கவிமுரசு வா. மு. சே. திருவள்ளுவர்
இந்தியா ஒருமித்த நாடு
இன்பம் இணைந்தே நீதேடு
சந்ததி வழிவழி நீரை
சதிவலை பின்னுதல் தீது
முந்தைய தமிழரின் மோசம்
முறைதனிமை காணாத சோகம்
நிந்திக்கும் கர்நாடக மண்ணே
நீதியை கண்டு நீதேறு!
வெடித்திடும் நிலத்தினைப் பாரு
வேதனை பொங்கிடும் நீரால்
துடித்திடும் அவலத்தைக் காணு
துயரினைப் போக்கிட எண்ணு
மடிதுயில் காணாத மக்கள்
மாத்தவம் வேண்டிடும் ஆறு
பொடிப்பொடி ஆக்கிடும் கண்ணீர்
போதனை கேட்டுநீ மாறு!
எரித்திடும் எரிமலை வேகம்
எழும்பிய காவிரித் தாகம்
பறித்திடும் நீர்வளம் தன்னை
பொசுக்கிடும் எம்மினம் உன்னை
தரித்திரம் ஒளியினால் கண்டும்
தந்திடும் மின்வளம் எண்ணு
விரித்திடும் மனநலம் எண்ணி
விடுக எம்காவிரிக் கண்ணை!
திராவிடம் கூறியே எம்மோர்
தகைமையை கண்டு நீ வாழு
உறவினைப் பெருக்கிடும் ஆற்றின்
உலகத்துப் பொதுமையை உணரு
கரவினால் கயமையைத் தேடும்
கொலைவெறித் தாண்டவம் ஏனோ
மறத்தமிழ் மக்களின் வீரம்
மாய்த்திடும் மம தையை என்றும்!
No comments:
Post a Comment