கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்
மார்க்கம் கடந்த தொண்டு
மனிதக் கல்வி தன்னை
தீர்க்கமாய துணிவாய்ச் செய்த
திண்ணிய மலாளா வாழ்க!
ஊர்க்குருவி இன்று வானில்
உன்னதத் தொண்டால் இன்று
பார்க்குருவி பறந்து தோன்றும்
பல்லூடக மலாளா வாழ்க!
பெண்களின் கல்வி என்றும்
பேணிடும் குடும்ப ஏற்றம்
நன்றுள மகளிர் கற்றால்
நாளெலாம் பெண்மை ஓங்கும்
கன்றுபோல் சொன்ன சொல்லை
கதறியே சுட்ட தீயோர்
நன்றான மனித நேயம்
நாட்டிடும் நாள்தான் என்நாள்?
தொட்டனைத்து ஊறும் கல்வி
தொல்லுயர் மாந்தர் கண்ணை
மட்டிலா மலாளா தொண்டு
மாத்துயர் போக்கும் அன்றோ!
முட்டிடும் முரட்டு மார்க்கம்
முதுநிலை அறிவை எண்ணி
மட்டிலா சேவைக் கன்னி
மாசிலா மலாளா வாழ்க!
எரித்திடும் தீவிர வாதம்
எழுப்பிய மூடச் சூட்டால்
வித்திடும் செயலை என்றும்
முனைப்புடன் உலகே சாய்க்கும்
பொறித்திட்ட ஞானக் குஞ்சாம்
பொன்மகள் மலாளா நேயம்
நெறிகாக்கும் மகளிர் கல்வி
நாளாகக் கொள்வோம் நன்றே!
No comments:
Post a Comment