திருக்குறள் செம்மல் மணிமொழியனார் அந்தாதி
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
ஆசிரியர் தமிழ்ப்பணி
இயக்குநர் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
மதரை மாநகரின் அடையாளமாக விளங்கிய திருக்குறட்செம்மல் மணிமொழியனாரின் அந்தாதி அவர் வாழும் காலத்தில் தந்தையார் பெருங்கவிக்கோ பாடி தமிழ்ப்பணியில் வெளியாக்கி இன்று நூலாக வெளிவருவது காலத்தின் கொடையாகும்
உலகம் முழுமையும் தமிழால்அளந்த பெருங்கவிக்கோ இந்த தமிழ்க்குடிக்கு அடையாளப்படுத்திய சான்றோர்கள் ஏராளம் அவருள் நம் திருக்குறட்செம்மல் மணிமொழியானார் தலையானவர். பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் வழி எண்ணற்ற பெருமக்களை அவரது கல்லூரி விடுதியில் பாராட்டி சிறப்பித்த புரவலர் பெருமகன். முத்தாய்ப்பாக பன்னாட்டுத் தமிழுறவு மன்ற வெள்ளிவிழா மாநாட்டை 4 நாட்கள் தந்தையார் பெருங்கவிக்கோவின் வேண்டுகோளுக்கிணங்க தலைமையேற்று உலகமே வியக்கும் வண்ணம் வெள்ளிவிழா மாநாட்டை நடத்திய தமிழ்செம்மல்.மாநாடு நடத்தியதோடு மட்டுமல்லாமல் நிலையான கல்வெட்டாகத் தம் விடுதியின் திருவள்ளுவர் அரங்க வாயிலில் பொறித்து வைத்த பெருமகன் நம் அந்தாதி நாயகன்.
நம் அந்தாதி நாயகரை அறிமுகப் படுத்தும் நம் உலக மாக்கவி
ஓங்குவகை வாழ்வில் ஒளிமல்கும் செய்வினைகள்
தாங்கு தமிழ்குடி தான்பிறந்தே – வீங்குவளம்
செல்வம்நல் செல்வாக்கு சீரார் மனிதநேயம்
நல்ல மணிமொழி யன். (1)
இந்த நான்கு வரிகளுக்குள்ளேயே மணிமொழியானாரின் பிறப்பு வாழ்வு சிறபைப் பதிவு செய்துள்ளார். விடுதிகள் பலர் வைத்துள்ளனர் ஆனால் நம் மணிமொழியானாரின் விடுதியில் தங்காத சான்றோர்களே இல்லை எனும் அளவிற்கு தமிழ் காக்கும் கொடை நெஞ்சராகத் திகழ்ந்தவர் நம் அந்தாதி நாயகர்.
ஐயா அவர்களின் துணைவியார் அன்னை கமலா அம்மா அவர்கள் பற்றி எழுதிய அந்த்தாதி அவர்தம் பெருமையை செப்புகிறது.
வீணையின் நாதமோ மெல்லிசை கீதமோ
பூணும் அணிஅழகோ பொன்னோ - மாணும்நல்
ஓவியமோ காவியமோ உள்ளொளிக் காந்தமோ
தேவிக மலாவின் திரு (54)
திருமகளோ கொஞ்சும் அருமகளோ பாசக்
கருமகளோ காமகளோ காதல் - தருமகளோ
தேவி கமலா செம்மை மணிமொழியன்
ஆவி கலந்த அகம் (55)
தம் துணைவரையே எண்ணி வாழும் அருமைப் பெருமாட்டி செல்வச் சீமாட்டி அன்னை கமலா அம்மையாரின் சிறப்பு இந்தப் பாக்கள் மெய்ப்பிக்கிறது. கமலா அம்மையாரும் ஐயாவும் இணைந்து தந்தையார் பெருங்கவிக்கோ தலைமையில் எம் மதுரை பொற்பரி இல்லத்தைத் திறந்த்து என் கண்முன் நிற்கிறது.
அய்யாவின் மருகர் கல்விக்கோ கணேசன் அவர்களின் தந்தையார் சண்முக சுந்தரம் அவர்களைப் பற்றிய பாடல் கல்விக் குடிச் சிறப்பைப் பறைசாற்றுகிறது
பண்பாடு மிக்கார் பலகல்வி யாளர்க்கோ
சண்முகம் சுந்தரம் தக்கமுறை – புண்ணியர்
போற்று கண்பதியர் பொந்தேவி தந்த மாமா
ஏற்று சம்பந்தத்தின் இயல் ( 23 )
தமிகத்தில் கல்விக்கொடை நெஞ்சராக வாழும் குடும்பத்தைப் பற்றிய பதிவு நம் நெஞ்சைத் தொடுகிறது.
திருக்குறட் செம்மல் மணிமொழியார் அவர்களின் உரையாடும் போது வள்ளுவப் பேராசானின் குறள்கள் மடை திறந்த வெள்ளம்போல் வெளிவரும். நாம் எந்தப் பொருள்பற்றிப் பேசுகிறோம் அந்தப் பொருளிற்கான் குறளைத் தருவார். திருகுறட்செம்மல் ஒரு கவகனகராகவே வலம் வந்தார்.
தெளிவாய்த் திருக்குறள் நூற்றுமுப் பத்தின்
அளிமூன்றோ டேதான் அகத்தில் – ஒளிபதித்த
சான்றோர் மயக்கும் தடைநீக்கும் வேளாளன்
வான்போல் வளந்த வகுப்பு (75)
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்ப்பது அரிதாம் – பகுத்துச்சொல்
வள்ளுவன் தேர்ந்த வழிகற்றே அவ்வழியின்
வெள்ளம்போல் சொல்லும் விடை ( 76 )
மதுரை மாநகரின் குறளாசானாக மணிமொழியார் திகழ்ந்த்தை இப்பாடல் படிப்போர் உணரலாம்.
அன்பே உருவான் ஐயா அவர்களின் சிரிப்பு . காட்சிக்கு எளியாராக எல்லோரையும் அரவணைக்கும் பேருள்ளம் நம் மணிமொழியாரின் உள்ளம்.
காண்பார் களுக்கெல்லா காட்சி மலர்முகமே
பூண்பார் தமக்கெல்லாம் புன்னகையே – மாண்புடைய
உச்சத் தமைச்சர் உறவுமுதல் சாமான்யர்
மெச்சும் நடுநிலை வீறு ( 47 )
மாசற்ற மாமனிதரின் அந்தாதி அவசியம் அனைவரும் படிக்கவேண்டிய நூல். ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும். அறச் சிந்தனைகள் இல்லறத்தின் வழி நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு மணிமொழியானாரின் அந்தாதி நூல் சிறந்த பதிவு. நூறு பாடல்களும் மணிமொழியனாரின் புகழ்பாடும் பாடல்கள். தம் பல்வேறு அயராத் தமிழ்த் தொண்டுகளுக்கிடையே அந்தாதி வழங்கிய தந்தையாரைப் போற்றி பதிப்பிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். திருக்குறட்செம்மல் மணிமொழியனார் புகழ் ஒங்குக உயர்க.
No comments:
Post a Comment