கிதந்த உரையும்
தவவலிமை பெற்றநம் வீறுபுகழ் தமிழர்
பழுதில்லா தமிழ்ப்பணியை பார்போற்ற நின்றோம்
பாசமுடன் உலகமெல்லாம் ஒன்றாகிக் காப்போம்!
No comments:
Post a Comment