மணிவிழாக் காணும்
கவிமாரி வாழ்க!!
தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்
பத்தரை மாற்றுத் தங்கம்
பண்பினில் நிற்கும் சிங்கம்
இத்தரை வியக்கும் வண்ணம்
இணையத்தில் வாழும் அங்கம்
முத்திரை பதிக்கும் எங்கும்
முத்தமிழ்ச் சேது உள்ளம்
பத்தினி தோற்பாள் அன்பில்
பாசத்தின் கவியே வாழ்க!
அறிவினில் அவையை ஆள்வான்
ஆற்றலில் உயர்வாய் நிற்பான்
தெரிதலில் தேர்ந்த நல்லோன்
தென்றலாய் குடும்பம் உள்ளான்
புரிதலில் புவியே போற்றும்
புகழ்மிகு மாநாடு கண்டோன்
அறிவியல் இணைந்து நன்றே
ஆக்கிடும் கவியே வாழ்க!
மாசிலா மனைவி மாரி
மட்டிலா பாவை தந்தை
வீசிடும் மணமாய் நெஞ்சில்
வீற்றிடும் கவினின் அப்பன்
பேசிடும் உலகத் தந்தை
பெருங்கவிக்(கோ) தாங்கும் தம்பி
காசினை எண்ணா என்றன்
கற்கண்டுக் கவியே வாழ்க!
சிந்தனை தந்த மேலோன்
சிலிர்த்திடும் மானச் சிங்கம்
நந்தமிழ் அணியில் நின்றே
நயத்தகு மணிவிழாக் காண்போன்
விந்தியம் உலகம் எல்லாம்
வித்தகப் பணிகள் போற்றும்
எந்தமிழ் இளவல் கவியே
ஏற்றமாய் ஓங்கி வாழ்க!
No comments:
Post a Comment